Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
அருட்பெருஞ்ஜோதி - தயவு (பகுதி.1)

அருட்பெருஞ்ஜோதி தயவு

சரவணானந்தா

அணிந்துரை

டாக்டர். நா. மகாலிங்கம்

திண்டுக்கல் சத்திய ஞானக் கோட்டத்தில் தவமேற் கொண்டிருக்கும் சுவாமி சரவணானந்தா அவர்கள் அருட்பெருஞ்ஜோதி-தயவு என்ற இச்சிறு நூலினை அருளியுள்ளார்கள்.

இதில் உள்ள எட்டு தலைப்புகளிலும் சுவாமிகள் தமது கருத்துக்களை புதிய விளக்கங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

சுவாமிகள் தமது 75 வயதில் தாம் பெற்ற இறை அனுபவத்தோடு இக்கருத்துக்களை எல்லாம் அருளியுள்ளார்கள்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே சுவாமிகளுக்கு ஏனோ சர்வகலாசாலைக் கல்வியில் நாட்டம் செல்லவில்லை. சன்மார்க்கக் கல்வியில்தான் நாட்டம் சென்றது.

அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் உண்மையைப் பற்றி சுவாமிகள் இருநிலைகளில் விளக்கம் அருளியுள்ளார்கள். ஒளி நிலை என்றும் வெளிநிலை என்றும் இருநிலைகளைக் கூறியுள்ளார்கள்.

இதனை உணருவதற்கு அருள் இருந்தால் மட்டும் போதாது. அது ஞானமாகக் கனியவேண்டும். அந்த ஞான சாதனத்தின் மூலமாகத்தான் இப் பேருண்மையை உணர்ந்து கொள்ளமுடியும் என்று கூறியுள்ளார்கள்.

மனிதன் என்பவன் உடல் மாத்திரன் அல்ல. அவனுக்கு உயிர் இருப்பது போல அவனுக்குள் உள்ஒளி ஒன்றும் இருக்கிறது என்று தமது அனுபூதி நிலையில் நின்று இந்நூலில் சுவாமிகள் உணர்ந்து பேசுகின்றார்.

உள் ஒளி என்று சுவாமிகள் குறிப்பிடும் அவ்வொளியைப் பற்றி, இன்றைய அறிவியல் இனிமேல்தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

உள்ளம் என்பதை உடம்பின் ஒரு உறுப்பாக நாம் கொள்வதில்லை. சுவாமிகúளளை அதனை ‘ஆன்ம சிற்றுருவம்’ என்று குறிப்பிடுகின்றார். கடவுள் உண்மை என்பது அதில்தான் விளங்கி நிற்கிறது என்று விவரிக்கின்றார். இது ஒரு அகநிலை அமைப்பு. இதை அனகமாகத்தான் அனுபவிக்க முடியும்.

உண்மை எது - அதனால் வரும் இன்ப வாழ்வு எப்படிப்பட்டது என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமானால், இறை தயவு, ஒளி வீச வேண்டும். அது நமது பொறி-புலன்கள் வழியாக வியாபித்து ‘தயா நல வாழ்வாக’ தரிசனமாக வேண்டும். அதுவே பரிபூரண வாழ்வு என்று சுவாமிகள் வள்ளற் பெருமானின் அருள் வாசகங்களுக்கு பெருங்கருணை பெருவிளக்கம் செய்கின்றார். இவ்வாறு

அருட்பெருஞ்ஜோதி

உள்ளங்காலும்-உள்ளங்கையும்

கங்கை

வணக்கமும் வாழ்வும்

சங்கும் சக்கரமும்

நித்தியானந்த வாழ்வு

ஆதியும் அந்தமும்

தாணுமாலயன்

ஆகிய எட்டு தலைப்புகளிலும் புதிய அருளார்ந்த கருத்துக்களை பதிய வைத்துள்ளார்கள்.

மானுடப் பிறவியின் மகோன்னதமான குறிக்கோளை நாம் இனங்கண்டு கொள்ளவும் அந்த இறை உண்மையை உணர்ந்து கொள்ளவும் இந்நூல் துணை செய்கின்றது.

திருவருளே அண்டத்தில் உள்ள அனைத்தின் இயக்கத்திற்கும் காரணமாக உள்ளது. அத்திருவருளின் துணையினால் அருட்பெருஞ்ஜோதி-தயவு எனும் இந்நூலும் வெளிவருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

கோவை அன்புள்ள

10-9-1985 நா. மகாலிங்கம்

அருட்பெருஞ்ஜோதி தயவு


பொருளடக்கம்

பக்கம்

1 அருட்பெருஞ் ஜோதி 1


2 உள்ளங்காலும் உள்ளங்கையும் 13

3 கங்கை 20

4 வணக்கமும் வாழ்வும் 25

5 சங்கும் சக்கரமும் 32

6 நித்தியானந்த வாழ்வு 36

7 ஆதியும் அந்தமும் 43

8 தாணுமாலயன் 46

தயவு

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை


அருட்பெருஞ்ஜோதி

உலகுயிர்த் திரள்எலாம் ஒளிநெறி பெற்றிட

இலகும்ஐந் தொழிலையும் யான்செயத் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி.

அளவு கடந்த பெருவெளி நிறை பரம்பொருள், உலகுயிர்ப் பொருள்களை எல்லாம், உள்ளும் புறமும் இருந்து விளங்கச் செய்து கொண்டேயுள்ளது. உண்மையில், ஒன்றான அம்மெய்ப் பொருளே தான், இப்படி என்றும் திகழ்ந்து கொண்டுள்ளது.

உலகம் எல்லாம் உதிக்கின்ற ஒளிநிலை: மெய் இன்பம் உறுகின்ற (அக) வெளிநிலை என இரு கூறும் ஒன்றிய ஒன்றாய் உள்ளது, அந்தப் பெருஞ்ஜோதியும் அதன் பேரருளும். இப்படி உள்ள அந்த அருட்ஜோதிப் பரம்பொருள், ஒவ்வொரு அணுவினும், ஒவ்வொரு உயிரினும், முக்கியமாக ஒவ்வொரு மனிதனிலும் அகத்தும் புறத்தும் விளங்குவது அதுவே. இதுதான் அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் உண்மை.

இவ்வுண்மை அனுபவம், மனிதப் பிறப்பிலே, அருள் ஞான பக்குவ காலத்திலே, அதுவே உள்நின்று உணர்த்த மனிதனாய் இருந்து உணர்கின்றதாம். நம் அருட்பிரகாச வள்ளல் அனுபவத்தில், அந்த அருள் இறை, அருட்ஜோதியே, அவரது அகப்புற வண்ணமாகத் திகழக் கொண்டுதான், மேற்படி ஆரம்பத்தில் குறிக்கப்பட்ட அகவல் அடிகளில் கூறியுள்ளார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இதுகாறும் அறியப்படாது அகமிருந்து, தன் ஐந்தொழிற் செயலால், உலகை, உலகில் மனித உயிரை, அருள் ஞான பக்குவ நிலைக்கு ஏற்றி வந்தார். இப்போது அழிவுறா அருட்பிரகாச வள்ளல் வடிவு கொண்டு வெளிப்பட்டு எல்லோரையும் தன்பேரில் பேரின்பில் தழைத்தோங்கச் செய்ய ஐந்தொழிலை மேற்கொண்டுள்ளார். அவர்காட்டும் அருட்பெருநெறி இனி உலகெங்கும் பரவுவது திண்ணம்.

வள்ளல் சன்மார்க்கம், ஜீவகாருண்யம் அல்லது ஜீவ தயவு அடிப்படையாய்க் கொண்டுள்ளதாகும். அருட்பெருஞ்ஜோதிக் கடவுளே, மனிதனில், இவனது உயிர் உணர்வில், மெய்யறிவில்தான் முதல்முதலாக உணர்ந்து கொள்ளப்படுகின்றார். இவ்வுயிர் விளக்கத்திற்கு அகத்தில் நித்திய அருட்சக்தியும், புறத்தில் அநித்திய உயிர் உடம்பும் துணை நிற்கின்றன. இம்மூன்றும், அகத்து, கடவுள் அருள்ஒளி வண்ணமாயும், புறத்து உடல் உருவத்தோற்றமாயும், இவ்விரண்டுக்கும் இடையில், உயிர் உணர்வு அனுபவமாயும் உள்ளன கொண்டு விளங்குகின்றான் மனிதன்.

மனிதன் உடல் மாத்திரன் அல்ல, உயிரும், உள் ஒளியும் கொண்டு விளங்கிக் கொண்டுள்ளவனாவான். முதலில், இவன், தேகநிலை நின்றே பொறிபுலன் கொண்டு, மனம் போனபடி வாழ்ந்து இன்ப துன்பத்தில் அழிந்து கொண்டிருக்கின்றான். நெடுங்கால எல்லையில், மனம் ஒளி பெறப்பெற, புலன் இச்சையை யொழித்து, மெய்யறிவால் உள்ளொளியின் சார்பு கொண்டு வாழ்ந்தபோது, அற்புத ஆனந்த சித்திவாழ்வு விளங்க, அகமிக மகிழ்ந்து அவ்வின்பத்தையே பெரிதும் மதித்து அதிலேயே ஆழ்ந்து, அமிழ்ந்து அழிந்துதான் போனான். இந்நிலை முடிவே சரி எனக்கொண்டு ஏமாந்திருத்தது இந்த உலகம், வள்ளலார் மரணமில்லாப் பேரின்ப சித்தி வாழ்வு பெறும் வரை. இப்போது, இந்த இன்பநிறை வாழ்வு ஒன்றே எவரும் பெற்று என்றும் தழைத்து ஓங்க ஆணை செய்யப்படுகின்றனர்.

வள்ளலார் கண்ட நெறி முறை

இறைவன் திருவருள் விசேடத்தால், வடலூர் வள்ளற் பெருமான், சத்தியஞான சத்விசாரத்தால் மாயைத் திரை மறைப்பை எல்லாம் நீக்கி, உள் விளங்கும், அருட்பெருஞ் ஜோதியைக் கண்டு கலந்து ஒன்றி அதுவாகத் திகழ்வதைக் கண்டு கொண்டார். அங்கிருந்து பெற்ற இன்பானுபவம், முடிவுறாது நித்தியமாய்க் கொண்டு விளங்க அக நின்று வாழும் அனக சுத்த சன்மார்க்கத்தை உலகுக்கு வழங்கியுள்ளார். இதனால் ஏற்படுவது அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வாழ்வு ஆகும். இந்த அருட்பெருஞ்ஜோதி வாழ்வு உள்ளிருந்து விரிகின்றது. இது சத்விசாரத்தாற் கண்டு கொண்ட முடிவு. முன்னோர் முடிவு அம்மட்டோடு நின்று விட்டது. வடலூர் சத்தியஞான சபையுள்வளர் அருட்பெருஞ்ஜோதியும் அம்முடிவையே காட்டி, ஒருவனை அவ் அருட்பெருஞ்ஜோதியாக நிறுத்தியது, மேற்கொண்டு அவ்வண்ணம் என்றும் வாழ வகை செய்ய வந்துள்ளதாம், கடவுள் தயவு.

சத்விசார நிலை நின்று பரோபகாரத் தயவு வாழ்வு தொடரப்பெறுகின்றது. அந்த அருட்பெருஞ்ஜோதியே தான், அருள்-‘தய’ ஆக உள்விளங்க, பெருஞ்ஜோதியே, ‘வு’ ஆக, உலகுயிர்த் திரள் எல்லாம் காரியப்பட., தய உடன் கூடி ‘தயவு’ ஆகி அனக சுத்த சன்மார்க்க நெறியாகி வாழ்விக்க வருகின்றதாம்.

தயவுப்பெருநெறியில், செயல்படுகின்றது அருட்பெருஞ்ஜோதி அனுபவமேயாம். த-தலை இடத்தே மெய்ஞ்ஞானத் தகராகாசக் கடவுள் வான் வடிவமாகும். அதுவே தன் உண்மையை வெளிப்படுத்த, உயிர் உணர்வு கொண்ட ஜீவ ய-கர ஆன்மாவாய் உடன் கூடாமற் கூடி - தய - எனத் திகழ்கின்றதாம். மேலும், இவ்வுயிர் உணர்வு விளங்கத்தான், தத்துவ நிறைவுடைய வுகர வண்ண மனித தேகம் உருவாகித் திகழ்கின்றதாம். எனவே, தயவே அருட் பெருஞ்ஜோதிக் கடவுள் உண்மையாகும். தயாபெருஞ்ஜோதியாய் எங்கும் நிறை இறைவனே, தனிப்பெருந் தயவு ஆக நம் தலைநடு இடத்தே விளங்கிக் கொண்டுள்ளது சத்தியம். இத்தலையின் நடுநிலையே, தயவு ஆன கடவுள் விளங்கும் இருதயம் ஆம். இருதயம் என்பது, தயவுக் கடவுளும் நாமும், இரண்டாகா ஒன்றென ஒன்றிய நிலை என்பதே உண்மை. உள்ளது ஒன்றே, அதனைச் சத் விசாரத்தால் காண்பதும், பரோபகாரத்தால் அடையப் பெறுவதும் அனுபவம். இதனால் தான், கடவுள் உண்மை கொண்ட நம் இருதயம், இரு தயவும் - ஒரு தயவு ஆகக் கொள்ள நேர்ந்துள்ளது. இந்தத் தயவு தான், தயவு தீபச் சுடர்போல், இருகை கூப்பிய வடிவாய்த் திகழ்கின்றது.

இருதயம், கடவுள், ஆன்மா, உள்ளம், அகம், வீடு, நெஞ்சு எல்லாம் தலைநடுத்தலத்தையே சுட்டும். இது, ஓம் என்னும் சொல்லாய் (soul) ஆய் அனுபவத்தில் விளங்குவது. இதனை, அ-உ-ம் ஆக விரித்தால், ‘அவும்’ என்றே உச்சரிக்க நேரும். ஆனால், ‘உஅம்’ என்றால்தான் ஓம் என்று ஒலிக்கும். இதனால், நம் ஆன்மவீடு இருநிலையில் அவும்-அவுஸ் (House) ஆகவும், உஅம்-ஓம் (Home) ஆகவும் ஆங்கிலத்தில் காண்கின்றோம். அன்றியும் இது கடவுள் நிலையமாம். சிற்றம்பலம், சிற்சபை, சிதம்பரம், கோயில், ஆலயம் முதலியனவுமாம். இது, சத்விசாரத்தால் மலர்ந்த மலர்ச் சுடராக விளங்கி, பரோபகாரத் தயவுச் செயலால் வாழ்க்கை அனுபவத்தில் கிடைக்கப் பெறுவதாம். அபக்குவ மனித நிலையில், மேல்நிலை இருதய உண்மை விளங்காது. கீழ்நிலை இருதயமாக, மொட்டு அவிழாக் கமலம் தலைகீழாய்த் திகழ்வதாம். மனம் சுத்த முற்று தயவு மயமாகும் தருணம் தான் கடவுளான்ம மேனிலை இதயம் உதயமாகி சுடர் விட்டிலங்கும்.

கடவுள், உள்ளம் கைக் கனியாக அனுபவப்படல்

கடவுளும் நாமும் ஒன்றிய இருதயமே நமது உள்ளமாக இருக்கின்றது. இதனை நம் கைக் கனியாக, வழங்கப் பெற்று உள்ளோம் இயல்பாகவே. “உள்ளங்கைக்கனி” என்ற ஒரு பழமொழியும் பெற்றுள்ளோம். உள்ளங்கை நெல்லிக்கனி என்றும் கொள்ளப்படும். இதன் மெய்ப்பொருள், உள்ளத்திலங்கும் அம்மெய்ப்பொருள், உள்ளங்கையிடத்தே அனுபவப்படுவது குறிப்பு. உள்ளங்கையில், த - ய இருக்கிறது; மேலே படிந்துள்ள ஐ விரல்கள், க (ங,ச,ஞ) ட ஆகவும் கூடி, கடமாய் தயவுட் கொண்டு, கடவுள் அங்கைக் கனியாக விளங்குவதாம். இரு கைத் தயவும் கடிதிற்கூடி, கடிமணமாக மறைந்திருந்து வெளிப்படுவதாம். இப்படி உள்ள மெய்ப்பொருள்தான், “கடிகை ஒரு இரண்டு அரையில், இரண்டரைக் கடிகையில் கடவுள் வெளிப்பட்டு கடிமணம் புரிந்து கொள்வதாக” வள்ளலார் கண்டுள்ளார். சத்விசார, பரோபகார நிறைவில்தான், தயவுச் சுடர்வண்ணக் கடவுள் அனுபவம் கிடைப்பது. இதனால் தான் வள்ளலார், தீபச் சுடரிலே, எல்லாம் வல்ல கடவுள் எழுந்தருளி உள்ளதைப் பாவித்து பெரும்பயன் பெற்றுய்யுங்கள் என்று அன்று சொல்லி வைத்தார்.

ஆகவே, இரண்டரைக் கடிகையில் கடவுளைக் கண்டு கொள்ளலாம் என்றது, சாதாரண காலக் கணக்கு அல்ல, வேறு எந்தக் கற்பனையும் அல்லவாம். உள் அம்பரத்திலே, இரு தயவும் ஒன்றான ஒப்பற்ற ஒரு தயவுச் சுடராய்க் கண்டு உளம் கொண்டு, சிந்தனை, சொல், செயல் மூலம் தயவை வெளிப்படுத்தி வாழ்தல் வேண்டும் என்பது வள்ளலார் ஆணை.

ஜீவகாருண்யம் அல்லது ஜீவ தயவு கொண்டு வாழ்வதுவே, மரணமில்லாப் பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெறற்காம் வழி துறையாகும். இதில், தயவு ஒன்றே உயிர்க்கு முழுமையான இன்பவாழ்வு தருவதாயிருக்கின்றது. உயிர் என்ற சொல், நம் தமிழிலே, உயிர்ப்பாகிய, ஜீவசக்தியை, சுவாசத்தை, மூச்சை, உடல் இயக்க ஆற்றலைச் சுட்டுவதாம். உயிருள்ள பிராணிகளையும் உயிர் என்றே கொள்ளுதல் வழக்கம். மேல், இந்த உயிர், உடல்களுக்கு ஆதார, மூலப்பொருளாக உள்ள அழிவற்ற ஆன்மாவையும் கூட உயிர் என்னல் ஆன்றோர் மரபு. எனவே உயிர் வாழ்வுக்கு, தேகமும், ஜீவனும், உள் இறையொளியும் ஒன்றி நிலவ வேண்டும். இதற்குத் தான் நம் தயவு, உள்ளிருந்து உணர்விலே, உயிரிலே உடலிலே நிரம்ப நிரம்பக் காரியப்படுகின்றதாம்.

அனுபவ விளைவு

இன்று கண்டு கொள்ளப்பட்டுள்ள கடவுள் இயல் உண்மைத் தயவு, ஆதிமுதலே, அறிதற்கரிய ஒன்றாய் இருந்து வந்துள்ளது எனத் திருவருளால் அறிந்து கொள்கின்றோம். இந்த அறிவு ஏற்படத்தான், ஒன்றுமில்லாச் சூனிய வெளியில், தோற்றரிதாய் இருந்த மெய்ப்பொருள். அனைத்து அண்ட பிண்ட, சராசர உயிர்பொருள்களையும், ஆற்றல்களையும், செயல்களையும், அனுபவங்களையும் வெளியாக்கி வந்துள்ளதாம். இந்த அற்புதச் சிருஷ்டிச் செயலில், நம் மனிதப் படைப்பும், இதில் அன்பறிவு வளர்ச்சியும்தான் இன்றைய தயவுக் கடவுள் உண்மை கண்டு நிற்கின்றது.

இவன், தன்னைத் தேக மாத்திரனாகக் கண்டு, பிற உயிரினங்களைப் போலத் தோற்றி வளர்ந்து மாண்டு ஒழிந்த காலம் கணக்கில் அடங்காது. மனோ பகுத்தறிவு கொண்டு, புலபோக இச்சை வழி துய்த்துத் துய்த்து மாய்த்து போன காலம் எவ்வளவோ! அதற்கு மேல், அக ஆன்மக் கடவுள் ஞானம் ஓரளவு பெற்று, புலபோக வாழ்வை வெறுத்துத் துறந்து, தவ மேற்கொண்டு சக்தி சித்திகளைப் பெற்று மகிழ்ந்திருந்தும் முடிவில் அடங்கி மறைந்து போன காலம் தான் எவ்வளவோ! !

அவை எல்லாம், அப்படி அப்படி அழிந்து ஒழிந்து போக, இதுசமயம், தயவுக் கடவுளே நம்மில் நாமாய், உள்ளிருந்து பெருகி நிறை இன்ப அனுபவத்தோடு என்றும் வாழ ஆணை செய்தலையுணர்கின்றோம். இது நிரம்பி நம்மை வாழ்விக்க வேண்டும். அதுதான் உண்மை அனுபவ விளைவு ஆம். இதற்கு முன் ஏற்பட்ட பலவாகிய அனுபவங்கள் எல்லாம், உண்மையான, இன்பநிறை இறைமய வாழ்வுபெற உதவாததால், மெய்யான அனுபவமே அல்ல என்று தெளிவுறுகிறோம்.

இறைவன் என்ற சொல்லுக்கு, என்றென்றும், அழிந்தொழியாது இருந்து கொண்டே இருப்பவன் என்றுதான் பொருள். அவனே, மன்னி, நிலைத்து, நிதமும், மன்னிதனாக இருப்பவன் என்றும் பொருள் கொள்ள உள்ளான். அவ் இறை மனிதனாம் கடவுளை இதுகாறும் கண்டதில்லை உலகு: ஏனெனில், அவ் இறை அருவமாய் மறைந்து இருந்ததே காரணமாம். இப்போது தயவுடன் கூடி சத்விசாரத்தால், கடவுளை, நிறை இன்ப வாழ்வு கொண்ட மன் இதன் ஆக, மனிதனாக நிலைத்த இன்ப வடிவினனாகக் கண்டு கொள்ளப்படுகின்றான். இந்த இன்பானுபவ வாழ்வே நீடிப்பதாகும்!

அனுபவம் விளங்கும் நிலை.

மனிதன் எந்த ஒரு அனுபவத்தையும் எப்படி அனுபவிக்கின்றான்? இவனது பொறி உடம்பு, அசத்து, ஜடம், உணர்வற்றது. ஆதலின் இதற்கு அறியும் ஆற்றல் இல்லை. இதற்குள்ளீடாக உள்ள கடவுள் ஆன்மா நித்திய சித்து அம்சமான, எதனாலும் பாதிக்கப்படாத ஒன்றாய் இருந்து வருவதால், அதுவும் அனுபவிப்பதல்ல. அந்த நித்திய இறை நிலை இன்று விரிகின்றதும், உடலில் விளங்குவதும், மறுபடி உட்சுருங்கி மறைகின்றதும் தான் உயிர் உணர்வு. இந்த உயிர் உணர்விலே தான் எல்லா அனுபவமும் உண்டாகி விளங்குவதாம். இந்த உயிரிலே தோன்றும் அறிவனுபவம், இந்திரிய கரண ஜீவநிலைகளில் தோன்றினவை. தயவு அல்லாதவெல்லாம் அழிந்து ஒழிய, தயாவிளக்கம் தருபவை மட்டும், ஆன்மாவின் கண் பதிவாகி வளர்ந்து வருகின்றதாம். அவ்வளர்ச்சி நிறை தயவு நிலை அடையத்தான் இந்நெடுங்காலமாகி இருக்கின்றது. இனி இத்தயவு விளக்கம் தான் ஒவ்வொரு ஆன்மாவையும் நிறை இன்ப இறை மனித நிலையில் என்றும் வாழ வைப்பதாய் உள்ளதாம். ஆகவே மக்கள் சமுதாயம் முழுமைக்கும் இந்தச் சுத்த தயவு நெறி ஒன்றே வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்கு, எவரும் ஏற்க வேண்டியவை: தயவோடு கூடிய, இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம். இந்த நால்வகை ஒழுக்கநிலை நின்று தயாசத்விசாரம் செய்து, தலைநடு தயவு ஒளியாய் நிற்கப்பழகுதல்; அப்படியிருந்து கொண்டு விருப்பு வெறுப்பின்றி, ஜீவ தயவுச் செயலால் உயிர் விளக்கமும் அறிவு விளக்கமும் செய்து கொண்டிருத்தல் வேண்டும். இதுவே தயவு இன்ப நிறை வாழ்வாக அனுபவப்படுவதாம்.

மக்கள் இனம் ஒன்றே உயிரினங்களிலே உச்ச கட்டத்தில் இருப்பது. இருள் நிலையிலும், மருள் நிலையிலும் அறியாமையானும், ஏகதேச அறிவு விளக்கத்தாலும் பெற்ற அனுபவங்கள் எல்லாம் உண்மை நிலையைக் காட்டிக் கொடுக்கவில்லை. ஒன்றாகிய தயாபெரும்பதியே, எல்லாமாய் எவருமாய், எவ்விடத்தும், எக்காலத்தும் உள்ளிருந்து விளங்கலை, உள்ளபடி உணர்ந்து கொள்ளச் செய்யவில்லை. அதனால், ஒன்றான பரமே, பலவான மக்களாய் அறிந்து கொள்ளப்படவுமில்லை. தான் ஒருவனே, பலருமாய்க் கண்டு, தன்போல் ஒவ்வொருவரும் தயவு இன்ப வாழ்வு பெற்று நிலவ உதவுதல் இவன் கடமையாகும்.

