திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க வழிக்குக் கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்த புத்தகங்கள்.
இலங்கையிலே பிறந்து ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக அயல் நாட்டில் சென்று பணி புரியும் காலத்தில் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் அருளிய திரு அருட்பா பாடல்கள், உபதேசப் பகுதி ஆகியவற்றை பயின்று கொண்டிருந்த காலம். திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய இரண்டற்ற இன்ப வாழ்வு புத்தகம் ஒரு நண்பரின் மூலமாக திரு கேத்தீஸ்வரன் அவர்களுக்குக் கிடைத்தது. அதனைப் படிக்கும் போது, சுத்த சன்மார்க்க உண்மை வழி தென்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி அவர்கள் எழுதிய ஒன்று மூன்றான உண்மை என்ற புத்தகத்தையும் படித்தபின்னர் உள்ளத்தில் ஏற்பட்ட தேடுதலுக்கு வடிகாலாக, சுத்த சன்மார்க்க பாதை நன்றாக விளங்கியது. திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களை நேரில் பார்த்து அசீர்வாதம் பெற்று, அதன் பின்னர் 2005ஆம் ஆண்டில், இலங்கை சாவகச்சேரி அருகே உள்ள வேம்பிராய் கிராமத்தில் சத்திய ஞான கோட்டம் ஏற்பட்டது. தடைகள் பல வரினும், அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருட் கிருபையாலும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் மற்றும் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் உள்ளார்ந்த வழிகாட்டுதலின் படியும், இலங்கை வேம்பிராயில் சத்திய தருமச் சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. திரு அருளின் காரியப்பாடாக இந்த அருட் காரியங்கள் குறித்த தேதியில், குறித்த நிகழ்ச்சிகளை எந்த விதமான தங்கு தடையின்றி நிறைவேற்றித் தருவதற்கு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் ஆசியினை வேண்டி நிற்கின்றோம். அன்பர்களும் இந்த திரு அருட் காரியங்கள் நல்ல விதமாக நிறைவேறும்படி அருட்பெருஞ் ஜோதி ஆண்டவ்ரை வேண்டிக்கொள்ளும்படி வேண்டுகின்றோம். இங்ஙனம் வள்ளல் அடிமை தயாநேயன் கேத்தீஸ்வரன் மற்றும் அவர் மனைவி திருமதி விஜயலக்ஷ்மி அவரது மகன் தயானந்தன் மற்றும் சன்மார்க்க சங்கத்தினர்.