Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.405`

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தோராம் அதிகாரம்

மனித சீவான்மா.

5.

நவமா மவத்தை சலித்தசீ வான்மா

.துவமார் துரியச் சுடர்.

405.

குறள் விளக்கம்.

துவமார் துரியச் சுடர் = நீ பொருந்தி உள்ள உண்மை ஒளியாம். அதுவே சுத்த ஆன்ம நிலை.

இந்த உன் உண்மை வடிவை நீ உணராது மறைத்துக் கொண்டுள்ளன, நவ அவத்தைகள். உயிர் நிலையாகிய சீவ உணர்வில் விழிப்பு, கனவு, துயில் மூன்றும் சீவ சாக்கிரம், சீவ சொப்பனம், சீவ சுழுத்தி என்ப. பொறிநிலை ஆகியபுலன் உணர்வில் தோன்றும் முந்நிலை பரசாக்கிரம், பர சொப்பனம், பரசுழுத்தி என்ப. அறிவு நிலையில் குருசாக்கிரம், குரு சொப்பனம், குரு சுழுத்தி என்று மூன்று படிகள் கொண்டதாம். இவ் ஒன்பது நிலைகளும் ஆன்மாவை பண்படுத்த திருவருளால் வழங்கப் பெற்றுள்ளோம்.

இந்த நவ அவத்தைகளும் ஒழிந்த மேல் நிலையில் விளங்குவதுதான் “நீ” ஆகிய சுத்த ஆன்மச் சுடர் எனப்பட்டது. இது குரு துரியச் சுடராகக் கூறப்படுவது. சுத்த சன்மார்க்கப் பதி அனுபவம் இந்நிலைக்கு மேல் விளங்கும்.