Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.356.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்
புலால் மறுத்தல்.

6.
சத்தெலாஞ் சுத்தமாய் சாகத் திருப்பவுயிர்
செத்தவூ னுண்ணீர் தெரிந்து.
356

குறள் விளக்கம்.
இயற்கையிலே உடல் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துப் பொருள்கள் யயவும் இலை, தழை முதலியவற்றில் இருப்பதறிந்தும், அவற்றை விட்டு, உயிர் நீத்த சீவர்களின் புலாலையுண்டு கேடுறுவது ஏனோ ?
சுத்த உணவாகிய புல்லாதியுண்டு வாழும் சீவர்களைக் கொன்று அவற்றின் அசுத்தப் புலாலை உண்ணும் பழக்கம் மூடமாகும். சாக மூலிகைகள் நோய்களைத் தீர்ப்பன, அவற்றை உண்பதால் சுகம் பெறலாம். புலை உணவோ நோய்கள் வளர உதவுவதால், அதனை ஒழித்தல் வேண்டும்.
சாக பட்சிணியில் சிறந்த பசுவினிடத்து கிடைக்கும் அதன் பால் முதலிய பஞ்ச கவ்யத்தினால் ஐம்பூத தேக சுக வாழ்வுக்காம் சத்து உள்ளதறிந்து கொள்ளல் வேண்டும். இதன் உண்மை தெரிவிக்கவே சிவபெருமானை இடப வாகனத் தேற்றியும், பஞ்ச கவ்ய முழுக்கால், “ஆவினைந்தாடி’ என்ற பெயர் சூட்டியும் வணக்கும்வர் சைவப் பெருமக்கள்.
ஆதலின், உயிரிரக்கத்தோடு பசு முதலான சீவர்களைப் போற்றி வளர்த்து பால் முதலிய சத்துப் பொருள்களை ஏற்று நலம் பெறுதல் சாலச் சிறந்ததாம்.
மேற்படி சத்துப் பொருள்களை கிரகித்துக் கொண்டு நாமும் வாழ்ந்து, அந்தச் சீவர்களையும் வாழ்வித்தல் அறநெறியாகும். மற்றபடி அச்சத்துப் பொருள்களை விடுத்து, அது ஒழிந்த அசுத்தப் புலாலை ஏற்பதால் உயிர்க் கொலையும், பாவமும், நோய்களும், துன்பமும் உண்டாகும். ஆதலால் புலை மறுத்து, கொலை மறுத்து அன்பாலே அருளடைந்து இன்புறுவோமாக.