Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
பரமான்மபதி (Universal Soul) 7. ஆன்ம-பரமான்ம முடிநிலை

பரமான்மபதி
(எங்கும் நிறை இறை)
தயாஜோதியில் கண்ட விளக்கம்.
Universal Soul
சுவாமி சரவணானந்தா.
7. ஆன்ம – பரமான்ம முடிநிலை.
ஆகாச வெளியில் நிரம்பி நிற்கும் அளவு கடந்த ஆன்மாக்களைப் பற்றியும், ஏகமான பரமான்மாவைப் பற்றியும் தொடக்கத் தலைப்புகளில் ஓரளவு விளக்கப்பட்டன. இங்கு அவ்வான்ம பரமான்மாக்களின் முடிநிலை குறித்து, சுத்த சன்மார்க்கத் தயா பெருஞ்ஜோதி முன் வைத்து மேல் விளக்கம் செய்து முடிவு கட்டுவோம்.
ஆன்மாக்கள் எண்ணற்றவை. ஏன்?
நமது உலகம் பெரிது என நினைக்கின்றோம். இதனை விடப் பெரியவை, குரு, சனிக்கோளங்கள். இவையெல்லாம் வலம் வருகின்ற ஞாயிறு மிகப் பெரியதாகும். வானில் மினுக்குகின்ற சின்னஞ்சிறு நட்சத்திர மணி ஒவ்வொன்றும், நமது தினமணி ஆகிய சூரியனைப் போல் பல மடங்கு பெரியனவாம். அவைகளிலும் மிகப் பெரிதான ஜோதிக் கோளங்கள் நெடுந்தூரத்திருக்கும் காரணத்தால், ஆற்றல் மிக்க தூரத்தரிசனியைக் கொண்டும் காணற்கரியனவா யிருக்கின்றனவாம். இப்படியுள்ள அநேகம் கோடி ஞாயிறுகளையும் சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டேயிருக்கின்ற, நம் பூமி போன்ற எத்தனையோ உலகங்கள் உள்ளனவாம். அந்த அந்த உலகங்களில் எல்லாம் ஆன்மாக்கள் நிரம்பி தேக போகங்களில் செலுத்தி வாழ்விக்கப் படுகின்றனவாம். அந்த எல்லா உலகத்து, எல்லா ஆன்மாக்களையும் எப்படி கணக்கிட்டு யாரால் சொல்ல முடியும் ! எவராலும், எக்காலத்தும், எவ்வளவு முயன்றாலும், இவையெல்லாம் கணித்து அறிய முடியாதன என திருவருளால் இன்று உணர்த்தப்படுகின்றோம். இவ்வளவு அளப்பரிய ஆன்ம கோடிகள் ஏன் இருக்கின்றன என்று விசாரிக்கும் போது, நம்பதியின் பெருமைதான் வெளிப்படுகின்றது.
நமது ஆண்டவர், தன்னிகரில்லாத் தனித்தலைமைப் பெரும்பதி, அனாதி நித்தியராய், எங்ஙணும் நிறைந்து, இயற்கை உண்மை வடிவினராயும், இயற்கை விளக்கம் செய்து கொண்டும், இயற்கை இன்பத்தை வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கின்றார். இதுவெல்லாம் அவரது தன்மையாம். அவரும், அவரது தன்மையும் நித்தியமாக விளங்கலின் எக்காலும் முடிவு என்பது கிடையாதாம்.
இந்த பேரருட் பெரும்பதியின் உண்மை இம்மகா பிரபஞ்சக் காரியப்பாட்டால் அன்றி, மற்றொன்றால் விளங்குவதில்லை. இதனால் இவ் வகண்ட பிரபஞ்சமும், இதன் எண்ணரிய ஆன்மாக்களும் விளங்குகின்றனவாம். இம்மாபிரபஞ்சம் எவ்வளவு பெரியது! இதன் கண் திகழும் ஆன்மாக்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமானது! இவ்வளவும் நம் பதியின் பேரருட் பெருமைக்குப் பெருமையின் அளவடங்காப் பேரெல்லைக்குச் சான்றாகவுள்ளனவாம்.
பரமான்மபதி ஒருவரே
ஓர் அரசன் தன் சிறு நாட்டை முறைப்படி ஆள வேண்டுமானால், நல்ல அமைச்சர்கள் பலரும் மற்ற துணை அலுவலர்களும் ஏனைய வசதிகளும் எவ்வளவு வேண்டியுள்ளன. படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகிய ஆறும் ஓர் நல்ல அரசுக்குத் தேவை என வள்ளுவ தேவர் வகுத்துக் கூறினார். அவ்வளவும் அமையப் பெறினும் கூட அவ்வரசன் தன் மக்களை அல்லும் பகலும் காத்து நின்று அவர் அவர்களுக்குத் தேவையான உதவி செய்து நியாயம் வழங்கி தவறாது நீதி செலுத்த முடியுமா என்றால், முடியாதென்றே அறிவோம். புறநீதி ஆட்சிக்கே இவ்வளவு சிக்கல்களும் கூடாமையும் இருக்கும்போது ஒவ்வொருவரின் அகவுரிமைத் தேவைகளையும், பக்குவமறிந்து ஒறுத்துத் திருத்தி விளக்கம் செய்தலும் எங்ஙனம் முடியும்? அப்படிச் செய்வது எந்த ஒரு அரசனாலும், பலருடைய கூட்டு முயற்சியாலும் முடியாது என அறிவோம்.
இவற்றிற்கெல்லாம் மாறாக, எல்லாம் வல்லவராக இருக்கின்ற நம் அருள் அம்பலத்தரசர், ஒருவரே என்று, இன்று காண்கின்றோம். இவ்வம்பலத்தரசின் நாடோ, எல்லையற்ற அகண்டமானது, இதிலுள்ள மக்களோ எண்ணிலி கோடி ஆன்மாக்கள். இப்படிப்பட்ட நாட்டில், இவ்வளவு ஆன்ம கோடிகளையும் எவ்வளவோ காலமாக ஆண்டு கொண்டேயிருக்கின்றார். தனி ஒருவராய் நின்று ஆள்கின்றார்! தவறாத அருள் நியதியால், ஒவ்வொரு ஆன்மாவுக்கும், உண்மைத் தேவையான ஜீவ தேக போகப் பொருள்களை எல்லாம் எக்காலத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாது வழங்கி வாழ்வித்துக் கொண்டேயிருக்கின்றார். அப்படி வாழ்ந்து வருகின்ற ஆன்மாக்களின் உள்ளத்தே, உயிர் அனுபவத்தால், அறிவனுபவத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டேயுள்ளார். ஆன்மாவின்கண் ஏற்பட்ட அவ்வறிவுக்குத் தகவே, உயர் பிறவிகள் உண்டாக்கப்பட்டு வாழ்வித்து வந்துள்ளார்.
