Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
பரமான்மபதி (Universal Soul) (2. ஜீவான்மாக்கள்)

தயவு
பரமான்மபதி
Universal Soul.
(எங்கும் நிறை இறை)
சுவாமி சரவணானந்தா.
தயாஜோதியில் கண்ட விளக்கம்
2. ஜீவான்மாக்கள்
உண்மையில் பரமான்மாவாகிய கடவுள் ஒருவரே நித்திய நிறைவாகி இருக்கின்றவராக அறிந்து கொண்டுள்ளோம். மேலும், அவர் ஒருவரே எனினும் அவரது பேரருட் பேரியல்பு, அளவில் அடங்காத ஒன்றாகும். அதனால் அந்தப் பரமான்மக் கடவுள், எண்ணடங்காத உருவோடு, எண்ணிலடங்காத காலமும், தன் அருட்பெருந் தொழில் ஐந்தையும் தடையுறாது நடத்திக் கொண்டேயிருக்கின்றார். கரையில என்பர் கருணைக் கடலாகிய கடவுளர்க்கு.
பரமான்மாவாகிய கடவுள் இல்லாத இடம் இல்லை என்பார்கள். அது உண்மைதான். ஆனால் நாம், நமது கண்ணாலும், மனோகருவி கரணங்களாலும் எங்கும் காண்பது என்ன? பரமான்மாவா? கடவுளா? அப்படிக் காண்கின்ற எதுவும் கடவுள் அல்ல என்பது சிறுகுழந்தைகளுக்கும் தெரியும். இப்பெரும் பிரபஞ்சக் காட்சிச் சாலையில் காணப்படுகின்ற எல்லாப் பொருட்களும், எல்லா உயிர்களும் நித்தியமானவை அல்ல என்பதும், தோன்றி சிறிது காலம் இருந்து மறைகின்றவையே என்றும் எவரும் அறிவர். ஆனால், நம் பரமான்மபதியோ நித்தியராவர். அந்த நித்திய பதியே, யாவற்றிலும் அகமறைந்து நின்று அநித்திய வடிவங்களை ஆக்கிக் கொள்ளுவதும் நீக்கிக் கொள்ளுவதுமாயிருக்கின்றார். மண் முதலான ஐம்பூத அணுக்களில் இருந்து கொண்டு, அது அதுவாகித் தனித்திருந்தும், ஒன்றுபட்டும் எல்லாப் பிரபஞ்ச வடிவங்களையும் கொள்ளுகின்றன. ஆகவே, காணும் பொருட்களில், அவற்றிற்கு ஆதாரமாய் இருக்கின்றது நமது கண்காணாப் பரம்பொருளாகிய கடவுட் பரமான்மாதான்.
பரமான்மா + ஆன்மா
பரமான்மா, எல்லாம் வல்ல ஒன்றான கடவுள் ஆம். அக்கடவுள் நிலைத்து நின்று விளங்கிக் கொண்டுள்ள இடம் சகல அணுக்களுமாம். எனவே, பரமான்மா விளங்கிக் கொண்டிருக்கின்ற சிதைவுற்ற கடவுள் அணுவே ஓர் ஆன்மாவாகும். ஆன்மா, அணுத்துவமாய் அனந்தமாய் விளங்க பரமான்மா, ஏகமாய்த் தனித்தனி யொவ்வொன்றிலும் பூரணமாய்த் திகழ்கின்றதாம். பரமான்மபதி நடுநாயகமாய் இருக்க, அதனைச் சூழ அணுவடிவம் ஏற்பட்டுள்ளது. பிரபஞ்ச வெளியிலும் சூரியன் நடு நிற்க கோள்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அதே போலத்தான் பூத அணுவிலும் கூட புரோட்டான் (Proton) துணுக்கு நடு வைத்து அவ்வணு விளங்குகின்றதாம்.
இவற்றிலிருந்து ஒரு முடிவுக்கு வரலாம். பதியை நடு வைத்து இயங்கச் சூழ்நிலை விளங்க இருக்கின்றனவாம். அப்பதியை அகரமாகவும், இயக்கச் சூழ்நிலையை உகர மகர மெய்யாகவும் காணுகின்றோம் இப்பொழுது. இம்மூன்றும் கலப்பதால் விளைகின்றதே (அ+உ+ம்) ஓம் ஆகவுள்ளது என அறிகின்றோம். நிலையான சிற்றணுவிலும் சரி, பெரிய பொருட் பிரபஞ்சத்திலும் சரி, இவ் ஓங்கார உண்மையே காணுகின்றோம்.
ஆன்மா என்றதன் பொருள்
தமிழில், ஆ அல்லது ஆன், என்றால் பசு எனப் பொருள்படும். பசுவினிடத்துக் கிடைக்கப் பெறும் பஞ்ச கவ்வியம் என்னும், பால், தயிர், நெய், கோசலம், கோமயம் என்ற சாணம் ஆகிய ஐந்தும் ஆகாசம் ஆதி ஐம்பூத சுத்திற்கும், தேகாதி சக்திக்கும் காரணமாம். ஆகவே, ஐம்பூத அணு நிலையே பசு எனப் புனைந்து கூறப்படுவதாம். பசு மிருகம் என்பதே ஆன்மா ஆம். இப் பசுவுக்குள்ளிருந்து ஆளும் பரமான்மாவே பதி ஆக கூறப்படுவது. ஒரு ஆன்மா என்றால் அது தன்னில் பரமான்மாவையுட் கொண்டிருக்கும் ஒன்றாகவே பசுபதி ஆகவே அறியப்படும். இவ்வான்மா, அணுத்துவமாயும், ஓமென்னும் ஒரு சொல்லாயும் இருக்கின்ற உண்மையை யொட்டி அணு என்பது Atom (ஆட்டம்) என்பதும், Soul (சோல், சொல்) என்பதும் ஆக்கிக் கொள்ளப்பட்டுள்ளனவாம்.
அணு என்ற சொல்லை, அ+ண்+உ எனப்பிரித்து, ‘ண்’க்குப் பதிலாக ‘ம்’ கொண்டு நோக்கும் போது அது ‘ஓம்’ ஆவது அறிவோம். இதனால் ஓம் அணுவே ஆன்மாவாம்.
Atom (ஆட்டம்) என்ற ஆங்கில சொல்லுக்குப் பொருள் அணுவே. பரமான்மபதி யுள்ளிருக்க அதனைச் சூழ நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இயக்கமே ஆட்டமாக, திருநடனமாக இருக்கின்றதால், அணுவை ஆட்டம் எனக் கொண்டது சரியேயாம்.
Soul (சோல்) இது சொல் என்பதன் அயல் மொழித் திரிபேயாம். சொல்லாவது ஓம், என்பதுதான். இவ் ஓம் அணுவே ஆன்மா என்பதை நாம் அறிவோம். இதனால், இந்த Soul என்பதற்கு ஆன்மாவெனப் பொருள் ஆக்கிக் கொள்ளுதல் பொருத்தமே. அன்றியும் இந்த ஆன்மாவுக்கு அண்ட ஞாயிறு திருவருள் ஈன்ற ஒரு அடையாளமாம். இதனால், இந்த சூரியன் நம் உலகுக்கு ஆன்மாவாய்க் கொள்ளப்படும். இங்கும் நம் ஆன்மாவைச் சொல் அல்லது ‘சோல்’ என்றதே போல் அண்ட ஆன்மாவையும் குறிக்கலாகின்றதாம். ஆங்கிலத்திற்கு அன்னையாகிய இலத்தீனில் ‘Sol’ (சோல்) என்றதற்கு சூரியன் என்றே பொருளாம். அதினின்றே ‘Solar’ (சோலார்) என்ற உரிச் சொல்லும் தோற்றுவிக்கப் பட்டுள்ளதாம்.
மேலும், நமது ஆன்மாவே, Atom ஆகி மேல் நாட்டிற்குச் சென்று, Atom, ஆன்மா இரண்டையும் இணைத்துத் திருத்தி ‘Atman’, ஆத்மன் அல்லது ஆத்மாவாகி வந்துள்ளதாம்.
மேற் குறித்த உண்மை எல்லாம் நமக்கே எளிதில் புரியுமேயன்றி பிற நாட்டார்க்கு விளங்கியதில்லை. ஆதலின் ஆன்மாவைக் குறிக்கும் சரியான சொல்லே மேல்நாட்டு மொழியில் இல்லை என்று கூட கூறுவார்கள். அவர்களால் வழங்கப்பட்டு வருகின்ற அந்த Soul, Atom, Atman என்ற சொற்களுக்கும் நமது ஆன்ம உண்மைப் பொருள் காண முடியாது. கரண இந்திரியங்களால் காணக் கூடிய பொருள்களையே கூறுகின்றார்கள் அவர்கள்.
ஆகவே, இன்று நாம் கிடைக்கப்பெற்றுள்ள சுத்த சன்மார்க்க அருட்ஜோதி கொண்டு ஆன்ம உண்மையைத் தொகுத்துக் கொள்ளுவோமாக.
1. ஆன்மா சிற்றணு வடிவானது.
2. அவ்வான்ம அணு, தன் அகத்தே பரமான்மாவைப் பெற்றுள்ளது.
3. ஒன்றான பூரணப் பரமான்மா, ஒவ்வொரு அணுவிலும் பூரணமாக இருந்து கொண்டிருக்கின்றது.
4. அகமுடையானாகிய பதியின் ஆணைப்படியே ஆன்மப் புற வண்ணம் மாற்றம் அடைந்து கொண்டேயிருக்கின்றது. தோன்றியுள்ள பூத அணுக்கள் ஒவ்வொன்றிலும், நம் பதி இருந்து, அது அதுவாகத் தோன்றிக் கொண்டிருக்கின்றார்.
5. பூத அணு ஒவ்வொன்றும், பரமான்மபதியை அகங் கொண்டுள்ளது.
அது ஒவ்வொன்றுமே, தனியொரு ஆன்மாவாகக் கண்டு கொள்ளுகின்றோம். ஆகவே, எல்லாமும், பரமான்ம ஆன்மாவாய் அகநின்று விளங்குவதைத் தெளிந்து கொள்ளுவோமாக.
இதிலிருந்து பூத அணுவே ஆன்மா என்று கொள்ளக்கூடாது.. ஏனெனில் அவ்வணு சிதைந்தொழியும். ஆகையால் அவ்வணுவுக்குக் காரணமாகிய, அழியாத சிற்றணுவே ஆன்மா என தெளிவது முடிவாம். இம்முடிவால், அகண்ட பிரபஞ்சம் முழுவதும், ஆன்மச் சிற்றணுக்கள் நிறைந்து, ஒன்றான பரமான்மக் கடவுளையே அகங்கொண்டு விளங்குகின்றதாகவும் தெளிவுறுவோமாக.
உயிர் விளங்கும் ஆன்மா
பரமான்ம சக்தியை அகம் கொண்ட ஆன்மா இல்லாத எந்த ஒரு அணுவும் கூட இந்த அகண்ட பிரபஞ்சத்தில் இல்லை என்று அறிகின்றோம். அவ்வான்ம சிற்றணு, தன் உள்ளிருக்கும் பரமான்மாவை, இயற்கையாக ஆதியில் கண்டு கொண்டிருக்கவில்லை. அப்பரமான்மபதியே, இயற்கையில் பூரண அருளோடு விளங்கி நின்று, தன்னையே கண்டு கொள்ளத் தயவு செய்கின்றார். ஆகையால் ஆன்மாவுக்குக் கடவுள் தயவு ஏற்பட்டு முதலில் பூத அணுவடிவம் விளங்கிக் கொண்டிருந்து, பின்னர் அக்கடவுள் தயவுச் செயலால் உயிர்ச் சக்தி வெளிப்படுகின்றது. இப்பொழுதுதான் அந்த ஆன்மா ஜீவான்மாவாக விளங்குகின்றதாம்.
ஆன்மாவுக்கு உயிர்ச் சக்தி வெளிப்பட்டது கடவுள் தயவே காரணம். அப்படி உயிர்ச் சக்தி வெளியானதும் சூழ இருக்கும் பூத அணுக்களைக் கிரகித்து தனக்காக ஓர் உயிர் உடம்பை வளர்த்துக் கொள்ளுகின்றதாம். முதலில் ஆக்கிக் கொள்ளப் படுகின்றவடிவம், ஓரறிவு விளங்கும் புல்லாதி தாவர தேகங்களேயாம். இவ்வடிவச் சூழலால் ஆன்மாவுக்கு அவ்வோரறிவனுபவம் உள் விளைகின்றது. மேலும் அறிவனுபவம் ஓங்க வேண்டியே, உயிர்ச் சக்தி தொடர்ந்து உள் ஒடுங்குவதும் வெளியுறுவதுமாக இருக்க, தேகங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வந்து போய்க் கொண்டிருக்கின்றனவாம். பூத அணுநிலை கடந்து உயிர்ச்சக்தி கொண்டு திகழும் ஓரான்மாவே ஜீவான்மா எனப்படுவது.
அனாதி ஆகிய பரமான்மபதிக்கு இயற்கை - அருள் அல்லது தயவு. அதுவே, ஒரு ஜீவான்மாவில், அனாதி செயற்கையாய் இருந்து ஜீவ தேகங்களை அடையக் காரணமானதாம். இது தான் அனாதி ஆன ஒரு ஜீவான்மப் பசுவுக்கு மூலமலமாக அல்லது ஆணவமலமாக அமைந்ததாக அறியப்படும்.
பரமான்மாவின் இயற்கை தயவுதான், ஜீவான்மாவில் செயல்படும்போது அனாதி செயற்கை ஆணவமாகவுள்ளதாம். ஓர் ஆன்மாவுக்கு அனாதியாக இவ்வாணவ மலம் இருப்பதால், அது, அவ்வான்மாவுக்கு ஆதி இயற்கை போலத் தோற்றுகின்றதாம். செம்பிற் களிம்பு ஆதியிலிருந்து, இயற்கையாகத்தானே இருக்கின்றது. அக்களிம்பு நீங்கினால் பொன்னாகுமென்பது அனுபவம். ஆனால், கடவுள் நிலையிலிருந்து நோக்கும் போது, அனாதியில் அருட்ஜோதிப் பசும் பொன்னாய் இருந்த கடவுள்தானே, ஆதி பூத அணுக்களாய் ஆகி, அவ்வணுச் சேர்க்கையால் தாமிரத்தாது அணுவாயும் ஆனதாக அறிகின்றோம். ஆகவே, அனாதியில் சுத்தப் பொன்னாயிருந்த ஒன்றே ஆதிநிலையில் தாமிரத் தாதுவாகி, அதன் இயற்கையாக களிம்பும் கொண்டு விளங்குகின்றதாம். அக்களிம்பு இலேசில் ஒழிக்கப்பட முடிகின்றதில்லை. அருள் மருந்தால்தான் வேதிக்கப்படும்.
ஆகவே, ஓர் ஆன்மாவில் இயற்கையாக உள்ளது ஆணவ மலம். இது ஆ+நவம் எனப் பிரிக்கப்படும். இதில் நவம் என்ற சொல்லுக்குப் புதுமை, ஒன்பது, நட்பு, பூமி என்ற பொருட்கள் அமையும். ஜீவான்ம காரியப்பாட்டில் இப்பொருட்களின் உண்மைப் பொருத்தம் எல்லாம் கண்டு கொள்ளுகின்றோம். கடவுள் தயவே இப்படி ஓர் ஆன்மாவில் ஆணவமாய் விளங்குதல் இன்று அறிகின்ற உண்மையாகும். இவ்வியற்கையாகிய ஆணவ மலத்தால் அறிவு விளக்கம் பெறலாகின்றது. அது விளங்கற்கு, உயிர் உணர்வு தேவைப்படுவதால், உயிர்ச்சக்திச் செயல் வெளிப்பட்டது. அதுவே, இயற்கையில் செயற்கையாகிய மாயா மலம் என்றாயதாம். இவ்வுயிர்ச் செயல் காரியப் பாட்டிற்காகத் தான் புற உடம்பு ஆக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாம்.
எனவே, ஆன்மாவுக்கு ஆணவம் இயற்கை, மாயை இயற்கையிற் செயற்கை, கன்மம் செயற்கை என்ப. அண்டவெளியில் ஒளிரும் அண்டான்மாவாகிய ஆதித்தன் பெற்றுள்ள அவ்வொளிக்கதிர்களை ஆணவம் போலும், அவற்றால் தோற்றுவிக்கப்பட்டுள்ள மாயா பிரபஞ்சமே மாயா மலமாகவும், இப்பிரபஞ்சச் செயல் விளக்கம் முற்றும் கன்ம மலமாகவும் கொள்ளலாம். மேலும், நம்பதியும், பதி கொண்ட ஆன்மப் பசுவும், அப்பசு ஏற்கும் மாயா கன்ம தேகமும் ஒன்றின் விரிவாகவே அறிகின்றோம். இம்மூன்றும் அனாதி என்றதன் சித்தாந்தம், மூன்றும் ஒன்றன் கூறுகளை என்பதால் அறியப்படுவதே அல்லாமல், முத்தனிப்பொருட்களாய்க் கொண்டு இடர் உறலாகாதென்பது தெளிவு.
முடிவாக, ஜீவான்மாக்கள் எல்லாம் மனிதப் பிறவியில் பக்குவ நிலையுற்றுத் தமது உண்மையை, அருள் ஞானத்தாற் கண்டு, தாம் ஆன்மா என்ற நிலையினின்று, பரமான்மபதியின் அருள் அனக வாழ்வு கொண்டு நிலவ வேண்டும் என்பதே திருவருள் ஆணையாகும். இவ்வுயர் நிலை எய்தப் பெறும் வரை ஆன்மாவுக்கு ஜீவனும், தேகப்போகப் பொருட்களும் வந்து வந்து சூழ்ந்து நீங்கிக் கொண்டேதான் இருக்கும். இதுவே மிக்க ஆற்றல் கொண்ட கடவுள் நியதி ஆகும்.
பரமான்ம பதியையும், அவர்தம் பேரருட் பெரு நடனச் செயலையும், நம் ஆன்மப் பசுநிலையினின்று இன்று திருவருளாலே கண்டு கொண்டிருக்கின்றோம். ஆன்ம ஜோதி ஞாயிறாக நாம் உள்ளோம். நம் பதி நம் முன் மன்னி விளங்கிக் கொண்டு தன் அருட்ஜோதிக் கதிரின் பிரகாசத்தை எவ்வயினும் பரப்பிக் கொண்டு ஜீவ தேகாதி பிரபஞ்சத்தை ஆக்கி, அளித்து, அழித்துக் கொண்டேயிருக்கின்றார்.
இதில், ஆன்மாவாகிய நாம் பசுவாம். பரமான்மாவாகிய அவர் பதியாம். ஜீவதேகாதி மாயா பிரபஞ்சமே பாசமாம். இப்படி மும்மையாய் விளங்கும் திரிபுடிக் காட்சி ஆன்ம சுத்தி வந்த பக்குவ நிலையில்தான் விளங்குகின்றது. இங்கு, நாம் வெற்று ஆன்மாதான், சர்வசுதந்திரராகிய எல்லாம் வல்ல பதி நாம் அல்ல என்றும், ஜடமூடமாகிய தேகாதி பிரபஞ்ச பாசமும் நமக்கு அன்னியம் என்றும் கருதிக் கொண்டுள்ளோம். இத்திடமாகிய கருத்தெண்ணமே தற்போதம் என்னும் ஆணவமல ஆற்றல் என்றும், அகங்காரம் என்றும் கூறப்படுவது.
இது, எப்போது, எப்படி அழிந்து ஒழிந்து போகின்றதெனில், இம்மனிதப் பிறப்பெய்தி, பகுத்தறிவு நிலைக்கு மேல், மெய்ஞ்ஞானமாகிய அருள் அறிவு வெளிப்படுகின்றபோது, அவ்வருளேதான் சுத்த அருட்ஜோதியாய் விளங்கிட அந்த ஆணவ அகங்கார தற்போதப் பேரருள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகின்றதாம். இன்று அவ்வருட்ஜோதியை உள் கொண்டுதான், தற்சுதந்திரமற்றுக் கிடக்கின்ற சிற்றணு ஆன்மா ‘நான்’ என்ற எண்ணம் கடந்து மேற்சென்று, நம் பரமான்மபதியின் அருள் ஒளி உருவினன் நான் என உணர்த்தப்படுவதாகின்றது இப்பொழுது. இதனால் கடவுளும், அவர்தம் அருளும், பொருளுமே பதி பசு பாசமாகத் தெளியுறலாகின்றதாம்.
மேற்படி அருள் உண்மை அறியப்படாததினால் தான் இதுகாறும், நாம் பாசத்தால் பந்தப்பட்டுக் கிடந்து பதியருளை எதிர்பார்த்து எதிர்பார்த்துத் தவ விரத பக்தி வழிபாடுகள் எல்லாம் செய்து கொண்டிருந்தோம். பரமபதியின் திருவருள் வந்து நமது பாசத்தையெல்லாம் அறுத்தொழித்துத் தம்மோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளவே மிக விழைந்து கிடந்தோம். அவ் விழைவின் வண்ணம் தீவிர ஆன்மாக்களை தம்மோடு இரண்டறக் கலப்பித்துங் கொண்டார். அப்படிக் கலப்பெய்திய ஆன்மாக்களுக்குத் தனித்த பேரின்ப வாழ்வு இவ்வுலகில் நிலவாது போயிற்றாம். பரமான்மாவுக்குத் தான் அந்நிலை எப்பொழுதும் இயற்கையாக இருப்பது. தன் தனிப் பெருங் கருணை வெளியீட்டால், தன் உண்மையை ஓர் ஆன்மாவில் அனுபவப் படச் செய்தற்கென்றே முந் நிலை கொண்டார். அந்த உண்மையைத்தான் இன்று காண்கிறோம்.
நம் பதியே அத்தனிப் பெருங்கருணையால் இந்தச் சிற்றான்மாவில் நிரம்பி இதனையே தன் வண்ணமாக்கிக் கொண்டு அனகமுற விரிந்து என்றும் விளங்கத் தொடங்குகின்றார். இந்த வாழ்வே ஓர் ஆன்மாவுக்கு அழிவற்ற முடிவாக, நித்தியானந்தமாக உள்ளதாம். பரமானந்தப் பதியிடத்து சச்சிதானந்தமாகத் திகழ்ந்து கொண்டிருந்த ஒன்று நமது உண்மை ஆனந்தமாக என்றும் விளங்கப் பெருகுகின்றதாம்.
