Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் 131-140 மூலமும் உரையும்

தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்
கரண ஒழுக்கம்
பதினான்காம் அத்தியாயம்
மனோகரண நானிலை.

1
மனிதவுளத் தோங்கி மலருமகங் காரம்
மனம்புத்தி சித்தமென வாய்ந்து.
131

கு.வி-மனம் காரியப்படுகின்றது இம் மனிதப் பிறவியில்தான். சித்தமாம் விதை, புத்தியாய் முளைத்து மனமாய் அரும்பி, அகங்காரமாய் மலர்கின்றது.
ஒழுக்கம் நிறைந்த உள்ளத்தில் இட்ட சித்தமாகிய விதை மெய்யறிவு மலராய்ப் பூத்து அகங்காரத் தன்மை ஒழிந்த அருள் மணத்தை வீசுகின்றது.
ஒழுக்கமற்ற அபக்குவ உள்ளத்தில் நட்ட நச்சு விதை முளைத்துத் தீநாற்ற விட மலரைத்தான் கொடுக்கும்.
அகங்காரம் = தற்போதம், தான் என்ற மாய உணர்ச்சி, எழுச்சி
போதம் = போது என்னும் பூத்த மலரினை உணர்த்துவதாம்.
ஆதலின் அகங்காரம் மலராக உவமிக்கப்பட்டுள்ளதாம்.

2.
நீர்நான்கு தன்மை நிலைகொண்ட மாகடற்கே
நேர்காணு முள்ள நிலை.
132

கு.வி- உள்ளக்கடல், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாம் கொண்ட நிலையமாம்.
அக்கடல் நீரில் அடியிலுள்ள அமைதியான நிலை 1, மேற்பரப்பில் அலை வீசுகின்ற நிலை 2, அம்மேல் மட்டத்திலே மிக தண்மையால் உறைந்து பளிங்கு போல் சலித்தலின்றிக் கிடக்கும் நிலை 3, சூட்டால் மேல் நீர் ஆவியாக மாறி உயர எழுவதும், 4. மழையாக பொழிவதுமான நிலை.
ஆக இந் நாங்கு நிலைகளுமே மனத்தின்கீழ் மேல் நிலைகளாகப் பொருந்தி, புத்தி, மனம், சித்தம், அகங்காரம் எனத் திகழும்.

3.
ஆழிநீர் மீதே யலையெழுந் தாற்போல
பாழிசைக்கும் புன்மனம் பாய்ந்து.
133

கு.வி- சதா சலித்தலைந்து கொண்டு கேடிசைக்கும் மனமானது கடல் நீரின் மேற்பரப்பில் ஓயாது எழுந்தார்ந்து விழுந்தொழியும் அலைக்கு ஒப்பாகும். சமுத்திர அலை, காற்றாலும், பூமியின் சுழற்சி வேகத்தாலும், கோட்களின் பற்றிழுப்பாலும் தோன்றிக் கெடுகின்றது.
இது போன்றே மன அலையும் அவா, வெகுளி, மயக்கங்களால் தோன்றிக் கெடுகின்றதாம். அலை மனம் ஒழுக்கமற்றதாய் இருந்து கேடு சுழலான் பாழ் இசைக்கும் புன்மனமாகப் புகலப்படுகின்றது.

4.
தரங்கத் தடிநீர் சலியா திருக்கும்
கறங்காத புத்திநிலை காண்.
134.

கு.வி- சலித்துக் கொண்டிருக்கும் கடலலைக்குக் கீழ் நீர் அமைதி குடி கொண்டிருக்கும். இது, நிலைத்த புத்தி நிலைக்கொப்பாகும். சத்விசாரத்தால் அமைதியுற்ற உள்ளத்தில் மெய்ப் பொருளுணர்வு நிலைத்திருப்பதாம். எது போன்று எனில், ஆழ்கடல் நீரடியில், ஒரு நிலையில் பல சீவர்கள் நிலைத்து வாழ்கின்றன போல.
அந்நீர் நிலையில், மேல் மட்டத்திற்போல் அலையும், கொந்தழிப்பும், உறைதலும் கிடையா. இத் தன்மை (Anomalous expansion of water) கடல் நீரில் காண்பது போல், கடவுள் அருள் தன்மையை மனத்தின் கண் காண்கின்றோம்.

5.
தெளிந்தசித்தத் துள்ளே சிவங்கண் டிலங்கும்
பளிங்கொத் துறைந்திட்ட பாங்கு.
135.

கு.வி – அவா அற்று, அலைவற்ற திட சித்த சிலையானது உறைந்து பனிக் கட்டியாகிப் பளிங்கு போல் விளங்கும் நீரின் நிலை போன்ற தன்மைத்தாம். ஒருமையும், தயவும் கொண்டு தெளிவுற்றிலங்கும் சிதத்தில் கடவுள் ஒளியாகிய செம்பொருட் சிவஜோதி திகழும்.
சித்த சிகா மணியாய்ச் சித்த மிசை திருநடம் புரிந்து நிற்கும் பரம் பொருளைக் கண்டடைய தெளிந்த திருவருள் சேர்ந்த திட சித்தமாம் மனோநிலை நல்லொழுக்கத்தால் பெறலாகும்.
பாங்கு = தன்மை.

6.
வேங்கரத்தால் வெந்து மிசையெழு மாவிபோல்
ஆங்கரத்தா லோங்கு மகம்.
136.