அந்த அறிவுநிலை பழுத்த பகுத்தறிவாக இம்மானுட வடிவில் ஏற்பட்ட இஞ்ஞான்று, அதற்கு அதீதமாக உள்ள அருள் ஞானம் பெறப்பட்டுள்ளதாம். இந்த அருள் ஞானத்தால்தான் நம் அருளம்பலத்தரசின் உண்மையையும் கண்டு கொண்டிருக்கின்றோம். இவ்வுண்மை வெற்றுப் பகுத்தறிவினால் விளங்காது. நம்பிக்கையும் வாராது. அருள் உதயம் இதயத்தில் ஆனால்தான் நம்பவும், உணரவும், காணவும் முடியும்.
ஒன்றே பலவாம் உண்மை
கடவுள் ஒருவர் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்ளுவர். அவர் அருட்பெருமையால் பலவாகி நின்றிலங்குந் தன்மைதான் சாதாரணமாய் அறிந்து கொள்ளப்படாத ஒன்றாம். மனிதன் கடவுளைப் பற்றித் தன் மன அறிவால் அறிய முற்பட்டு பலவாகக் கற்பனை பண்ணிக் கொண்டுள்ளான்.
1. தன்னைப் போன்ற மனித வடிவாகக் கடவுள் இருப்பதாக எண்ணிக் கொண்டுதான் இருக்கின்றான் பாமர மனிதன். அதையே நம்பும்படியாக எல்லாத் தெய்வ கற்பனா வடிவங்களும் உருவாக்கியும், குறிப்பு விளக்கங்கள் சேர்த்து ஏட்டில் வரைந்து வைக்கப்பட்டுள்ளன. நமது தெய்வ கற்பனா வடிவங்கள், விசேஷ அங்க உபாங்க உருவோடும், தத்துவ உண்மை விளக்கங்களோடும் ஆக்கப்பட்டுள்ளன. இவைகளால் எல்லாம் பொது ஜனம் கடவுளைத் தம்மில் ஒருவர் போலவும், ஏதோ சில அற்புதத் தோற்ற குண சக்திச் செயலோடு இருக்கும் வடிவினனாகவும் மனத்திற் கொண்டு விடச் செய்துள்ளனவாம்.
இவ்வடிவம் இல்லாது அருவமாக நினைக்கத் தெரியாது - சாதாரண மனிதனுக்கு. பக்குவப்படாத மனத்தவர்கள் அப்படிக் கடவுளை அரூபியாக நினைக்க முயல்வதும் தவறேயாகும். ஏனெனில், கடவுள் உண்மை எல்லாம் முதலில் உருவ நிலையிலிருந்துதான் வெளி முகத்தில் கண்டு பின்னர் தான் அகத்தில் உணரப்பட வேண்டியுள்ளதாம். மேலும், கடவுள் உண்மை அனுபவம், மனிதனால்தான், மனித வடிவில் இருந்து கொண்டுதான் பெற வேண்டியுள்ளது. அப்படிப் பெற்றுக் கொள்ளுகின்றபோது தன்னிலேயே நிறைவு பெற்று விளங்கவும் காண்கின்றான். எனவேதான் கடவுளை மனித வடிவில் வைத்துப் போற்றச் செய்துவிட்டனர் முன்னோர்கள்.
மனித வடிவில் கடவுள் உண்மையைக் கண்டு தெளிந்து கொள்ளற்கு ஓர் உபாய கருவியே கடவுட் கற்பனா வடிவங்கள் எல்லாம். விக்கிரக வழிபாட்டின் கருத்தே இதுவன்றி பிறிதல்ல. இக்கருத்துதான் உணரப்படுகின்றதில்லை பாமர மக்களுக்கு. அந்த விக்கிரகமே கடவுள் வடிவமாகக் கருதி விடுகின்றார்கள், இது தவறு. சற்று அறிவு விளக்கம் பெற்றவர்கள், அவ் விக்கிரகங்களில் கடவுள் சக்தி வெளிப்பட்டு, வேண்டுவோர்க்கு அருள் பாலிப்பதாகக் கொள்ளுகின்றார்கள். இது ஒருபடி உயர்ந்த கருத்துதான். இதில் ஒருவனுடைய பக்தி சிரத்தைக் கொப்ப சித்தியுண்டாகின்றது. இதிலிருந்துதான், சிற்பாலய விக்கிரக வழிபாட்டு முறை நன்கு பரவினதாகும். இவர்கள் செய்கின்ற வழிபாடு வெறும் உருவ வழிபாடல்ல; உருவமே கடவுள் என்பதல்ல. அவ்வுருவில் சகல சக்தியொடும், தெய்வம் எழுந்தருளி, இஷ்ட காரிய சித்தியை வழங்கும் என்பதே லட்சியமாகும்.
2. மேற்குறித்த விக்கிரக வழிபாடு, உண்மை அறிவதற்கு முதல் ஏற்பாடாக உள்ளதே அன்றி, அதுவே முடிவானதாகக் கொள்ளக் கூடாது. ஆகையால், அவ் வழிபாட்டிலிருந்து அறிந்து கொள்ள வேண்டிய உண்மையை விசாரித்தறிவாம். எங்கும் உள்ள கடவுள், ஆலயத்தில் விக்கிர வடிவில் வெளிப்படுவதாகக் கொள்ளப்பட்டதின் கருத்து, மனிதனில் தான் கடவுள் உண்மை அறியப்படுவதை யுணர்த்துவதாம். தூல, சூக்கும, காரண தேக நிலைப்படியே ஆலய நிர்மானம் செய்து, காரணமாகிய ஆன்ம நிலையில் தெய்வ விக்கிரகத்தை, பிரதிஷ்டை செய்து வைத்துள்ளார்கள். அனந்த கற்பனா பேதங்களால், ஆலயமும் விக்கிரக மூர்த்தி பேதங்களும் பலவாய் விளங்குகின்றனவாம். அகவுண்மையைக் கண்டு தெளிய, இந்தத் தத்துவ நிறை சிற்பாலயங்களே நல்ல கருவிகளாக உள்ளன. இக்கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாதிருப்பது மக்களின் துர் அதிர்ஷ்ட வசமே ஆகும்.
ஆலய விக்கிரகம், பார்ப்போர் வடிவினை பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி போன்றதாகும். எந்த அளவுக்கு நம்பிக்கையாயும், பரிசுத்தமான உள்ளத்தோடும் ஒருவன் வழிபடுகின்றானோ அதற்குத் தகுந்தபடி தர்சனா பிரசாதம் பெறுகின்றான் அவ்விக்கிரகத்தின் ஆறாக. நம்பிக்கை இல்லா நாத்திகனுக்கு அங்கிருந்து ஒரு பயனும் கிடைக்கப் பெறாது. விக்கிரகமாகிய கண்ணாடியில் கண்டது தன் அகத்தின் பிரதிபலிப்பே என்று அறிந்து கொள்வதே அறிவுடமை. புறத்தில் அந்த விக்கிரகம், நமது அக ஆன்மாவுக்கு, ஒரு கற்பனா அடையாள சின்னமே எனத் தெளிய வேண்டும். உண்மை வடிவம் ஆன்மாவாக ஒரு படித்தாய் உள்ளிருக்க, ஆலய விக்கிரகங்கள் பலவிதமாய் இருக்கின்றன. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால், தெய்வங்களின் பலப் பலவாகிய நாம ரூப பேதங்கள் ஒழிந்து சுத்த ஒளியாய் அருட் சுடராய் விளங்கக் காண்போம்.
3. அக நிலை வழிபாடு
அகத்திருக்கும் ஆன்மாவே, எல்லா விக்கிரகப் பிரதி பிம்பங்களின் முதல் உரு என்பதைக் கண்டு கொண்டுள்ளோம். இவ்வான்மாவே கடவுள் உண்மை வடிவம் என வேதங்கள் முடிவு செய்துள்ளனவாம். அந்த வாக்கியம் “அயம் ஆத்மா பிரம்மம்” ஜீவ தேகங்களை கடவுளர் ஆலயம் என்றும் ஓதப்படுகின்றது. ஆம், இந்தக் தேகாலயத்தில், ஆன்ம வடிவில் கடவுள் இருந்து ஆள்கின்றது உண்மைதான்.
நமது அகத்தில் இருக்கும் கடவுளை எவ்வாறு வழிபாடு செய்வது? எல்லாம் அகப் பெருமானுக்கு அர்ப்பணம் என்று கூறிக்கொண்டு உண்டு, உடுத்துக் களித்து மகிழ்ந்திருப்பதுவா கடவுள் வழிபாடு! அல்ல, அல்ல. கடவுள் இத்தேகத்தில் இருக்கின்றது உண்மைதான். அதுவே நமது உண்மை நிலையாகவும் இருக்கின்றது. இருந்து கொண்டு, நாம் உடற் பற்றற்று, அக வடிவினின்று அருள் இயல் வாழ்வு நடத்திக் கொண்டு அவர் மயமாய்த் திகழ வேண்டு மென்பதுவே ஆண்டவர் திருவுள்ளமாய் இருக்கின்றது.
அதற்காகவே, நம்மை கலந்துள்ள நமது அகமுடையான் தானே புறத்தே சூழுகின்ற எல்லா உருவிலும் வந்து அன்பு செய்து அருள் வளர்க்கத் தூண்டுகின்றார். ஆகையால், நாம், அகத்திலிருந்து அனகமாக விரிந்து, சூழுருக்கொண்டு அடுக்கின்ற ஆன்மாக்களுக்கு உயிர் விளக்கமும் அறிவு விளக்கமும் தரும் தயவுப் பணி புரிந்து கொண்டிருப்போமாக. இது தான் உண்மைக் கடவுளுக்குரிய உண்மை வழிபாடாகும்.
4. கடவுள் ஒன்றே
நம்மில் நாமாயிருக்கின்றது கடவுள் உண்மையாகக் கண்டோம். பின்னர், அவரே பல்வேறு ஆன்மாக்களிலிருந்து பல்வேறு வடிவங்களோடு சூழ்ந்து அருள் செய்ய வருவதையும் அறிந்தோம். கடவுள், ஒன்றா பலவா என்று சந்தேக முண்டாகி விடுகின்றது அல்லவா?
சந்தேகப்பட வேண்டியதில்லை. கடவுள் உண்மையில் ஒருவரேதான். அந்த ஒருவரை நாம் நம் ஆன்ம வடிவில் கலந்த பரமான்ம பதியாக, அருள் அறிவினால்தான் உண்மையாய்க் கண்டு கொண்டிருக்கின்றோம். அந்த பரமான்ம பதியை நம்மில் கண்டு கொள்ளாத போது, மற்றெங்கும் காண முடியாது. காண்பனவெல்லாம் உண்மைக் கடவுள் வடிவமாகா; எல்லாம் மாயா ஜால வடிவங்களே. அழிந்துபோகக் கூடியவைகளேயாம். அந்நிலையில் கடவுள் எங்கும் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருப்பது அனுபவமில்லாத வெற்று வாய்ச் சொல்லேயாகும்.
நம் ஆன்ம வடிவில் கடவுளை அருள் ஞானத்தால் கண்டுகொள்ளுகின்ற போதுதான், அதுவே, ஒவ்வொருவரின் அகத்திலும் இருந்து, அவர் அவராய்த் தோற்றியுள்ளதாகவும் மெய்யாக அறிந்து கொள்ளுகின்றவர்களாவோம். இப்படி அல்லாது, கடவுளை ஒரு கற்பனா வடிவிலோ மற்ற செயற்கையுருவிலோ அமைத்துக் கொண்டு எங்கும் காண முயன்றால் பயன்படாதாம். அப்படி ஒருவேளை பக்திப் பாவனையால், விக்கிரக வடிவிலோ, கற்றூண் முதலான பூதப் பொருள்களிலோ கருதிய லட்சணத்தோடு வெளிப்பட்டுத் தோன்றினாலும் கூட பரம்பொருளின் உண்மை வடிவமாகாது. கருதுவார் கருதும் வண்ணம் எழுந்தருளிக் காட்சி கொடுப்பதும் நமது தயா பெரும்பதிக்கு அசாத்திய காரியமல்லவாம். ஆகவே, உண்மைக் கடவுளை உள்ளவாறு, முழுமையாகக் கண்டுகொள்ள வேண்டுமானால், அருளாலே ஆன்மாவின் கண்ணின்றே காணவேண்டியுள்ளது.
