Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.333.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து நான்காம் அதிகாரம்.
முந்நிலை.

3
அருண் மொழிக் குட்பொரு ளாமூன்று மூன்றாற்
பிரணவ மென்னும் பெயர்த்து.
333.

குறள் விளக்கம்.
அருள் மொழி என்பது ‘ஓம்’ என்ற ஒரு சொல். இதற்கு உட் பொருள் அ, உ, ம் என்றாகி, அகரம் = ஆகாயம், வடிவம், ஆக்கல், உகரம் = வாயு சக்தி, உயிர்ப்பு, காத்தல், மகரம் = ஒளி, அறிவு, அழித்தல் என மூன்றில் மூன்றாம் ஒன்பதாய்ச் சூழ்ந்து ஆன்மாக்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கின்றது.
மேலும், ஆன்மாவினிடத்து, அருவுருவாயும், பிண்ட தேகத்துள் அருவம் நான்காய், அண்ட வெளியில் உருவம் நான்காய் ஆக ஒன்பதாய்த் திகழும் இவ்வருண்மொழி, பிர என்னும் உயர்சிறப்பு புஅ சர்க்கத்தோடு கூடி பிரணவம் (பிர = நவம்) என வழங்கப்படுகின்றதாம். இதனால் இவ்வருண் மொழி பிரணவம் என்னும் பெயர் பெற்றுள்ளது.
அருட்பெருஞ் சக்தியாகிய கடவுள், பிரணவத்து உட்பொருளாய் நின்று, உலகெலாம் விளங்க பக்குவ ஆன்மாக்கள் பிரணவப் பேரின்ப வடிவொடு சுத்த, ஞான தேகமும் கூடிய திரிதேக சித்தி பெற ஓங்கார நடனம் புரிகின்றதாம்.
இம்மும் மூன்றாம் பிரணவ உண்மை விளக்க இக்குறளும் 333-வது ஆக அமைந்துள்ளதாம்.