Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.324.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து மூன்றாம் அதிகாரம்.
திணை.

4..
அஃறிணையின் வந்தா னவனே முதல்மனிதன்
இஃதிறையின் மெய்கா ணினம்.
324.

குறள் விளக்கம்.
சீவ சிருட்டியில் ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாக உள்ள தனித்தனி இனங்கள் ஆதியிலிருந்தே அமைக்கப்பட்டுள்ளன. உயர்திணை மனிதப் படைப்பு ஆதி முதலே கடவுள் நிலை எய்துவதற்குரிய தத்துவ நிறைவோடே பிறப்பிக்கப்பட்டுள்ள ஓரினம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனித இனம் வாழ்ந்து வாழ்ந்து பூரண அறிவடைந்துள்ளது இது சமயம்.
அஃறிணை உயிர் இனங்களும், ஆதியிலிருந்தே தோன்றி ஒவ்வொரு இனத்திற்கும் உரிய அறிவு நிலையை உளங்கொண்டு வாழ்ந்து வந்துள்ளன. இவை, தம் இனத்திற்கு உரிய சுபாவ குணத்தோடு (instinct) தான் வாழுகின்றன. இவைகளின் வாழ்க்கை முறை பண்டே தொட்டு மாற்றமில்லாதே உள்ளதாம்.
மனித இனம் மட்டும் பகுத்தறிவுக் காரணமாக வாழ்க்கை முறையில் எவ்வளவோ மாற்றங்கள் அடைந்து கொண்டே உள்ளதாம். ஆன்மாக்களின் அக அறிவு வளர்ச்சிக்குத் தகுந்த தேகங்களே வழங்கப்படுவன என அறிவோம்.
அஃறிணை இனம் காலக் கிரமத்தில் பரிணாம முறையால் (Evolution theory) உயர்திணை மனிதனாக ஆவதில்லை. இதனால், குரங்கினத்தில் இருந்து மனிதன் ஆவான் என்ற கொள்கை (Darwin’s theory) தவறாகும்.
குரங்கினமும் ஆதியிலிருந்தே வாழ்ந்து, அதன் குணமும் இயல்பும் தொடர்ந்து கொண்டே உள்ளன. பழக்கத்தால் சில செயல் புரியச் செய்யலாம் அன்றி, ;பகுத்தறிவும் மனித இயல்பும் குரங்கிற்கு ஊட்ட முடியாது.