நமது ஒவ்வொருவரின் ஆன்மாவிலும், நம் பரமான்மபதி எக்காலத்தும் பூரணராகவே இருந்து கொண்டுள்ளார். தனித்தனி ஒவ்வொரு ஆன்மாவும், தன்னில் பூரணமாகவே பரமான்ம பதியைப் பெற்றிருந்த போதிலும், அருள் ஞான பக்குவம் வாராமையால், இவ்வுண்மையை அறியாதிருக்கின்றதாகும். அந்தப் பக்குவம் வந்தபோது, அவ்வறியாமையாகிய மறைப்பு விலக, உண்மை விளங்குகின்றது. தன்னில் நிறைந்த பரமான்ம பதியைக் கண்டு கொள்ளுகின்றது. அந்தத் தன் அகமுடையானே, எல்லா ஆன்மாக்களிலும் இருந்து கொண்டு புறத்தில் அனந்த வண்ண பேதங்களால் தன் பேரருட் பெருந்திறல் உண்மையைச் சிறிது சிறிதாக அங்கங்கு காட்டிக் கொண்டிருப்பதாக உணர்கின்றோம்.
ஆகவே, நம்பதி ஒருவரே அனந்த ஆன்ம வடிவங்களில், அனந்தங்கோடி காலமாகத் தன் உண்மையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார் எனத் தெளிவோமாக. மேலும், நமது தனித்தலைமை ஏகநாயகர் இல்லா இடமே இல்லையாதலின், எல்லையற்ற அகண்ட வெளி நிறை ஐம்பூத அணுக்கள் எல்லாவற்றிலும் தனித்தனியாகப் பூரணம் பெற்றே விளங்குகின்றார் என்பது உண்மை. அப்படி எவற்றிற்கும் காரணமாய் உள் மறைந்திருந்து, அவ்வவ்வணுக்களாயும், அணுத்திரள் ஜீவ தேகாதி பிரபஞ்சங்களாயும் விளங்கிக் கொண்டுள்ளவர் நம் அருட்பெரும்பதி ஒருவரே என்றும் அறிகின்றோம் இன்று.
“எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்அகத்தும் புறத்தும்
இயல் உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
மெய்ப் பொருளாம் சிவம் ஒன்றே என்று அறிந்தேன் நினக்கும்
விளம்புகின்றேன் மடவாய்நீ கிளத்துகின்றாய் மீட்டும்
இப்பொருள்அப் பொருளென்றே இசைப்பதென்னே பொதுவில்
இறைவர் செய்யும் நிரதிசய இன்பநடம் தனைநீ
பப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்
பட்டநடுப் பகல்போல வெட்ட வெளியாமே.”
என்ற திருவருட்பாவால் உண்மையை நன்கு தெளியலாம். இது, ஆன்மாவாகிய தலைவி, தன் மனமாகிய ஆருயிர்த் தோழிக்கு, தனது ஒன்றான சிவபதியின் உண்மையை எடுத்துக் குறித்துக் காட்டித் தெளிவு படுத்துவதாக உரைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த ஆன்மா, அருட் பக்குவ வசத்தால் தன் தலைவனாகிய பரமான்மபதியைக் கண்டு கொண்டுள்ளது. அந்தப்பதி ஒன்றான சிவமாகக் கண்டு கொள்ளப் பட்டிருக்கின்றது. அது இயற்கை உண்மை என்னும் சத்தாயும், இயற்கை விளக்கம் என்னும் சித்தாயும், இயற்கை இன்பம் என்னும் ஆனந்தமாயும் உள்ள ஒன்றாகும். அப்படியாய், எப்பொருட்கும், எவ்வுயிர்க்கும் அகம், அகப்புறம், புறம், புறப்புறம் எங்கும் பூர்ணமாய் நிறைந்திருக்கின்றதாகும். நிறைந்து சும்மா இருக்க வில்லையாம்; நடித்துக் கொண்டு, ஐந்தொழில் திருநடனம் புரிந்து கொண்டேயுள்ளதாம். இந்த இறையுண்மைத் திருநடனச் செயலை உண்மையாக, வெள்ளிடை மலையாக மனத்தோழி கண்டு கொள்ள வேண்டுமென்பது குறிப்பாகும். ஒவ்வொரு பக்குவ மனமும், பக்குவ மனிதனும் கண்டு கொள்ளத்தான் வேண்டும்.
ஆண்டவரின் அருள் நடன உண்மை, ஆன்மப் பொதுவில் தான் கண்டுகொள்ள இருக்கின்றது. அதை அறிந்தும் காணாததினால் தான், மன அறிவு கொண்டிலங்கும் மனிதர்கள் அனந்த வண்ண பேத உலகைப் பார்த்துப் பார்த்து, இதுவென்றும் அதுவென்றும், இவர் என்றும் அவர் என்றும் நோக்கி, விருப்பு வெறுப்பால் வியந்தும் வெகுண்டும் இருக்கின்றார்கள். இந்தப் பேத புத்தி மறைய வேண்டும். இதற்கு அகவுண்மை மலர வேண்டும். ஒவ்வொருவர் உள்ளத்தும் இவ்வுண்மை அனகமாக விரிய வேண்டும். அப்போதுதான், தன் பதியின் சாயையாக யாவையும் கண்டு நிரதிசயானந்தமாய்த் தயவு செய்து கொண்டு வாழலாம் என்பது சத்தியம்.
நாம் நம்முள் இத்தருணம் கண்டு கொள்ளுகின்ற நமது தயாபெருஞ்ஜோதி ஒருவரே சத்தாய் எக்காலத்தும் உள்ளவர் என உணர்கின்றோம். அப்படி நம்மில் என்றும் இருந்த போதிலும், இதுவரை, எந்தச் சூழலிலும், சூழ் வடிவிலும் கண்டுகொள்ளாது, நம்மையும் நம்பதியையும் கண்டு கொள்ளாதவர்களாகவே இருந்திருக்கின்றோம். இப்பொழுதுதான் உண்மையை உள்ளவாறு கண்டிருக்கின்றதால், இதுகாறும் காணாதிருந்ததின் காரணமும் அறிந்து கொள்ளுகின்றோம்.
