Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
Arutperunjothi Agaval Lines 213-214 Explanatory Note by Swami Saravanananda.Dindigul.
திரு அருட்பா..

அருட்பெருஞ்ஜோதி அகவல்.213-214ஆம் வரிகளுக்கு

திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் உரை விளக்கம்.

------------------------------------------------------------------------------------------

213. மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல்
214. அயர்ந்திடேல் என்றருள் அருட்பெருஞ்ஜோதி.

------------------------------------------------------------------------------------------

உரை விளக்கம்.

     இங்கு, மயர்ந்திடல் என்பது மனத்தெளிவறல், அல்லது மயங்கி நிற்றல் என்றும், அயர்ந்திடல் என்பது நினைவுச் சோர்வுற்று மறத்தல் என்றும், பொருள்படுவனவாம். அறியாமையாலும், கவலையாலும், துன்பத்தாலும், ஏலாமையாலும் மனத்தின்கண் இருள் சூழ்ந்திட, தெளிவின்மையும் மயங்கி நிற்றலும் ஏற்படுகின்றன. மனம் தளர்ச்சியுறுகின்றது. அச்சம் நேருகின்றது. இந்நிலையில் நினைவு ஒரு நிலையில் நிற்காது தடுமாறுகின்றதாம். இத்தடுமாற்றாத்தால் மறதியுண்டாகின்றது, இவ்வளவையும் மாற்றி அசைவிலா அருட்ஜோதி தீபம்போல் விளங்கச் செய்யவல்லது தம் அருட்பெருஞ்ஜோதி சக்தி.

     மனம் சலியாது மணியொளியாய் நிற்கும் இடம், புருவ மத்திய லலாடமாம். அம் மனோன்மணி பீடத்து நிலவாது, கீழ்நிலை இதயத்தானத்தில் இருந்து மயர்ச்சியும், அயர்ச்சியும் அடைகின்றதாம். இவற்றாலேதான் உயிரும் உடம்பும் மிகுதியாகப் பாதிக்கப்படுகின்றன. இந்த இதயத்தில் இரத்த ஓட்டம், உயிர்த்துடிப்பும், கரண இந்திரிய உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால்தான் எல்லாக் கேடும் விளைகின்றனவாம். “தனக்குவமை யில்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது” , என்பதும் உண்மையே. திருவருட்சக்தித் துணையால் மனம் கவலையற்றுச் சலியாதிருத்தல் கூடும். ஆனால் இந்த இதய பீடத்தில் மனம் ஒன்றிச் சலியாநிலை யுறும்போது பொறியுடம்பின் செயலும், புலன் உணர்வும் ஒடுங்கி நிற்க நேரும். ஆகையால், புறச் செயலில் ஈடுபட முடியாதுபோம். ஆகையால், மனம் செயலற்றுப் போகாது, எப்போதும் செயலோடு விளங்கவும், அதே நேரத்தில் மயர்வும், அயர்வும் அடையாது வாழ்வில் உயர்வு பெற்று விளங்கவும் வேண்டி மேலிடத்துச் சேர்க்கை பெறுதல் திருவருளாணையாம். புருவத்திடை நிற்கும் ஒருமை மனம், தலைநடு ஒளியில் ஒன்றி அதுவாகும்போது அருள் ஒளியாய் விளங்குகின்றதாம். இந்த இடத்தில் அருட்ஜோதியே மனத்தைத் தன்மயமாக்கிக் கொண்டு அத்துவிதமாய் விளங்குவதாம்.

     மேற்படி மேனிலையில்தான் தன் உணர்வு அருள் ஒளியாகி, அருட்ஜோதியில் அத்துவிதமாய் விளங்கிக் கொண்டு இருக்கின்றார் நம் பெருமான். இந்நிலையில்தான் அந்த அருட்ஜோதிபதி இவர்க்கு, அயர்ந்திடேல் சிறிதும், மனந்தளர்ந்தஞ்சேல், மயர்ந்திடேல் என்றெல்லாம் கூறி அருள்பாலிக்கின்றதாம். இப்படி அருட்ஜோதிமயமாய் இருந்து கொண்டு வாழும் வள்ளலின் கரணேந்திரிய உயிருடம்பு முழுவதும் அருள் ஒளியால் விளங்க நேர்ந்து விடுவதால், எவ்வகையிலும் சிறிதும் பாதிக்கப்படாது, பயம், கவலை, துன்பம், சோர்வு, மரணம்கூட இல்லாது வாழக் கூடியவராகி விடுதல் சாத்தியமாகின்றதாம். எல்லார்க்கும் பொதுவில் விளங்குகின்ற இந்த அருட்பெருஞ்ஜோதிபதி தம்பால் உறுவோர்க்கு இப்படி மனத்தெளிவும் திடமும் வழங்கி வாழ்விக்க உள்ளார் என்பது உண்மையாம். ஆதலின் உறுவோம் அருட்பெருஞ்ஜோதியுள்ள அம்பலத்திற்கு.

 

20150325_094954.jpg

20150325_094954.jpg

Download: