Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக் குறள்-எண்.214.

தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்திரண்டாம் அத்தியாயம்.
அச்சம்


4.

அச்சமிலை யச்சமிலை யச்சமிலை யென்றரற்றி
மிச்சமிலாப் போயினரே வீண்.
214.

குறள் விளக்கம்.
கடவுள் அனுபவம் பெற்ற சன்மார்க்கியே எதற்கும் அஞ்சாது நின்று அச்சமில்லை, அச்சமில்லை என மும்முறை இசைத்து (சுத்த-பிரணவ-ஞானமாகிய) முத்தேக சித்தி கொண்டு என்றும் இலங்குவான்.
மற்றபடி கடவுளனுபவம் பெறாத மாந்தர்கள், வேதாந்த மகா வாக்கிய நம்பிக்கையால் தாம் ஆன்மக் கடவுளாய் இருப்பதாக அறிந்தும் அறியாமலும், உணர்ந்தும் உணராமலும், மனத்தால் நினைந்தும், மொழியால் சொல்லியும், சீவதேக வாழ்வில் பெற்றுக் கொள்ளாத காரணத்தால் அழிந்து ஒழிந்து போகின்றார்கள்.
இவர்கள் தேகத்தை அலட்சியம் செய்து, ஆன்மாவே “தான்’ தேகம் தான் அல்ல, அது மாயை எனக் கூறிக்கொண்டு ஆன்ம கடவுள் தன்மையை அடைந்து விட்டதாக பாவனை செய்து கொண்டு, அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமில்லை என முழக்கிக்கொண்டே போய் விடுகின்றார்கள்.
தேக மரணம் தவிர்க்க முடியாதது என்றும், ஆதலால் இறப்பதற்கு அஞ்சினாலும் அஞ்சாது எதிர்த்து நின்றாலும் முடிவில் மரணத்திற்கே வெற்றி என்றும் கூறுகின்றவர்கள் மரண பயத்தை வென்றவர்களாக இருக்கலாம். அச்சமிலா அருட்பெரும் பதியின் பூர்ண அனுபவம் பெற்று வாழாதவர்கள், அச்சத்தை முற்றிலும் ஒழித்தவர்கள் அல்லர்.
ஏகதேச அருள் விளங்கும் வரை, தெய்வத் தொடர்பு உணர்வு மாறாது இருக்கும்வரை அச்சத்தை ஒழித்து விட்டவர்களாகத் தோன்றுகின்றார்கள். அந்த விளக்கமும் உணர்வும் நீங்கிய போது, அச்சமில்லை என்ற உணர்வும் ஒழ்ந்து அழிந்து போகின்றது.
மறுபடியும் மனிதப் பிறப்பு எடுத்து மெய்யறிவு பெறும்வரை, அந்த அச்சமில்லா நிலை உணர்ந்து வெளியிடத் தகுதியற்று இருக்கின்றார்கள். ஆகையால் அந்தப் பய உணர்வு அகத்திலேயே ஒடுங்கிக் கிடந்து மறுபிறவியில் வெளிப்படுகின்றதாம்.
எனவே, அச்சமில்லை என்று சொல்வதற்கு உரியவர்கள் அவ்வச்சத்தை அடியோடு ஒழித்து, இறவாது என்றென்றும் வாழ்கின்ற சுத்த சன்மார்க்கிகளே ஆவர்.