Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திருவடிப் புகழ்ச்சி (வரி 4க்கு) உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா..திண்டுக்கல்.
திருவடிப் புகழ்ச்சி வரி.4.
உரை விளக்கம்.
சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

4. பரம தத்துவ நிரதிசய நிட்களம் பூத பெளதிகாதார நிபுணம்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

உரை விளக்கம்.

பரம தத்துவம்

     என்றால் தெய்வீக உண்மையாகும். சாதாரணமாய்த் தத்துவம் என்பது உண்மை அக இயல் ஆம். மேலும் பூத முதல் நாதம் ஈறாக உள்ள நிலைகளையும் உட்கூறுகளையும் ஆன்மக் கடவுள் உண்மை விளக்கங்களையும் தத்துவங்களாகப் பேசுவர். தத்துவம் என்பது அது நீ என்று வேதாந்தம் கூறும் உபதேசப் பொருளாம். உண்மையில் உள்ள கடவுள்தானே இந்த மனிதப் பிறப்பு வடிவொடு நம் ஒவ்வொருவருமாய்த் தோற்றி விளங்குதல் மேலான தத்துவப் பொருளாகக் காண்கின்றோம்.

நிரதிசயம்.

     அதிசயம் என்றால் ஆச்சரியப்படுவது. வியந்து கொள்வது. ஒரு தோற்றத்தையோ செயலையோ நிகழ்ச்சியையோ கண்டு வியத்தல் கூடும். நம் பரம்பொருள் வெளியீட்டு விளக்கம் ஒவ்வொன்றும் ஊன்றிப் பார்க்கும் போது மிக ஆச்சரியமாகக் காண்கின்றோம். நம் பக்குவ பர நிலை நின்று நோக்கும்போது எல்லாம் வல்ல கடவுட் சந்நிதியில் தோற்றம் யாவுமே அப்பேரருட் பெருஞ்சக்திக்கு இயல்பே என்று அறிந்து எதையும் வியவாது நிற்கின்றோம்.  இதுதான் நிரதிசய நிலையாம். எனவே, இந்த நிரதிசயம் கடவுள் இயற்றண்மையே எனக் கண்டு கொள்ளுவோம்.

நிட்களம்.

     என்பது நிஷ்களம் என்ற வடசொல் மாற்றுரு. இது சகலம் என்பதற்கு எதிரிடைச் சொல்லாம். இதற்குப் பொருள் உருவோடு விளங்குவது. அதாவது உருவமாகும். உருவத் தோற்ற நிலையற்றது. அருவம் எனப்படுவது நிட்களமாம். அருவ நிலையான வான் வெளியினின்றுதான் உருவப் பிரபஞ்சம் முற்றும் வெளிப்பட்டுள்ளதை அறிவோம். அகண்ட பெருவெளி நிலையே களமாகவும் அதில் உருவப் பிரபஞ்சம் ஒன்றுமே இல்லாததுபோல் இருக்கின்றது ஆதி தொடக்கத்தில். இதனால்தான் ஆண்டவரின் அந்நிலைத் தோற்றம் நிஷ்களம் அல்லது நிட்களம் எனப்பட்டுள்ளதாம்.

பூத பெளதிகாதார நிபுணம்.

     சூனிய வெளியாய்த் தோன்றின கள, சத்தில் திருவருள் செயல்படத் தொடங்கின போது வான் அல்லது ஆகாசமாய் இருந்து காற்றாய் சலன இயக்க நிலை ஏற்பட்டு கனலாய்த் தோன்றி நீராய்ப்பரவி நிலமாய்த் திரண்டு விளங்கின நிலையே ஐம்பூத நிலையாகும். பூதம் என்றாலே விரிந்து மலர்ந்து தடித்துத் தோற்றம் கொண்டிலங்குவது என்று பொருளாம். இப்படி தோற்றிய பூதங்கள் கூடிப் பலவேறு பொருட்களாய் அணு முதல் அண்டம் வரை உள்ளவைகளே பெளதிகப் பிண்டங்களாய்க் கொள்ளப்படும். இப்படி பலவாகிய பிண்டங்களாக உருவடைதலும்  சிதையுறுவதும் உள் வளர்ச்சியின் அருஞ்செயலேயாகும். பெளதிகம், பெளமன், செவ்வாய். பெளதிகம் என்ற சொல்லுக்கு மெய்ப்பொருள், தீ அல்லது தெய்வீக ஒளி (இங்கு இயற்கை ஆற்றல்) அகத்தே பொதிந்து வைக்கப்பட்டுள்ள பொருள் என்பதாம். இப்பெளதிக உள்ளாற்றல் மிக நிபுணத்துவம் அல்லது அருந்திறல் கொண்டதாம். இதனால்தான் அணுக்கள் (Atoms) மூலக்கூறுகள் (molecules) தனிமங்கள் (elements) பொருட்கள் (substances) தாவரவுயிரியல் வடிவங்கள் (potanical and biological forms) கருவுயிர் உடற்கூறுகள் (living embryos) புற அகப் பரிணாமங்கள் (outer and inner evolutions) எல்லாம் வியப்புற சதா நடந்து கொண்டுள்ளன இந்தப் பிரபஞ்சத்தில்.


20140224_122354~2.jpg

20140224_122354~2.jpg