Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.301.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம் அத்தியாயம்.
தன்னை மதியாமை.

1.
அருளாணை யம்பலத்தா னாட்சியே யாவும்
மருளாதே யுன்னை மதித்து.
301.

குறள் விளக்கம்.
மனோன்மணியாதி புருவத்திடை இருந்தும், அகங்காரமும் ஒழியாத இடத்து அருட்பெரும் பதியின் சேர்க்கை உண்டாவதில்லை. ஆதலின், அப்பதி ஐக்கியத்திற்கு அகங்காரத்தால் தன்னை மதியாது, தான் கெட்டு பதி பதத்தில் புகலடைந்து நிற்றல் வேண்டும். இதற்கே தன்னை மதியாமை என்ற அதிகாரம் தொடர்ந்துள்ளது. இதுவும் இடையறா அனுபவத்தால் வேண்டி அந்தாதி வகையான் இணைந்து வந்துள்ளது.
புருவ மத்தியில் மனோன்மணியாய்க் கண்ட ஒளி, சிரோ மத்திய கடவுட் சோதியின் ஏகதேச சக்தி கொண்ட பிரதி பிம்பமே. ஆதலின்., இந்நிலை நின்று உள்நோக்கிச் சிரநடு சிற்றம்பலவனுடன் இரண்டறக் கலந்து அருள் மயமாய் விளங்கவே தன்னை மதியாமை வேண்டும். அருள் ஒளியால் ஆன அம்பலமே, இக்கடவுளாலயம். இதிலிருந்து நம் பதி, அருளாணையால் நம் சீவ தேகாதி பிரபஞ்சம் யாவற்றையும் ஆண்டு கொண்டுள்ளார்.
தற்போதத்தால் இப்பதிச் செயல் உண்மையை மறந்து, அதன் ஆணையால் சூழ்கின்ற உலகில் விருப்பு வெறுப்பு கொண்டு உழல்கின்றான் அகங்காரத்தால் தன்னை மதிக்கும் மனிதன்.
பதி உண்மையை உணர்ந்த பக்குவி, தன்னை மதியாது கடவுளாணையை மதித்து, அருளியல் வாழ்வு மேற்கொண்டு பேரின்பம் அடைகின்றான்.