Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுப் பெரு நெறி-கோலாலம்பூர் 6வது உலகத் தமிழ் நாட்டில் வெளியிடப் பெற்றது.

தயவு.
தயவுப் பெரு நெறி.
சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்.
கோலாலம்பூரில் நடைபெற்ற 6-வது உலகத் தமிழ் நாட்டில் வெளியிடப்பெற்றது.
தயவு நூல் வெளியீட்டு அறக்கட்டளை, திண்டுக்கல்.
உலகுக்கு ஒரு நெறி தயவுப் பெரு நெறி.
அளப்பரிய மாபிரபஞ்சத்தை, அகண்ட வெளியில், அனந்த வண்ண, அண்டபிண்ட உயிர் பொருள் ஆற்றல்களோடு விளங்கிக் கொண்டே இருப்பதைக் கண்டு வியக்கின்றோம். இவற்றின் காரிய காரணத்தையும், முடிந்த குறிக்கோளையும், அறியவும், அறிந்து வினை பயனை அடையவும் உள்ளான் மனிதன். இந்த உண்மையை அறியாதபோது, பொறிபுலன் அறிவால், எவ்வளவோ அனுபவங்களைப் பெற்றும், நிறை இன்பநிலை பெறாது மடிந்து போனான். போய்க் கொண்டே இருக்கின்றான். இவற்றின் இரகசியத்தை எல்லாம் மனிதப் பிறப்பின் நிறை பக்குவத்தில் வெளிப்படுத்தி, மெய்ப் பொருளைக் கண்டு கொள்ளச் செய்யவே யாவும் நடைபெறுகின்றனவாம்.
மேற்படி பிரபஞ்சக் காரியப்பாட்டிற்குக் காரணமாய் இருக்கும் முழுமுதற் பொருளைக் கடவுள் என்றும், இயற்கை என்றும் கூறுகின்றனர் அறிஞர் பலரும். அந்தக் காரண மெய்ப் பொருளைத்தான். இதுவென்று கண்டு கொள்ளவில்லை உலகம் ! அப்படிக் கண்டு கொள்ளச் செய்யவே, அதுவே, இந்தப் பிரபஞ்ச காரியத்தை நீண்ட நெடுங்காலமாகப் புரிந்து வருகின்றதாம்.
அந்த அகமெய்ப்பொருளே வெளிப்பட்டு விளங்க வேண்டி, இம் மனிதனில், இதுவரை மெய்யறிவில் முதலில் உணர்த்தப் பெற்றது. அதனை வெளிப்படுத்த, அப் பரம்பொருளே தன் இயல் உண்மையைத் தமிழ் வண்ணமாக வழங்கிவிட்டுள்ளதாம். எனவே, தமிழின் வழி - இறை உண்மையை எல்லாம், காலத்தே அறிந்து அடைய உள்ளான் மனிதன்.
(1) தமிழின் பெருமை.
கற்பனையின் வெற்றி கடவுள் தயவுகாண்
தற்போதம் நீக்கும் தமிழ் (தயவுக் குறள்)
கடவுள் உண்மையே தமிழாகக் கற்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இத் தமிழின் எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு எல்லாம் அப்பரம் பொருளை அடைவிக்கும் வண்ணம் அமைக்கப் பெற்றுள்ளனவாம். எனவே, பிற எம்மொழிக்கும் இல்லாத பெருமையும் சிறப்பும் நம் தமிழுக்கே உண்டு ஆம்.
(2)தமிழ் தயவு.
இறையுண்மையே தமிழாய் இருத்தலின். அது இம் மனிதனில் வெளியாக, இவனது மெய்யுணர்விலிருந்து விளைவுற்றுத் திகழ்கின்றதாம். ஆறறிவுக்கு அப்பாலாம் ஏழாம் மெய்யறிவு நிலையில் விளங்கும் கடவுள் பெருவடிவம். அகண்டாகாச நிறை உருவம். த – என்ற ஏழாம் உயிர்மெய் வரிசையில் அமைக்கப் பட்டுள்ளது. இந்தத் தகாராகாச மெய்யறிவுப் பீடம், மனிதனின் தலைநடு, முகுளம் (MEDULLA OBLONGATA) மேல் வெளியிடத்தே விளங்குவது. இங்கு அந்தரத்தில் கடவுள் ஒளி அணுவாகிய ஆன்மா ய-கரமாக மிளிர்கின்றது. இந்தத் தய உண்மைதான் கடவுள் உண்மை வடிவும். நம் மெய்யுருவுமாகும். இதுவே, நம் கருவுரு ஆரம்பத்தில் தோன்றி, சிசு உருவாய் வளர்ந்து உலகிடை வந்து வாழ்கின்றது. இந்த அக வடிவினின்று தயவு சக்தியே, நமது மெய்யறிவாய், உயிர் ஆற்றலாய், உடல் தோற்றமாய் விளைவுற்று இலங்குவதாம்.
இந்த நம் தயவு உண்மையை உள்ளபடியுணர்ந்து அந் நிலையிற் பிறழா திருந்துகொண்டு. தயவு உணர்வு, சிந்தனையிலும் சொல்லிலும், செயலிலும் வெளிப்பட வாழ்ந்து வருவதால்தான் நம்மில் இறை இன்ப நிறைவாழ்வு சேரும். இது மக்கள் சமுதாயம் முழுமைக்கும் நல்லின்ப வாழ்வு தழைக்கச் செய்வது உண்மை !
(3)கற்பனைக் கடவுள் இயல்.
கற்பனை கடந்த நிலையில் விளங்கும் தயவுக் கடவுள் உண்மையை உள்ளபடி உணர்ந்து அதுவாகி நின்று உலகிடை எல்லோரும் ஒத்து வாழாமல், இதுவரை மன்பதை, அருள் விளங்காத கற்பனா மருள் நெறிகளிற் சென்று சென்று பிழைத்துக் கொண்டிருக்கின்றது.
சமய, மத ஞானம் மக்களினத்திற்கே தேக இந்திரிய நிலை நின்று, ஏக தேச ஆன்மக்கடவுள் விளக்கங்களாகப் பெற்று வெளியிடப்பட்டனவேயாகும். அன்னோர் கண்ட அக் கடவுளான்ம விளக்கம், நம் மெய்யறிவு பீடத்திற்கு நேர் இரு கண் புருவத்து இடை நின்று ஒருமை மனத் தவமுயற்சிகளால் பெற்றனவாகும்.
“கையறவிலாது நடுக் கண்புருவப் பூட்டு
கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
ஐயர்மிக வுய்யும்வகை அப்பர்விளை யாட்டு
ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு” (திரு அருட்பா)
இப்படி கண்டு கொள்ளப்பட்ட சிரநடு இறை நிலையில் கூடி இருந்து பெற்ற அற்புத சக்தி சித்திகளால், உலகம் மதிக்க வாழ்ந்து முடிவில் உள்ளொடுங்கி மறைந்து போயினர் ஆன்றோர் பலர். அந்த அக ஒளியையே பலவாகிய தெய்வ. தெய்வீக பாவனையால் கண்டு கற்பனை செய்து வழங்கினார்கள். பின்னுற்றோர், கற்பனைக்குக் காரணமாகிய அக மெய்ப்பொருளை அறியாது. வேறு வேறான தெய்வங்களாகக் கொண்டு பின்பற்றி, வாழ்க்கையில் ஒன்றுபட்டு வாழக் கூடாது அவத்தையும் அழிவும் உறுகின்றார்கள்.
சிவம், விஷ்ணு, முருகன், தேவி, விநாயகர், அல்லா, ஏசு, எகோவா மற்றபல தெய்வங்களும் நம் ஒன்றான கடவுளொளியே என்று அறிதல் வேண்டும். மேலும் நாம் ஒவ்வொருவருமே கூட அவ் அக உண்மை ஒளியின் வேற்றுமைத் தோற்ற வடிவினர்களே ஆவோம். உண்மையை ஒன்றான தயவுத் தெய்வமாகக் கண்டு எல்லோரும் ஒன்றுபட்டு வாழல் ஆண்டவர் ஆணையாகும். தயவுதான் இன்று கடவுள் உண்மையாகவும். நம் உண்மையாகவும். அவர் மயமாகி வாழற்குரிய வழியாகவும் ஏற்பது, நன்றாம். “நாம், நாம்” என்று சொல்லிக் கொள்கின்றோமே, அந்த நாம் உண்மையில் ஒன்றான தயவுக் கடவுளே என்று அறிகின்றபோது, ஆணவ, அகங்கார தற்;போத உணர்வு மறைகின்றது. உண்மையில் இருப்பது தயவுதான். அதற்கு அன்னியமாக, வேறாக எவரும், எதுவும் இல்லை. இதுதான் மேலே குறிக்கப்பட்ட தயவுக் குறளின் கருத்து.
“கற்பனையின் வெற்றி கடவுள் தயவுகாண்
தற்போதம் நீக்கும் தமிழ்” எனப்பட்டது.
பிற கற்பனா நெறிமுறையால் உலகுக்கு நன்மை உண்டாகவில்லை. உண்மை சிறிதும் விளங்கவுமில்லை. அந் நெறிகள் யாவும். புறத்திலிருந்து சென்று கடவுள் நிலை அடைய உபாயம் செய்யப்பட்டன. அவற்றால் அபாயம்தான் ஏற்பட்டு அழிவுற நேர்ந்தது கண்கூடு. ஆகையால் இப்போது தோன்றியுள்ள அகமிருந்து அனகமாக விளைவுற்ற ஆனந்த வாழ்வு நல்கும் தயவு நெறியே., சுத்த சன்மார்க்கம், பெருநெறி, பொது நெறி என ஏற்க வேண்டியுள்ளது உலகமெல்லாம்.
