தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இரண்டாம் பிரிவு
விசார இயல்.
நாற்பத்தியேழாம் அதிகாரம்.
அருள் விசாரம்.
|
1 |
இவ்வருளே நாம் ஈண்(டு) இறைஞானங் கொண்டவன்றன் செவ்விகண் டொன்றச் செயும். |
461 |
குறள் விளக்கம்.
ஒழுக்க இயலால், திரிகரண சுத்தி உண்டாகி, தேகப் பற்றற்று ஆன்ம இயற்கையாகிய அருள் உணர்வு பெற்று நிற்கின்றோம். இந்த அருள் பூரணமாகிப் பழுத்து பயன் தரவே விசார இயல் கொள்ளப்படுகின்றது. அதிலும் முதலில் அருள் விசாரம் செய்ய வேண்டி உள்ளதால் இவ்வதிகாரம் இங்கு வைக்கப்பட்டுள்ளதாம்.
மன அறிவுக்கு மேல், மற்ற எதனாலும் அறியப்படாது விளங்கும் எல்லாம் வல்ல கடவுட் சக்தியே திருவருளாகும். இந்த அருட் சக்தியைக் கொண்டுதான் கடவுளை அறிந்து அடைய முடியும். உள் உணர்வில் இவ்வருளைப் பற்றி நின்று அன்புப் பணி புரிவதே உண்மை விசாரமாகும். உலகில் இந்த விசாரம் இடைவிடாது செய்து கொண்டே இருந்தால், தக்க காலத்தில் நம் பதியின் உண்மையை எல்லாம் கண்டுபெற்றுக் கொள்ளச் செய்யும் இந்தத் திருவருள் விசாரம்.
செவ்வி = தக்க சமயம், பருவம், தகுதி, அழகு எனும் இவை எல்லாம் திருவருளே கூட்டி வைக்கின்றன. அத்திருவருளே பக்குவ காலத்தில் சுத்த விசார மயமாய் வெளிப்படும். இதன் சார்பால் இறை இன்பம் பெறலாம்.