தயவு உண்மைதான் இன்று, எல்லோருக்கும், பெரிய, நிலைத்த இன்பம் வழங்க வந்துள்ளதாகும். இதனால், எங்கும் உள்ளும் புறமும் நிறைந்த ஒன்றான அருட்பெருஞ் ஜோதியைக் கண்டு கொள்ளலாகின்றது. புறவேறுபாட்டுத் தோற்றத்திற்குள்ளே, அக ஒருமை தயவாய் நின்று அனக நிறை தயவு ஆக ஒளிர்கின்றதைக் கண்டு தயவு வாழ்விற் சிறக்க ஆணை செய்யப்படுகின்றோம்.

அருட்பிரகாச பெருமான், தன்னைத் தயவு தான் இந்த உயர்நிலைக்குத் தூக்கிவிட்டது என்றும், தயவினில் தந்தனை என்றும் போற்றுகின்றார். அருட்பிரகாசரின் உள்ளிருந்து ஆள்கின்ற அருள், தயவின் அடிநிலையே, விரிந்து பெருகிப் பெருகி, அகண்ட பெருவெளி எல்லாம் தயவு ஒளியைப் பரப்பி எவ்வுலகத்தெவ்வெவரையும், தயவுமய இன்பவாழ்வில் தழைக்க உதவுகின்றது. இவ்வுண்மை கொண்டு, அருட் பெருஞ்ஜோதியின் அருளாட்சியின் மாட்சியை உணரலாம்.

சான்று:

அருட்பெரும் வெளியில் அருட்பெரும் உலகத்து

அருட்பெருந் தலத்துமேல் நிலையில்

அருட்பெரும் பீடத் அருட்பெரும் வடிவில்

அருட்பெருந் திருவிலே அமர்ந்த

அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே

அருட்பெருஞ் சித்தியென் அமுதே

அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே

அருட்பெருஞ் ஜோதிஎன் அரசே”

இது, அட்டகத்தில் விளங்கும், அருட்பெருஞ்ஜோதி அரசின், சொரூப, ரூப, சுபாவமும் நிலை விளக்கமும் புகழ்ந்து ஓதப் பெற்றுள்ளதாம். சிற்சபையிலிருந்தபடி, பொற்சபைப் பேரம்பல ஆட்சியால் பெருஞ்சுக வாழ்வு வழங்க உள்ளார் நம்பதி என்பதைக் குறிப்பாய் உணர்த்தப்படுகின்றது. இது அகக்கடவுள் ஆன்மநிலை நின்று, ‘அருட்பெரும்’, என்ற சொல்லால், பன்னிரு கலா விளக்கத்தால் புகழ்ந்தோதப்பட்டுள்ளது.

இப்போது அந்த அருட்பெருஞ்ஜோதியே தயவு ஆகி - அக நின்று அனக ஆட்சிபுரிகின்றதை தயாவிளக்க மாலைத் தொடக்கச் செய்யுளால் காண்கின்றோம்.

இதில் எங்கும் நிறைந்த கடவுள் தயாபெருஞ்ஜோதியாய் உள்ளவர், நம் சிரநடுத் தயவு ஆலயத்திலே தனிப் பெருந் தயவு வடிவாய் எழுந்தருளி இருந்து கொண்டு, தகர ககனபதியின் இணை யகர ஆன்மவடிவாய் இருந்து கொண்டு, தானே பத்து உருவோடு, வுகர இருகாலும் கூடிய பன்னிரு கலைபரப்பும் தயா ஜோதி ஆட்சி செலுத்த வேண்டப்படுகின்றது. அத் தயாவிளக்க மாலை முதற்பா இதுவாகும்:

தயாஒளி விளக்கே தயாபரஞ் சுடரே

தயாபெருஞ் ஜோதிஎன் அரசே

தயாவெளித் தலத்தே தயாமணி மன்றில்

தயாஅரி ஆதனத்(து) அமர்ந்து

தயாமுறை விளங்க தயாநெறி ஓங்க

தயாஅர சியற்பெருஞ் செங்கோல்

தயாஇயல் உண்மை தயா அறிவின்பம்

தயாவுல(கு) எலாம்செலுத் துகவே.

தயாபதியோடு, கலவாமற்கலந்து இருந்து கொண்டே சுத்த தயா இன்ப ஆட்சியை உலகம் எங்கும் செலுத்தும்படி வேண்டப்படுகின்றது.

தயவுதான், தகரமாம் ஆயிரம் இதழ்த் தாமரை ஆதனத்திலே வீற்றிருக்கும் நம் தயா அம்பலத்து அரசைக் குறிக்கின்றதும், உடன் பிரிவற இருக்கும் யகர ஆன்மா ஒரு பக்குவியைச் சுட்டுகின்றதும், இந்த அகநிலை நின்றே இந்தப் பக்குவ ஆன்மா தன் தலைவன் செயலை தன் செயலாய், இரு கரமாம் அருள் அனுபவம் சேர, பன்னிரு கலா தயவு ஆட்சியை உலகமெல்லாம் செலுத்த வேண்டிக் கொள்ளப்படும் உண்மையை நன்கு தெளிவாகக் கண்டு கொள்ளுகின்றோம்.

இதனால், இந்தத் தெய்விக நித்தியானந்த அரசாட்சி அருளாட்சியாக உலகம் காண, அருட்பிரகாச வள்ளலாருக்கு வழங்கப்பட்டு போற்றிக் கொள்ளப்பட்டதையுணர்த்தினது, அருட்பெருஞ்ஜோதி அகவலின், இங்கு தலைப்பில் கொண்ட முதலடிகள் நான்கும். அதனை விரித்து கூறவந்தது அட்டக முதற் செய்யுள். இதற்கு மேல், அந்த அம்பலவாணரே தயவாய் வெளிப்பட்டு, பக்குவ ஆன்மாக்களைக் கூடி, உலகம் எல்லாம் காண தயா இன்ப ஆட்சியை நித்தியமாய் நிலவச் செய்ய வருகின்றதை நம் தயாவிளக்கமாலை முதற்பா தொடங்கி, அந்தாதி முறையில் சதா சுழன்று செயல்பட்டுக் கொண்டே விளங்கத் துலங்குகின்றதாம்.

அகில மக்கட் சமுதாயத்திற்கும் இத் தயவு ஆட்சி, தலை நடு, ‘D ’ என்னும் தெய்வ ஒளியாய் இருந்து கொண்டு, ‘AEIOU ’ என்னும் (atoms, energies, intelligence, Omnisoul power and universal blissful life) பொருள், கிரியை, ஞானம், யோகம், அருள் சக்திகளின் முடிவான அழியா இன்ப வாழ்வை உலகெங்கும் பரப்பி உய்வு பெறச் செய்வதாகும்.

தயவு கொண்டு சூழ்க

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை

தயவு

பிற்சேர்க்கை

ஒரு சொல்

நம் தமிழிலே ஒரு சொல் எனப்புகழ்ந்து பேசப்படுவது, ஓம் ஆம். இது கடவுள் உண்மையை யுணர்த்திக் கொண்டுள்ளதாம். அவ்வுண்மை அனுபவம், மனிதனின் தலைநடு ஆன்மசிற் ஜோதியின் கண், அருளால் விளங்கி, தயவால் அடையப் பெறுகின்றதாம். அருள்ஞான விசாரத்தால், பிரணவத்தின், அகர உகர, மகர மெய் கண்டு கொள்ளப்பட்டது. பின்னர் அகமெய்ந்நிலை நின்று த.ய.வு. எனும் கடவுள் ஞானம், ஜீவ ஆற்றல், உடல் வடிவம் கொண்டு தயவு வாழ்வு ஆக அமைகின்றதாம்.

உயிரில் அனுபவநிலை 12-படிகளாக, ஜோதிக் கலைகளாக ஏற்கப்படுகின்றதைத்தான், அட்டக தயாவிளக்கமாலைச் செய்யுள்களிற் கண்டது. ஓங்காரத்தின் உள்ளும் புறமும் அதன் அக, புறப்பொருள் அனுபவமாகின்றன. இதுவே, கடவுள் சொல்லும் பொருளுமான நிலையாம். இந்தச் சொற்பொருள் உண்மையே, SOUL ’ என்னும் ஆங்கிலச் சொல்லின் மூலமும் காணலாகும். இது, பகரநிலையில் ஆன்மாவைக் குறிக்க ‘U’ என்ற எழுத்து கொண்டதாயும், இந்நிலை பெரு ‘U ’ இல்லாத ‘SOL ’ புறப் பொற் ஜோதிச் சூரியனைச் சுட்ட வந்துள்ளது. மேலும், சொல் WORD, GOD எனவும் அறிகின்றோம். இது அகநிலை கொண்டது. 12-கதிர் வீசி உலகில் அனுபவமாம் போது, ஆங்கிலத்தின் 12-வது எழுத்தாகிய ‘L ’ அம்மொழியின் ஈற்று அயலில் (அதாவது, கடைசிக்கு முன்) கூடி, WORLD , GOLD ஆகி விளங்குகின்றன. அகச் சிற்சபையில் பிரணவ நாத ரூபமாய் விளங்கியும், புறவெலீ நிறை பொற்சபையில் ஜோதியுருவாய்த் திகழ்ந்தும் அனுபவம் வழங்கிக் கொண்டுள்ளதாம்.

