Thiruarutpa Deiva Isai Amutham Project
வள்ளலார்.ஆர்க் நிறுவனத்தின் ஆடியோ சி.டி. குறித்த அறிவிப்பு
திரு அருட்பா அமுதம் ஆடியோ சி.டி.களை யாரும் நகல் எடுத்து விற்பனை செய்ய வேண்டாமே . .
வள்ளலார் அமுதம் ப்ரொஜெக்ட் திட்டத்தின்கீழ் வெளியிடப்படும் ஆடியோ சி.டி.களை நகல் எடுத்து விற்பனை செய்யும் சங்கங்கள் (அல்லது) தனி நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வள்ளலார்.ஆர்க் நிறுவனம் முடிவு.
கடந்த 1990 ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த திரு ஜி.ஏ.முருகன் என்ற அன்பர், திரு அருட்பாவினை இசையுடன் பாடுவதில் வல்லவரான மழையூர் சதாசிவம் என்பவரை வைத்து, திரு அருட்பா பாடல்களை அருமையான இசையுடன் பாடச் செய்து, 6 ஆடியோ கேசட்டுகளில் சன்மார்க்க உலகம் பயன்பெறும் விதத்தில் வெளிக்கொண்டு வந்தார்.
திரு அருட்பாவிலிருந்து மேலும் பல பாடல்களை, இசை வடிவம் கொடுத்து வெளியிடுவதற்கு, மிகவும் ஆர்வமுடன் அவர் செயல்பட்டார். ஆனால், பெருமுயற்சி செய்து வெளியிடப்பட்ட ஆடியோ கேசட்டுகளை, தனி நபர்களும், சன்மார்க்க அன்பர்களுமே காப்பி (Copying) செய்து தங்களது சுய லாபம் கருதி விற்பனை செய்ததனால், அவர், இந்த முயற்சியில் செலவிட்ட தொகையினைக் கூடத் திரும்பப் பெற முடியவில்லை.
தாம் மிகவும் ஏழ்மை நிலையிலிருந்தாலும், வள்ளல் பெருமானின் திரு அருட்பாப் பாடல்களை, இவ்வுலகமெல்லாம் கேட்டு, இன்புற்று, சுத்த சன்மார்க்க வழியை அனைவரும் தத்தமது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்தப் பணியினை அவர் மிகுந்த சிரமத்துடன் மேற்கொண்டார். அவர் வெளியிட்ட 6 ஆடியோ கேசட்டுகளுக்குரிய தொகையைக்கூட அவர் மீட்டுக்கொள்ள முடியாத நிலையில் அவர் தாம் மேற்கொண்ட பணியினைக் கைவிட்டு விட்டார்.
அது ஒருபுறமிருக்க, சென்னையைச் சேர்ந்த திரு சுப்புராமன் மற்றும் ப்ரணவ் ஜோதி ஆடியோ விஷுவல் நிறுவனமும் இணைந்து, தமிழ்நாட்டில், திரைப்படத் துறையில், மிகவும் பிரபலமான இசைக் கலைஞர்களைக் கொண்டு ஒரு வீடியோ சி.டியினை 2 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டனர். அது சன்மார்க்க அன்பர்களின் மத்தியில் பெறும் வரவேற்புப் பெற்றது. ஆனால், அதனைப் பெற்ற எந்த சன்மார்க்க நிறுவனமும், அதற்குரிய தொகையினை முழுமையாக தயரிப்பாளர்களுக்குக் கொடுக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால், தயாரிப்புச் செலவில், ஒரு சதவீதம் கூட அவர்களால் திரும்பப் பெற இயலவில்லை. இதுதான் இன்றைய தேதியில் உள்ள நிதர்சனமான நிலை.
இதனைத் தவிர, அபிராமி ஆடியோ, போனிக்ஸ் மெலொடீஸின் பிரபாகர் ராஜ், சங்கீத் சாகர் நிறுவனத்தின் திரு ஜி. ஆத்மநாதன் ஆகியோரும், அவ்வப்போது திரு அருட்பா பாடல்களை, ஆடியோ சி.டி.வடிவில் வெளிக்கொண்டு வந்தனர். பல்வேறு நபர்களாலும், சங்கங்களாலும், அந்த ஆடியோ சி.டி.களும், நகல் எடுக்கப்பட்டு (pirated) சொந்த லாபத்திற்காக விற்கப்பட்டதால், இதற்கென செலவிட்ட தொகையினை, அவர்களாலும் திரும்பப் பெற இயலவில்லை.
சிங்கப்பூரில் இயங்கி வரும் வள்ளலார்.ஆர்க் நிறுவனம், திரு அருட்பா அமுதம் என்ற திட்டத்தின் மூலம், கடந்த 4 ஆண்டுகளாக, பல இசைக் கலைஞர்களைக் கொண்டு, இதுவரை ரூ.33 (முப்பத்தி மூன்று) லட்சங்களைச் செலவிட்டு, திரு அருட்பாக்களுக்கு, அற்புதமான இசை அமைத்து, ஆடியோ சி.டி.களை வெளியிட்டு வருகிறது.
அதற்கு மேற்கொண்டு, ரூ.10 (பத்து) லட்சம் வரை செலவிட்டு, எல்லா சன்மார்க்க அன்பர்களும், இதனை இணைய தளத்திலே கேட்டு இன்புற வேண்டும் என்ற உயரிய நோக்கில், இணைய தளத்தின் மூலமும் வெளியிட்டது. இலவசமாக அதனை டெளன்லோடு செய்து கொள்வதற்கும், அந் நிறுவனம் அனுமதி அளித்தது.
ஆனால், இந்தியாவில் உள்ள பல்வேறு தனி நபர்களும், சங்கங்களும் மேற்கண்ட இணைய தளத்திலிருந்து டெளன்லோடு செய்து, தமது சொந்த லாபத்திற்காக விற்பனை செய்துள்ளன. ஒரு சிலர் மட்டுமே, டெளன்லோடு செய்வதற்குரிய தொகையினை அனுப்பியுள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஆன்மீகத் துறையில், ஒரு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, இந்த திரு அருட்பா இசை அமுதம் திட்டத்திற்காக பல வெளிநாட்டு அன்பர்கள் நிதி உதவி செய்தனர். இந்தியாவிலிருந்து வடலூர் (ராமநாதபுரம் சன்மார்க்கத் தங்கல் மனையில் உள்ள) சாது முத்தையா சுவாமி ஒருவர் மட்டுமே நிதி உதவி அளித்துள்ளார்.
வெளி நாடுகளான, சிங்கப்பூர், மலேசியா, யுனைடெட் கிங்டம், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்துதான் இத் திட்டத்திற்கென அன்பர்கள் நிதி உதவி செய்து வந்துள்ளனர்.
திரு அருட்பா அனைத்துப் பாடல்களையும், முழுமையாக, இசை அமைத்து முடிப்பதற்கு, இன்னும், 25 லட்சம் நிதி தேவைப்படுகிறது. எல்லா இடங்களிலும், திருட்டுத்தனமாக (audio piracy) நகலெடுத்து, தமது சுய லாபத்திற்காக தனியாரும், சங்கங்களும், வெளியிடுவதால், வள்ளலார்.ஆர்க் நிறுவனமும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறது.
இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஒரு சில தனியாரும், ஒரு சில சங்கங்களும், தமக்கு வள்ளலார்.ஆர்க் நிறுவனம், இவ்விதம் விற்பதற்கு அனுமதி அளித்ததாகவும், அதன்பேரிலேயே தாம் விற்பனை செய்து வருவதாகவும் தவறான செய்தியையும் பரப்பி வருகின்றனர். இது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களைத் தவிர, வேறு எந்த தனி நபரையோ, எந்த சங்கத்தையோ, திரு அருட்பா அமுதம் திட்டத்திலிருந்து ஆடியோ சி.டி.களை விற்பதற்கு அனுமதி ஏதும் - ஒரு காலத்திலும் தரப்படவில்லை.
இந் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் ஆடியோ சி.டி.கள், வள்ளலார்.ஆர்க் நிறுவனத்தினால் 2.5 கோடி மதிப்புள்ள உலகத் தரம் வாய்ந்த கருவிகளைக் கொண்டு, சிங்கப்பூரில் தயாரிக்கப்படுகின்றன. இவ்விதம் தயாரிக்கப்படும் சி.டி.களுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது. இவை நெடுங்காலம் பயன்படும்.
ஆனால், இதனைத் தயாரிப்பதற்காக இவ்வளவு செலவிட்டு, சன்மார்க்க உலகம் உயர் பயன் அடைய வேண்டும். வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பெருமானாரின் உளப் பாங்கின்படி, உலகமெலாம் பரவ வேண்டும் என்பதை மனத்தில் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஆடியோ சி.டி,களை சொந்த லாபத்திற்காக, தரம் குறைந்த சி.டி.கள் மூலம் நகல் எடுத்து, அதிகமான விலைக்கும் விற்கப்படுகின்றன.
அது போன்ற வள்ளலார்.ஆர்க் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்படும் ஆடியோ சி.டி.களை, திருட்டுத்தனமான முறையில் நகல் எடுத்து (audio piracy) வெளியிடுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வதற்கும், இந் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வள்ளலார்.ஆர்க் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான விற்பனையாளர்கள்