தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
171 – 180 உரை விளக்கம்.
பதினெட்டாம் அதிகாரம்
நகை
|
1
|
நகைமுத லாய நவிலுமெய்ப் பாட்டு
வகைசெய லேற்கும் மனம்.
|
171.
|
கு.வி. – முக்குண அவத்தையுறும் மனம் அருட்பெரு நிலையுற்று உபசாந்த மடையாதபோது நகை முதலான மெய்ப்பாட்டால் அசைக்கப்பெறும். ஆதலின் இங்கு மெய்ப்பாட்டியலின் அதிகாரம் ஒவ்வொன்றாய் தொடர்வதாம்.
‘மெய்ப்பாடு’ என்பது அகமன நிகழ்ச்சியின் காரணமாக புறத் தேகேந்திரியங்களின் மாறுபாட்டுத் தோற்றமும் அதனால் ஏற்படும் உள்ளுணர்ச்சிப் பயனுமாம்.
நகை முதலாய (நகை அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி, உவகை) எட்டு மெய்ப்பாடுகள் செயல்படும்போது அபக்குவ அருள் நிலை பெறாத மனம் ஓர் ஒரு உணர்ச்சி வசப்பட்டு அதனதன் பயனை ஏற்று இன்ப துன்பத்தில் ஆழும்.
அருட் பக்குவமுறும்போது மனம் சகல கேவல நிலையுறாது மெய்ப்பாட்டு நிலை கடந்து சுத்த பொன்னென சுடர் விட்டிலங்கும்.
|
2
|
ஆசமே நல்லஓர் ஒளடதம் ஆருயிர்க்(கு)
ஈசனீந் தானென்ப தேச்சு.
|
172
|
கு.வி ஆசம் = சிரிப்பு. சீவர்களுக்கு சிரிப்பு ஒரு அருமருந்து. அது தெய்வமே அருளியுள்ளது என்பர்.
ஆனால், வெற்றுப் பெருஞ்சிரிப்பால் உள்ள அவயவக் கிளர்ச்சியுற்று ஓரளவு அற்ப நோயைத் தணிக்கக் கூடுமேயல்லாது வேறொன்றும் இல்லை.
கடவுள் நமக்கு, உள்ளத்தமர்ந்த மெய்ப்பொருளைக் கண்டு கொண்டு பேரின்ப வாழ்வு எய்துவதற்காகவே பேச்சு சக்தியையும் நகை முதலான மெய்ப்பாட்டு அனுபவங்களையும் வழங்கியுள்ளார். இவ் வுண்மையை அறியாது புலனின்ப மயக்கில் களித்துக் கிடத்தல் திருவருட் சம்மதமன்று.
நிரதிசயானந்தத்தால் உள் மலர்ச்சியுறும் தயா சோதி சக்தி ஒன்றே எப்பிணியும் ஒழிக்கவல்ல பெருமருந்தாகும். ஆகையால் சிரிப்பை ஒரு அரு மருந்தாகக் கொண்டு வாழ நினைத்தல் ஏமாற்றமேயாம்.
|
3.
|
புறத்தே சிரித்துப் பொருமு மகத்திற்
பிறக்குமோ ஈசனருட் பேறு.
|
173.
|
கு.வி – உள்ளத்திலே பொறாமையால் வளரும் துன்பம் நிறைந்திருக்கும்போது முகத்தில் பொய்யான முறுவலும், புறத்தில் ஆரவார சிரிப்பும் காட்டுவதினால் யாது பயன் ?
அகத்தில் அமைதியும் அன்பும் நிறைந்து புறத்திலும் அவை செயல்படும்போதுதான் கடவுள் அருள் விளக்கம் அகத்தில் தோன்றி விளங்கும். உள்ளொன்று வைத்துப் புறத்தொன்று காட்டி உலகை ஏமாற்றுவோர் ஈசன் அருள் பெறுதல் கூடாதென்க.
|
4.
|
இடுக்கண் படுமுயிரை எள்ளி நகுவார்
அடுத்து படுவார் அழிவு
|
174.
|
கு.வி – எதனாலோ துன்புற்று வருந்துகின்ற சீவர்களைக் கண்டு இரக்கத்தால் உள் உருகி தயை புரியாது, கடின சித்தத்தோடும் அலட்சியத்தோடும் அவமதித்து சிரித்துக் களித்திருப்பவர்கள் பின்னர் மிக விரைவில் தக்க தண்டனையுறுவார்கள்.
ஆதலால் தயையுடன் பிறர் துன்பம் கண்டு இரங்கி சிந்தனையால் சொல்லால் செயலால் ஏற்ற உதவி புரிந்து அவர்களை இடுக்கண் களைய முயல வேண்டும்.
|
5.
|
உளத்தூய்மை யில்லார் உரைவிகடப் பேச்சால்
வளப்படுமோ மாந்தருடை வாழ்வு
|
175.
|
கு.வி. – அன்பொளி வீசும் மாசற்ற மனத்துடன் பேசுகின்ற இன்மொழியே நன்மொழியாகும். இதுவே மக்களுக்கு நலம் பயப்பது.
மற்றபடி மனத்தில் வஞ்சம், பொய், களவு, சூது முதலிய மாசு நிறைத்து வைத்துக் கொண்டு, வெளியில் வேடிக்கையும், விகடமுமாகப் பேசி பெருநகை செய்து நடிப்பாராயின் அப்பேச்சால் பெரும்பயன் உண்டாகுமோ ? அதனால் உலகில் நல்லின்ப வாழ்வு தழைத்திடுமோ ? ஆகையால் உள்ளத்தில் தெய்வ தயா ஓர்மையோடு இன்மொழி பேசி யாவர்க்கும் இன்புண்டாக்குதல் வேண்டும்.
|
6.
|
வருமம் உளம்வைத்து வாய்விட்டு நக்கும்
ஒருவன் விடவரவிற் கொப்பு
|
176.
|
கு.வி.- உள்ளத்தில் வருமம் (பகைமை வஞ்சம்) கொண்டு புறத்தே சிரித்துப் பேசி மயக்கும் ஒருவன் கொடிய விடத்தை உள்வைத்து அழகாக தோன்றி அழகாக ஆடுகின்ற பாம்பிற் கொப்பாவான்.
அச்சிரிப்பே நச்சுத் தன்மை உடையது. அன்றியும்., அந்த நகை முகத் தோற்றமும் மலர்ந்து நகை காட்டும் கண்களும் மனோ சிந்தனையும் நச்சுடைத்தாம்.
விட அரவு = நச்சுப்பாம்பு
நக்குதல் = நகுதல், சிரித்தல்.
|
7.
|
மாந்தர்க்கே உண்டு மலர்நகை செய்யாற்றல்
ஏந்தியற்கை பூப்ப திது
|
177.
|
கு.வி – இந் நகையின் ஆற்றல் நமது மனித சமூகத்திற்கு கடவுள் எதற்காக வழங்கியுள்ளார் எனில், நமது பதி, ஆனந்தத் தாண்டவம், என்றும் புரிந்து கொண்டுள்ளார் என்ற தத்துவ உண்மையையும், புன்னகை செய்து, மும்மல புரங்களை எரித்து, தெய்வானுபவம் வழங்கவுள்ளார் என்ற உண்மையையும் அறிந்து கொண்டு அதனை உலகிற்கு வழங்கி, யாவர்க்கும் மகிழ்வு செய்யவேயாம்.
அறிவு விளக்கம் குறைந்ததும் கருவி கரணங்கள் நிறைவுறாததுமான மனிதனல்லாத பிற உயிர்களிடத்தில் இந்த நகைச் சக்தி இயற்கை விளக்கமாகவும், சுபாவ சக்தியாகவும் கைபுனையாக் கவினாகவும் மலர்ந்து வெளிப்படுகின்றதாம்.
|
8.
|
இளமகவிற் பொங்கிவரும் இன்சிரிப்புக் கான
உளமலர்த்து மீசனை யுள்ளு.
|
178
|
கு.வி – அழகான சிறிய குழந்தையின் அகத்தே மறைந்திருக்கும் கடவுட் சக்தியானது குற்றமற்ற இனிய சிரிப்பாக பொங்கித் ததும்பி வெளிப்படுகின்றது.