தயவு நடு நின்று செயல் கொண்டு வாழ்வதால் உய்வு பெறலாம் என்பதை தான் D நிலை பொருந்தி, ‘AEIOU’ எனும் ஐஞ்சக்திச் செயல் விளங்க வாழ்ந்து கொண்டு இன்புற்றுத் திகழல் பரம் பொருளின் திருவுள்ளமாகும்.

வாழ்க தயவு

LIVE IN DAEIOU.

அருட்பெருஞ்ஜோதி

தயவு

உள்ளங்காலும் உள்ளங்கையும்

(ஒரு சுத்த சன்மார்க்க அனுபவம்)

புதிய தெய்விக மனித வாழ்வு முறை தான் சுத்த சன்மார்க்க விளைவு ஆகும். கடவுள் உண்மை எங்கும் என்றும் பரிபூரணமாய் இயல்பாகவே உள்ள ஒன்றாகும். இக்கருத்து மெய்யுணர்த்த எவரும் ஒப்புக்கொள்ளுகின்றார்கள். உண்மை இப்படி இருக்க, மனிதன் கடவுளுக்கு அயலாய், அன்னியமாய் இருப்பதாகக் கருதியும், அடைய முயன்றும், பலவழிகளிலே பலகாலம் எவ்வளவோ பாடுபட்டும், அந்த நித்தியானந்த இறைமயமாகி வாழாது அழிந்து ஒழிந்து கொண்டிருத்தல் சரியா!

மனிதன், தன் இயல் உண்மை அகநிலை நின்று உணராது தன் இறைமய உண்மையை உள்ளபடி அறிந்து அனுபவியாது, தன்புற தேகநிலையில், உயிர் உணர்வு, மனப்புலனறிவு ஜீவ ஆன்ம நிலை அறிவு கொண்டுதான், இவற்றிற்கு வேறாக கடவுள் நிலையுள்ளது எனக்கொண்டு அவ்இறை நிலை பெறமுயன்று அவத்தைப்படுகிறான். எத்தனையோ, தெய்வ, தெய்வீக, மெய்ஞ்ஞான, விஞ்ஞான கலா சாதனங்களும், சாத்திரத்துணைகளும் கொண்டு கண்டு பெற்றது என்ன? அமைதியும், ஆனந்தமும் நிரம்பிய வாழ்வா, இல்லையே

எனவே, இதுசமயம் அகத்தே இருந்து வெளிப்பட்டுள்ள தயவு கொண்டு உண்மையை உள்ளபடியோர்ந்து, அகம்நிலைத்த வண்ணம் இருந்தே இறை இயல், உண்மை, அறிவு, இன்பம் தழைத்து ஓங்க வாழத் தொடங்குவோம்.

நிறை இறை உண்மை, முழுமையாகவே உள் நிலைத்து இருந்து கொண்டுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து அனுபவப்படவே புறப் பிரபஞ்சக் காரியங்கள் யாவும் நடைபெற்றுக் கொண்டுள்ளனவாய் அறிகின்றோம். இன்றைய பக்குவ வசத்தால், அந்த அகமெய்ந் நிலையை, அந்நிலை நின்றே அறிய சாத்தியப்பட்டுள்ளது. இதனால் அவ்வக மெய் அனுபவம் இன்றே கைகூடுகின்றதாம். இவ்வுண்மையுணர்த்தித் தெளிவு படுத்தத்தான் இக்கட்டுரை, ‘உள்ளங்காலும், உள்ளங்கையும்’, என்ற தலைப்போடு வெளியாகின்றது.

கடவுள் உண்மை விளங்கும் ஆன்ம சிற்றுருவே நமது அகநிலை, இதுவே உள்ளம் என்று கூறப்படும். தயாபெருஞ்ஜோதியாம் ஏக பரம்பொருளே, நம் அனுபவத்தின் பொருட்டு, நமது அகமாகிய ஆன்மாவாய், நமது உள்ளமாய்த் தனிப்பெருந் தயவு ஆக, சிரநடு நின்று ஒளிர்கின்றது. இந்த உள்ளமாகிய ஆன்மாதானே, அகண்ட கடவுள் உண்மையையும், நாம், நமது என்னும் உள்ளொளி, உயிர், உடல் வடிவேற்றுத் திகழ்வதாயும் உள்ளதாம். வான்பெருஞ்ஜோதி, கடவுள் வடிவம் என்றால், அவரது உண்மை வெளிப்படும் நிலையமாகிய நம் ஆன்ம உள்ளமே, அவரது திருவடி தீண்டும் இடமாகும். நமது உள்ளத்திலே அவருடைய கால் தீண்டாமற் தீண்டிக் கொண்டுள்ளதாம். அத்திருவடிக் கண்ணின்றே நம், அறிவும், உயிரும், உடலும் உருவாகி அனுபவப்படுவதைக் கண்டு கொள்ளுகின்றோம் திருவருளாலே. கண்டு, சத்விசாரத்தால் கண்டு அடைந்து அதுவாக நிற்றலே கண்டு கொள்ளுதல் என்பதாம். இப்படிக் கண்டு வாழ்விற் கொள்ளுதலே, அனுபவமாகிய கைவரப் பெறுதல் என்று கூறப்படுவது. நமது உள்ளத்திலங்கும் கடவுள் திருவடியை, அனுபவ பூர்வமாகக் கிடைக்கப் பெறுதல், ‘கடவுள், அங்கைக் கனி,’ எனப்பெறுகின்றது: இது, கட+ உள்ளங்கைக்கனி, எனலுமாம்.

மேலும் உள்ளம் என்பது, உள்+அம் அல்லது, உள்+அ(உ)ம், அல்லது உள்+ஓம் என்னலும் பொருந்தும். நமது ஆன்மாவே, ஓங்காரமாக உள்ளது. இதனைச் சூழத்தான் உயிருடம்பு உருவாகித் திகழ்கின்றது, இந்தச் சூழ் உடம்பே கடமாம். இதனால், கடவுள் இத்தேகத்தில் இருப்பதாகவும் கொள்ளப்படும். அன்றியும் ஆன்மாவே கடவுள் அனுபவம் கைவரப்பெறும் நிலையம் என்பது உண்மையே.

நமது உள்ளத்திருக்கும் கடவுள் திருவடியாம் கால், நம் அனுபவமாகிய கையில் பெறுவதே திருவுள்ள ஆணையாகும். அவரது உள்ளங்கால், நமது உள்ளங்கை வரப்பெறல் தான் குறிக்கோள். ஆன்மாவைச் சூழ ஐம்பூத தேகாதி பிரபஞ்சம் உள்ளதே போல், நம் உள்ளங்கையைப் பொருந்தியுள்ளன - ஐ - விரல்கள். இவையே, க,ங,ச,ஞ,ட எனும் ஐ எழுத்தால் சுட்டப்பெறும். இதனைச் சுருக்கி, ‘க-ட’வாகக் கொண்டு, உள்+அங்கையை இணைத்து கட, வுள்ளங்கை, கடவுள் அங்கை என்று கொள்ளலாகும். ஆகவே சிரநடு இருக்கும், கடவுள் அம் காலை நமது கடவுள் அம் கைக்கனியாகப் பெறுதல் அமைகின்றது. இதுதான், உள்ளங்கைக் கனி என்பதன் பழமொழிப் பழப்பொருள்.

ஆன்ம உள்ளத்துள்ள ஒரு மனிதனின் அனுபவத்தில், கடவுளும் அவனும் இரண்டற ஒன்றியுள்ள உண்மை விளங்குகின்றது. நிறைபரமான்ம பதியை, எல்லையற்ற தகராகாசவடிவினனாகக் கண்டு, த-என்ற எழுத்து வடிவால் சுட்டத் தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் அமைத்துள்ளார்கள். அப்பதியே நம் ஆன்ம வடிவில் பிரிவறக் கூடி நிற்கும் உண்மையை யுணர்த்த, பதினொன்றாம் வரிசையில் ய-என்ற எழுத்தை வைத்துள்ளனர். இப்போது தய என்பதே உள்ளமாகிய ஆன்ம அகத்துள்ள கடவுளும் நாமும் ஆன உண்மையைக் குறிப்பதாம். இவையே மேல்நிலையில் உள்ளங்காலாயும், கீழ் அனுபவ நிலையில் உள்ளங்கையிடத்தும் தய ஆகவே விளங்குகின்றன. மேல்நிலைக் கடவுள் தயஉ தான், கீழ்நிலை கடவுள் அனுபவம் தயவு ஆகத் திகழ்கின்றது. கடவுட் பிரபஞ்ச காரியமும், மனிதன் வாழ்வில் சிற்பிரபஞ்சச் செயலும் ஐவண்ணமாய்த் திகழலின், காலிலும், கையிலும் ஐந்து ஐந்து விரல்கள் அமைந்துள்ளனவாம்.

