Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இராமலிங்கரின் அகமும் புறமும்...சுவாமி சரவணானந்தா.
      ஒன்றான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் சத்து வடிவினர். அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரேதன் தனது சித்து வசத்தால் எல்லாமாய் விளங்கிக் கொண்டே இருக்கின்றார். முடிவில் அவ் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தனிப்பெருங்கருணை வடிவினராய்ப் பேரின்ப வாழ்வு நிலைக்கச் செய்ய வெளிப்படுகின்றார். இதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணையோடு வெளிப்பட்டு விளங்கும் உண்மை ஆகும்.

இராமலிங்கரின் அகமும் புறமும்.

     இந்த உண்மையை உள்ளவாறு கண்டு, அனுபவத்திற் கொண்டவர்தான், நாம் போற்றும் சிதம்பரம் இராமலிங்க அடிகளார் ஆவார். இந்த இராமலிங்க அடிகளாரைப் பற்றிய புற வாழ்க்கை வரலாறுதான், உலகம் அறிய அவாவுகின்றது. மிகவும் முயன்று ஆதாரங்களைத் தேடித் தேடிச் சேகரித்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆராய்ச்சி முறையால் ஏகதேச நன்மையே உண்டாகலாம்.

     “முழுமையான நற்பயன் விளைய வேண்டுமானால் அக உண்மையை அருள் விசார முறையால்தான் அறிந்து கொள்ள வேண்டியுள்ளதாம்”.

     இராமலிங்கப் பெருமானைப் பற்றிய அக உண்மையை எப்படி அருளாலே விசாரிப்பது ?

     மக்கள், பொறிவாயில் புறஞ்சென்று பொருள் தேடித் தேடித் துய்த்துக் களித்தற்கே பழக்கப்பட்டிருக்கின்றனர். எதையும் புற நாட்டத்தோடே ஆராய்கின்றனர். புறப்பயனையே வேண்டுகின்றனர். அதே முறையில்தான் நம் அடிகளாரைப் பற்றியும், புற வாழ்க்கை வரலாற்றை மிகப் பாடுபட்டு, பலவிடங்களிலும் மக்கள் மூலமாயும், நூல்கள் மூலமாயும் விசாரித்தறிய முயன்றுள்ளனர்.

     அவ்விசாரத்திற்கு ஒப்பற்ற அகச் சான்றாகக் கிடைத்துள்ளது, அண்ணலார் திருவாய் மலர்ந்துள்ள திருவருட்பாவே ஆகும். இத்திருவருட்பாவையும் கூட புற ஆய்வுக்கே பயன்படுத்துகின்றனர் மக்கள். அவர்களுக்க்கு ஏதோ சிறிது வரலாற்றுக் குறிப்பு கிடைக்கின்றது. அத்தோடு அங்கங்குப் பாக்களின் உதவியும் பெற்றுச் சில விளக்கங்களைத் தருகின்றனர். இவ்விளக்கங்களுக்கு உறுதி அளிப்பதாகக் கருதிக் கொண்டு, பிறரையும், பிறர் கூற்றுக்களையும் வளைத்துப் பிடித்து, ஒப்பு நோக்கி, ஒன்று படுத்திக் காட்டி மகிழ்ந்து போகின்றார்கள்.

     இது எப்படி இருக்கின்றது என்றால், ஒருவன் ஓர் ஊரைப் பற்றிய விளக்கத்தை நேரடியாக அங்கு வாழ்ந்திருந்து அனுபவித்திருந்து எடுத்துக் கூறுகின்றான். மற்றொருவனோ அந்த ஊரைப் பற்றிச் சிறிதே நூலறிவும், லேசான கேள்வி ஞானமும் கொண்டு எடுத்துக் கூறுகின்றான் எனில், இவற்றில், எது உண்மையை வெளிப்படுத்தும் எனச் சொல்லவும் வேண்டுமோ ? முதல்வன் கூற்றே பொருந்தும் என்பது யாவரும் அறிவர்.

     இது போலப் புற நிலை ஆராய்ச்சிகள் எல்லாம் உண்மையைத் தெரிவிக்காது எனவும், அக அனுபவத்தைச் சிறிதும் வழங்க மாட்டாது எனவும், அறிந்து கொள்ளலாம். ஆகையால் நாம், அக உண்மையைக் காண முயல வேண்டும்.

அடிகளின் அக உண்மை.

     நம் அடிகளாரின் அக உண்மை காணத் திருவருளால் கிடைக்கப் பெற்றுள்ள புறக்கருவி, திருவருட்பாவும், வடலூரின் கண் விளங்கும் சத்திய ஞான சபையும், அன்னார் உறைவிடமாகிய மேட்டுக்குப்பச் சித்தி வளாகமும், மற்ற சூழிடமுமாகும். இப்புறத் துணைக் கருவிகட்கு மேலாய் அகத்துணை மெய்ப்பொருளாய் ஒவ்வொருவரின் உள்ளத்திலும், அவரே அருள் ஒளி வடிவாய் எழுந்தருளி உதவி புரிகின்றார்.

     ஆதலின், அவரைப் பற்றிய அக உண்மை காண வேண்டுமானால்,  “தயா ஒழுக்கத்தோடு இருந்து கொண்டு, மன ஓர்மையை உண்டாக்கி உள்நோக்கித் தியானித்தல் வேண்டும், பிரார்த்தில் வேண்டும். இப்படி செய்து கொண்டிருந்தால், இதுவரையும், அறிந்தும் கேள்விப்பட்டும் அறியாத உண்மைகளை உணர்த்தப் படுவோம்”

     அந்த உண்மைகளை உறுதிப்படுத்த மேற்குறித்த புறத்துணைக் கருவிகளும், பிறவும். அப்போதப்போது உதவும். இப்படித்தான் அடிகளாரின் மெய் நிலையை மெய்யாக அறிந்து கொள்ள முடியும்.

சுவாமி சரவணானந்தா.


057 (2).JPG

057 (2).JPG

042.JPG

042.JPG

046.JPG

046.JPG

055.JPG

055.JPG