10. திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்
( 663 ) தாயின் மேவிய தற்பர மேமுல்லை
வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
தேயின் மேவி இருந்தனன் என்னையே
( 664 ) தில்லை வாய்ந்த செழுங்கனி யே திரு
முல்லை வாயில் முதல்சிவ மூர்த்தியே
தொல்லை யேன்உன்தன் தூய்திருக் கோயிலின்
எல்லை சேரஇன் றெத்தவம் செய்ததே
( 665 ) வளங்கொ ளும்முல்லை வாயிலில் மேவிய
குளங்கொ ளும்கண் குருமணி யேஉனை
உளம்கொ ளும்படி உன்திருக் கோயில்இக்
களங்கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே
( 666 ) மலைவி லாமுல்லை வாயிலில் மேவிய
விலையி லாமணி யேவிளக் கேசற்றும்
குலைவி லாதவர் கூடும்நின் கோயிலில்
தலைநி லாவத்த வம்என்கொல் செய்ததே
( 667 ) சீர்சி றக்கும் திருமுல்லை வாயிலில்
ஏர்சி றக்கும் இயன்மணி யேகொன்றைத்
தார்சி றக்கும் சடைக்கனி யேஉன்தன்
ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே
( 668 ) சேல்கொள் பொய்கைத் திருமுல்லை வாயிலில்
பால்கொள் வண்ணப் பரஞ்சுட ரேவிடை
மேல்கொள் சங்கர னேவிம லாஉன்தன்
கால்கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ
( 669 ) வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய
அண்ண லேஅமு தேஅரை சேநுதல்
கண்ண னேஉனைக் காணவந் தோர்க்கெலாம்
நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ
( 670 ) மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ்
கண்ணுன் மாமணி யேகரும் பேஉனை
எண்ணும் அன்பர் இழிவடைந் தால்அது
பண்ணும் நின்அருள் பாரிடை வாழ்கவே
( 671 ) தீதி லாததி ருமுல்லை வாயில்வாழ்
கோதி லாதகு ணப்பெரும் குன்றமே
வாதி லாதுனை வாழ்த்தவந் தோர்தமை
ஏதி லார்என்றி ருப்பதும் என்கொலோ
( 672 ) தேசு லாவிய சீர்முல்லை வாயில்வாழ்
மாசி லாமணி யேமருந் தேசற்றும்
கூசி டாமல்நின் கோயில்வந் துன்புகழ்
பேசி டாத பிழைபொறுத் தாள்வையே
Sponsored by VallalarOrg Foundation
Mr. SenthilDas - Playback Singer
Mr.Sathish Varshan - Keyboard
Mr. Natraj - Flute
Mr.Kannan - Elec.Rythem Pad
Mr.Venkatesh - Tabala, Tavil.