Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
Arutperunjothi Agaval Lines..1327-1328..Explanatory Note by Swami Saravanananda of Dindigul.
திரு அருட்பா .. அருட்பெருஞ்ஜோதி அகவல்..வரிகள்..உரை விளக்கம்

சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்.

-------------------------------------------------------------------------------------------------

1327. மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

1328. கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே.

--------------------------------------------------------------------------------------------------

உரை விளக்கம்.

      ஒருவனைக் கட்டிப் போடுவது, அதனால் செயல்பட முடியாமல் போகும். அப்படிப்பட்டுச் செயல் முற்றும் கெட்டு, உயிரும் கெட்டுப் போவதே மரணம் என்கின்றனர். மரணம் என்ற சொல், உயிர் உணர்வு மரத்து, உடலும் மரத்து மரம்போல் ஆகி விடும் நிலையாம். மற்ற பிணிகள் எல்லாம் கூட இலேசான மருந்துகளால் தீர்த்துவிட முடியும். அல்லது தந்திர உபாயங்களால் அப்பிணிகளை விலக்கிவிட முடியும். ஆனால், மரணம் உயிரை உடலினின்று பிரித்துவிடுகின்றதால், அம்மரணத்தைச் சாதாரணமான மனித முயற்சிகளால் தவிர்த்துக் கொள்ள முடியாததால் அதனைப் பெரும்பிணி என்கின்றனர். அம்மரணப் பெரும்பிணியை ஒழிக்கவல்லது அருட்ஜோதி மருந்து ஒன்றேயாகும். இம்மரணமாகிய பிணியின் முடிவு, உடலையே அழித்து விடுவதாம். அவ்வழிவேதான் மரணம். இந்த இறப்பு ஏற்பட்டபின், உயிர்த்து எழுப்புவது, பேராற்றல் கொண்ட, அருள் மருந்து ஆம். மரணம் வந்தபின், உயிர்த்தெழுப்புதல் யாரால் முடியும் ? ஒரு சில மகான்கள் எப்போதோ ஒரு சில இறந்தவர்களை எழுப்பிவிட்டிருக்கலாம். அப்படி எழுப்பப்பட்டிருந்தாலும்கூட, எழுந்தவர்கள் பின்னர் மடிந்தே போய்விடுகின்றனர். மேலும், அப்படி ஏதோ ஒரு சக்தி கொண்டு, பிறரையெழுப்பி இருந்தபோதிலும், அங்ஙனம், முன் பிறரை எழுப்பிய அவர்களே எப்படியோ அழிந்துபடுகின்றனர். அப்போது, தம்மை அவர்களும் எழச் செய்ய முடியாதவர்களாகின்றதோடு, பிறர் துணையும், உதவாமல் போய்விடுகின்றதாம்.


    இப்போது நமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள அருட்ஜோதி மருந்து, மரணப் பெரும்பிணியை வருமுன் தடுத்து வராமலே செய்து விடுகின்றதாம். இந்தப் பிணி, ஒருவனின் பிறவியிலேயே உடலில் வளரத் தொடங்கியிருப்பதாம். ஆனால் இது சாதாரணமாய்த் தெரிகின்றதில்லை. முதிர்ந்து, உறுத்து, வருத்திடும்போது தெரிகின்றது. முடிவில் வெளிப்படுகின்றது. அதாவது மரணம் சம்பவிக்கின்றதாம். ஆகவே, இந்த மரணம் என்னும் பிணி, ”உடன் பிறந்தே கொல்லும் வியாதி. உடன்பிறவா மாமலையிலுள்ள மருந்தே பிணி தீர்க்கும். அம்மருந்து போல்வாரும் உண்டு என்று கூறப்பட்டுள்ளது. தோன்றுகின்ற உடலோடு தோன்றுகின்றது, பிணி. அப்படித் தோன்றியுள்ள பிணியை யொழிக்க வல்லது, தோற்றக் கேடில்லாத, நித்தியமான நம் கடவுளான்ம வடிவாகிய அருட்ஜோதிமலை தரும் மருந்து ஒன்றேயாம்.


     அருட்ஜோதிமாமலை மருந்தை ஏற்றவர் நம் அடிகளார். அது அவருக்குப் பேராற்றலை வழங்கினது. அந்த ஆற்றல்தான் கரணப் பெருந்திறல் என்று கூறப்பட்டுள்ளது. கரணமாவது, அகம், புறம் என்னும் இருவகைப்படும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் நான்கும், அகக்கரணமாம். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் புறக் கரணமாம். இவ்விரு கரணங்களும் பொருந்திய ஒன்றே இரண்டிற்கும் பொதுவான மனமாம். இம் மனத்திற்குத்தான் அம் மருந்து அருள் ஒளியை முதலில் தந்து விட்டதாம். உண்மையில் மனமே திருவருள் வண்ணமானதே. இப்படி அருள் ஒளிமயமான மனம்தான் பேராற்றல் கொண்டதாய் விளங்கலாயிற்று. அதுவே, மரணப் பெரும்பிணி வாரா வகை, செய்துவிட்டதாம். இதனையே இந்த அடிகளில், “மரணப் பெரும்பிணி வாரா வகை, கரண மிகு பெருந்திறலைக் காட்டி வாழ்வித்ததாகக்குறித்துள்ளார். எனவே, இந்த அருட்பெருஞ்ஜோதி மருந்தே மரண நோயைச் சமூலத்தோடு அழித்து, சகமீதென்றும் அழியாது வாழ வைப்பதாம்.
vlcsnap-2018-03-25-21h21m14s761.png

vlcsnap-2018-03-25-21h21m14s761.png

Download: