தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
151 – 160 உரை விளக்கம்.
மந்திரமும் தந்திரமும்
|
1.
|
மந்திரமும் தந்திரமும் மண்ணொளியின் கற்பனையில்
வந்தசித்தி அற்பம் மதி.
|
151
|
கு.வி. மண்ணொளி – நிலைத்துள்ள நித்தியமான கடவுட் சோதி
இது நமது அகத்தே இருந்து கொண்டு தன் தயா பெருஞ் சக்தியால் நமக்கு வேண்டுவன எல்லாம் வழங்குவித்துக் கொண்டே உள்ளது.
நாம், நமது அறியாமையினாலும், ஆவலினாலும் சில பலவற்றை அடைய விரும்பி. உண்மை காணாத, மந்திர தந்திரங்களால் பெரு முயற்சி செய்து பெற்றாலும், வினை வசத்தால் அல்லலும் அழிவும் வந்து சூழும்போது, முன் அடைந்த சக்தி, சித்தி எல்லாம் மிக அற்பமாய் மறைந்து போகின்றானவாம்.
|
2.
|
நிறைமொழி மாந்தர் நியமத் திருந்து
மறைமொழி தந்தார் மகிக்கு
|
152.
|
கு.வி. நியமத்தில் வழுவாது நின்ற புகழுக்குரிய பெரியோர் உலகுக்கு அற்புத சித்தியும், அதி ரகசிய சக்தியும் கொண்ட மறைமொழியாம் மந்திரச் சொற்களை ஆக்கி வழங்கியுள்ளனர்.
மந்திரத்திற் கெல்லாம் முதல், ‘ஓம்’ என்னும் பிரணவமே. இதன் பலவாகிய தத்துவ சித்தி விளக்கும் கற்பனா வேத மந்திரங்களும், உலகத்தார்க்கு லேசிலே உண்மை காணக் கூடாதபடி உரைக்கப்பட்டுள்ளன. ஆதலின் அவைகள் யாவும் மறை மொழிகளே.
மகி = பூமி, உலகு. மகிக்கு = உலகிலுள்ள மக்களுக்கு.
|
3.
|
மந்திரத்தி னாற்றல் மனவொருமைக் கேற்றபடி
வந்தடைந்து நீங்கும் மடிந்து.
|
153.
|
கு.வி – ஒருமை மனத் தவச் சக்தியினால் சித்திக்கின்ற மந்திரங்களின் சக்தி, அத் தவத்தின் தரத்திற்கு ஒப்ப, ஓரளவு பலனை, குறிப்பிட்ட சிறிய காலம் வரை, கொடுத்துப் பின்னர் மறைந்து ஒழிந்துபோம்.
மந்திர, சித்தியும் பயனும், பறவைகள் தம் கூட்டை வந்தடைந்து, கிடந்து பின். விட்டுப் பறந்து விடுவன போல், ஒரு காலம் இருந்து மறைந்து போகும்.
அடைந்து என்பதன் கருத்து, சீவர்கள் இருளுக்கு ஒதுங்கி முடங்கிக் களித்து இருந்து, ஒளி வந்ததும் வெளியேறி விடுவன போன்ற மருள் மயக்கச் சித்திகள் யாவும் தேகாந்தத்தில் அல்லது கற்ப முடிவில் அழிந்துபோம்.
|
4.
|
ஒளிரூமை யக்கரமே யுண்ணி(ன்) றுறுமொலியாய்த்
தெளிமந் திரத்தின் செயல்.
|
154.
|
கு.வி. அகத்திலே விளங்குகின்ற கடவுட் சோதியே ஊமை எழுத்து அல்லது பேசாத மந்திரம் எனப்படுவது. இவ்வொளி நிலையிலிருந்தே உயிர் உணர்வும், புறச் செயல்களும் வருகின்றன.
அப்படி வருகின்றவற்றில், இம் மந்திர மொழி ஒலியாகிச் செவிப் புலனாகின்றதாம். இம் மந்திரத்தின் ஆற்றல் அகவொளியின் வெளியீட்டுக்குத் தக விளங்கும்.
இது, ஓர்மை மனோ மோனத்தில் மிகுத்தும், அப்படி இல்லாது ஒலிக்கும் மந்திரத்தின் சக்தி மிக மிகக் குறைந்தும் விளங்குவதாம்.
|
5.
|
சேரீர் சிரநடுவே சிற்சபா மந்திரத்தை
ஓரீர்ஓர் ஈர்இருபத் தொன்று.
|
155.
|
கு.வி. சிரநடு சிற்சோதியே மந்திரமாம். இம்மோனச் சோதியே கடவுள் நிலையாக உள்ளதால், மந்திரம் என்ற சொல்லுக்கு ஆலயம் என்ற பொருள் வழங்கப்படுகின்றது.
சுந்தரச் சோதி துலங்கும் இம் மந்திராலயம், நாற்பத்து முக்கோண சக்கரமாகக் கண்டுரைத்தனர் நம்மனோர்.
இதனையே இங்கு ஓர் ஈர் இருபத் தொன்று ஆக (1+2 X 21 = 43) 43 ஆகத் தெளிந்து கொள்ளப் படுகின்றது.
சத் விசாரத்தால் உண்மை கண்டு, சுத்த தயவினால் கடவுளோடு ஒன்றாகும் இம்மந்திரம் இன்று கண்டு கொள்ளப்படுகின்றது.
இந்தக் குறள் வெளி வந்துள்ள இந் நாள் வைகாசி மாதம் இருபத்தொன்றாம் நாள். இதுவும், இம் மந்திர விளக்கத்திற்கு உரிய தினமேயாம். எவ்வாறெனில், வைகாசி மாதம், இடபத் திங்கள் – அருள் ஞானத்தையே குறிப்பதாம்.
|
6.
|
மறங்குலவு தந்திர மந்திரத் தால்நீ
அறங்குலவு மன்னருள்சே ராய்.
|
156.
|
கு.வி அறம் = கடவுள் தன்மையாகிய அருள், அவர் சுபாவம், தருமம்.
மறம் = (அருளடையாத மருள் நிலை) ஆணவ அகங்காரத்தோடு கூடிய கர்வம், வீரம் தற்போதத் தன்மை.
அபக்குவ ஆன்மாக்கள் மறங்குலவி நின்று, அகங்கரித்து எழுந்து, மந்திர தந்திர மாதவ சித்திகளால் உலகில் ஆடிக் களித்து ஓய்ந்து விழும்.
பக்குவ ஆன்மாக்கள் அறத்தாறு பயின்று, தற்போதங் கெட்டு அருள் வண்ணமாகி ஆனந்தமுற்று விளங்கும்.
ஆதலின். தந்திர மந்திர மார்க்கத்தால் தாழ்ந்து ஒழியாது, அருள் நெறியால் வாழ்வாய் என்று உபதேசிக்கப்படுகின்றது.
|
7.
|
ஆமைமீன் வாரணத்தின் ஆண்டருள் மந்திரர்
தாமெய்த சிற்றணுதந் தார்.
|
157.
|
கு.வி மந்திர சித்தி பெற்றவர்கள் தான் அறிந்தடைந்து தமக்குள் பொதிந்து வைத்துள்ள சிறிதளவு சக்தியை தம்மை வந்து சார்ந்து பணிந்து கொண்டு செய்யும் சீடர்களுக்கு வழங்குகின்றனர்.
அச் சீடர்களுக்கு உபதேசம் செய்யும்போது ஆமை போல் தீவிர சிந்தனையாலும் மீன் போல் தீர்க்கப் பார்வையாலும் வாரணம் (கோழி) போல் காந்தப் பரிசத்தாலும் தம் சக்தியைச் சிறிதளவு பிரயோகிக்கின்றார்கள்.
மந்திர சக்தியெல்லாம் ஓர் குறிப்பிட்ட கால அளவு இருப்பதால், அது முடிந்து போதும் இம் மந்திரரும் முடிவுறுகின்றனர்.
வாரணத்தின் என்பதில் உள்ள ‘ன்’ என்பது ‘போல’ என்று பொருளாம். வாரணம்,. மீன் இவற்றோடும் சேர்த்து அது அது போல எனவும் பொருள் கொள்ள வேண்டும்.
|
8.
|
ஒப்பில் பதியை யுணர்த்தினார் தந்திரர்
சிற்பமறை சாலமெலாஞ் செய்து.
|
158.
|
கு.வி. அற்புத சிற்பத்தாலும் வேதாகம சாத்திரங்களாலும் மந்திர தந்திர சாலங்களாலும் கடவுளரின் ஏகதேச அருளைக் கொண்டு தெய்வ தத்துவக் கற்பனை பல செய்தார்கள், மகா தந்திரர்களாகிய உபாய சித்தர்கள்.
