Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.380.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தெட்டாம் அதிகாரம்.
சீவ தயவு

.10
உடற்குயிர் வாசி யுயிர்க்குயிர் தெய்வச்
சுடர்தய வென்றே துணி
380

குறள் விளக்கம்.
தேகத்தில் வாசியாம் பிராணனே சீவனாய் விளங்குகின்றது. அச்சீவ இயக்கத்திற்கு ஆதாரமாய் உள்ளது அகத்தில் உள்ள கடவுள் தயவு தான். இதைத் தெளிந்து கொண்டு, தயை சிறக்க வாழ்வதினால், உயிர் விளக்கம் ஓங்கி நீடு வாழலாகும்.
கடவுட் பெரும் சக்தி தயவாகி உயிர்க்கு உயிராய் உள்ள காரணத்தால், நாமும் சீவ தயவாலே கடவுள் தயவைப் பெற்று அழியா வாழ்வுறலாம் என்பது தெளிவு, சீவ ஒழுக்கத்தின் பயனும் இதுவேயாம்.
வாசி,,, சிவா அனுபவம்.
இத்தேகத்தின் உயிர்ச் சக்தியாய் இயங்குகின்ற பிராணன் வாசி எனப்பட்டது. இதற்கு, அகத்திருக்கும் கடவுட் சக்தியே ஆதாரம் எனவும் மொழியப்பட்டது. அந்த கடவுட் சக்திதான் சிவமாகப் புனைந்து கூறப்படுகின்றது.
சுத்த தயா சன்மார்க்கத்தில் இச்சிவம் “சுத்த தயவு” என்றே கொள்ளப்படும். இதனால், அகத்திருந்து தயவு ஒளி வெளிப்பட்டு அனகம் நிறைந்து உயிருடம்பைத் தன்மயமாக்கிக் கொள்ளும்போது, தேகம். தயா இன்ப உருவாய், சீவ தேகம் சிவ வடிவாய் மாறி விளங்கும்.
வகர முதலாம் வாசிக்கால் கொண்டு பிழைத்திருந்த மண்ணுடல், அகநின்று வந்த சிகர முதலாம் சிவானுபவம் பெறும்போது, பிழைத்திருந்த மண்ணுடல், பொன்னுருவாய் மாறி நித்தியமாய் வாழலாகும்.
இச் சீவ ஒழுக்கம் சித்திக்கப் பெற மேற்கொண்டு ஆன்ம ஒழுக்கம் ஏற்க வேண்டியுள்ளோம்.