தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தெட்டாம் அதிகாரம்.
உபவாசம்.
|
1 |
உள்ளொளியோ டுற்று உபவசித்தல் வேண்டுமிங்கு தள்ளுக பொய்விரதம் தாழ்வு. |
671 |
குறள் விளக்கம்
அருளமுதாம் மருந்து அகத்தே இருக்கக் கண்டு கொள்ள நேர்ந்தது முன் அதிகாரத்தில். ஆதலின் அதற்கடுத்து, அம்மருந்துண்டு அகத்தே உபவாசம் செய்தல் வேண்டும் என்ற கருத்தை உணர்த்தவே இந்த உபவாசம் என்னும் அதிகாரம் அடுத்து வைக்கப்பட்டுள்ளது.
ஆன்ம நிலையோர்ந்து அதில் ஒன்றி அவ்வான்ம இயற்கையாகிய தயவு பெருகப் பெருக வாழ்வதே ‘உப’ வாகிய நிலையில் வசித்தலாகும். இப்படி அக உணர்வு கெடாது வாழற்கு, புற வாழ்வில், உணவேற்பதில், இச்சையின்றி, கூடக் குறைவின்றி பொறிபுலன் மயங்காது வெம்பாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஈதன்றி, ஒரு வேளையோ, பல பொழுதோ, முற்றும் உண்ணாது இருப்பதாலும், புற கட்டுப்பாட்டு விதிமுறை வழுவாது விரதம் இருப்பதாலும் உயர்வில்லையாம்.