Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
வள்ளலாரின் முன்ஞானமும் பின்ஞானமும்...சுவாமி சரவணானந்தா.
     நம் இராமலிங்கர், இரக்க சுபாவமும், இறை அருள் விழைவும் கொண்டு கடும்பாடுபட்டார். அன்பருளின்புருவாகிய இறைவன் தமிழை, அதுவே ஆதித்தமிழன் உள்ளத்து அருவாய் இருந்து, அருவுருவாய் மெய்யுணர்வில் மலர்ந்து புற உருவொடு உலகில் வெளிப்போந்ததை உணர்த்தப் பெற்றார் நம் பெருமான்.

     அருவக் கடவுள் உண்மைதான் என்றும் நம் உள்ளத்து சத்தாய் இருந்து கொண்டுள்ளது. பக்குவத்தே அருவுருவான ஒளி வண்ணமாய், ஊமை எழுத்தாய், பேசா மந்திரமென உபதேசமாய் உணர்த்திக் கொண்டே இருக்கின்றது  அந்த உட் பொருளின் விளக்கவுரை தான் ஒலி வடிவச் சொல்லுருவாகி புறப்பொருள்களையுணர்த்தினது.  ஒலிக்கு எழுத்துருவம் தந்து, சொல்லும் பொருளும் விளக்க, மொழியின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. உள்ளொளியும் புறப்பொருள் தோற்றமும் மாறாதிருக்க இடையுற்ற புல்லுருவி போன்ற வரி வடிவ எழுத்துக்களே காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டு இருக்கின்றனவாம். தமிழின் தெய்வ இயல்பையுணர்ந்து போற்றிக் கொண்டதோடு, சிவ நெறி மரபில் தோற்றிய அடிகளார்க்கு, சிவ தத்துவ வழிவந்த தமிழின் மாண்பு, அதிகம் கவர்ந்தது. ஓதியும், ஓதாமலும் பல உண்மைகள நன்கு ஓர்ந்து, தோத்திரப்பாக்கள் பல வெளியிடலானார். அவற்றில் எல்லாம் இலக்கிய இலக்கண மரபும், அகப்பொருள் கற்பனா நயங்களும் நிரம்பப் பாடப் பெற்றனவாம். மற்ற பக்திப்பாக்களை விட சிறப்பாய், ஆனால் எளிமையாம் பல செய்யுள்களை திருவருட்பாவில் காணலாம். அப்பொழுதும் கூட அவரது கடவுள் ஒளியின் ஆணை முன்னோர் முடிவைக் கடந்து செல்ல ஊக்கியது.  அம்மேனிலையைப் புரிந்து கொள்ளவே, அகத்தும், புறத்தும், திரு முன் நின்று வேண்டி வேண்டி தெளிவு பெற்று வந்தார். திருவொற்றி, திருத்தில்லை முதலான தலங்களில் அக அனுபவம் பெறற்கான சூழ்நிலை இல்லாதது கண்டே வடலூர் அடைந்து உண்மை வெளிப்படுத்தலானார்.

     வடலூரிலே, சத்திய ஞான விளக்கத்திற்கும், ஜீவ தயா செயலுக்கும் பொருந்த ஞான சபையையும், தரும சாலையையும் நிறுவப் பெற்றன. இவை இரண்டும் சத்விசார பரோபகாரப் பயன் தருவனவாய் அமைந்துள்ளன. இந்தச் சத்திய ஞான சபையே, எல்லாக் கோவில்களுக்கும், தெய்வ பீடங்கட்கும் சந்நிதானங்கட்கும் ஆதார உண்மையான நம் சிர நடுமெய்யறிவுத் தலம் ஆகும். இதில் ஒளிரும் அருட்பெருஞ் ஜோதியே, எல்லா தெய்வ கற்பனா வடிவங்களுக்கும் ஏற்ற ஒரு சின்னமாகும். இத்திருமுன் நின்று தைப்பூசத்தன்று அருட் பெருஞ் ஜோதிக் காட்சியை புறத்தில் கண்டு, அகத்திலும் தெளிந்து கொண்டிட வேண்டும். இவ் அக ஜோதிக் காட்சியின் முடிவில் சத்விசார பயனாகிய, சிர நடு சிற்சோதியை தெளிந்து பற்றி நின்று தான் போய் அதுவாதல் வேண்டும். ! இதுதான் முன் சமய மத நெறிகளின் முடிவு நிலையை அடைகின்ற மக்கள் பலவாகிய பழநெறிகளின் ஒன்றாகிய அகவுண்மையை காண்கின்றவர்கள் ஆவர். பன்மார்க்கத்திற்கும் முடிவு இங்குதான் காண உள்ளது. இதனைக் கண்டு, எல்லோரும் வழிபட்டு ஒன்றுபட்டால் ஒற்றுமைக்கு வழியுண்டாம். வேற்றுமையுணர்ச்சி ஒழியும் பொது நோக்கோடு கூடிய ஒருமையும் ஜீவ தயவும் ஏற்பட்ட போதுதான் சமரச சன்மார்க்கம் இன்னது என்பதை உணர்ந்து கொண்டவர்களாகலாம். இவை எல்லாம் முன் ஞான நெறிகளின் முடிவு ஆம். இந்நிலைக்கு முதலில் வந்தால் தான் இதற்கு மேனிலை அடைய நேரும்.  ஆனால் அந்த முதற்படிக்கே இன்று வரை வந்து சேராது உள்ளனர் மக்கள். அவர்களின் பக்குவத்தை எதிர்பார்த்து தான் அன்றே, அந்நிலையிலே நிறுத்தி வைத்தார் அடிகளார். அந்நிலையுற்று மேல் அக நெறிவாழ்வுச் சாதனை ஏற்கப்பட வேண்டும் என்பது அவர் திருக்குறிப்பு.

