=0=0=0=0=
சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல். அவர்கள் எழுதிய நூலிலிருந்து.....
=0=0=0=0=
சிறப்பு முகவுரை.
மனிதப் பிறப்பு, கடவுள் உண்மையைக் கண்டு அடைந்து, அனுபவத்தில் பெற்று, ஆனந்த வாழ்வு கொண்டு விளங்குவதற்கேயாம். அந்த தெய்விக மணம் ஏற்று வாழவே, இம்மனிதப்பிறப்பின் தலைநடுவுள் இறையுண்மை எல்லாம், மறைந்திருந்து, பக்குவ காலத்தில் வெளிப்படுவதாம்.
எங்கும் நிறை அருட்பெருஞ்ஜோதிக் கடவுளே மனிதனின் உச்சியுள் ஆன்ம ஜோதி தீபமாய் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. அதுவே முச்சுடராகி, நெற்றியின் வலம், இடம், நடு முக்கண்ணாய் விளங்குவது. நடுக்கண்ணை தயா ஒருமையினால் திறந்து கொண்டு அகம் நோக்கினால், உச்சிக்குக் கீழே, உள்நாவுக்கு மேலேதான் ஆன்மதீபம் காணலாம். அதுவே, முக்கண்ணுக்கும் ஆதாரமான ஞானக்கண்., உபநயனம் ஆம்.
உ+ப்+அ==’உப’ என ஆய்ந்து அறியப்படும். இது தலை நடுவுள் முகுள மூளைமேல் “ப்” =வடிவில் விளங்குவது. இதனைச் சூழ்ந்துள்ள உயிரும் உடம்பும்தான் உ..அ..என இரு புறமும் சூழ்ந்திருப்பது. பகரமேற் கடவுள் ஒளி நவ நூல் இழைபோல ஒளிர்வதையே, பூணூல் என்பர். இதனை அக அனுபவத்தில் கொண்டு விளங்குவதே, உபநயனம் பெறுதல், பூணூல் அணிதல் என்பதின் உண்மையாம். இதை ஏற்காத .. பூணூல் அணிந்து கொள்ளுவதும், … காயத்திரி மந்திரம் சொல்வதும், அர்த்தமில்லை.
முதலில் இவ்வுபநயனம் பெற்றுக் கொண்டு, உபதேசமும், உபவாசமும், வாழ்வும் ஏற்றலே உண்மை பிரமசரிய வாழ்வாகும். இந்த பிரமசரிய வாழ்வின் முடிவில் அந்த உள்ளொளியோடு கலந்து அதுவாகி இருந்து கொண்டு வாழ்வதே ஆன்ம இல்லத்தில் அருளொளித் திருவோடு கூடி வாழ்வதே உண்மை இல்லறம். இது உண்மைத் திருமண வாழ்வு. எவர்க்கும் உரியது. இந்த அருள் அகவாழ்வின் பயனாகப் பெறப்படுவது அருட்சோதிப் பேரின்ப செல்வமேயாம். இதுதான் வள்ளலார் அருள் ஒளித்திருவை மணந்து சிற்சபை பொற்சபைத் திரிதேகச் சித்திப் பேரின்ப வாழ்வு கொண்டுள்ளது ஆம்.
புறவுலகம் உண்மை அறியாது ஏற்கின்ற மாயைத் திருமணமும் இல்லறமும் மெய்யல்ல ! பல காலம் பலதரம் பிறந்து பிறந்து பிழைத்து ஒழிந்து, முடிவில்தான் உண்மைத் திருமணம் பெற்று உய்தல் சத்தியம்.
இதுபோல் உண்மைத் துறவறமும் இதுவென அறியாது, மூவாசையை விட்டுத் துறந்து சென்று மறைந்து ஒளிவதும் சரியல்ல. உண்மைக் கடவுளைத் தயவு ஒளியாகத் தலை நடுவுள் கண்டு, அகத்தோடு உறவு பூண்டு நித்திய வாழ்வு ஏற்பதே உண்மைத் துறவின் உண்மைப் பொருள்.
“த” என்னும் தகர மெய் எழுத்து அகண்ட ஆகாச வெளி முற்றும் நிறை கடவுளைச் சுட்டுவது. அதுவே நம் அனுபவத்தின் பொருட்டு, தலைநடுவுள் விளங்கும் தகராகாசக் கடவுள் வடிவமாகும். த்+உறவு==துறவு. ஆகையால் இந்த உண்மைத் துறவும் இறை இன்ப வாழ்வு தருவதே.
ஆகவே, உபநயனத்தின் உண்மையும். திருமணத்தின் உண்மையும், இல்லற துறவறங்களின் மெய்ப்பொருளும் நன்கு அறிந்து பெரும் பயன் பெறவே இம்மனிதப் பிறப்பு வழங்கப் பெற்றுள்ளது மக்களினம் !
இது சுத்த சன்மார்க்கக் காலம். இதுவரை தன்னை அறியாது அறியாமை இருளில் மறைந்து, புதைந்து கிடந்தது ஒவ்வொரு ஆன்மாவும். இறந்த நிலையை விட்டு தலைநடுஒளிர் மெய்ந் நிலையுற்று நிற்றலே (ப்+இ) பிறந்த நிலை அடைகின்றது. இதனையே வள்ளல் பெருமான், இறந்தவர் எழுதல், செத்தவர் எழுதல் என்று சொல்லுகின்றார். மற்றபடி, தினமும் பிறந்து கொண்டும். இறந்து கொண்டும் உள்ள மாயா உலக தோற்ற மக்களை அல்லவாம் ! திருவருள் ஏகதேசத்தால் எழுப்பப் படுபவர்கள் மறுபடியும் மாண்டு, ஒழிதல் உண்மையே ! அருள் ஞான அகப் பிறப்பு அடைகின்றவர்கள் எழுந்து இன்போடு என்றும் வாழும்பேறு பெற்று விளங்குதல் சத்தியம்.
தயவு மூலம் வாழ்க உலகம் எல்லாம்.
இவண்,
தயாநேயன், சரவணானந்தா.
Arut Perum Jyothi
Sanmarga Durai