தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்
கரண ஒழுக்கம்
பதின்மூன்றாம் அத்தியாயம்
மனம்.
|
1.
|
ஐம்புலனுக் கப்பாலாம் ஆறாம் பகுத்தறிவே
செம்புல மாமனமாய்த் தேறு.
|
121.
|
குறள் விளக்கம் - ‘மனம்’ என்பது ஐம்பொறி வாயில் காரியப்படுகின்ற ஐம்புலன் உணர்ச்சிக்கு மேற்பட்ட நல்லறிவு சம்பந்தமான பகுத்தறிவு உணர்ச்சியேயாம்.
இப் பகுத்தறியும் மனோ சக்தியால் அருள் உணர்ச்சியைப் பெற்று கடவுள் உண்மையைக் கண்டடையக் கூடியதாய் இருப்பதால், இம்மனம் படைத்த மனிதப் பிறவி சிறப்பதாம்.
மனதை நல்ல வழியில் செலுத்தித் தூய இன்ப வாழ்விற்குப் பயன் படுத்திக் கொள்ளவே, இக் கரண ஒழுக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
|
2.
|
கீழாம் பிறப்புருவிற் கேவலத் தன்மையாய்
வாழா திருக்கும் மனம்.
|
122
|
குறள் விளக்கம் – மனம், உயிர்த் தன்மையாகிய உணர்வு. ஆதலால் இது இம்மனித சீவனில் வெளிப்பட்டபோதுதான் மன உணர்வாக விளங்குகின்றது. மற்ற பிறவிகளில் இச் சீவ சக்தியால் புலனுணர்ச்சிதான் வெளிப்படுகின்றது.
எனவே, சீவான்ம உணர்வாகிய சக்தி எல்லா உயிர்களின் இடத்தும் இருந்த போதிலும், கீழ்ப்பிறவிகளில் புலனுணர்வு (Instinct) சுபாவ அறிவாகவும், சாதாரண மனிதனில்தான் (Mind) என்னும் மன அறிவாகவும், சுத்த ஞானிகளிடத்தில் (Divine Grace) என்னும் அருள் அறிவாகவும் விளங்குகின்றதாம்.
இதனால், இம்மனோ சக்தி எல்லாச் சீவர்களிடத்தும் இருந்த போதிலும், கீழ் நிலையிலும், மேல் நிலையிலும் வெவ்வேறு வண்ணமாகத் திகழ்கின்றதாக அறிய வேண்டும்.
|
3.
|
அருளன்னை யீன்ற அருமைமனச் சேய்க்கு
தருமுடலே செஞ்செவிலித் தாய்.
|
123
|
கு.வி – மனம், என்ற அருமைக் குழந்தையைப் பெற்றெடுத்தது, அருள் என்னும் நற்றாயாகும். இந்த அருஞ் சேயை வளர்க்க இச் சிறந்த தேகமாகிய நல்ல செவிலித்தாயை நமக்கு நமது அருளன்னை நல்கியுள்ளாள்.
மனம் பூர்ண வளர்ச்சி பெற்று பக்குவப்பட்டு தயா அறிவு வண்ணமாகத் திகழற்கு இத்தேகம் உதவுகின்றது. ஆதலின், இத்தேகமாகிய வளர்ப்புத் தாயினால், நன்மனச் சேய்க்கு உண்டாகின்ற நன்மை அளவிடற்கரியது.
|
4.
|
மாதயா வள்ளல் மனத்துரு கொண்டின்று
பேதமை தீர்ப்பதெனப் பேசு
|
124.
|
கு.வி – பெருந்தயவுடைய நம் பதியே தன் இயல் உண்மைத் தன்மையை மறைத்துக் கொண்டு, நமது மனமாக உருவெடுத்துள்ளார் இன்று.
இது ஏன் ? எனில், நமக்குப் பக்குவம் வருவித்து, அறியாமையைப் போக்கி, அறிவாலே தனது அருள் உண்மையைக் காட்டிக் கூட்டி வைக்கவே என்க.
மனதின் உண்மை நம் பதி வடிவாய் இருப்பதினால்தான். நம்மனம், மாசற்று சுத்த அன்பு மயமாக ஆக ஞானானந்தக் கடவுள் நிலை சித்திப்பதாக உள்ளது.
|
5.
|
இரட்டுற வுள்ள இயல்மனப் போக்கை
அருட்டுறை சேர்த்து அடக்கு.
|
125.
|
கு.வி – நாம் பெற்றுள்ள மனதினுடைய தன்மை இரட்டுற உள்ளது. ஒன்று, ஆவலினால் பொறிவாயில் புகுந்து புறத்தே உழல்வது; மற்றொன்று நிராசையுடன் கூடி அக நோக்கிச் செல்வது.
அறியாமையால் இருள் வழியிற் சென்று உழலும் மனத்தை, நல்லறிவினால் மறுத்து அக நோக்கிச் சென்று அருள் ஒளியில் தங்கச் செய்தல் வேண்டும். மனம் அருள் ஒளி சேரலே நல்லொழுக்கமாம்.
|
6.
|
இதயத் தயின்று இருக்குமனப் புள்ளே
பதைப்புற் றுழலும் பறந்து.
|
126
|
கு.வி- மனமானது நம் நெஞ்சினிடத்திருந்து ஐம்புலனுகர்ச்சி பெறுகின்றது. புற இச்சையால் உலக விடயங்களில் சதா சுழன்றலைந்து கொண்டு, மாயா இன்ப துன்பத்தில் அடித்துக் கொள்ளுகின்றது.
இதயக் கூட்டிலிருக்கும் இம்மாய மனப் பறவை கற்பனையுருவெடுத்து மாயா உலகில் பறந்து பறந்து படபடக்கின்றதாம்.
|
7.
|
வாட்டமுற மக்களை வாட்டலால் வன்மனத்தின்
ஏட்டை யொறுத்தன ரிங்கு.
|
127
|
கு.வி – கடினத் தன்மையுள்ள மனம், மக்களுக்கு இரக்கமற்ற செயலால் துன்பத்தையே விளைத்து அல்லற் படுத்துவதால், அத் துன்பத்தை ஒழித்தற்காகவே மனம் திருந்த வேண்டும் என்று அதனைக் கடிந்து கூறி அடக்கினர் அறிவுடையோர்.
“துன்புறுவதற்குக் காரணம் அறியாமை” ஆதலின், அவ் வறியாமையை ஒழிக்கு முகத்தான் மனதை கடிந்து கூறி, ஒறுத்தடக்கினர் ஆன்றோர்.
ஏட்டை = துன்பம்.
|
8.
|
தினந்தின மீசன் திருவடியே யுள்ள
மனங்கொள்ளும் வள்ளல் வடிவு.
|
128.
|
கு.வி – “யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும்” எனலால், மனதைத் திருவடி சிந்தனையில் பழக்கப் பழக்க சிந்தனை முற்றி, நினைத்த பொருள் தானாகவே மாறிவிடும்.
வள்ளற் பிரானின் திருவடியோ தயா அறிவும், தியாகச் செயலும் கொண்ட உபய பதம். ஆதலின், அத்திருவடித் தியானம் முற்றும் போது, தயவு பழுத்து தியாக வண்ணமாகின்றது நம் சுத்த மனம்.
|
9.
|
படிகத்திற் பஞ்சவண்ணம் பட்டொளிர்வ தொப்ப
அடியுற்றார்க் கைமலந்தீண் டா.
|
129.
|
கு.வி- ஒளியிற் கலந்துள்ள ஐந்து நிறங்களும், பளிங்கியின் மீது பிரதிபலித்து அவ் வண்ணங்களாகக் காட்டினும், அந் நிறங்கள் பளிங்கியிற் பற்றுவனவல்ல.
இதுபோல், பற்றற்ற பதியின் திருவடியைப் பற்றிக் கொண்டு இரண்டற்று அதுவாகி நிற்கின்றவர்களை, ஐம்பூத தேகமும் அதற்கான ஐந்தொழிலும் மெய்யுணர்வை மறைக்கும் ஐம்மலமும் பற்றுவன அல்லவாம்.
|
10.
|
தாழ்வான வெல்லாம் தறித்தெழியும் மெய்யருளால்
வாழ்வான தேற்கும் மனம்.
|
130.
|
கு.வி – மனத்தின் வழியாகத்தான் அருள் வாழ்வு வரவிருக்கின்றது. இழி நிலைச் சூழலை எல்லாம் சிதைத்து ஒழித்து, அழியா இன்ப நிலைக்கு ஏற்றி வைக்கவே, மனத்திற்கு இன்ப துன்பங்கள் எல்லாம் தந்து பக்குவப்படுத்திக் கொண்டே உள்ளது திருவருட் சக்தி.
ஆகையால், நாமும் மனத்தை, ஆவல் நெறியினின்று விலக்கி, அருள் நெறியில் ஒழுகச் செய்தலே திருவருட் சம்மதம்.
Write a comment