அருட்பெருஞ்ஜோதி தயவு அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
-------------------------------------------------------------------------------------------------------------------------
தயவுப் பாக்கள்
1. சுத்த சன்மார்க்கப்பதி வருகை
திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா.
திருவருட் பிரகாச வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்க நெறியின் கீழ்
தயவின் அடிப்படையில் இயற்றப்பட்ட பாக்கள்.
சுத்ததயா சன்மார்க்க ஜோதிவருகின்ற
சுக ஆரம்ப தினம் இதுவாம் சூழ்ந்துவம்மின் இங்கே
இத்தரணி எங்கும் இனி என்பதியின் எழிலே
இயல்பெறவே ஓங்கிடும் நீர் மயலறவே காண்பீர்
சித்தசிகா மணிஎன்று வித்தகர்கள் செப்பும்
செல்வப்பேர் ஒடுதெய்வத் திருநாமம் எல்லாம்
உத்தமனார் ஒருவருக்கே கற்பித்த உண்மை
ஒருமையினாற் கண்டென்றும் பெருமையில் வாழ்வீரே. 1
தயவுவரு கின்றஒரு தருணமிது தானே
சத்தியமென்று அறிந்திடுமின் நித்தியம்பெற் றிடலாம்
மயலறிவு கொண்டினிமேல் மலங்கிடுதல் வேண்டாம்
மன்னருளின் உணர்வாலே மாநிலத்தில் மகிழ்ந்து
அயலறியா தெல்லாரும் அகவுரிமை கொண்டு
ஆனந்த வாழ்வுறுதற் கானஒரு அமயம்
இயலாக இன்றுவந்து இசைந்திட்டது இதனால்
இன்னல் இருள் கழிந்தெங்கும் பொன்ஒளிதங் கியதே 2
அகத்திலிருந்து இதுகாறும் அருளாட்சி புரிந்த
அருட்ஜோதி அண்ணல் இன்று அனகமுறு கின்றார்
முகத்திலிரு கண்கொண்டு காணமுடி யாதே
முழுமுதலாம் கடவுளைநாம் பழுதறவே காண
மகத்தில் ஒளிர் ஆன்மகுரு தயவாலே நமக்கு
வழங்குதற்கு வெளிப்பட்டு வருகின்ற அமுத
யுகத்தினது பிறப்பின்று யூகமுடை யார்க்கு
உண்மைதரும் எண்மையல உவந்துகொள்ளு வீரே 3
கலியொழித்தற் கின்றேநம் கடவுள்வரு கின்ற
காற்குளத்திற் கதிர்மதியுஞ் சேர்கால மாகும்
புலிமுனிக்குப் பொற்சபையிற் புண்ணியனார் அருளும்
பூசநாட் காட்சியெனப் புனைந்திட்ட உண்மை
நலிவறவே நாம் காண நண்ணுகின்றார் நமது
ஞானசபா நாயகனார் நம்உள்ளச் சபையில்
பொலிவுறவே கண்டுகொளற் கொருமையொடு தயவு
பூண்டுகொள்வீர் பூதலத்திற் புகழ்பெறுவீர் நீரே. 4.
தனித்தலைமைத் தயாநிதிஎன் தந்தைவரு தருணம்
சார்ந்ததின்று ஆதலினால் சேர்ந்துவம்மின் இங்கே
பனித்தநெடுங் கலியெல்லாம் பறந்துகெடும் இன்னே
பாரறியாப் பரமசுகம் பறந்துநமைத் தேடி
கனித்தகனி காம்போடே கிஞ்சுகவாய் கொஞ்சக்
களித்துவரு கின்றதுகை யேந்திபெறு வீரே
இனித்தகனி இறைவனது இன்புருவம் ஆகும்
ஏற்பீரேல் எக்காலும் இனித்திருக்க லாமே. 5
வரமளிக்க நம்முடைய வள்ளல்வரு கின்றார்
மண்ணுடம்பைப் பொன்னுடம்பாய் ஆக்கவரு கின்றார்
சிரநடுவாங் காற்குளத்தே திகழும் நமது உருவில்
சேர்கின்றார் நமதுகுரு ரவிமதியுங் கொண்டே
உரனளிக்க உளத்தெழுநம் உடையவனை அடைய
ஒருமையொடு தயவுகொண்டு ஓடிவரு வீரேல்
கரமளித்து மேல்தூக்கி கலியுடம்பை மாற்றி
கழிவில்லாக் கனகமய இன்புருவாக் குவரே 6
இதுநமது எல்லாஞ்செய் வல்லசித்தர் இந்த
எழிற்புவிமேல் இன்பருள வருகின்ற வேளை
முதுமறையோர் கிருதயுகம் எனமொழிந்தார் முன்னர்
மூவாத முதல்வர் இன்று முன்வந்து நமக்கு
சதுர்யுகத்தும் அழிவில்லாத் தனிவடிவம் தரற்குச்
சாருகின்றார் ஆதலினால் சதுர்யுகத்தொன் றலவே
விதுஅமுத மயமான தயாவுதய காலம்
மேதினிவந் துறுவதென மிகமகிழ்வோம் நாமே 7
இக்காலம் நம்முடைய இன்பர்வரும் ஏல்வை
இதுமுன்னர் எதிர்பார்த்த கற்கிவரு காலம்
அக்காலம் இப்பொழுது திருவருளால் அகத்தே
அலர்ந்திடச்செய் திட்டார்நம் ஆண்டவனார் இன்றே
முக்காலும் விளங்கும்நம் மூர்த்திகற்கி வடிவம்
மூடிநிற்கும் அகவடிவம் ஆதலினால் அவரை
எக்காலத் தெதிர்பாரா வண்ணமின்று நாமே
இயற்றயவால் அகம்புணர்ந்து இன்புறுவோம் இங்கே. 8
மெய்யறிவால் மேவவல்ல விமலரின்று நமது
மெய்யகத்தே யுறுகின்றார் மேல்நாட்டார் இதனைச்
செய்யகத்தே காணாது திருவருளே மறைக்க
தியாகநிறை உள்நாட்டார் தெளியக்கொள் வாரே
மெய்யறிவாம் புலப்பற்றைப் புறக்கணித்து இங்கே
புரையில்லாத் தயவோடு விரைவீரேல் புவியில்
எய்யாத மெய்ப்பொருளை எய்திடலாம் இன்றே
ஈதெமது இன்னமுதர் பொன்னாணை யாமே 9
என்வார்த்தை என்றுஇதனை எண்ணாதீர் எனக்கு
என் தலைவர் உள்ளிருந்து இசைத்திட்டால் அன்றி
புன் அணுவும் அசைத்தொலிக்க என்னாவாற் கூடா
புரிந்துகொள்வீர் எல்லாமென் புண்ணியனார் உரையாய்
பொன்போன்ற அவர்இன்று புவியில்வரு தற்கு
புலையேனுள் இருந்திங்கே புனைந்துரைக்கின் றாரே
நன்மொழியீது என்றுகொண்டு நல்தயவால் வருவீர்
நாதனருள் பெற்றென்றும் நனிமகிழத் தானே. 10
Very nice to see Dhayavuppaakkal. In case any more poems are there, kindly post it.
Thursday, April 24, 2008 at 13:16 pm
by Ramanujam jam
Write a comment