    பின் ஞான அனுபவம் உலகுக்கு அடுத்து வரவேண்டியுள்ளது. அது தான் அகமிருந்து வாழும் சுத்த சன்மார்க்க நெறி முறையாகும்.  அதனைத் தான் மேட்டுக்குப்ப சித்தி வளாகத்தில் வெளியே காட்டாமல் உபாயமாகவே வெளியாக்கியுள்ளார். உபதேசப் பேருரையில், முன் ஞான நிலையைக் கடந்து அவற்றில் எதிலும் பற்றுக் கொள்ளாது விடுத்து ஒருமையும் தயவும் கொண்டு அனக வாழ்வு மேற்கொள்ள வலியுறுத்திக் கூறியுள்ளார்.

     பின் ஞான நிலை நின்று பின்னோக்கிப் பார்த்துத் தன்னையே குறை கூறி மற்றவர்களை எச்சரிக்கின்றார். பழையனவற்றில் பற்றுக் கொள்ள வேண்டாம். வேறு எதையும் லட்சியமாய்க் கொள்ள வேண்டாம். எல்லாவற்றையும் விட்டு விட்டால் தான் மேனிலைக்கு ஏறலாம். சுத்த சன்மார்க்கிகள் ஆகி வாழலாம் என்கின்றார். அதற்குரிய காலம் அடுத்துள்ளதால் இப்போதுதான் ஒரு சிலர் உள்ளத்தில், பின் ஞான உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இந்தச் சுத்த சன்மார்க்கம் நம் சித்தி வளரகத்திலிருந்து வள்ளல் அனுபவத்தோடு பரவ வருகின்றது உண்மையாகும். அறையில், மறைவில் அடங்கி இருந்த சுத்த சன்மார்க்க விளக்கம் எல்லாம் இப்போது அம்பலத்துக்கு வருகின்றது. இதனை உலகம் எல்லாம் கண்டு கொள்ள ஏதுவாகின்றது திருத்தயவால்.

     இந்தச் சுத்த சன்மார்க்கம் வள்ளல் அனுபவத்தின் புதிய வெளியீடேயாகும். அவர் அனுபவத்தின் விளைவே இதுவாம். இந்தப் புதிய பொது நெறிக்கு, அவர் நமக்கு வழங்கியுள்ளது சித்தி வளாக தீபச்சுடர் விளக்கே. இதனை புறத்திற் கண்டும், அனுபவ வாழ்வின் பொருடுட்டு, அகச் சித்தி வளரகத்திற் கொண்டு தயவோடு வழிபட்டு வரப் பணித்துள்ளார். அப்படி செய்து வந்தால், அறிய வேண்டியதை அறியவ்ம், அடைய வேண்டியதைக் காலமுள்ள போதே அடையவும் முடியும் என உத்தரவாதம் அளிக்கின்றார். இதுதான் வள்ளலாரின் பின்ஞான வாழ்வு முறையின் விளைவு. இவ்விளைவு சுத்த சன்மார்க்கரின் ஒவ்வொருவர் உள்ளமாகிய சித்தி வளர் அகத்திலும் இருந்து நிறை விளைவு பெற்று வாழ வைக்கும். இதனால் எண்ணற்ற சுத்த சன்மார்க்கர்க்கும் நல்விளைவு ஏற்பட்டு வாழ வைக்கப் போகின்றது மெய்யாம்.
20150405_082857.jpg

20150405_082857.jpg

20150405_082947.jpg

20150405_082947.jpg

Download: