இலங்கை “தமிழ்வின்” என்ற நாளிதழில் 7.9.2010 செவ்வாய்க் கிழமை
வெளியான செய்தி.
=0=0=0=0=0=0=0=
சுத்த சன்மார்க்க இயக்கத்தில் ஒரு அன்பரின் தீவிர முயற்சி.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கை செல்லும் நோக்கத்துடன் தனுஷ்கோடி பகுதியில் சுற்றித் திரிந்தவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார் அவருக்கு புத்திமதி சொல்லி திருப்பியனுப்பி வைத்தனர்.
இலங்கை சாவகச்சேரி அருலிலுள்ள வேம்பிராய் என்னுமிடத்தில் சமரச சுத்த சன்மார்க்க இயக்கத்தின் சார்பில், சத்திய ஞான கோட்டத்தின் திறப்பு விழா நடைபெறுகிறது.
கடந்த ஆகஸ்ட் 18திகதி முதல் இன்று வரை (7.9.2010) நடைபெறும் இவ்விழாவில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை, சத்திய ஞான கோட்டம் திறப்பு விழாவும், அருட்பெருஞ் ஜோதி வழிபாடும் இடம் பெறுகிறது.
இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சமரச சுத்த சன்மார்க்க இயக்கத்தை சேர்ந்த பலர் கடந்த மாதம் இலங்கை சென்றுள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரம் அருகிலுள்ள அனந்தபுரம் பகுதியை சேர்ந்த கிஷோர்குமார் (வயது 48) இலங்கையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்ல திட்டமிட்டார்.
சுத்த சன்மார்க்க இயக்கத்தை சேர்ந்தவரான இவர், தனுஷ்கோடி வழியாக இலங்கை செல்ல கடந்த சனிக்கிழமை இராமேஸ்வரம் வந்தார். பின் தனுஷ்கோடி சென்று படகில் இலங்கை செல்வதற்கு அங்குள்ள மீனவர்களிடம் விவரம் கேட்டுள்ளார். வெள்ளை உடையில் சாமியார் போல் காட்சியளித்த இவர் மீது சந்தேகம் கொண்ட மீனவர்கள், உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தனுஷ்கோடி சென்ற புலனாய்வுத் துறையினர், கிஷோர் குமாரிடம் விசாரணை செய்தபோது, இலங்கை செல்வதற்கு பணம் இல்லாததால் தனுஷ்கோடி சென்றால், அங்கிருந்து படகில் இலங்கை சென்று விடலாம் என்று ஊரில் சிலர் கூறியததால் தனுஷ்கோடி வந்ததாக தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழும், சுத்த சன்மார்க்க இயக்க அடையாள அட்டையும் வைத்திருந்தார். இவரை விசாரணைக்குப் பின் திரும்பி போகுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
நன்றி – தமிழ்வின் – இலங்கை நாளிதழ்
நன்றி – திரு சிவகுமார் சிங்கப்பூர். (செய்தி அனுப்பியவர்)