Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
ஆலயங்களின் அமைப்பு...சுவாமி சரவணானந்தா.
ஆலயங்களின் அமைப்பு.

மெய்யறிவுடையோர் கண்ட தெய்வ வாழ்வு முறை, ஆலய வழிபாட்டுக் கொள்கை, உண்மைக் கடவுள் தொடர்பு உண்டாக்கவே ஏற்பட்டது. அதுவும், நம் நாட்டு ஆன்மீக முறையில்தான், ஆண்டவர் உண்மையைக் கண்டடைய ஏதுவாக தெய்வ பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளனவாம். உண்மை ஆன்ம ஞானம் பெறாதார் தெய்வக் கொள்கை, வெற்றுப் புலன் வாழ்வுக்குரிய புற நெறியின் பாற்படுவதாம். அதில் நித்திய இன்ப வாழ்வு, அறியவும் அடையவும் முடிகின்றதில்லையாம். ஆன்மக் கடவுள் வடிவம் அழியாத் தெய்வத் திருவுருவாக எம்மனிதர்க்கும், எத்தெய்வத்திற்கும் உள்ளிருந்தும் புறஞ்சூழ்ந்தும் வாழ்விப்பதாய் இருக்கின்றதாம். அந்த உண்மைக் கடவுள் வடிவைத்தான் நமது ஆன்மாவாக மெய்ஞ்ஞான நிலையத்தில் கண்டு கொள்ள உள்ளதாம். இதனால் இவ்வுடற்கூறு தத்துவத்தையே அடிப்படையாகக் கொண்டு தெய்வத் திருக்கோயில்களை நிர்மாணித்து, நம் சிரநடு பீடத்தொளிர் கடவுளான்ம வடிவையே, அக்கோயிலின் மூலக்கிருகம் என்னும் கருவறையில், அருள் ஒளி ஆண்டவர் சின்னமாக விக்கிரகத்தையோ, தீபத்தையோ அல்லது மற்றொரு சின்னத்தையோ வைத்துள்ளனர். எங்கும் உள்ள கடவுள் உண்மை, நம் ஆன்ம வடிவில் வெளிப்பட்டு அருள் பாலிப்பது அனுபவமாய் உள்ளதைப்போல், எங்கும் புறத்தில் காண்பரிய கடவுளைக் கோயிற் கருவறையில் விக்கிரகச் சின்னமாய்க் காட்டியுள்ளது ஓர் உபாய முறையாகும்.

ஆண்டவர் வடிவை ஆலயச் சின்ன வடிவில் கண்ட பக்தர்களும் சரி, சர்வ வல்லமையுள்ள கடவுளை ஆன்ம வடிவிற் கண்ட யோக ஞான சித்தர்களும் சரி ஓரளவு சக்தி சித்திகளைப் பெற்று இவ்வுலகிடை சில பலகாலம் இருந்து மறைந்து விட்டுள்ளனர் என்பதை நாம் அறிகின்றோம். மனிதன் கடவுளின் நிறை அருளால் பெறலரும்பேறு இவ்வளவுதானா ? நிறை அருள் உண்மையும் அதனால் அடையவிருக்கும் பேரின்ப வாழ்வும் இன்று வெளியாகியுள்ள சுத்த சன்மார்க்கத்தினால் தெளிவாக அறிந்து கொள்ளப்படுகின்றன. கற்பனை கடந்த கடவுள் உண்மை வடிவம் அருட்பெருஞ்ஜோதியாக எங்கும் தன்முழு இயல்போடு நிறைந்துள்ளதாம். அப்படியுள்ள அக்கடவுளின் ஒரு சிறு அணுதான் நம் சிரநடு உட்ஜோதி கொண்ட ஆன்மாவாய்த் திகழ்கின்றதாம். இந்த அருட்பெருஞ்ஜோதி சிற்றுருவே, கடவுள் நிறையியல் கொண்ட சிறுவடிவாயும், அதுவே நம் உண்மை ஆன்ம வடிவாயும் இருக்கின்றதாம். இந்தக் கடவுளான்ம உண்மையை அறியாமல்தான் நம்மை புறவுடல் வடிவினராக கருதிக்கொண்டு, நாம் அடையப் பலவகை முயற்சிகளைச் செய்து உயர்நிலை பெறாது அல்லலில் உழன்று கொண்டிருந்தோம். இப்பொழுதுதான் மெய்யருளாலே நமது மெய்யான ஆன்மக் கடவுள் வடிவில் அதுவாகி இருக்கின்றதை யுணர்கின்றோம். இந்த உண்மையைச் சுட்ட வந்துள்ளதே வடலூர் சத்திய ஞான சபையும் அதன் உள்வளர் அருட்பெருஞ்ஜோதி தீபமுமாம்.

உடற்பற்றற்று உண்மைக் கடவுளைக் காண சத்திய ஞானக் கோயில்முன் உற்று உளமுருகி வேண்டினால் மாயா மறைப்புகள் எல்லாம் தேய்ந்து தேய்ந்து ஒழிய, உள்ளத்தே அருள் ஒளிக் காட்சியைப் பெற்று அத்தோடு அத்துவிதமாய் ஒன்றி நிற்கலாம். இப்பொழுது அந்த உள் மிளிர் கடவுள் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையுடன் அனுபவம் வழங்க விளங்கிக் கொண்டுள்ளதாம். இவ்வுண்மைக்கோர் கற்பனைச் சின்னமாக ஆக்கிடப்பெற்றுள்ளதே சத்திய ஞான சபையும், அதில் விளங்கும் அருட்பெருஞ்சோதி அகணட தீபமும்; மற்றும் பலவாகிய தத்துவத்தின் விளக்கத்தின் பொருட்டே ஞான சபை அமைக்கப்பட்டுள்ளதாம். ஆலயத்தின் உள்வளர் கடவுள் தத்துவத்தையே புறத்தே அதற்குரிய தத்துவ விளக்க கொடிச் சின்னமாக அவ்வாலயங்களின் முன் கட்டப்படுகின்றன. இது போல் சத்திய ஞான சபையிலும், அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் உண்மை சுட்டும் வெண்மையும் மஞ்சளும் கலந்த சன்மார்க்கக் கொடி கட்டப்பட்டுள்ளதாம்.

சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்.

20140811_095856.jpg

20140811_095856.jpg

Vadalur Dharmasalai..3.8.2013_361467.jpg

Vadalur Dharmasalai..3.8.2013_361467.jpg

20140224_102739~2.jpg

20140224_102739~2.jpg

SAM_7307.JPG

SAM_7307.JPG

Download: