தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தேழாம் அதிகாரம்
மருந்து.
|
1 |
உண்ணாத போதே உளத்திருக்கும் மாமருந்து எண்ணாத பேர்க்கில்லை யிங்கு. |
661 |
குறள் விளக்கம்
மூவாசையற்று வாழ்வார்க்குத் திருவருள் அமுதல் உள்ளிருந்து பெருகும். அதுவே, அவர்கட்கு சுத்த உணவாகும். எல்லாப் பிணியோடு, இறப்பையும் நீக்கும் மருந்துமாகும். அவர்கள் புற மருந்தை விரும்பிக் கொள்ளார்கள். சுத்த சன்மார்க்க சாதகர்களும் லட்சியமாகக் கொண்டு, புறப்பொருள்களை, விருப்பு வெறுப்பின்றி, உள்ளொளி கிட்டும் வரை யேற்று வாழ்வார்கள். இதனால் அம் மூவாசை விலக்குக்குப் பின் இம்மருந்ததிகாரம் வைக்கப்பட்டுள்ளதாம்.
பெருஞ்சுகம் தரவல்ல நம் தயா சோதி பதியே பெருமருந்துமாகும். இம்மருந்து இயற்கையிலே நமதகத்தில் பொருந்தியுள்ளதால், புறத்திருந்து கொள்ளப்படுவது அன்றாம். இது இப்படி அகத்திலே இருந்தும், ஏன் நமது உயிருடம்பில் சார்ந்து, பிணி அனைத்தும் வாராது தடுத்து இன்ப வாழ்வு நல்கவில்லை எனில், முதலில் அதனை எண்ணுதலாகிய சத்விசாரத்தால் காண வேண்டியுள்ளது. பின்னர் சுத்த தயா அனுபவத்தால் உயிருடம்பில் செறிந்திடச் செய்தல் வேண்டும். அப்போதுதான் அமருந்தை நாம் அடைந்தவர்களாவோம். அதன் பயனாம் சுகமும் பெறுவோம்.