Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.329.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து மூன்றாம் அதிகாரம்.
திணை.

9
ஐந்திணை காட்டு மகப்பொருள் உண்மையில்
தந்திடும் பேரின்பம் தான்.
329

குறள் விளக்கம்.
உலகியலில் அருளியல் வாழ்வு நடத்தி அருட் பேரின்பம் அடைவதற்கு, அக விசாரமும், புறவொழுக்கமும் வகுத்துக் காட்டியுள்ளனர்.
சத்விசாரத்தில் காணும் உண்மைகள்:
  1. நாம் கடவுள் அணுவடிவாகிய ஆன்மாக்கள் என்பது.
  1. இவ்வான்மாக்கள் தொல்லைப் பிறப்புக்களில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் நிலை.
  1. உண்மை அறியாத அபக்குவ வசத்தால் அவா வெகுளி மயக்கங்களால் உலகோடு ஊடுதல் என்ற நிலை.
  1. உளப்பக்குவமுற்றபோது, அறியாமையால் செய்த குற்றங்களுக்கும், தவறான வாழ்வுக்கும் இரங்கித் தாழ்ந்து ஏங்கி நிற்கும் நிலை.
  1. தொல்லைப் பிறவி என்று அறுமோ, கடவுளுக்கும் நமக்கும் இடையில் உள்ள இந்த மாயை செய் பிரிவு நிலை என்று ஒழியுமோ ? நாமும் நம் பதியும் இரண்டறக் கலந்து விளங்கும் ஆன்மானுபவம் என்று உறுமோ ? என உருகி நிற்கும் பிரிவு நிலை.
இந்த ஐந்து நிலைகளால் ஆன்மாக்கள் உலகிடை தோன்றி பல்வேறு பிறவிகள் எடுத்து முடிவில் கடவுளோடு கலந்து கழி பேறுவகை நிலை எய்துகின்றன. அன்புருவாகிய கடவுள் நிலை அடைய திருவருளால் வகுக்கப்பட்ட ஐந்திணை இதுவாகும்.
மேற்படி உண்மையை மறைத்து அகப் பொருள் இலக்கணம் அன்பின் ஐந்திணையைக் கற்பித்துள்ளது. அதில் குறிஞ்சி நிலையே தலைவன், தலைவியைக் கூடி மகிழும் ஒன்று பட்ட இன்ப நிலையாம். மற்ற முல்லை, மருதம், நெய்தல், பாலை யாவும் இருத்தல் ஊடல் இரங்கல் பிரிதல் என்னும் நிலைகளைக் குறிப்பனவாம்.
ஆதலின், அகப்பொருளின் உட்பொருள் கடவுட் பொருளாகிய பரம்பொருளின் பேரின்ப நிலையேயாம். இப் பரம்பொருள் நிலையைத்தான் நம் வள்ளலார், மேலான அருண்மய ஞானாகாசமாகத் தலமாகக் குறித்துள்ளார்.
இணையென்று நான்தனக் கேற்றதுபோற்று மெனக்குநல்ல
துணையென்று வந்ததுசுத்த சன்மார்க்கத்திற் றோய்ந்ததென்னை
அனையென் றணைத்துக்கொண்டைந் தொழிலீந்த தருளுலகில்
திணையைந்து மாகிய துத்தரஞான சிதம்பரமே”
என்றதனால் ஐந்திணை இன்பானுபவம் பெறுவதுவே உயர்திணை மனிதன் குறிக்கோளாகும்.