இனி, எந்த ஒரு தனி ஆன்மாவும், தான் கொண்டுள்ள விசேட சக்தியால் அகங்கரித்து சில காலம் ஆடிவிட்டு அழிந்து ஒழிந்து போகாமலும், தன்பதிசேர்க்கை உண்மையை உள்ளவாறு உணராது, தன்னை மிக மிகத் தாழ்த்திக் கொண்டு செயலற வறிதிற்கிடந்து மறைந்து போகாமலும் அருளொடு விளங்க வேண்டும் என்று திருவருளால் உணர்த்தப்படுகின்றோம். இவ்வுண்மையை, இனி உலகம் ஏற்பது நிச்சயம்.
நம் தமிழகமும் பாரதநாடும் முன்னமேயே ஆன்மக் கல்வியில் ஓர் எல்லை வரை முன்னேறியுள்ளது. பூர்ண அருள் வெளிப்படாதிருந்ததினால், ஆன்மாவின் முடிவாகிய உண்மை ஆனந்த நிலை விளங்காமலிருந்தது. ஆன்மாவுக்கு அந்தம், பாசபந்தத்தைச் சிதைத்துக் கொண்டு தேகபோகத்தை விட்டொழித்து விதேகநிலை பெறுவதாலோ, பரத்தில் ஐக்கியமுறுவதாலோ லட்சிய பூர்த்தி ஆகிவிடுவதாகக் கருதப்பட்டதாம். அம் முடிவு, முடிவல்ல என்றானபோது, இனியும் அதனையே விடாமல் பற்று வைத்துக் கொண்டிருப்பது அறியாமையே ஆகும்!
அந்தப் படியிலிருந்து மேலேற வேண்டும். அந்தப் படிவரை சரிதான். அது தவறு என்றோ பொய் என்றோ கூறற்கில்லை. ஆனால், அந்தப்படியே இறுதியானதெனக் கருதி மயங்கி நின்று விடக் கூடாது. எனவும், அதற்கு மேலுள்ள படியேறி பரந்த உண்மையைக் கண்டு நிறைந்த இன்பானுபவத்தோடு வாழ வேண்டியதே நம் குறிக்கோளாய்க் கொள்ள வேண்டும். பழையனவாகிய மறையாகமங்களில் வைத்த பற்றுதலால் தடை பட்டு நின்றுவிடக் கூடாது நாம். ஆன்மக்கலைச் செல்வர்களாகிய நமக்கில்லாத அருள் உரிமை வேறு யாருக்குண்டு? இவ்வருள் உரிமையும் ஆண்டவர் ஆணையும் அறிந்து கொள்ளாது, அசட்டையாய்க் காலதாமதம் செய்து கொண்டிருக்கப்படாது! அப்படியிருந்தால் பிறர் நம்மை முந்திக்கொள்ளவும் கூடும்.
ஏனெனில், நம் பரமபதி, பக்குவிகளின் உள்ளங்களில் அருள் விளக்கைத் தூண்டாது தூண்டித் துலங்கச் செய்து விட்டிருக்கின்றார். ஆகையால் எவரும் ஆன்ம பரமான்ம உண்மையை அறிந்து, நம்பிக்கையோடு பற்றிக் கொண்டு, அருளானந்த நிலைக்கு ஏறிவிட முடியும். அருட்பெரு நிலையில் ஆர்வங் கொள்ளாது, பழமையிற் களித்துக் கிடக்கின்ற இந்நாட்டினர் இகழ்ச்சிக்குரியவரே ஆகிவிடுவர்! இனி, பிறப்பால் இந்தியனாகவோ, சனாதன வைதீக வேத வித்துவாகவோ, தீவிர வைஷ்ணவனாகவோ, சுத்த சைவனாகவோ மற்ற மற்ற மதங்கொண்டவர்களாகவோ சொல்லிக் கொண்டு அகங்கரித்து அருளடையாது போதல் திருவருட் சம்மதம் அன்றாம். அருளானந்த ஆன்ம வாழ்வு வாழ வாரீர்.