Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்.எண்.296.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

முப்பதாம் அதிகாரம்.

மனோன்மணி.

6. என்றொளிபோ னின்றிலங்கு மீசன் தயவதே

மன்றாய திக்கண் மணி.

296.

குறள் விளக்கம்.

நடுக் கண்ணுக்குள் ஒளி செய்யும் மணியாக உள்ளது கடவுள் தயாசோதியே. இத்தயா ஒளியையே ஆலயமாகக் கொண்டு விளங்குகின்றது எல்லார்க்கும் பொதுவான நம் பதி. நித்திய ஞாயிறு போன்று நிலைத் தொளிரும் கடவுட்குத் தயசோதிக் கண்மணியே சத்திய ஞான அம்பலமாகத் திகழ்கின்றதாம்.

ஆதலின், கடவுளுண்மை காண, முதற்கண் இந்நுதற் கண்ணை திறக்கப் பெற்றுக் கொள்ள வேண்டும். இது திறக்கப் பெறுவதே திருவம்பலத் திருக்கதவம் திறக்கப்படலாகும்.

7. மணியொளிர் சோதி மனத்தகத் தாக்கி

பணிகொள வோர்மையுறப் பற்று.

297.

குறள் விளக்கம்.

மனத்திலே எப்பொழுதும் ஒளி வீசிக் கொண்டிருக்கும்படி தயாமணியை அகத்திலே இருத்திக் கொண்டு, புறத்திலே உலகியற் பணிகளைச் செய்துவரல் வேண்டும்.

தயா ஓர்மை உண்டானால்தான், சூழ் உலகெல்லாம் நம் முன் தாழ்ந்தேவல் புரியும். நாமும் தடையிலாது பணிந்து அன்பு செய்யலாம்.