Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.641.


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்தைந்தாம் அதிகாரம்.

பெண்ணாசை விலக்கு


1.

உடற்கூறு பெண்ணால் உயிர்க்கூறு ஆணால்

விடல்வேண்டும் பெண்ணாசைப் பித்து.

641


குறள் விளக்கம்.


மண்ணான தேகப்பற்று முதலில் நீக்குதல் வேண்டுமென்று கூறப்பட்டது. இந்த ஐம்பொறி உடம்பின் பற்று ஐம்புலன் இச்சையால் வளர்வதாம். இந்த ஐம்புலன் இன்பத்து அவாவே சிற்றின்பத்தின் தனித் தொகுதிகளாகும்.


மேலும் இவ்வைம்பொறித் தேகம் பெண்ணின் சத்தினின்று உருவாகி உள்ளதால், இப்புலனின்பமாம் சிறு இன்பமே பெண்ணாசையாகப் பேசப்படும். ஆகவே, தேகப் பற்றொழிப்பதற்கு இப் பெண்ணாசையை நீக்குவதே வழியாம். ஆதலின் இவ்வதிகாரம் அடுத்துள்ளது.


இம்மனிதப் பிறப்பு, பெண்ணின் சத்தினால் புற உடம்பையும், ஆணின் சத்தினின்று ஆன்மப் பகுதியையும் பெற்றுள்ளதாம். உண்மை இன்பம் அடைவதற்குப் பெண்ணாசையான புலனின்ப அவாவை ஒழித்தல் வேண்டும்.


அபக்குவ வசத்தால் பொறியுடம்பின் பற்று மிகுத்து, புலனின்பத்தில் பேரவா கொண்டு, பித்து கொண்டு அவலமுறுகின்றான் மனிதன். இப்பெண்ணாசைப் பித்து ஒழிந்து தயா வாழ்வு வாழ்ந்தால்தான் பேரின்பமுறலாகும்.