Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
14.12.2008-திண்டுக்கல் பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்ல - பூச நாள் விழாத் தொகுப்பு.

அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம், பொன்னகரம், திண்டுக்கல்
மாதாந்திர பூச நாள் விழா.
நாள் 14-12..2008. ஞாயிற்றுக் கிழமை
ஸர்வதாரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 29ம் நாள் பூச நாள்விழா.
திண்டுக்கல் நகரிலே அவதரித்த மகான் தயாநிதி சரவணானந்த சுவாமிகள் ஆவார். வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை அடியொற்றி, சுவாமி சரவணானந்தா அவர்கள் 60க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.
உபதேசப் பகுதியில் வள்ளல் பெருமான் தம்மை ஏறாத நிலை மேலேற்றி விட்டது “தயவு” எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தயவுப் பாக்கள், தயா விளக்க மாலை, தயவுப் பெரு நெறி, தயவுக் குறள் என்ற பல உரை நடை நூல்களும் பல பாக்களும் யாத்துள்ளார்கள். சுவாமி அவர்களுக்கு, மேட்டுக்குப்பத்திலே, வள்ளற் பெருமானின் காட்சி, அவர்களது இளம் வயதிலேயே கிடைத்துள்ளது.
அவர்கள் தமது 96 வயதில் சித்தி பெற்றார்கள். திண்டுக்கல் நகரில் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம் என்ற இடத்தில், “சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்” கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

மாதந் தோறும் பூச நாளை ஒட்டிய ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் சன்மார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த தயவு இல்லத்தை திண்டுக்கல் தயவு நூல் அறக்கட்டளையினை நடத்தி வரும் அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், அன்பர்களின் உதவியோடு பராமரித்தும், ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மாதப் பூச நாளினை ஒட்டி, 14-12-2008ந் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்த தயவு ஆலயத்தில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
காலை 10.30 மணி. கொடி வணக்கம்
திரு அருட்பாவில், சிற்சக்தி துதி (கொடி வணக்கம்) 10 பாடல்கள் அன்பர்களால் பாடப்பட்டு, தயவுக் கொடி ஏற்றப் பட்டது. தயவு நூல் அறக்கட்டளை அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சிக்குப் பின்னர், வந்திருந்த அன்பர்கள் அனைவரும், சத்திய ஞான தீபத்தின் முன் அமர்ந்து, திருவருட்பாவில் (1) திருவடிப் புகழ்ச்சி, (2) அருட்பெருஞ்ஜோதி அகவல் (3) அட்டகம் முதலானவற்றையும், சின்மயபுரம் என்ற சின்னாளப்பட்டி சன்மார்க்க அன்பர்கள் சுவாமி சரவணானந்தா அவர்கள் பெயரால் வழங்கிய குருநாதர் வாழ்த்துப் பாவினையும் திருமதி இந்திரா ராமலிங்கம் அவர்கள் தலைமையில் அனைவரும் பாடினர்.
மதியம் 12.30 மணி
தியானம். மேற்படி மதியம் 12.30 மணிக்கு, திண்டுக்கல் தயவுத்திரு ஜோதி ராமலிங்கம் அவர்களால், சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளிய பேருபதேசப் பிழிவு வாசிக்கப்பட்டது. அதன் பின்னர், நாகல் நகர் அருட்பெருஞ்ஜொதி தயவு அறக்கட்டளையின் தலைவர் தயவுத்திரு ஆர். வாஞ்சிநாதன் அவர்கள், வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
உலகில் உள்ளோர் அனைவரின் நலன்களுக்காகவும் தயவுத் தியானம் நடைபெற்றது
மதியம் 1.00 மணி
திண்டுக்கல் சுவாமி அவர்களின் அணுக்கத் தொண்டர் தயவு விசுவநாதன் சொற்பொழிவு நிகழ்த்தி வந்திருந்த அனைவருக்கும் நன்றியுரை ஆற்றினார்.
அவர் கூறியதாவது-பொதுவாக ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் வந்து விட்டாலே திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானார் வருவிக்க உற்ற தினம் ஞாபகம் வந்து அந்த மாதம் பூராவும் வள்ளலார் விழாவாகக் கொண்டாடி வருவது போல் கார்த்திகை மாதம் வந்து விட்டால், தயாநிதி சரவணானந்தா சுவாமி அவர்களின் வருவிக்க உற்ற தினம் 19.11.1910 திருவாதிரை நட்சத்திரம் என ஞாபகம் வந்து, அந்த மாதம் பூராவும் திண்டுக்கல் சுவாமி அவர்கள் விழாவாக சுத்த சன்மார்க்க அன்பர்கள் கொண்டாடி வருவது வழக்கம். சிறப்பாக இந்த சர்வதாரி ஆண்டு, கார்த்திகை மாதம் 1ந் தேதி அன்றே 16.11.2008 அன்றே சுவாமிகள் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை வந்து விட்டது.