இப்பொழுது நாம் கண்டு அதுவாகி நிற்கின்ற நம்பதிதானே, எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும், எப்பொருட்கும் இனிது நலம் செய்து கொண்டேயுள்ள திருச்செயலை யுணர்கின்றோம்.
ஆகையால், இந்த உலகத்தினும் சரி, மற்ற எந்த உலகத்தாயினும் சரி, இப்பொழுதாயினும் மற்ற எப்பொழுதாயினும் சரி, தோன்றி இருக்கின்ற, தோன்றி இருந்த, தோன்றி இருக்கப் போகின்ற எப்பேர்ப்பட்ட பெரியோர்கள், மகான்கள், ஞானிகள், யோகிகள், மற்றெல்லாருமே நம் ஒன்றான பதியின் ஏகதேசக் கூறுகொண்டு விளங்குவதாகவும், இந்த நம்பதியே அங்கங்கு அவரவராகத் தோற்றங் காட்டிக் காட்டி மறைப்பதாயும் திருவருளால் கண்டு கொள்ளுகின்றோம்.
ஆகையால் நமது ஒன்றான அகமுடையானையன்றி பிறிது எவரையும் எதையும் வியந்தும், மதித்தும் கொள்ளக்கூடாது. அப்படிப் புறத்தே நாட்டம் வைத்தால், அகநிலை மறக்கப்பட்டு மறைந்துபோம். அதனால்தான் இப்பிறவிப்பயன் பெறப்படாது நஷ்டமடைய நேரும். அப்படி வீண் போவது திருவுள்ளச் சம்மதமல்ல.
“அன்னப்பார்ப் பால்அழகு ஆம்நிலை யூடே
அம்பலம் செய்து நின்று ஆடும் அழகர்
துன்னப்பார்த்து என்னுயிர் தோழியும் நானும்
சூதாடு கின்றஅச் சூழலில் வந்தே
உன்னைப்பார்த்து உன்னுள்ளே என்னைப்பாராதே
ஊரைப்பார்த் தோடி யுழல்கின்ற பெண்ணே
என்னைப்பார் என்கின்றார் என்னேடி அம்மா
என்கை பிடிக்கின்றார் என்னேடி அம்மா.”
இத் திருவருட்பா, ஆன்மத்தலைவி தன் தலைவனின் பெருமையுண்மையைத் தனது அருள் உணர்வாகிய அன்னையிடம் வியந்துரைப்பதாக ஓதப்பட்டதாகும். இந்த பாவை சற்று விளக்கிப் பார்ப்போம்.
நமது அழகானந்தராகிய பதி, நம் சிற்றான்மாவை (அன்னப்பார்ப்பை, அன்னக்குஞ்சை) தன் எழில் அம்பலமாகக் கொண்டு ஆடுகின்றாராம். நம் உயிர்த்தோழி ஆகிய மனத்துடன் கூடி இவ்வுலகில் பொய் வாழ்வாகிய சூதாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றோம். ஈது அறிந்து, துன்னப்பார்த்து அதாவது இச்சூழலில் நம்மை நெருங்கி வந்திருக்கின்றாராம் நம்பதி. அப்படி நெருங்கி வந்து நின்று அழைக்கின்றார். “உங்களை நீங்கள் ஆன்ம ரூபிகள் என்று அறிந்து கொண்டும், உங்களுள் உறையும் என்னைக் கண்டு கொள்ளாமல், புறநாட்டங் கொண்டு ஊரிடை யுழல்கின்ற பேதையராய் இருக்கின்றீர்களே” என்று இரங்குகின்றார். இரங்கி மேலும், “என்னைப் பாருங்கள் என அழைக்கின்றார், எங்கள் கையையும் பற்றுகின்றார், என்ன வியப்பு! இதன் பொருள்தான் என்ன” என நமது அருள் அன்னை முன் மொழிந்து நிற்கின்றோம்.
கைபிடித்தல், என்பதுதான் பாணிக் கிரகணம் என்று வடமொழியில் இசைக்கப்படுவதாம். கலியாணம் அல்லது திருமணம் என்பதே இதற்குப் பொருளாம். அதாவது நம் பக்குவம் உணர்ந்து நம்மை வரித்துக்கொள்ள தம் இச்சையை வெளிப்படுத்துகின்றார் என்பது குறிப்பாம். ஆகையால், அவரது அருள் வாக்கின் பொருள் அறிந்து, புறத்தலையாது அகத்தொன்றித் திருமணங்கொண்டு என்றும் திகழுவோமாக.
இச்செய்யுளில் குறிக்கப்பட்ட தலைவி நம் ஒவ்வொருவரின் ஆன்ம உண்மையாயிருத்தலின் அத் தலைவியின் கூற்றுக்குப் பதிலாக நம் ஆன்மக் கூற்றாக நயந்து கொண்டு விளக்கம் செய்ய நேர்ந்ததாம்.
இதனால் கடவுள் ஒருவர்தான் என்றும், அவர் சச்சிதானந்தமாய் இருந்தும், அபக்குவ அறிவால் நாம் காணாவண்ணம் மறைந்து நின்றாடுகின்றார் என்றும், நமது அக ஆன்மத்தளியில் கண்டு கொள்ளப்படுகின்றார் என்றும், இவ்வகத்திருக்கும் ஒருவரே தமது அருட் பெருந்தன்மையை நமக்கு உணர்த்துவான் வேண்டி யாவுமாய் எவருமாய்ப் புறத்தோற்றம் காட்டிக்காட்டி மறைக்கின்றார் என்றும் தெளிவாகத் தெரிந்து கொள்ளுகின்றோம் இச்சமயத்தில்.
5. பழைய கடவுட் கொள்கைகள்
உண்மைக் கடவுள் மேற்கண்ட வண்ணம் இருக்க, ஈது அறிந்து கொள்ளப்படாத காலத்தில், கடவுளைப் பற்றி எப்படி எப்படியோ கற்பனை செய்து கொண்டிருந்தது உலகம். ஒருவன், உண்மையை உணர்ந்து கொள்ளாதவரையும், அறியாமையால் தன் கொள்கையே தன்செய்கையே சரியானதாகக் கொண்டும் செயல் புரிந்து கொண்டும் இருக்கின்றான். தன் அறியாமை தனக்கே விளங்குவதில்லை. தனது அறியாமையை, அது அறியாமைதான் என்று, என்று புரிந்துகொள்ளுகின்றானோ அன்றே அவனுக்கு அறிவு உதயம் ஆகிவிட்டது என்று அர்த்தமாகும்.
