Srilanka Gnana Sabai Temple
இலங்கை வேம்பிராயில் சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் துவக்க விழா இலங்கைப் பயணம் கட்டுரை.

இலங்கை வேம்பிராயில் சத்திய தருமச்சாலை மற்றும்

சத்திய ஞான கோட்டம் துவக்க விழா.

இலங்கைப் பயணம் கட்டுரை (தொடர்ச்சி)

=0=0=0=0=

இலங்கை வேம்பிராயில் நிலம் வாங்கி 2005ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டு விழா கொண்டாடி வேலைகள் துரிதமாக நடக்க ஆரம்பித்தன. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுக் காலத்தில் சத்திய தருமச்சாலை சத்திய ஞான கோட்டம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு விட்டன. வடலூரில் வள்ளற் பெருமான் கட்டிய சத்திய ஞான சபையினைப் போன்றே வேம்பிராயில் அமைக்கப்பட்டது. அன்பர்கள் யாரும் வந்தால் தங்கி பிரார்த்தனை செய்வதற்கு வாய்ப்பாக, சத்திய ஞான கோட்டத்தின் மேல் ஒரு மாடி எழுப்பி, அங்கு பிராத்தனை மண்டபமும், 6 அறைகளும் கட்டப்பட்டன.

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திறப்பு விழா நடைபெறும் விதத்தில் எல்லா வேலைகளும் துரிதமாக த்இரு நடைபெற்றன. இந்த இரண்டு ஆண்டுகளில், திரு கேத்தீஸ்வரன் மற்றும் இந்தியாவிலிருந்து இராமநாதபுரம் வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்ட் நிறுவனர் திரு ஜோதிமுருகன் அய்யா ஆகியோரும் அங்கு இரண்டு மூன்று முறை சென்று வந்து, கட்டடப் பணிகளை மேற்பார்வை செய்து வந்தனர்.

இலங்கையில் ஆலயங்கள் கட்டுவதில் வல்லவரான ரூபின்ஸ் நிறுவனர் திரு சிவசேகரம் பிள்ளை, இந்த சத்திய ஞான கோட்டம் கட்டும் வேலைகளைத் திறம்பட கவனித்து வந்தார்.

இந்நிலையில் யாருமே எதிர்பாராத வகையில், இலங்கையில் அரசியல் சூழ்நிலைகளில், சில பிரச்னைகள் உருவாகின. சுமுகமான சூழ்நிலை நிலவாததால், 2006ஆம் ஆண்டு ஆகஸ்டில் சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் திறப்புவிழா நடப்பதற்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டன.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழிந்து, 2009 ஆம் ஆண்டு இறுதியில், இலங்கையில் சுமுகமான சூழ்நிலை உருவாகியது. திரு கேத்தீஸ்வரன், நேரிடையாகவே, வேம்பிராய் கிராமத்தில் நிலவும் சூழ்நிலைகளை ஆராய்ந்த பின், 2010ஆம் ஆண்டில் தைப் பூசத் திருநாளில் கலந்து கொள்வதற்காக, தன் குடும்பத்தினருடன், வடலூருக்கு வந்தார். மேட்டுக் குப்பத்தில் திருவானைக் கோவிலில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் ஒளிநெறி இயக்கம் நடத்தி வரும் அன்பர் திரு ஷண்முகம் அவர்களை சந்தித்தார். அவரது கட்டிடத்தில் ஒரு வாரத்திற்கு மேல் தங்கி, இலங்கையில் நடைபெற வேண்டிய எல்லா பணிகளையும் அங்கிருந்தவாறே வடிவமைத்தார். தனது மனைவி திருமதி விஜயலக்ஷ்மி அம்மையார் மற்றும் மகன் தயானந்தன் ஆகியோர் மூலம், இச் செய்தியினை, வடலூரில் உள்ள எல்லா மாவட்ட சன்மார்க்க சங்கக் கிளைகளுக்கும் அறிவித்து விளம்பரமும் கொடுத்தார்.

பின்னர் சுவிட்சர்லாந்து சென்றார். பத்திரிக்கை தயார் செய்யும் பணியினை மலேசியாவைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு சந்தர் வெங்கடாசலம் அவர்கள் மூலம் மேற்கொண்டு, இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். விழா பத்திரிக்கை திருச்சியில் அச்சடிக்கப்பட்டது. 2010 மே மாத இறுதி வாக்கில், விழாப் பத்திரிக்கை சென்னையில் வசிக்கும் திருச்சியைச் சேர்ந்த திரு லக்ஷ்மணன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகம், அண்டை மாநிலங்கள், பல்வேறு நாடுகள் ஆகியவற்றுக்கு, விழாப் பத்திரிக்கை அனுப்பும் பொறுப்பினை, மதுரை நாராயணபுரம் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் நிறுவன மேனேஜிங் ட்ரஸ்டி ஏற்றுக் கொண்டார். 2010 மே மாத இறுதி முதல் எல்லா இடங்களுக்கும் விழாப் பத்திரிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அதனுடன், இலங்கை வரும் அன்பர்கள் விமானக் கட்டணம் செலுத்தும்படி கோரிக்கையும் தெரிவிக்கப்பட்டது.

.... (தொடரும்)....