தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தொன்பதாம் அதிகாரம்.
மனோவுருவகம்.
|
1.
|
அருவ உண்மை அறிந்தோர் புறத்தாய்ந்(து)
உருவகஞ் செய்தா ருளம்.
|
281.
|
குறள் விளக்கம்.
மேலே வந்த அதிகாரத்தில் மனோ சக்தியைப் பற்றிக் கூறிவிட்டும் அம்மனோ ஆற்றலும், பெருமையும் சாதாரனக் கற்பனைக்கு அடங்காது எனக் கண்டு பலவாறு உருவகம் செய்து ஓதப்படுகின்றன இவ்வதிகாரத்தில்.
அருவமாக உள்ளதே உள்ளம் எனப்படுவது. அந்த உள்ளமே கீழ் நிலையில் பொறி புலன் உணர்வோடு கலந்து, மனமாக உருப்பட்டுள்ளது. அந்த உள்ளமே பொறி புலன் கடந்த மேல் நிலையில், அருள் உணர்வோடு கூடி கடவுள் வண்ணமாகத் திகழ்வதாம்.
அகத்தே விளங்கும் மனத்தின் தத்துவத்தை ஆய்ந்து அறிந்தவர்கள், அதற்கு ஒப்ப உருவுலகில் விளங்கும் உயிர், பொருள், செயல்களை உவமித்துக் கூறியுள்ளார்கள். புற உவமானப் பொருள்கள், தன்மைகள் எல்லாம் அக உவமேய மனத்தின் இயல்புகளோடு ஓரொரு அம்சம் பொருந்தி விளங்குவதாம்.
உயர் அனுபவ அருட்பெரு நிலையில் உள்ளமும் கடவுளும் ஒன்றாய் இருப்பதால், மற்றெந்த உவமானமும் பொருந்தாது என்றும், அப்படி ஏகதேசம் பொருந்துவதாகக் கொண்டு உவமித்துக் கூறலும் புலனெறிக் கற்பனையே என்றும் அறிந்து கொள்ளலாகும்.
Write a comment