Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.484.

தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தொன்பதாம் அதிகாரம்.
அண்ட பிண்ட விசாரம்.

4.
பிண்டான்மா சூழ்ந்து பிறங்குடல்போ லெண்கோளும்
அண்டான்மா சோதிவல மாம்.
484

குறள் விளக்கம்.
நமது ஆன்மாவை ஜீவ தேகம் சூழ்ந்து இருப்பது போல, ஞாயிறாகிய பிரபஞ்ச ஆன்மாவைக் கோள்கள் சூழ்ந்துள்ளனவாம். ஆன்மாவைச் சூழ்ந்த ஜீவதேகத்தில் உயிர்ச்சுவாசம், அறிவு, புலன் உணர்வு, ஐம்பூத உடல் ஆகிய எட்டும் கூடி விளங்குவன போல், சூரியனைச் சூழ, இராகு, கேது, சந்திரன் ஆகிய மூன்றோடு குசாதி பஞ்ச கிரகங்கள் என்னும் எண் கோள்களும் சுற்றி வருகின்றனவாம்.
ஆன்ம சோதியைப் பற்றிக் கொண்டு, கோள் உடம்பின் பற்றற்று விண்மீன் போல் விளங்குவதற்கே இவ்வண்ட பிண்ட விசாரம் உதவுவதாம்.
ஆன்ம சோதி நிலையை சிலுவையாகவும், சூழ உள்ள கோள் உடம்பின் பற்றாகிய பந்த நிலை நரகமாகவும், இவ்வுடல் பற்று அற்று ஆன்ம சோதியில் அன்பு உருவாய்த் திகழ்வதே, சிலுவையில் இளங்கும் ஏசு கிறிஸ்துவாக புனைந்து கூறி உள்ளனர் ஆன்றோர்.
“அருட் பெரும் சிலுவையில் அன்புருவ இயேசு பெருமான்” என்ற நூலில் இதன் விளக்கம் காணலாம்.