இதுவரை தோற்றுவிக்கப்பட்ட சமய மத நூல்களும், தத்துவ ஞான சாஸ்திரங்களும் கற்பனைக் கடவுள் கொள்கைகளையே மையமாய்க் கொண்டு புனையப்பட்டனவாகும். அவைகளிளெல்லாம் புகுந்து, அவ்வக் கொள்கைகளில் பற்று வைத்துப் பழகி முடிவில் அற்பப் பயனே கண்டு அடங்குகின்றனர் மக்கள் பலரும். புல போக வாழ்வுக்கும், மனோகரணக் களிப்புக்கும் அதிகம் காலத்தையும், பொருளையும், முயற்சிகளையும் விரயஞ் செய்கின்றவர்களுக்கு ஏற்ற கடவுட் கொள்கை எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! அப்படித்தான் புற நாட்டத்தவர்களின் கொள்கை கோட்பாடுகள் யாவும் இருந்து வருகின்றனவாம். அவற்றிற்கு மேல், சிறிது அன்பும், அறிவும் சமரச நோக்கமும் கொண்டவர்கள் கடவுட் கொள்கை, தங்கள் உலக வாழ்க்கைக்கு, ஓரளவு ஒத்து வாழும் முறைக்குத் தக ஆக்கிக் கொண்டுள்ளார்கள்.
மற்றுஞ் சிலர் உலகத் தொல்லைகளை நினைந்து அஞ்சியும், தனிமை வாழ்க்கையை விரும்பியும் அதற்கான கடவுட் கொள்கைகளைப் பின்பற்றி நடக்க முயன்றனர். இன்னும் சிலரது கடவுட் கொள்கை, புற பக்தி வழிபாட்டால் தம் வாழ்க்கை நலன்கள் பெருக்க மார்க்கமாகக் கொண்டு விட்டார்கள்.
இதற்கும் மேற்பட்டவர்களாகிய, நம் வேதாந்த சித்தாந்த வித்தக சித்த கணத்தார் தாம், கடவுட் கொள்கைகளில் உண்மையை ஏகதேசம் உரைத்து, கடினமான கற்பனைச் சூழலையும் அமைத்து விட்டிருக்கின்றனர். அவைகளில் மறைந்து கிடக்கும் உண்மையை காண்பதற்கு வழி துறையொன்றும் தெரியாதிருந்தது. உண்மையை அறிந்து கொள்ளாமலே கூட நம்மனோர், பழங்கொள்கைகளை நம்பிக்கையோடு பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றி வந்துள்ளதும் திருவுள்ளச் செயலே என்று இன்று எண்ண வேண்டியுள்ளது.
கடவுளே மறைந்து நின்று பக்குவ காலம் எதிர் பார்த்திருந்து இப்பொழுதுதான் வெளிப்படத் திருவுள்ளம் கொண்டார் எனில், கற்பனை மறைப்பால் கடவுள் உண்மை இந்நாள் வரை மறைந்தும் அழிந்தொழி யாமலிருந்து வந்திருப்பது திருவருட் சம்மதமல்லாது வேறு யாதோ?
“பெருகியபேர் அருளுடையார் அம்பத்தே நடிக்கும்
பெருந்தகையென் கணவர்திருப் பெயர்புகல் என்கின்றாய்
அருகர்புத்தர் ஆதியென்பேன் அயன் என்பேன் நாரா
யணன்என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன்
பருகுசதாசிவன் என்பேன் சத்திசிவன் என்பேன்
பரமனென்பேன் பிரமனென்பேன் பரப்பிரமம் என்பேன்
துருவுசுத்த பிரமனென்பேன் துரியநிறை வென்பேன்
சுத்தசிவன் என்பன்இவை சித்துவிளையாட்டே.”
ஈற்றடியில் குறிக்கப்பட்ட சித்து விளையாட்டு என்பதற்குப் பொருள், மெய்ஞ்ஞானம் விளைவிப்பதற்கான திருச்செயலாக உணர்த்தப்படுகின்றதாம். அருட்பெரும்பதி நித்த பரிபூர்ண சச்சிதானந்தராயிருக்க, இவ்வுண்மையை ஆன்மாக்கள் அறிந்து கொள்ளுவதற்கும் அனுபவம் அடைவதற்கும் என்றே முன் மறைக்கப்பட்டிருந்தனவாம். அம்மறைப்பை விலக்கிவிட்டு, நேருக்கு நேராக உண்மையைக் கண்டு உரைக்காமல், இப்புறத்தே இருந்துகொண்டே திரைக்குப் பின் இருப்பவற்றைப் பற்றி பலரும் பலவாகக் கற்பனை செய்துவிட்டார்கள். அக்கற்பனை, பலவாகிய தெய்வ குண தத்துவ விளக்கக் காரணமாக அக்கடவுளுக்கு நாம ரூபங்கள் ஆக்கப்பட்டுவிட்டனவாம். அப் பெயர்களை இப்பாடலில் வரிசைப்படுத்தி காட்டப்பட்டுள்ளனவாம்.
ஆதியில், ஆருகதமும், பெளத்தமும் தோற்றுவிக்கப்பட்டதால், கடவுள் பெயர் அப்படி, அருகர், புத்தர் ஆதியாகக் கொண்டோதினர். பின்னர், அயன், அரி, அரண், ஆதிசிவன், சதாசிவன், சத்திசிவன், பரமம், பிரமம், பரப்பிரமம், சுத்த பிரமம் என்றெல்லாம் ஓதினார்கள். அகமுணர்ந்த யோகியர் காட்சியில், துரிய நிறைவாகக் கண்டு பகரவும் முடிந்தது. சுத்தசிவம் என்றும் அப்பதிக்கான சச்சிதானந்த குணப்பெயராகப் புனைந்து ஓதிவைத்தனர்.
