Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திருவடிப் புகழ்ச்சி (வரி 3க்கு) உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா..திண்டுக்கல்.
திருவடிப் புகழ்ச்சி

வரி எண்.3.

உரைவிளக்கம்.

சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

3. பரம ஞானம் பரம சத்துவமகத்துவம் பரம கைவல்ய நிமலம்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

உரை விளக்கம்.

பரம ஞானம் ..

     மேலான மெய்யறிவு எதுவெனில் கடவுள் உண்மை விளக்க அனுபவ அறிவேயாம். மற்ற இந்திரிய அறிவு கரண அறிவு, ஜீவ அறிவு, விசார ஆன்ம அறிவு எல்லாம் அபர ஞானமேயாகும். கீழான எந்த அபர ஞானத்தாலும் மெய்யான இன்பம் பெற முடியாது. தயா வொழுக்கம் பூண்டு சத்தான உண்மை நெறியில் பயில்கின்றோர்க்கு உபாய ஞானத்தின் உள்ளொளி உண்மை ஞானப் பொருள் விளங்கும். மேலும் அந்த உண்மை கொண்டு வாழும்போதுதான் அனுபவ ஞானப் பொருள் சித்திப்பதாம். இந்த அனுபவ ஞானப் பொருட்பேறே உண்மையில் பர ஞானமாகும். பரம ஞான வாழ்வுதான் உலகில் மெய்யின்ப வாழ்வைக் கொண்டு வரும்.

பரம சத்துவ மகத்துவம்.

     இறையின் பேராற்றல் அதி அற்புதமான புனித இயல்பு கொண்டதாம். சத்துவம் சக்தி நிரம்பியது. மகத்துவம் பெருமை மகிமை இரகசியம் எல்லாமாம். சத்துவ மகத்துவம் என்று ஒருசேரக் கொண்டு கடவுளின் எல்லாம் வல்ல ஆற்றலின் பெருமையைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். ஆண்டவரின் உண்மை இப்பொழுது, நம் ஆன்ம அணுவிடத்து வெளிப்படுவதாய் அறிகின்றதால் இச்சிற்றம்பலத்தே விளங்கும் இறைவனின் பெருமையும் பேராற்றலும் வியந்து கொள்ளக் கூடியதாய் அறிகின்றோம். இறை நிலையை அணுத்துவமாய் மகத்துவமாய் உள்ள நிலையையுணரும்போது அகிலமெல்லாம் நிறைந்த அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் நம் ஆன்ம சிற்றணுவில் எப்படி எழுந்தருளி ஆட்கொண்டுள்ளார் என்பதை எண்ணி எண்ணி வியக்கின்றோம்.

பரம கைவல்ய நிமலம்.

     நிமலம் என்றால் மலமாக அல்லது அழுக்கு இல்லாதது. பர நிலை, ஆண்டவரின் அருட்ஜோதி வடிவில் மலமாக இல்லை என்பதை அறிவோம். ஆனால் இந்நிலை அனுபவம் மிக மேலான நுண்ணிய அருள் உணர்வினின்றுதான் அனுபவப்படுவதாயுள்ளது. கைவல்யம் என்றாலே கைவரப்பெறுதல். அனுபவத்தில் அடைதல் என்றுதான் பொருள். பரம நிமலப் பரம்பொருளின் சூழலில்தான் நாம் ஆன்ம வடிவொடு இருக்கின்றோம் என்பதையுணர்த்துவது போல் இங்கு கைவல்ய நிலையை நடுவைத்து பரமத்தையும் நிமலத்தையும் இரு புறமும் அமைத்ததுபோல் காண்கின்றோம். நம் வள்ளல் கைவல்யம் பரம கைவல்ய நிமலமானது. மேலான ஒரு பொருளை வழங்க வந்துள்ளது. யாதெனில் நிமலம் என்ற சொல் நம் அருட்பெருஞ்ஜோதிக் கடவுளை சுட்ட வந்துள்ளதால் மலம் இல்லாதது என்று குறித்தலில் சிறப்பு எதுவுமில்லை. அன்றி நிமலம் என்பதில் ’நி’ க்குப்பின் ‘ர்’ அல்லது ‘ன்’ தொக்கி நிற்பதாகக் கொண்டு விரித்துக் காணும்போது நிர்மலம் அல்லது நின்மலம் என்றாகும். இது மல நீக்கத்தை அல்லது ஒழிவைச் சுட்டுவதாய்க் கொள்ளலாம். இதை விட ’நிமலம்’ என்பதில் ’நி’ ‘இ’ என்னும் அருட் பிரணவத்தோடு கூடிய ‘ந்’ என்னும் நகர மெய் எங்கும் நிறை கடவுளைக் குறிப்பதாயும் ‘மலம்’ என்பதற்கு அழுக்கு என்பதற்குப் பதில் ’கற்பூரம்’ என்ற பொருளைக் கொண்டால் கடவுளுக்கு இயற்கைக் கற்பூர மணம் உண்டென்பதை வள்ளலார் அனுபவ மாலையாற் கண்டு கொள்ளலாம். அபக்குவத்தில் அழுக்கென்னும் பொருள் கொள்ளும் மலமாய் இருக்கும் ஒன்று பக்குவத்தில் கற்பூரமாகக் கொள்ளலாம். மேலும் ‘ஈசன்’ என்றது சூடம் அல்லது கற்பூரம் என்பதும் பரிபாஷைப் பொருளாம். எனவே நம் அடிகளார் பெற்ற கைவல்ய நிமலம் அருட்பிரகாச கற்பூர மணமாக அவர்பால் கண்டு கொள்ளலாம்.

 

2013-09-12 19.56.17.jpg

2013-09-12 19.56.17.jpg

Download: