Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
சத்திய ஞான சபாபதி சுவாமிகளும் சரவணானந்த சுவாமிகளும்





திண்டுக்கல் சத்திய ஞான சபாபதி சுவாமிகளும் சுவாமி சரவணானந்தா அவர்களும்
(இரண்டாம் பகுதி)
சத்திய ஞான குரு பூஜா மலர் (30ஆவது ஆண்டு குருபூஜா மலர்
நாள் 22.1.1989)
முதல் பகுதியில், திண்டுக்கல் சத்திய ஞான சபாபதி சுவாமிகளின் வரலாற்றினையும், அவர்கள் - திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களை சான்றோனாய், சற்குருவாய் எங்ஙனம் ஆட்கொண்டார் என்பது குறித்தும் அன்பர்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
அதன் பின் தொடர்ச்சி, கீழே விவரிக்கப்படுகிறது.
அருள் நெறி படர்வார்க்கு, சூழ்நிலையும், கோள்நிலையும், அகமும், புறமும், குருவின் துணையும், நன்மையே செய்யும் என்பது அனுபவமாகும்.
திருவருட் பிரகாச வள்ளலார் எவ்வாறு தம் உள்ளகத்தில் அக குருவாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஒரு தனி நடராஜ சற்குரு மணியாகவும், பொதுவில் நடமிடும் அருட்ஜோதி நடராஜபதியையே புறக் குருவாகவும் கண்டு கண்டு உணர்ந்து உணர்ந்து ஆயிரமாயிரம் அருட்பாக்களை இயற்றினாரோ, அதே போல் நமது சரவணானந்த சுவாமி அவர்களும் தம் உள்ளகத்தில் அகக் குருவாக திருவருட் பிரகாச வள்ளற் பெருமானையே ஒரு தனித் தயவுக் குருவாகவும், சத்திய ஞான சபாபதி சற் குருவை புறத்தே ஒரு பொது கடவுட் குருவாகவும், கண்டு உணர்ந்து ஆயிரமாயிரம் தயவுப் பாக்களை இயற்றி அருளினார்கள்.
கடவுளுக்கு என ஓர் அழியா உருவமோ அதற்கு ஒரு பெயரோ இல்லை. ஆனால் அக் கடவுள், தானே, எவருமாய், குறிப்பிட்ட இந்த சபாபதி என்ற நாம ரூபத்தோடு, சத்திய ஞானானுபவ கடவுளான்ம குருவாகத் தோன்றினார். (அதாவது வள்ளலாரின் திரி தேக சித்தி பெற்ற 1874ம் ஆண்டிலிருந்து ஒரு 18 ஆண்டுகள் கழித்து). சபாபதி என்ற பெயர் கொண்ட இவரது வெளிப்பாட்டிற்கு (18.8.1872க்கு) முன்னும், மறைவிற்கு (28.1.1959க்கு) முன்னும்,
தில்லை (சிதம்பரம்) நடன சபேசரின் குட முழுக்கு நடைபெற்றிருக்கிறது. அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின் கூறும், இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியும் ஆன இக் காலத்தில் உலகில் மெய்ஞ்ஞான விஞ்ஞான வளர்ச்சியும், வள்ளல் சன்மார்க்க வெளியீடும் ஏற்பட்டன. புறத்தே தேசீயப் புரட்சியும், எழுச்சியும், ஆனால் அகத்தில் தேஜோன்மய ஆனந்த விளைவும் ஓங்க ஆரம்பித்தது. இதிலிருந்து தயாநிதி சரவணானந்த சுவாமியவர்கள், சத்திய ஞான சபாபதி சற்குருவை – பூர்வ ஞான சிதம்பரத்து நடன சபாபதியாகவும், வடலூர் உத்தர ஞான சிதம்பரத்து – சத்திய ஞான சபைக்கான – சத்திய ஞான சபாபதியாகவும் கண்டு உணர்ந்துள்ளார்.
மேலும், பூர்வ ஞான சிதம்பரத்திற்கு, சத்திய ஞானப் பொது என்ற பெயருமுண்டு,
நம் திருவருட் பிரகாச வள்ளற் பெருமானும், உத்தர ஞான சிதம்பரத்திற்கு, சத்திய ஞான சபை எனப் பெயரிட்டுள்ளார்கள்.
இந்தச் சத்திய நிலையினின்று எழுவதுதான் சுத்த சன்மார்க்கம்.
இதனை எடுத்துக் காட்டத்தான் நம் வள்ளற் பெருமான் அவர்களும் முதலில் (1865ல்) சமரச வேத சன்மார்க்க சங்கம், சாலை, சபை எனப் பெயரிட்டு அழைத்தார். பின்னர், 18.7.1872ல் ‘வேத’ எனும் சொல் நீக்கப்பட்டு ‘சுத்த’ ‘சத்திய’ எனும் சொற்கள் சேர்க்கப்பட்டு சத்திய சங்கம், சத்திய தருமச் சாலை, சத்திய ஞான சபை என மாற்றம் செய்துள்ளார்கள்.
இதிலிருந்து “சத்திய” நிலை குறித்த உண்மை உயர்வினைத் தெரிந்து கொள்ளலாம்.
இதேபோல், சரவணானந்த சுவாமி அவர்கள், தமது நிறுவனத்தை முதலில் “ஞான ராஜ குரு” என்ற சபாபதி சற்குருவின் திருநாமத்தில் உள்ள “ஞான” என்ற சொல்லின் மூலம் “ஞானக் கோட்டம்” எனத் தொடங்கிய போது, சபாபதி சுவாமிகள், “ஞான சபாபதி” என அழைக்கப்பட்டார். பின் ஞானக் கோட்டம் என்பதை 25 ஆண்டுகள் கழித்து, “சத்திய ஞானக் கோட்டம்” என மாற்றினார்.
அப்போதிருந்து, ஞான சபாபதி சுவாமிகள், “சத்திய ஞான சபாபதி சுவாமிகள்” என அழைக்கப்பட்டார்.
இந்த சத்திய நிலை மூலம், நமது சரவணானந்த சுவாமி அவர்கள், சுத்த சன்மார்க்க மரபுக் குருவாகத் திகழ்கின்றார்.
முதன் முதலில், சுவாமி சரவணானந்தா அவர்கள், விபவ ஆண்டு, 1929ஆம் ஆண்டு, வைகாசி மூலநாள், திருஞான சம்பந்தர் திருநாளில், சபாபதி குருவைச் சார்ந்தார்.
இதற்கு அடுத்த ஓராண்டிலேயே, திருவருள் கூட்டி வைக்கத் திருவருட்பாவைக் கண்டு பயிலும் வாய்ப்பு, அவருக்கு, 1930ஆம் ஆண்டு முதல் ஏற்பட்டது. இதிலிருந்து, ஓதியுணர்வதற்கான சூழ்நிலையையும், வாழ்வு முறையையும், சரவணானந்த சுவாமிகளுக்குத் திருவருளே கூட்டி வைத்தது. வள்ளல் வாழ்வு முறைக்கும், ஞானக் கோட்ட முறைக்கும் திருவருட் பிணைப்பு இருந்தது போலும்.
வள்ளலாரைப் பற்றிய காக்கையர் மகா வாக்கியத்தில் இந்த ஞானக் கோட்ட விளக்கம் வந்துள்ளது.
“சிற்றே பற்றுக் கோட்டமதில்
சிதறி அரனுமை ஏதென்று
முற்றும் பொய்யே முனிவள்ளல்
மொழிய ஒன்றுமில்லை எனப்
பற்றிச் சொல்லும் காலம்யாம்
பலபேர் அறியப் பூவதனில்
உற்றே ஞான உபதேசம்
ஓதிக் கோட்டம் நிலைப்பு பெற” (காக்கையர் மகா வாக்கியம்)
இராமலிங்கரின் அழிவில்லா நிலையில், 120, 130, 150 ஆகிய ஆண்டில் அவர் நெறி உலகில் ஒளிபெறத் தொடங்கும் என்ற குறிப்பு சித்தர்களின் தீர்க்க தரிசனம். அதன்படிதான் வள்ளலாரின் 120வது ஆண்டு அதாவது (1823+120=) 1943வது ஆண்டு சுபானு ஆடி அமாவாசை நாளில், கலியுக முடிவாக, கடக நடுப் பூச நட்சத்திரத்தின் ஒரு காலில் சூரியன், சந்திரன், குரு இணைந்து நின்றது. இதுவே அகத்திலே, நம் தலை நடுவிடத்திலே, அருட்பெருஞ்ஜோதிக் கடவுளே, அருட் பிரகாச வள்ளல் குருவாய், சூரிய சந்திரராகிய, சுத்த ஞான தேக சித்தியுடன் திகழும் காட்சியாய் அமைந்தது. இந்த அண்ட பிண்டக் காட்சியே, தயாநிதி சுவாமிகளுக்கு, “தயவு” அனுபவமாக வெளியானது.
அதுமுதல் இத் தயவையே அடிப்படையாகக் கொண்டு, அறிந்த அரும்பொருள்களை உணர்ந்து, ஆயிரம் ஆயிரம் பாக்களும், விரிவுரைகளும் வெளியாகி வந்தன.
தயா விளக்க மாலை, தயவுப் பாக்கள், தயவுக் குறள் ஆகிய பாக்களும், மற்றும் சுத்த சன்மார்க்கம் குறித்த 60 உரை நடை நூல்களும் தயாநிதி சுவாமிகளால் வெளியிடப்பட்டன.
தயவு மெய்ப்பொருள்
ஒன்றான கடவுள் பெருவடிவம், இவ்வளவு பெரியது என யாராலும் கண்டு சொல்லவே முடியாது ! அகண்ட பெருவெளியின் அளவு அறிவரிது. நாம் கண்ணாலும், மனக்கண்ணாலும், பிற கருவிகளாலும் காண்பதெல்லாம், மாபிரபஞ்ச வெளியின் அற்பக் கூறேயாகும். நாம் அறிந்த பிரபஞ்சம் போல் கோடி கோடியாகஅடங்கின பெருவெளி முழுமையான இறை வண்ண அகண்ட வெளி நிலையாகும்.