அவர்களின் உபாய மார்க்கங்களால் பெறுவதெல்லாம் நம் பதி சக்தியின் சிற்றணு அளவே என்று உணர்ந்து அருட் பூரணத்தால் உவமனில்லா தனித்தலைமைப் பெரும்பதியை அறிந்து அடைதல் வேண்டும் என்று உணர்த்தியுள்ளனர்.
ஆகையால், சித்த மார்க்கமெல்லாம் சுத்த சன்மார்க்கத்தின் முன் முடிந்து விடுவனவாம்.
|
9.
|
சிற்றணுவுள் நின்றருட் சித்தா லுலகினிறை
வுற்றார்கோர் மந்திர மோ.
|
159.
|
கு.வி. நமது ஆன்ம அணுவின் உள்ளிருந்து கொண்டு விளங்குவதுமன்றி, தனது அருட்பெருஞ் சித்தினாலே உலகமெல்லாம் நிறைந்துள்ளவர் நம் பதி. இதனால், நம் பதியோடு இரண்டற நின்று இன்புறற்கு அவர்தம் அருட் பூரண சக்தியைப் பெறுதலே அன்றி, எவ்வித மந்திர தந்திரத்தாலும் பயன் உண்டாகாது என்பதாகும்.
‘உற்றாற்கு ஓர் மந்திர மோ,‘ என்பதில் ஈற்றில் உள்ள ஓகாரம் வினாவாகக் கொள்ளும்போது ஓர் மந்திரமில்லை என்று விடை இறுத்தப் பெறும்.
அப்படி இல்லாது ‘உற்றாற்கு’ ஓர் மந்திரம் ‘ஓ’ என முடித்துக் கொள்ளும்போது, அவர்க்கு ‘ஓ’ – தானே ஒப்பற்ற மந்திரமாக உள்ளது எனப் பொருள்படும்.
இந்த நிலையில் ஓ என்பது கடவுள் அருளையே உணர்த்துவதால் அந்த அருள் ஒன்றே கடவுளை அடையும் அவர்தம் தனி மந்திரமாக அறிவிப்பதாக உள்ளதாம்.
|
10.
|
அணுவுள் அருள்கண் டனக முறுவோர்
அணுமந் திரம்விழை யார்.
|
160.
|
கு.வி. அணுவகத்தே பெரும் பூத சக்தியும், அச் சக்திக்கும் மற்ற அகிலமாம் பொருள்களுக்கும் இயக்கங்களுக்கும் ஆதாரமாயுள்ள அருட்பெரும் சக்தியும் அடங்கி உள்ளன.
விஞ்ஞான கருவி கரணங்களால் வெளிப்படுவது அடங்காத பெரும்பூத சக்தியே. மெய்ஞ்ஞான சன்மார்க்கத்தால் வெளிப்படுவதுதான் யாவையும் அடக்கி ஆளும் பெரும் சக்தியாகும்,.
அருள் மார்க்கிகள் அணுவளவு சக்தி சித்தியைத் தரும் மந்திர தந்திரத்தை விரும்ப மாட்டார்கள். அணு மந்திரம் = அணுத்திரள் ஒலியால் வளர்ந்து வெளிப்படும் மந்திரச் சொல்.
நமது காதினால் கேட்கப் படுகின்ற மந்திர ஒலி, உள்ளத்தில் ஊமை எழுத்தொலியாய் பஞ்சமி சக்தியாயிருந்து வாயுவின் சலன சக்தியோடு கூடி சூக்கும ஒலி அணுக்களாய்த் திரளுகின்றது.
இவ்வொளி நிலை காற்பங்கு வளர்ச்சியுற்றபோது சூக்குமை வாக்காகவும், அரைப் பங்கு அடைந்தபோது பைசந்தி வாக்காகவும், முக்காற் பங்கு ஆனபோது மத்திமை வாக்காகவும், முடிவில் முழு ஒலி வ்டிவாய் வைகரி வாக்காய் வெளிப்படுகின்றது.
வாயினால் சொல்லி ஒலிப்பதைவிட மன ஓர்மையோடு உள்ளுக்குள் செபித்திடும் மந்திரம் சக்தி உடையதாம். இதனினும் மனக் கரணம் முற்றும் ஒடுங்கிய சூக்கும நிலையில் வெளிப்படும் மெளன மந்திர சக்தி மிக அதிகம்.
இம் மந்திர சக்திகள் யாவும் சுத்த சன்மார்க்கத்தில் பெறும் அருட் சக்திக்கு கோடி கோடிப் பங்கு தாழ்ந்த நிலையில் உள்ளனவேயாம்.
Write a comment