கு.வி-வேம் கரத்தால்-சுடுகின்ற சூரிய கிரணத்தால் அல்லது வெம்மையான கதிரால்.
வெந்து மிசை யெழும் ஆவி – சுட்டு மேலே கிளம்புகின்ற நீராவி.
அகம் = உள்ளம்.
உள்ளத்து உணர்வானது அகங்காரத்தால் மேலெழுந்து வெளிப்படுகின்றது. இது எதுபோல் எனில், கடல் நீர் ஞாயிற்றின் கதிர்களால் வெம்மை அடைந்து நீராவியாய் மேலெழுகின்றது போலாம்.

7.
உள்ள நெகிழ்வோடே உண்மை அறிதற்குக்
கள்ளமற வேண்டுங் கருத்து.
137

கு.வி – கருத்திலே கள்ளமற்றால் கரணமெல்லாம் தூய்மையுற்று உள் விளங்கும். உண்மை புலனாகும். இவ்வுண்மை விசார ஞானத் தோற்றமே யல்லாது, மெய்யனுபவத்தில் பெற்றுக் கொண்டதாகாது.
ஆகையால், உள்ளத்தில் தயை உண்டாகி, செயலில் புறத்தும் விளங்குதல் ஒன்றே அனுபவ பூர்வமானதாம்.

8.
அருளடையார்க் கீண்டு அவலமெலா மீந்து
இருளடைத லிக்கரணத் தீவு
138.

கு.வி – இந்தக் கரண ஒழுக்கத்தினால் நாம் அடைய வேண்டியது கடவுளின் திருவருளே ஆகும். அத் திருவருள் அடைந்தாலன்றி நமக்கு உண்மையான சுக வாழ்வு இல்லை.
ஆகையால், அருளடையாதார்க்கு அல்லலெல்லாம் தருவதுமன்றி, முடிவில், இக்கரணமும் மங்கி இருண்டு, செயலொடுங்கி மறைந்து விடும். இதுவே மனோ கரணத்தின் கதியாம்.
ஆதலின், காலமுள்ளபோதே பெற வேண்டிய திருவருளைப் பெற்று இருளாத அருட்சோதி நிலையில் திகழ வேண்டும்.
ஈவு = முடிவில் பெறும் பங்கு.

9.
கரண வொழுக்கத்தாற் கட்புருவ நாப்பண்
புரையற நின்றுட் பொருந்து.
139.

கு.வி – மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நாற்கரணத்தைக் கொண்டு, குற்றமற்ற இறை இன்ப வாழ்வு பெறுதற்கு, தயவோடு புருவ மத்திய நாட்டத்தைப் பெற்று, உட்புகுந்து, சிரநடு சிற்றம்பலத்தே நிலைத்தல் வேண்டும். அங்கிருந்து தயா வண்ணமாய் உலகியலை நடத்தல் வேண்டும்.
தயவில்லாத கரண ஒழுக்கத்தால் சாதாரண மனித தரத்திற்கு அப்பாற்பட்ட சித்தி பல பெற்றாலும் அவை சதமல்ல. எல்லாம் வல்ல கடவுட் சித்தியே நமது குறிக்கோளாகும்.
புரையற = குற்றம் அற, தயவுடன் கூடிய ஒழுக்கமே புரையற்றதாம்.

10.
நிறுத்திடல் வேண்டும் நியமத் துளத்தை
பொறுத்திடல் வேண்டும் உலைவு.
140.

கு.வி – மனமானது சதா அலைந்து கெட்டு, கற்பனை உலகில் அலையாமல், தடுத்து, மறுத்து, நியமத்தில் நிலைத்திருக்கச் செய்தல் வேண்டும்.
நியமம் என்பது, அட்டாங்க யோகத்தில் இரண்டாம் படியாம். இயமம் கடந்த நியமம் என்ப. இந் நியமமாவது, தூய்மை, தவம், தத்துவ நூலோர்தல், தெய்வ சிந்தனை, உளமகிழ்வு என்ப. இவற்றினின்று உள்ளம் உலையாது ஒறுத்து ஒழுகச் செய்தல் வேண்டும். இவ்வொழுக்கத்தால் கரணம் தூய்மையுறும். மற்ற யோகப் படிகளையும் ஏறி, சித்தி பெறற்கு ஏதுவாகும் என்ப.
நமது சன்மார்க்கத்திற்கு இந்த யோக சித்தி லட்சியமல்ல. ஆதலின், தயாஞான நிலை நின்று நோக்குதல் வேண்டும். இதற்குத்தக நியமம் என்ற சொல்லுக்கு உள்ள ஆலயம், கோயில், சிரநடு சிற்றம்பலமாகக் கொள்ளுதல் வேண்டும். இந்நியமத்திலே, தயவும் ஒருமையும் கொண்ட உள்ளத்தைப் பிறழாது நிறுத்தல் வேண்டும் என்பதாம்.
சுத்த சன்மார்க்க சாதனையினால், இந்நியமத்தில் மனத்தை நிலை பெறுத்தி, இவ்விடனின்று உலைந்தோடுந்தோறும் உலைந்தோடுந்தோறும் அப்படி ஓடாது தடுத்துத் தடுத்து நிறுத்தி, அங்கிருந்து கொண்டே தயவொழுக்க வாழ்வு நடத்தத் தினமும் பழக்கப் படுத்திக் கொள்ளல் வேண்டும்.