உள்ளொளிரும் அருட்ஜோதியின் சிற்றணுக் கதிரே இங்ஙனம் இன்சிரிப்பாக தோற்றுகின்றது என்று அறிந்து கொண்டு, கடவுளின் அருட்பெருஞ்ஜோதி சக்தி எங்ஙனம் இருக்குமோ என்று நினைந்துருகி நின்று அருள் மயமாதல் வேண்டும்.
பொன்னான இன்சிரிப்பில் மன மயக்கமடைந்து கடவுளை மறந்து விடாது உளத்தே தயா உருக்கமும் புறத்தே அன்பும் ஆசியும் வழங்குதல் வேண்டும்.
உள்ளு = நினை, கருது.
|
9.
|
பாரகத்தின் ஆங்கரித்துப் பல்லிளித்து நாள்கழிப்பார்க்(கு)
ஏரகத் தான்நகுமே ஈண்டு.
|
179
|
கு.வி – ஏரகத்தான் = அழகிய அகத்தில் உள்ளவன். அதாவது கடவுள் இங்கு சிரிக்கின்றார் ஏன் ?
அகத்திருக்கும் கடவுள்தானே நமக்கு எல்லாம் தந்து வாழ்வித்துக் கொண்டிருக்க இதனை அறியாது உலகில் தான் என அகங்கரித்து நலம் சூழும்போது பெருமிதத்தோடு சிரித்துக் களித்திருப்பதும் கேடு வரும்போது கவன்று புலம்புவதும் அறியாதவன் செயலாகும்.
மனிதன் பக்குவமுறும்போது அகங்காரம் ஒழிந்து அருளில் புகலடைந்து நிற்கும் போது உள்ளத்தில் புன்முறுவல் பூத்து நிற்கும் பதியின் உண்மையைக் கண்டு கொள்ளுகிறான்.
|
10.
|
நகைதனிற் பூத்த ஙகரமெய் இஃதைப்
பகையிற் றுறத்தல் பழி.
|
180.
|
கு.வி.- ஙகர மெய் = ஙப்போல் வளைந்து உருவாகிய இந்த தேகம்.
‘ங’ என்னும் எழுத்தும் ஙகர மெய்யாம்,. நம் உடல் நகையினிற் சேர்ந்த ஙகர மெய்யில் பூத்தது என்பது. ந்-கை இவ்விரு எழுத்திடை ‘ங்’ என்னும் மெய் எழுத்து சேர ‘நங்கை’ என்றாம். நங்கை என்றால் பெண் என்பது பொருள். பெண்ணின் சத்தால் பெண்ணிடத்தில் தோன்றியது நம் தூல தேகம் என்பது பொருளாம்.
பெண் தரு இவ் வுடலை மண் எனவும் புன்புலால் கூடு எனவும் பழித்துக் கூறி துறத்தல் அறியாமை. பேரின்ப நிலை எய்த இத்தேகம் தடை பகை ஊறு என நினைப்பது பழிப்பே
இத்தேகம்தான் அருளறிவு விளக்கத்திற்குத் துணையாகவுள்ளதால் உடன் கொண்டு பயன் பெறலே அறிவுடைமை.
பக்குவ நிலையில் காணும் விளக்கம் : நகை என்பது பல் எனப் பொருள் பட அது நம் சிரநடு பகர வடிவ ஆன்ம நிலையையும் அத்துடன் கூடிய ‘ல்’ என்னும் லகர மெய் பதிமூன்றாம் மெய்யெழுத்தாய் கடவுளின் திரயோதசாந்த (பதிமூன்றாம் நிலை) அருள் வெளியைக் குறிப்பதாம். இந்த ‘பல்’ ஆகிய கடவுள் அருள் வெளியினின்றே நம் வடிவம் தோன்றி மலர்ந்து விரிந்துள்ளதாக அறிகின்றோம்.
ஆகையால் கடவுள் அனுபவம் பெறுவதற்கு அருள் வெளியிருந்து பெற்ற இவ்வுடல் இன்றியமையாதது. துறத்தலும் பின் இறத்தலும் அறியாமை.
அகநின்று விரியும் அனக அருள் ஒளியையே இவ்வுடலில் நிறைத்தலும் அருள் ஒளி வண்ண வடிவாகி அழியாது இருத்தலுமே சுத்த சன்மார்க்க அனுபவம்.
Write a comment