Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.447.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தைந்தாம் அதிகாரம்.

உபநயனம்

7

முக்கண் ணடுவான முச்சந்தி நின்றுதினம்

முத்திகா யத்திரியை முன்னு.

447

குறள் விளக்கம்.

முச்சந்தி = புருவ மத்தியிடம். இது முக்கண் சேரிடமாம். வலக்கண் சூரியன், இடக்கண் சந்திரன், நடுக்கண் அக்கினி. இம்மூன்றும் கூடிய இடம் முச்சந்தி, லலாட பீடம்.

அன்றியும், தூல தேக உணர்வு, சீவ உயிர்ப்புச் சக்தி, ஞான உணர்வுச் சக்தி ஆகிய இம்மூன்றும் சேர்ந்துள்ள இடம் இம் முச்சந்தியாம்.

உலகியல் புற மார்க்கத்தார், காலை, நண்பகல், மாலையே முச்சந்தி என்று கொள்ளுவர். இங்கிருந்து தான் முத்தி அளிக்கும் காயத்திரி மந்திரத்தை முன்னுதல் அதாவது, சுருதி, தியானித்து, அடைதல் வேண்டும் என்பர்.

முத்தி காயத்திரி என்பதன் பொருள் விளக்கம்.

புறக் காரியமாகச் செய்யப்படும் காயத்திரு மந்திர செபத்தால் பேரின்ப சித்தியாம் பெரு முத்தி நிலை அடைதல் கூடா.

சுத்த தயா சன்மார்க்கத்தால் நெற்றிக்கண் திறக்கப் பெற்று பரமான்ம சோதியில் தியான முதிர்ச்சியால் ஒன்றி தயாவண்ண, உப நயன வடிவமாவதால் தான் மேற்படி முத்தி சித்திக்கும். இம்முத்தி நிலையே காயத்திரியின் சிறந்த லட்சியமாம்.

அன்றியும், இக்காயத்திரி என்பது, காயம் = தேகம், திரி = மூன்று, அதாவது, சுத்த தேகம் பிரணவ தேகம், ஞான தேகம் ஆக சுத்த சன்மார்க்கத்தில் விளங்கலால், இம்முத்தேக சித்தி முடி நிலையே முத்தி காயத்திரியின் முடிபொருளாக அறிந்து கொள்ள வேண்டும்.