இந்தப் பெருவெளிநிறை வான்வடிவே, கடவுள் உண்மை - கற்பனை கடந்த உருவமாகும். அப்படியுள்ள அகண்ட பரம்பொருள்தான், இந்த மனிதனின் சிரநடு, சிற்ஜோதி, ஆன்ம அணுவில் வெளிப்பட்டு விளங்குகின்றார். இதனைக் குறிக்கவே தமிழில் “தய” என்ற ஈர் எழுத்து, ஒரு மொழி கற்பிக்கப் பெற்று, அதுவே சிரநடு இருந்து வுகர சக்திச் செயலால் உலகில், உயிர், உடல் வாழ்வு கொண்டு விளங்கியும் மறைந்தும் கொண்டே உள்ளதாம். ஆகவேதான், கடவுளே இத் தயவு ஆக, நம்மில் நாமாக வெளிப்பட்டியங்கிக் கொண்டிருப்பது உண்மையாம்.
தயவே, எங்கும் நிறை கடவுள் வடிவமாகவும், அதுவே நம் உண்மை வடிவாகிய ஆன்ம சிற்றுருவாகவும் இருந்து கொண்டு, நாம் அதுவாகி நிறை வாழ்வு கொண்டு நிலவாதவரை, பிறவிச் சூழல் விதிப்படி வந்து வந்து, சிறிது சிறிது அகஞான விளைவு தந்து தந்து போய்க் கொண்டேதானிருக்கும். இப் பிறவிகளுக்கு மறுப்போ, தடையோ, தவிர்ப்போ செயல்கூடாது. பிறவியைத் தொல்லை என்றும், துயர்க்கடல் என்றும், அதினின்று விடுபட்டு, பிறவாநிலையில் இருப்பதே விடுதலை, பந்த நீக்கம் முத்திப்பேறு என எண்ணி அடைந்தும் பயனின்றாம்.
எனவே, நமது அக மெய்ப் பொருள் நிலையில் அதுவாக இருந்து கொண்டு, பிரபஞ்ச வாழ்வில் தயவு பெருகப் பெருக வாழ்வது முறையாகும்.
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்”
என்ற குறள்வழி, அகம் ஒடுங்கிடுவதே கடவுள்நிலை வாழ்வு என்றும், அந்த மேற்பிறவா நிலையே பெரும் பேறு என்றும் கொண்டிருந்தது, பழ நெறியின் விளைவேயாம். ஆனால் இப்போது நம் தயவுப் புது நெறி முறைப்படி பார்த்தால், “தயா” அக நிலை நின்று ஐம்பொறி வாயில் வழி, ‘தயவு’ செய்து கொண்டிருப்பதால்தான். அக மெய்ப் பொருள் அனகமுற விரிந்து, அழியா வாழ்வில் நிலவச் செய்வதாய் உள்ளதை அறிகிறோம். எனவே, ஐந்தவித்தலுக்கு, வாழ்விக்க வல்ல பொருள் தரும்படி அமைத்துக் கொள்ளுதல் நன்றாம். ஆகையால், அவித்தலை, புசித்தற்குரிய - வேகவைத்தல், பக்குவப்படுத்தல் என்ற பொருள் கொண்டு, தயா பக்குவத்தால் உலக வாழ்வில் தழைத்தல் வேண்டுமாய்க் கொள்ளலாம். அன்றி, அக்குறளையே, அதன் அவ்வவித்தல் என்னும் சொல்லையே ‘அவிர்தல்’ என்று மாற்றிக்கொண்டு விட்டால், அது –
‘பொறிவாயில் ஐந்தவிர்தல் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்” என அமையும். அப்போது உள்நின்று தயா பிரகாசத்தால் இறவா இன்ப வாழ்வில் தழைத்திடலாம் என்பது மெய்யாம்.
இதனால், இன்று தயவின் மெய்ப்பொருள், கடவுள் உண்மையும், நமது உண்மையும் உள்ளபடி யுணர்த்துவதோடு, அதுவே கடவுள் வாழ்வில் நிலவச் செய்வதாயும் உள்ளதாம். மேலும் இத்தயவுச் செயலால், இறை, இயல், செயல், வாழ்வு எல்லாம் கொண்ட சுத்த பிரணவ ஞான தேக முத்திறல் வடிவோடு, என்றும் வாழவைப்பது, இத்தயவு ஒன்றே என அறிந்து கொள்ளலாம்.
இந்தத் தயவினால் பெறவுள்ளது, தற்போத ஒழிவில் தான் அதுவாய் என்றும் விளங்கும் பேரின்ப வாழ்வேயாம்.
இது –
கற்பனையின் வெற்றி கடவுள் தயவுகாண்
தற்போதம் நீக்கும் தமிழ்” (தயவுக் குறள்-சுவாமி சரவணானந்தா)
என்ற தயவுக் குறளால் உண்மை தெளியலாம்.
ContentRef: சத்திய ஞான மகா குரு பூஜா மலர்.