இன்று உண்மை காண்கின்றபோது இவ்வெல்லாப் பெயர்களுக்கும் காரணத்தோடு கூடிய பொருள் கைக்கனியெனத் தெளிவாக விளங்குகின்றனவாம். இதுபோன்ற இன்னும் எத்தனை பெயர் சூட்டினாலும், அவ்வளவுக்கும் இடம் கொடுத்து அவற்றிற்கு மேலும் புதியன எத்தனைக்கும் இடந் தருவதாயுள்ளதாம் அக்கடவுள் உண்மை.
“சிற்சபையில் நடம்புரியும் நாயகனார் தமக்குச்
சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
பிற்சமயத் தார் பெயரும் அவர்பெயரே கண்டாய்
பித்தர் என்ற பெயர் படைத்தார்க்கு எப்பெயர் ஒவ்வாதோ
அச்சமயத்தேவர் மட்டோ நின்பெயர்என் பெயரும்
அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே
சிற்சபையில் எங்கணவர் செய்யுமொரு ஞானத்
திருக்கூத்து கண்டளவே தெளியுமிது தோழி.”
எனவும் ஓதப்பட்டுள்ளதாம். ஆன்ம சிற்சபையில் இருந்து கொண்டு, ஆனந்தத் திருநடனம் புரிகின்றவர் நம் கணவர். அத்திருநடனத் திருச்செயலே உலகிலுள்ள எப்பொருட்கும் எச்செயலுக்கும், எவர் எவர் தோற்றத்திற்கும் காரணமாய் இருக்கின்றதாம். ஆகையால் அவர் பெயரும் உள்ளிருக்கும் அவரையே குறிப்பதாக அறிய வேண்டியுள்ளது.. பெயர்களில், நல்லவனாயினுஞ் சரி, அல்லவனாயினுஞ் சரி அவர்க்கே உரியனவாம். மேலும், ஆன்மா, தலைவி என்பனவும், மனம் தோழி என்பனவும் போன்ற தத்துவ கற்பனா பெயர்களும் அதற்கு ஆதாரமாய் இருக்கும் ஆண்டவனையே சுட்டி நிற்பனவாம்.
ஒவ்வொரு ஆன்மாவும் தெய்வப் பெற்றிகொண்டு விளங்குவது கண்டே நம்மனோர், மக்களுக்கு தெய்வக் கற்பனா பெயர்களையே சூட்டியுள்ளார்கள். இப்பெயர்களால் தெய்வ அறிவும் ஞாபகமும், மாறாது மறவாது ஓங்கி வளரவும், தத்துவ நிக்கிரகங்கள் செய்து நன்னெறியிற் செல்லவும் உதவும் என்பது முன்னோர் உட்கோள்.
இவையொன்றும் அறியாத பிற நாட்டவரே தெய்வீகம் சிறிதும் விளங்காத அர்த்தம் இல்லாத பெயர்களை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் பெயர்களில் சிறிது நற்பொருள் இருந்தாலும்கூட அது தெய்வ ஞானத்துக்கு விளக்கம் தருவதாக இருப்பதில்லையாம்.
ஆகவே, தெய்வப் பெயர் மனிதனுக்கிட்டு அழைக்கப்படுவதின் காரணம், மனிதன் உண்மையில் கடவுள் வண்ணமாகவே இருக்கும் இயல்பை உணர்த்துவதேயாம். அப்படி உணர்ந்து ஆன்ம வண்ணக் கடவுள் நிலையில் நின்று வாழ்வதே அவன் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்பது ஆன்றோர் அக விழைவு. அதன்படி சிலரும், தமது அகவுண்மையை யோர்ந்து, அந்நிலையிற் பொருந்தி உள் ஆழ்ந்து விட்டார்கள். இதுதான் அப்பழைய கடவுட் கொள்கையின் சிறந்த முடிவாக நம்மவர் கொண்டிருந்தார்கள்.
1. பரமான்ம நிலை
ஒவ்வொரு ஆன்மாவும் தன் அகத்தே பூர்ணமான பரமான்மாவைக் கொண்டு விளங்குகின்றது என்பதும் முன்னமேயே கண்டு கொள்ளப்பட்ட விஷயம்தான். ஆனாலும், அந்நிலை அனுபவம் உண்டாவதற்குப் பல முறைகள் வகுத்து வழங்கப்பட்டனவாம். துவைத நிலையும் அத்துவைத முடிவுமே சிறந்த வழியாகப் பலரும் கொண்டனர். கடவுள் என்னும் லட்சியப் பொருளை அடைதற்பொருட்டு, மனிதன் தன்னை வேறாகவும், கடவுளை வேறாகவும் வைத்துக்கொண்டு பலவகையான சாதனா முறைகளைக் கைக்கொண்டான். அவ்வெல்லா முயற்சிகளும் கரண இந்திரிய தேகநிலையில் இருந்து, குறிக்கோளை நோக்கி ஆற்றப்பட்டனவாம். அவனின் நாட்டம் முற்றும் அங்கு செலுத்தப் பட்டதால் மற்ற உலக காரியங்களும், உடலின் கவனிப்பும் அலட்சியமாய் விடப்பட்டு விட்டனவாம். அதனால், முடிவில் உலகையும் உடலையும் விட்டு லட்சிய சிந்தனையோடு லயமாகிப் போய்விட்டான். இப்படிப் போனது, அவன் லட்சிய சித்தி அடைந்துவிட்டதாகப் பிறர் எண்ணிக் கொண்டு விட்டார்கள்.
இப்படியேதான் யோக ஞானியுங்கூட ஜீவான்மாவை, இருதயத்தில் இருப்பதாகவும், அதில் பரமான்மா வந்து சேர்ந்து ஐக்கியானுபவம் தருவதாகவும் கொண்டு சாதனை பல புரியப்பட்டனவாம். அச்சாதனை முற்றி ஆறாதாரங்களில் மந்திர அட்சர தரிசனையும், குண்டலி சக்தி சேர்க்கையால் அற்புத சத்தி சித்திகளோடு சிறிது காலம் இவ்வுலகில் விளங்கிவிட்டு முடிவில் ஜீவான்மாவை இருதய பீடத்திலிருந்து புருவ நடு நிலைக்கு ஏற்றி பரமான்ம சிந்தனையோடு அடங்கிப் போகின்றான். இதுவே, அவ்வியோகிக்கு ஜீவ பரமான்ம ஐக்கிய நிலையாக கொள்ளப்படுவது. இவர்களுக்கெல்லாம் இவ்வுடல் இயந்திரத்தின் நடுவிருக்கும் இருதயமே உறைவிடமாக விளங்கியது. அந்தக் கமலத்தில்தான் பரமனின் காட்சியும், அனுபவமும் உண்டாகும் என்பதே இவர்களின் கொள்கை.
