Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.669.


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்தேழாம் அதிகாரம்


மருந்து.


9

உடன்பிறவா மேருமலை யோங்குமருந் துண்டால்

தொடரிறவி நோய்போந் தொலைந்து.

669


குறள் விளக்கம்


பொன்னொளி வீசும் கடவுட் சோதியே மகாமேரு மலையாகப் புனைந்து கூறப்படுவது. இம்மலையொளிர் பதியே நமக்கு இறப்பொடு மற்றெல்லாப் பிணிகளையும் போக்கிப் பெருஞ் சுக வாழ்வளிப்பதாம்.


ஆன்மாவோடு அனாதி காலந்தொட்டு ஒன்றியுள்ளது நம் மேருமலை மருந்து. பிறப்பும் இறப்பும் பல பல வந்து வந்து போகின்றன. இவை அகமாகிய ஆன்மாவைத் தீண்டுவதில்லை. ஆதலின், பிறவாதிறவா தென்றும் அகம் ஒன்றியுள்ளதே இம்மேருமலை. இதனால்தான் இது உடன்பிறவே மேரு மலையாக உரைக்கப்பட்டது.


ஆன்மா இயற்கையில் ஆணவ மலத்தோடு பிணிக்கப்பட்டுள்ளது. இதன் மீது இயற்கையில் செயற்கையாக மாயா மலமும், செயற்கையாக கன்ம மலமும் வந்து சூழ்ந்து பிணிக்கின்றன. ஆன்மாவுக்குள்ள இம்மலப் இணியே, வியாதி எனப்படுவது.


‘வி’ என்றால் இல்லாதது. ‘ஆதி’ என்றால் தொடக்கம். அதாவது ஆன்மாவுக்கு ஆதியில் அல்லது தொடக்கத்தில் இல்லாதது, பிற்சேர்க்கையாக வந்ததாம். ஆன்மாவுக்கு உண்டான இம்மல வியாதி கடவுள் அருளாகிய மருந்தால் நீங்கும். ஆனந்தாம் உண்டாம்.