Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் இன்று இரண்டு-448, 449

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தைந்தாம் அதிகாரம்.

உபநயனம்

8

உட்டா ளுடைய உபநயனத் தின்கதவம்

தட்டத் திறக்குந் தயவு

448

குறள் விளக்கம்.

உபநயனம் என்னும் கதவுக்கு உள்புறமாகத் தாள் இடப்பட்டுள்ளது. அதை வெளியிலிருந்து திறக்க முடியாது. உள்ளிருந்துதான் திறக்கப்பட வேண்டியுள்ளது.

நுதற் கண்ணைத் திறப்பதற்காக மேற்கொள்ளுகின்ற, கருவி கரணப் புறமுயற்சிகளும், மந்திர யோக சாதனைகளும், தந்திர பாவனா தியான நிட்டைகளும் ஏகதேசம் திறந்தது போல காட்டுமே அன்றி, நிலைத்து நின்று பயன் தராது. கனவு போல் தோன்றி மறைந்து விடும்.

சுத்த தயவோடு உபநயத்தின் சந்நிதியின் முன் நின்று வேண்டுதலாகிய தட்டலால், நம் தயாநிதி உண்ணின்று விரைந்து வந்து திறந்து நம்மை எதிர் கொண்டு ஏற்று மகிழ்வு செய்வார்.

9

காக்கைநோக் கன்ன கடவுளோ டண்டவுல

காக்கமெலாங் காணுமிவ் வக்கு.

449

குறள் விளக்கம்.

காகத்திற்கு உள்ள இரண்டு கண்களிலும் சென்று சென்று நோக்குவது ஒரே கண்மணியாம். இதுபோன்று நமது நுதற்கண்ணும் அகநோக்கிக் கடவுள் உண்மைத் தன்மையையும், புறநோக்கிப் பிரபஞ்ச தோற்ற உண்மையையும் கண்டு கொள்ள வல்லதாம்.

எனவே, இக்கண் அக அருவ கடவுட் சக்தியையும், புற உருவப் பிரபஞ்சத்தையும் காணக்கூடிய அருவுருவத் தன்மை கொண்டு விளங்குகின்றதாம்.

புறக்கண்ணுக்குத் தோற்றாததால் அருவமும், அக உணர்வுக்குத் தோற்றலால் உருவமும் சேர்ந்து அருவுருவாய் அனுபவப்படுகின்றது இந்த உபநயனம்.

அக்கு = கண்.