கடவுளை அட்சரம் (அழிவற்ற பொருள்) ஆகவும் ஜோதியாகவும் கண்டனர். வடமொழியில், அ-வும், க்ஷ-வும் முதலும் முடிவுமான எழுத்துக்களாம். ‘ரம்’ ருத்திர பீஜம் என்னும் அக்கினி எழுத்தாம். இதனால் ‘அசஷரம்’ என்பது கடவுள் வண்ணமானதென்றும், அது இருதயத்தில்-ருத்திர பீடத்தில், பெரு ஒளிமயமாய்த் தோன்றி, நிரவிய அழல் உருவக் காட்சியைத் தருவதாகக் கண்டார்கள். இவர்களின் ஜோதிக் கடவுள் அனுபவம் நெஞ்சிடத்தே தோன்றி உடற் பிரதேசம் முற்றும் நிறைந்து லலாட வழியாக வெளிப்பட்டு விடுவதாம். அல்லது அவ்வொளி கபாலத்துள் சமாதி நிலையில் தங்கியிருந்து கபால மோட்சத்தில் வெளியுறுவதாம். இவ்வளவும் ஒரு சாரார் லட்சிய சித்தியாக கொள்ளப்படுவன.
மற்றொரு சாரார்தான் கடவுளை, சிர மத்திய பீடத்தில் சிற்சபையாம் ஆன்ம அணுவில் கண்டு அடைவது. இவர்கள் கடவுள் தன் அன்பு ஒளிச் சோதியாய் விளங்குவது.. இவர்களின், இம்மொழிவழி கடவுள் விளக்கம் உண்மை கொண்டதாகும். இதிலும், அ-என்பதும், ‘ன்’ என்பதும் முதலும், முடிவுமாயிருக்க, ‘பு’ என்ற எழுத்து ப்+உ என்னும் மெய்யும் உயிருமாய் கலந்திருந்து, பகர வண்ண ஆன்ம பீடத்தையும், அதன் மேற்புள்ளி போல் திகழும் பரமான்ம ஜோதியையும், ஐந்தாம் உயிர் எழுத்தாகிய உகரம் அப்பரமான்மபதியின் அருட்பெரும் ஐந்தொழிற் செயலையும் சுட்டி நிற்பனவாம்.
இதனால் இந்த அன்பே கடவுளாக உள்ளது. அந்த அன்பே சிவமாகக் கற்பிக்கப்பட்டும் உள்ளது. அந்த அன்புக் கடவுளை அடைவதற்கு அன்பே வழியாகவும் இருக்கின்றது. அன்பு செய்வதால், அருள் கிடைக்கும். அந்த அருளைக் கொண்டு சிவானுபவமாகிய ஐக்கிய நிலை சித்திக்கின்றதாம். இந்த ஆன்மா முடிவில் லிங்க வடிவில் ஒடுங்கிப் போகின்றது. அல்லது மேல்வாயில் திறந்து கொண்டு ஜோதியிற் கலந்து விடுவதாம். இவ்வுயர் நிலையே கடவுள் அனுபவத்திற்கு உகந்ததாகும். இந்த ஆன்ம நிலையமேதான் இத் தேக சிருஷ்டியில் முதல் முதலிலே தோன்றி ஒளி விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருப்பது என்று நாம் அறிவோம்.
மேலும், இந்நிலைக்கண்ணின்றே மற்றெல்லாக் கருவி கரணங்களும் தோற்றுவித்து, வளர்க்கப்பட்டு, இயக்கப்பட்டுக் கொண்டும் உள்ள தலைமை இடம் என்பதை யாரே மறுக்க முடியும்! இதனால் இருதயமும், அதன் விளக்கமும் இயக்கமும், இம் முதல் மூளை முகுளத்திலிருந்து ஆளப்படுகின்றனவென அறியலாகும். மேலும், ஜீவான்மாவும், அதன் சக்தி ஆகிய மன அறிவும் இருதயத்தில் இயக்கப்படுவதும், லலாடத்தில் அடக்கப்படுவதும், மேல் நிலையில் ஐக்கியப்படுத்தப்படுவதும் மூளையின் முதற்ஜோதிக்கு அடங்கியதேயாகும். ஆகவே, அருள் உண்மை காணாது கீழான இருதய இருள் நிலையில் கவிழ்ந்து கிடப்பது அபக்குவமேயாம்.
மேலும், நாம் ஒரு பொருளைக் காணவேண்டுமானால் எதனைக் கொண்டு பார்க்கின்றோம்? கண்ணால்தானே? கண் எங்கேயிருக்கிறது? தலை முகத்திலா? இருதயத்திலா? முகத்திருக்கும் கண்ணாலேதானே காண்கின்றோம்! உபநயனம் என்னும் ஞானக்கண், நெற்றிக்கண் இருதயத்திலா இருக்கும்? சிரநடுவிருக்கும் ஆன்ம மணியே நம் அருள் ஞானக் கண்மணியாக இருந்து புருவத்திடை வெளிநோக்குவது முறையாக இருக்கின்றது.. பூணூல் தரிக்கின்றவர்கள், அதன் பிரம்மமுடி இருதயத்தானத்தில் படும்படி அணிய வேண்டுமென்றும், சந்தியா வந்தனத்தின் போது, அம்முடியைக் கொண்டு லலாட பீடத்தைத் தீண்டி நெற்றிக் கண்ணைத் திறப்பித்துக் கொள்ளுவதாக பாவனை செய்யப்படுகின்றதாம். அடுத்த நொடியில் அந்த பிரம்மமுடி இருதய பீடத்திற்கே இறங்கி விடுகின்றது. பிரம்மோபதேசப் பொருளை இருதயத்தில் இருத்திக் கொண்டு, உலகில் எப்படி நடக்க முடியும் இவர்களால்! இடறவும் இடர்படவுமே நேரும். இதனால் புருவ மத்திய நாட்டத்தோடு பழகும் மேலோர், ஆன்ம நிலையினின்று நேரடியாக உலகத்தில் அன்பு ஒளியைப் பரப்பிக் கொண்டு ஆனந்தமாக வாழ முடியும் என்பது தெளிவு.