காலும், கையும் இரண்டிரண்டாக உள்ளன. ஏன்? ஒன்றாகிய கடவுள், சத்தி விசாரத்தால் அறியப்படவும், பரோபகாரச் செயலால் அடையப் பெறவும் உள்ளதால், காலிலும், கையிலும் ஐவண்ணக் கடவுள் உண்மை வெளியாகியுள்ளனவாம். தயவு ஆகிய கடவுளை அறிந்து சார்ந்து கொள்ளச் செய்வது சத்விசார ஞானம், நிறை மதியால் காணும் இறை வடிவ விளக்கம் தருவது, இடது கையகத்து, இடக்கையுள்ளத்து, இடவுள்ளங்கையின் தயவு நிலையாம். வலவுள்ளங்கைத் தயவு பரோபகாரத் தயவுச் செயல் அனுபவம் தருவதாம். ஆகவே, இடது உள்ளங்கையும், வலது உள்ளங்கையும் ஒன்று சேர்த்த அனுபவத்தால் தான் தயவுக் கடவுள் அனுபவம் பெற முடிவதாம். இரு தயா நிலையும் இணைந்தே ஒரு தயா அனுபவம் வழங்குவதாயுள்ளது. ஒரு தயவுக் கடவுளே இருதயா அனுபவத்தில் வெளியாவது உண்மை. இந்த இருதய நிலையே நம் உள்ளம், நெஞ்சம் என்பதும் ஒரு புனைவு ஆம். உள்ளமாகிய இருதயம், தலைநடு இடமாம், நெகிழ்வுரு நெஞ்சமாகிய இருதயம், மனம் செயல்படும் மார்பிடத்ததாம். எனவே சத்விசாரத்தால் மேனிலையுள்ளத்து தயவு வடிவாய் உற்று இருந்து கொண்டு, தயவுப் பெருவாழ்வு வாழ்வதே கடவுள் அனுபவம் ஆம்.

மேற்படிக் கடவுள் உண்மை அனுபவத்திற்கே உள்ளம் மேனிலையும், கீழ்நிலையும் தயவாகக் கொண்டுள்ளதாம். இதுவன்றி, மனிதனின் புற வாழ்வில் உறும் சிறு சிறு பயன் குறிப்புகளை மட்டும், கை இரேகைக் குறிப்பால் யூகித்து உரைத்தற்கு அன்றாம்.

இரு உள்ளங்கையும் ஒரு சேரக் குவித்து, வணக்கக் குறியாய்த் திகழும் கை கூப்பு நிலை தான், ஒரு தீபச் சுடர் போன்று, அடிபெருத்து நுனிசிறுத்து விளங்கும் அடையாளம் - நமது உள்ளத்தின், இறை ஒளி வடிவம் இதுவாகும். இதனையே இரண்டரைத் தயவு ஆக, இரண்டரை கடிகை என, இரண்டரை நாழிகை எனக் குறிக்கின்றார் வள்ளற்பெருமான். கடி என்பது, மணம், காவல் என்ற பொருள் கொண்டதாம். தீபச்சுடராம் இருகை கூப்பிய நிலை, கடவுள் உண்மையைக் காலத்தே வெளிப்படுத்தும் தோற்றரிய ஒரு மலர் அரும்பாய், அறிவரிய, கடக்கவும் உட்புகவும் அரிய ஒருகாவல் இடமாய் உள்ளது. இந்த இருதய ஒரு தயவு நிலை ஆம்.

தலையுள் நடுவிடத்தே, பகரக் குழிமேல் ஒளி செய்து நிற்கும் கடவுளான்மச் சுடர் விளக்கு, கருத் தொடக்க முதல் விளங்கிக் கொண்டேயுள்ளது இயல்நிலையே. இதனைப் பக்குவிகளுக்கு ஒருமையுள்ளத்துக் குருமார்கள் தீட்சையால் உணர்த்துவதும், இருவினை ஒப்பும் மல பரிபாகமுற்றார்க்குச் சத்தித் திருவடியைப் பதித்தலாம். சத்திநி பாதம் பெறச் செய்வதும், திருமால் திருவடி பதித்த சடகோபத்தை உச்சிமேற் சூடி உணர்த்துவதும் எல்லாம் உள்ளத்திருக்கும் அருள் திருவடியைக் காட்டிக் கொடுத்தற்கேயாம்.

“புரங்கடந்தான் அடி காண்பான் புவிவிண்டும் புக்கறியாது

இரங்கிடெந்தாய் என்றிரப்பத் தன் ஈரடிக்கு என்னிரண்டு

கரங்கடந்தான் ஒன்று காட்ட மற்றாங் கதுகாட்டிடென்று

வரங்கிடந்தான் தில்லை யம்பல முன்றில் அம்மாயவனே”

என்ற திரு கோவையாரிலே, ‘தன் ஈரடிக்கு என் இரண்டு கரங்கள் தந்தான்’ என்று உண்மை தெளிவாக்கப் பெற்று உள்ளதையுணர வேண்டும். கரங்கள் தந்தான், என்பதில், முதற் சொல்லின் ஈற்றெழுத்து-ள்-ளும், அடுத்த சொல்லின் ஆரம்ப எழுத்து த-வும் புணர்ந்து ட-என்று, ஈரெழுத்தோரெழுத்தாகியுள்ளதைக் காண்கிறோம். இது, ஆண்டவர் உள்ளங்காலும், நம்மின் உள்ளங்கையும் ஒன்றிய உண்மையைச் சுட்டுவதாயுள்ளதாம். இதுபோல், தாள்+தலை என்றதும் தாடலை ஆகித் திகழக் காண்போம். எங்கும் நிறை அருள் ஆண்டவர், சிரநடு எழுந்தருளியுள்ளதைக் காண முற்பட்ட அருட்பக்குவி, தான் சிற்றுருவாய் புருவநடு விருந்து, அடியற்ற மரம் போல், சிர நடுத் திருவடியில் தன் தலை தொட்டு நிற்க அருளால் உணர்கின்றான். இந்த, கடவுள் நின்ற நிலையும் மனிதனின் கிடந்த நிலையும் கூடும் இடத்தில் இறை ஒளி விளங்குதல் அறிவோம். இந்நின்ற நிலையும் கிடந்த நிலையும் தான் ட கரமாய்த் தமிழ் தந்தார் அனுபவ வெளியீடாய் அறிகின்றோம். செங்குத்துக் கோடும் படுக்கைக் கோடும் சேர்ந்த இடம், தனிப்பெருங் கடவுள் சிற்ஜோதியாக இருக்கின்றது.

மேற்படி கடவுட்ஜோதி வடிவே, க்-(முதல்வன் மெய்யுரு அம்கையாக அனுபவப்படுவதாம். இதுதான், க்+அம்கம், அதாவது, க்+அம்+கை=கங்கை ஆம். இக்கங்கைதான், திருமால் திருவடி நிலையும், சிவனார் திருமுடி நிலை கொண்டு திகழ்வதாய்ச் செய்த புனைவு, தயாபெருஞ்ஜோதி தனிப்பெருந்தயவுக்கு விளக்கம் தருவதாய் இருக்கின்றது. இவ்வக நிலையுண்மை கொண்டு சமரச வாழ்வு மேற்கொள்ளா மதவாதிகள், மயக்கறிவால், “எங்கள் பெருமாள் திருவடிகளைக் கழுவி வரும் கங்கையைத்தான் உங்கள் சிவனார் தலையிற் கொண்டுள்ளார்,” என்று ஏளனமாகப் பேசுகின்றனர் வைணவ பக்தர்கள். “இல்லை,” “எங்கள் பெருமான் முடிமேற்கங்கை, ஆகாச கங்கை அருட்பெருக்காகும். இதனால்தான் எவ்வுயிரும் தோன்றி வாழ்வுற்று இன்பப்பேறு அடையக் கூடியதாயிருக்கின்றது,” என்கின்றார்கள் சைவச் சான்றோர்கள். சுத்த சன்மார்க்கிதான் அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் சிற்றொளியே மனிதனின் ஆன்மச் சிற்றணுவாய்த் தோற்றி ஒவ்வொருவருமாய் வாழ வந்துள்ளதை மெய்யாக உணர்கின்றான். இந்த மெய்யான, காலும் கையும் கண்டு தயவுத் தொண்டு செய்து கொண்டு வாழவேண்டியதே நம் கடமையாகும். அறியாமையால், அடிபிடி சண்டை வாழ்வில் அவத்தைப்பட்டு அழிவதைவிட்டு, மெய்யறிவால் திருவடியை ஒரு பிடியாய்ப் பற்றி உள்நின்று, தயா நலம் காண்போம் நாம்.

