11/2/2008 9:43:41 PM by சுவாமி சரவணானந்தா
தயவு
அருட்பெருஞ்ஜோதி தயவு மலர்.
அருட்பெருஞ்ஜோதி மெய்
6. அருட்பிரகாச வள்ளல் பெருவுருவம்.
சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்.
நள குரு மகா தைப்பூச வெளியீடு
3.2.1977.
என்றுமுள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தன் தனிப் பெருங்கருணை வெளிப்பட விளங்க வந்துள்ள திருவுருவமே அருட்பிரகாசத் திருமேனியாகும். இது இராமலிங்க அடிகளாரின் புறத்தோற்ற வடிவம் மட்டுமல்ல என்று அறிய வேண்டும். இந்த வள்ளல் பெருவடிவம், புறம் தோன்றும் தேகத்தின் அகமிருந்து விரிந்து, உயிருடல் கடந்து வெளியெலாம் நிரம்பி அகண்ட அருட் பிரகாசமாய் விளங்குகின்றதாகும். இதனால் வள்ளல் மெய்யுருவம் உள்வளர் அருள் உணர்வால் கண்டு கொள்ளத்தான் முடியும். மற்றபடி புறவடிவத்தைப் பற்றிக் கொண்டிருந்தால், அல்லது மனத்தால் பாவித்துக் கொண்டிருந்தால், மெய்யான பேருருவம் அறிந்து கொள்ளவும் அனுபவமுறவும் முடியாதாம்.
இப்போது அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் வடிவம். அருட்பிரகாச வள்ளல் வடிவமாக, வெளி நிறைந்து விளங்குவதால், இந்த அருட்பிரகாசப் பெருவடிவமே அருட்பெருஞ்ஜோதிபதியின் கருணை மெய்யுருவாக இருக்கின்றதாம். ஆதலின், இது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மெய்யுருவாகும். இதுவே இச் சிறு நூலின் தலைப்பு ஆக “அருட்பெருஞ்ஜோதி மெய்” என முற்பகுதி வழங்கப் பெற்றுள்ளது.
ஒன்றாகிய கடவுளே எவ்வெவர் அகமிருந்தும் அனக நிறைவு கொண்டு அவரவராகவும் விளங்கலின் திருவருள் நிறைவால் அகம் பொருந்தி, அன்பு அல்லது தயா வாழ்வு மேற்கொண்டு வாழ்வதால் அருட்பிரகாசரின் உண்மை வடிவை அருட்கண்ணாரக் காண்பதோடு, நிறையருள் அனுபவத்தால் ஒவ்வொருவரும் அருட்பிரகாசப் பெரு உருவோடு அனுபவ பூர்வமாய் வாழலாகும்.
இவ்வருட் சித்தி பெறுவோர் புறநிலைத் தோற்றத்தில் வேறு வேறான நாம ரூபத்தோடு விளங்கினாலும், அக அனுபவத்தில் அருட்பிரகாச நிறையுருவுடன் திகழல் உண்மையாகும்.இதுவே இனிவரும் சுத்த சன்மார்க்கி ஒவ்வொருவரின் உண்மை வடிவாகும் – அருட்பெருஞ்ஜோதி மெய் ஆம்.