இதன் பின் 19.11.2008, இதை அனுசரித்து, சென்ற 23.11.2008ல் பூச விழா கொண்டாடப் பெற்றது. மீண்டும் இதே கார்த்திகை மாதக் கடைசியில் 29ம் நாள் 14.12.2008 ஆகிய இன்று சுவாமிகள் பிறந்த திருவாதிரை நட்சத்திரம் 2வது முறையாக வந்திருக்கிறது. இதை அனுசரித்து, இன்றைய பூச விழா இங்கே புதுப் பொலிவுடன் சுத்த சன்மார்க்கக் கொடி கட்டப்பட்டு கொடி வழிபாடு செய்து சுவாமிகளின் பிறந்த நாள் விழாவாகவும் சிறப்பினும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது என்பது உண்மையாகும். வருகிற 20.12.2008, 21.12.2008 ஆகிய இரு நாட்களிலும் மதுரை மாநகரில் சன்மார்க்க பெருவிழா நடைபெறுவதை அனுசரித்து, இந்த நேரத்தில் ஒன்று தெரிவித்துக் கொள்ள விழைகின்றேன்.
உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டி
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி
(அருட்பெருஞ் ஜோதி அகவல்)
என்ற வள்ளலார் வாக்குப்படி நம் திண்டுக்கல் சுவாமிகள், சிதம்பரம் வடலூர் ஒரு பக்கம், மதுரை திண்டுக்கல் ஒரு பக்கம் என இவை இரண்டையும் உபய பக்கங்களாகக் கண்டு ஒன்றென கொண்டு வாழ்ந்தார்கள். அது, சிவ நடனம் இது வாசி அல்லது ஆன்ம நடனம். அது ஒரு பொற்சபை. பொன்னம்பல நிலை. இது, எங்குமாய் விளங்கும் சிற்சபை வெள்ளி அம்பல நிலை. அது முழு அருள் அனுபவத்தை வழங்குவது. இது முழு தயவு அனுபவத்தைத் தருவது. இப்படி இரு பக்கங்கள் கொண்ட ஒரு நாணயம் என்பார்கள். இதன்படி நாம் ஆழ்ந்து சென்று பார்த்தோமானால், ஒவ்வொரு சுத்த சன்மார்க்க அன்பரும் இந்த உபய பக்கங்களை, ஒன்றாக நம் அகத்தில் கொண்டு, அனக வாழ்வு வாழவேண்டும். எனவே இந்த அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் இருந்து தான் - அனகமாக மதுரையில் இருந்து தான் உலகம் பூராவும் சுத்த சன்மார்க்கக் கொள்கைகள் பரவப்போகின்றது பரவிக் கொண்டிருக்கிறது என்றார்.
அடுத்த ஜனவரி மாதப் பூச விழா 11.1.2009 நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
மதியம் 1.40 மணி
அருட்பெருஞ்ஜோதி தயவுப் பிரார்த்தனை தயவுத் திரு எஸ்.ஆர். அரவிந்தனால் மேற்கொள்ளப் பட்டது. இதனைத் தொடர்ந்து ஜோதி வழிபாடு மற்றும் விண்ணப்பம் சொல்லி, விழா நிறைவுற்றது. இக் கூட்டத்தில் முக்கியஸ்தர்களும் சுற்று வட்டாரத்திலிருந்தும் சுமார் 100 சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
முக்கியஸ்தர்களின் பெயர் வருமாறு.
திண்டுக்கல் தயவுத் திருவாளர்கள் வே.அருணகிரி, சண்முக வேல், ராம் சங்கர், ராஜேந்திரன், தயவுத்திருமதி பேராசிரியை நாகநந்தினி ரமாபிரபா சசிகலா மர்றும் மீனாட்சி ஆகியோர் தயவுத் தொண்டர்கள் சான்றோர்கள் தாய்மார்கள் மாணவ மாணவியர் சின்னாளப்பட்டி தயவுத்திரு பி. பத்மநாதன் குடும்பத்தினர் மற்றும் அசோகன் குடும்பத்தினர் அன்னமளிப்பு உபயம் செய்து, அன்பர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றுவித்தல் பணி நடைபெற்று, விழா இனிது முடிவடைந்தது.