உள்ளத்தில் இருக்கும் கடவுட் காலைக் கண்டு கலந்து பிரிவற இருந்து கொண்டு, எவ்வெவரும் உள்ளங்களிக்கக் கையறவில்லாது தொண்டு புரிந்து வந்தால், இன்னாள் மக்கள் சமுதாயம் இறை இன்ப வாழ்வை, உள்ளங்கைக் கனியாய்ப் பெற்று, நீடித்துத் தழைத்து ஒங்குவது நிச்சயம்.

இன்றைய மன்பதைக்கு, எவரும் இணைந்து வாழும் இன்ப நல வாழ்வு ஒன்றே தேவை. அதனைக் கொண்டு வருவது, அகமிருந்து தயவுடன் வாழும் அனக நெறிமுறையே அமைவதாயிருக்கின்றது. ஆகையால், அகமாகிய உள்ளத்து உண்மையையும் அதனோடு சேர்ந்துள்ள, அன் முதல் ஈற்று எழுத்துக்களின் உண்மையையும் தெளிந்து ஏற்றல் வேண்டும். அகத்தோடு சேர்ந்த அன்தான் (அன்+அகம்) அனகம் ஆம். கடவுள் அடிமுடி அனுபவம், ஆன்ம நிலையத்தில் வெளிப்படவுள்ளதால், அந்நிலை நின்று வாழ்வதே அனக ஆனந்த வாழ்வு ஆகும். இது உண்மையில் தயா வாழ்வு முறையே யன்றி வேறல்ல. ஆகையால் உள்ளத்தில் தயவுச் சுடரை ஏற்றிக்கொண்டு, சதா எரிந்து கொண்டே இருக்க புற உலக வாழ்வில் தயா இன்பத்தை வளர்த்துக் கொண்டிருப்போம். வேறு எதையும் உள்ளங் கொள்ளவும் வேண்டாம், மாறுபாடாய்ப் பிழைத்திடவும் வேண்டாம்.

தயவால் இரு, தயவே புரி

தயவு இன்பம் நிரம்பும்

தயவு

கங்கை


தயவே கடவுளின் உண்மையாகவும் தன்மையாகவும் உள்ளது. அருளாம் தன்மையை, நீர்மை, தண்ணீர், அமுதம், வான் அமுது, ஆகாய கங்கை எனப்படும்.

தயாபெருஞ்ஜோதிக் கடவுள்தானே நமது அனுபவத்தின் பொருட்டு தனிப்பெருந்தயவு ஆக நம் சிரநடு எழுந்தருளியுள்ளது மெய்யே. இதுசமயம் தயவுதான் நமக்கு கடவுள் அமுத நன்னீராக உள்ளது. தயாஜோதி அமுதமாக மிளிர்கின்றது. இந்த பெருங்கடவுள் உண்மை சிற்ஜோதியாய்த் திகழ்கின்றது சிரநடுத்தலத்தேயாம். இங்கிருந்தே நம் உயிர் உணர்வும், உடல் உருவும் காரியப்பட்டு விளங்குகின்றன. கடவுள் ஆன்ம அனுபவம் மலர்ந்து மணக்கும் இடம் இந்த ஆன்மசிற்றணுவே. இவ்ஆன்மா, அமுத கலசமாகவும், அருள் அமுதப்புனல் பொங்கும் கங்கையாகவும் கற்பனை செய்து வழங்கினர் கடவுட்காட்சியினர். கம் என்பது தலை, நீர், முகில் என்ற பொருளோடு, க்+அம் விரிந்த க்+அ-(உ)ம் ஆகிய அருள் ஆண்டவரின் உண்மையைச் சுட்டுவதாம். இந்தக் கம் அனுபவம் கைவரப்பெறற்கு என்றே கம் மொடு கை சேர்த்துக் கங்கை என்றுள்ளனர்.

முதற் கட்டுரையில், அருள் திருவடி அனுபவம், உள்ளங்கால் உள்ளங்கை ஆக கண்டு கொள்ளப்பட்டது. இப்போது அந்த அருள் இறை அனுபவமே ஈண்டு கங்கையாகக் காணப்படுகின்றது. ஆன்ம அணுவின் அகம் அருள் ஆற்றலாகவும், புறம் ஜோதி தேக உருவமாகவும் விளங்குகின்றது. இது நம் கருத்தோற்றத் தொடக்க நிலையிலிருந்து அறியப்படுகின்றது ஒரு பக்குவியின் அனுபவத்தில். ஆக ஆற்றல் ஒரு படித்தாய் நிலைத்துப் பூரணமாய்த் திகழ, புறத்தே தோன்றி விளைவுகொள்ளும், உயிரும், உணர்வும், உடலும் ஆவதுவும், அழிவதுமாய் உள்ளன, ஆம் ஆன்ம உட்சக்தியைச் சூரிய நாராயணனாகவும், புற உடல் தோற்றத்தை சந்திர சேகரனாகவும் வருணிக்கின்றனர் புராண கர்த்தர்கள். மேலும், சூரிய கலை 12-ல், ஒன்றுகொண்டு விளங்கும் சந்திரன் பதினாறு கலையுடையது என்பதும், அண்டவானில் அவிர்கின்ற திருவோணம் முதல் திருவாதிரை முடிய உள்ள, 12 நட்சத்திரங்கள் ஆன்மக் கடவுள் உண்மை கொண்டதாகவும், பிண்டாண்ட உண்மை கண்டார் பேசுகின்றனர். திருவோணத்தான் திருமால் என்றும், அதன் அந்தத்திலிருந்து, அதாவது, திருவாதிரை கொண்டு விளங்கும் ஜோதி சிவன் திருவாதிரையான் என்றும் திருவென்னும் அடைமொழியீந்து அவ்விரு நட்சத்திரங்களையும் சிறப்பித்துக் கூறுவர் ஆன்றோர். இவ்வாதிரை முதல் 16-உடுக்களும், சந்திர அம்ச சோமசேகரனை சுட்டுவதாம்.

சூரியனின் கதிர் ஒளி பெற்றுச் சந்திரன் விளங்குவதை அறிவோம். இதுபோல அக ஆன்ம சக்தி கொண்டே புற உடல் விளங்குவதையுணர்வோம். முன் குறித்த திருமால் திருவடி நிலையும், சிவனார் திருமுடி நிலையும் பொருந்திய ஆன்ம நிலையும், ட கரத்து இரு கோடு கூடும் ஒரு புள்ளி எனக் கண்டோம். இது, இருகால் இருகை அனுபவம் தரவுள்ளதாய் அறிந்தோம். இப்போது அவ்வான்மப் புள்ளியே கங்கையாக அனுபவப் படுகின்றதாய்க் காண்கின்றோம். திருமால் திருவடி நின்றெழு கங்கை, சிவன் திருவடி நின்று பொங்கி வழியும் கங்கையாகவும் கண்டு கொள்கின்றோம் இப்போது. எனவே, இந்த கங்கையைப் பற்றி, மயக்கறிவால், சைவ, வைணவச் சண்டை வேண்டியதில்லை.

கங்கை என்பதனை வேறு ஒரு வகையில் பொருள் கண்டு அனுபவம் பெறலுமாகும். ‘கம்’ என்பது தலை எனப் புகலப்பட்டதல்லவா; அதனைச் சிவபெருமான் கைக்கொண்டிருக்கும் பிரமன் தலைவோட்டை திருவோடாக கொண்டிசைத்தலாகும். அகங்கார போதம் ஒழிந்தபோது, கடவுள் உண்மையே, தலைநடுப்பகர வடிவக் குழியில் விளங்குவதாய் அறிவோம். இந்தத் திருவோடாம் கரபாத்திரம் தான் ‘கம்’, அதில் அருள் அனுபவப்பேறு சுட்டுவதே ‘கை’, இப்படியாகவுள்ள கடவுள் ஆன்ம அனுபவம் கொண்டதுவே கங்கை எனக் கொள்ளலாகும். இப்படித் திருவோட்டிலே நாம் கடவுள் ஆன்ம வண்ணமாய் இருந்து வாழ வேண்டுவது திருவுள்ளம், இந்த ஆன்மாவை, அன்னமாகக் காண்கின்றனர் பகரத்தாமரை நடுவே. இந்த அனுபவம், சத்விசாரத்தால் அதுவாக இருந்து கொண்டு வாழும் முறையால் மட்டும் பெறலாகும். இம் மேனிலை வாழ்வை அறியாது, இதயத்திடத்தே பந்தப்பட்டு கிடக்கும் ஆன்ம அன்னத்தை விடுவித்து, மேல் கொண்டுபோய், சிவசங்கரன் கரத்துப் பிரம கபாலத்தில் இட வேண்டும் என்று எண்ணினார் முன்னோர் பலரும்.

கீழ்நிலை இதயத்துள்ள ஜீவான்மாவை, கைப்பிடியளவேயுள்ள பந்தப்பட்டுள்ள ஆன்மாவைப் பக்தியுள்ளத்தோடு மேனிலைப் பிரமகபாலத்தில் கொண்டு இட்டுத் தம்மையும், அக்கலத்தே, அடைக்கலமாக அர்ப்பணித்து ஒழிந்தே போனார்கள் சிவ பக்த சிகாமணிகள். சிஹோஹம் பாவனையால், கீழ்நிலை விட்டு, மேனிலைப் பிரமஜோதியில், பரமான்மாவில் இரண்டறக் கலந்து விடுவதுதான், சிவராஜ யோகச் செல்வர்கள் முடிவு. இதுவா பிடிபட்ட ஆன்மாவுக்கு, விடுபட்ட விடுதலை வாழ்வு! உண்மையில், பரமான்ம அருட்பெருஞ்ஜோதியே, பகரக்குழி இடத்து தனிப்பெருங்கருணையோடு, தானே ஜீவான்மாவாக விளங்குகின்றதை இன்று ஐயம் திரிபு இல்லாது அறிகின்றோம். இச்சீவான்ம சக்திதான் மன அறிவோடு கூடி இதயத்து இறங்கி பொறிபுலன் வாழ்வில் சிக்கித் தவிப்பதாகவும், பற்று முற்றும் அற்று, அகங்காரமும் ஒழிந்த போது தன்னுண்மை நிலை, மேலிடத்தே தகராகசப்பதியோடு பிரிவற இருக்கும் யகர ஆன்மாவாய்த் தய வாகத் திகழ்தலையுணரப் பெறுகின்றதாம். இம்மேனிலை அனுபவமே, ‘கம்’ ஆகிய திருவோட்டிடத்து பெறும் ‘கை’யாகிய அவனுபவமாம். இதுவே கங்கைக்கு இன்று காணும் பொருள். இங்கு விளங்கும் சன்மார்க்கி பிடியன்னம் தான் இந்தப் பிடி அன்னம், பிடிபட்ட அன்னம் அல்ல! கடவுள் அனுபவமாகிய வாழ்வைத் தன் பிடியில் கிடைக்கப் பெற்றவனாவான்.

மேற்படி பகரக்குளம், கங்கையை அடுத்த சரவணப் பொய்கை என்பதும், அதில், கடவுள் ஞானக்கட்பொறி ஆறும், கங்கையால் அணைத்து எடுக்கப்பட்ட ஆறுமுகம் கொண்ட ஜோதி முருகன் உண்மையாகும். கங்காபாலன் சண்முகன் நம் ஆன்ம அருட்ஜோதியே ஆம். தூலபஞ்சாட்சர ‘நமசிவாய’ சிவன் தோற்றுமுன்னையே, அக உண்மை இளஞ்சிவனாம் முருகன் உதியாதே உதித்திருத்தல் மெய்யாம். இதுதான் தந்தைக்குமுன் மகன் பிறந்தான் என்பது. தூலதேகிக்கு உள்வளர் ஜோதி முருகனே குருவாய் எழுந்தருளி, தன்னையே உபதேசப் பொருளாய் உட்கொள்ளச் செய்கின்றதாம். சுத்த சன்மார்க்கத்தில் அருட்பெருஞ்ஜோதியை உபதேசப் பொருளாய்ப் பெறும் ஒருவன், சுத்த பிரணவதேகமும் உடன் வழங்கப்படுகிறான். இவ்வுண்மை கங்கா பாலன் அனுபவத்தில் வள்ளி தெய்வானையின் கூட்டாகக் குறிக்கப் பெற்றுள்ளது.

கோயில் உள் விளங்கும் தெய்வத்தை வெளிப்படவுணர்த்த வந்தது, புறக்கொடி, சின்னமே. இம்மனிதப் பிறப்புருவம் தான், நம் உள்வளர் தெய்வத்தின் கொடிச்சின்னமாம். அகப்பெரும்பதியை தூய அன்னமாகக் கொள்ளும்போது, புறத்தேகம் அபக்குவ வசத்தால் கரிய காகமாகவே குறிக்கப்படும். ஒருவன் சத்விசாரத்தால் கங்கையில் மூழ்கி எழுந்து அகநிலையில், தன்னை வெள்ளை அன்னமாகக் காண்கின்றான். பின்னர் இறை ஒளியை அடையும்போது, பொற்கிளிவடிவாய் ஆகிவிடுகின்றான். இதனால், மனித வடிவம்தான் கடவுட்கொடி, காகத்திற்கும் கொடி என்றே தமிழில் குறிக்கப்படும். கங்கையின் மூழ்கின காகம், வெள்ளன்னமாகியும், மாமேருவைச் சேர்ந்த காகம் பொன்னாம் என்பதும் மெய்ஞ்ஞானியர் அனுபவமாம். புனித கங்கையில் புக்கழுந்தி, புனிதனாகித்தான் ஒருவன் கடவுட் கனகமேருவைச் சாரமுடியும். உள்ளத்தால் என்றும் மேரு சிகரமீது செம்பொன்னுருவாய்த் திகழ்கின்றதும், புனித கங்கையில் மூழ்கி எழுந்த சுத்த அன்னமாய் இருப்பதும், தேகப்பற்றற்ற, உண்மை (த்+உறவு) துறவு ஏற்று வாழும்போது அனுபவப்படுவதாம்.

மனிதன், இந்நிலவுலகில் தோற்றுவிக்கப்பட்டு எத்தனை கோடி காலமாகிறதோ! அவனுக்கு, அக வுண்மை வெளிப்பட்டு எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழிந்துள்ளனவோ! கடவுள் உண்மையைத் திருவருளால் உணர்த்தப் பெற்றும் அதனை அனுபவத்தில் ஏற்று வாழ எவ்வளவுகாலம் ஆகியுள்ளதோ யாரே அறிவர்! அக்கடவுள் உண்மையைக் கங்கையாகக் கண்டு கொண்டவன், அதனை அனுபவ வாழ்விற்பெற்று புனிதமடைய முயன்றவன்தான் பகீரதனாம். இந்தப் பகீரதப் பெருமுயற்சியால் அன்று கங்கையைக் கொண்டுவந்தவன், அதில் நீராடிப் புனிதமுற்றும், அதிலேயே கலந்து மறைந்துதான் போனான்! என் செய்வது! அன்று, மனிதனைப் புனிதனாய் வாழ்விக்கும் சுத்த சன்மார்க்கம் இல்லாக் குறை, ஒருவனுக்கு நித்தியானந்த வாழ்வு சித்திக்கவில்லை.

இந்த அருட்பெருக்காகிய அமுத கங்கை ஒருவனுக்குப் புறம்பாய் இல்லை என்றுகாண்கின்றான். அந்த கங்கையே கடவுளான்ம வண்ணமாய் விளங்குகின்றது. அது கடவுட்பெருந் தயவாலே அகமிருந்துபொங்கி, அனகமாக நிரம்பி, ஒருவனை ஆனந்த வாழ்வில் என்றென்றும் வாழ வகை செய்கின்றதாம். கங்கை ஆற்றின் கரை விளங்கு காசிப் பதியில் வாழ்ந்துஇறப்பதே முத்தி என்று பெற்றறு மெய் இன்ப வாழ்வு அல்லவே. உண்மையில் சிரநடுத் தயா கங்கையில் தங்கியிருந்து கொண்டு தயவுச் செயலால் சூழ்நர்க்கெல்லாம் உயிர் விளக்க அறிவு விளக்க பணி புரிந்து கொண்டிருந்தால் நித்தமும் கங்கை அனுபவ வாழ்வு நித்தியமாய் விளங்குவது சத்தியம் என்று வள்ளலார் அனுபவ பூர்வமாக மெய்ப்பித்துள்ளார். ஆகவே சத்விசார முறையால் அகத்தில் கங்கையைக் காண்மின். கண்டு சார்ந்து கலந்து ஒன்றாகி இருந்து கொண்டு பரோபகார தயவுச் செயல் புரிந்து வாழ்மின். இதுதான் இறைமய இறவாப் பெருவாழ்வு – எவர்க்கும் ஆணை செய்யப்பட்டுள்ளது. தெரிந்து தெளிந்து ஏற்று இனிது வாழ்க. எவ்வுலகத்துறையும் தயவுச் செல்வர்களே வாழ்க !

தயவு