தயவு DAEIOU
அனைத்து நாட்டிற்கும் பொது மொழியாகவுள்ள ஆங்கிலத்தில், நம் தயவின் விளக்கத்தை எடுத்து விரித்து வழங்கி உதவத் திருவருளே முற்பட்டுள்ளது. த – ய – வு இம் மூவெழுத்துக்களையே DA, EI, OU என எழுதி, “தயவு”, என ஒலிக்கக் கூடியதாய் இருக்கின்றது
D என்பது Divine Light எங்கும் நிறை கடவுட் பெருஞ்ஜோதியாம். அதின் ஒரு சிற்றணு நம், சிரநடு சிற்ஜோதியாய் ஒளிர்கின்றது. அவ் ஒளியே, கடவுட் சிற்றுருவும் நம் ஆன்ம வடிவுமாக இருக்கின்றது. சத்விசாரத்தால் இந்த அக ஒளி நிலையுற்று அதுவாகி இருந்து கொண்டு, அருட்பெருநெறி வாழ்வு மேற்கொள்ளவே, “தய” உடன் “வு” சேர்த்து தயவு அனுபவம் பெறச் செய்வதாம். இந்த வு-அகவடிவைச் சூழ்ந்து நிறைவாழ்வு மலரச் செய்யவே, இது “வ் – உ” என்ற வகரமெய் அருளியல் வடிவும், உகரவுயிர் ஆம் ஐந்தாம் எழுத்தால், பிரபஞ்சத்து (பஞ்சம்-ஐந்து) யாவுமாய்ச் செயல்படுகின்றதாம்.
மனிதப் பிறப்பு வாழ்வில், கடவுள் ஒளியினின்று எழுந்து பரவும், பொருட் சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி யோக சக்தி, அருட்சக்தி எனும் ஐஞ்சக்தியால் உடல், உயிர் ஆற்றல், ஞான உணர்வு, யோகானுபவ சித்துச் செயல்கள், முடிவாக, பேரின்ப நிறைவாழ்வும் கிடைக்கப் பெறுகின்றனவாம். இவ் வுண்மையே, D – என்பதோடு கூடிய “AEIOU” என்னும் ஆங்கிலத்திலுள்ள ஐந்து உயிர் எழுத்துக்களே சுட்ட வந்துள்ளனவாம். இவை ஒவ்வொன்றும், ஓர் ஒரு சக்தியை முறையே குறிக்கும். ஐஞ் சொற்களின் முதல் எழுத்துக்களாக அமைந்துள்ளன. அவையாவன:--
1) Atom; 2) Energies; 3) Intellectual knowledge; 4) Omnisoul Power and 5) Universal Blissful Life. இதனால், இந்த ஆங்கிலச் சொற்பொருள் ஒருவனுக்கு நம் தயவுப் பேரின்ப வாழ்வு வருவிக்கும் உண்மை அறியலாம்.
இத் தயவு நிறை வாழ்வுக்கு முதலில் சத்விசாரம் செய்து உள்ளொளி நிலையைக் கொண்டிடுதல் வேண்டும். பின், அந் நிலையில் பிறழாது உணர்வால் இருந்து கொண்டே உலக வாழ்வில், உயிர் விளக்க அறிவு விளக்கப் பரோபகாரச் செயல் புரிந்து கொண்டே இருத்தல் வேண்டும். இது குறித்தே, தலையிடத்தும் கையினும் DAEIOU வெளிப்பட்டுள்ளதாம். இதனை Head, Hand இரு சொற்களின் ஒவ்வொன்றின் அந்தத்தில் D-யே வந்து, ஐந்து உயிர்ச் சக்தித் தொடர்பு கொண்டுள்ளதாம். சத் விசாரம் செய்வதற்கும். பரோபகாரம் புரிவதற்கும் நமக்குக் காலும் கையும் ஐவிரல்களாய் படைத்துள்ளது இயற்கை.
தமிழ் கண்ட இத் தயவு உண்மையை உலகவர் எல்லாம் தம் தம் மொழி வழி கண்டு கொண்டு வாழ வேண்டியே இவ் ஒப்பற்ற தயவுப் பெருநெறி இது சமயம் வெளியாகி இருக்கின்றது. இது வடலூர் வள்ளல் திருவருட்பிரகாசர் அனுபவத்திற் கண்டு ஏற்று வழங்கியுள்ள மெய்ந் நெறியாகும்.
அருட்பெருஞ் ஜோதிக் கடவுளே இதுவரை, அகமிருந்து தன் உண்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார். அதனால் மக்கள், அறிவினாற் கண்டு அடைந்ததெல்லாம், வேறாய் இருந்து பெற்ற குறைவுடைய சக்தி சித்தி ஏகதேச வாழ்வேயாம். அறிவினாற் கண்ட அக நிலை பெற, புறநிலை நீத்தான். அதனால் வாழ்வற்று, அனுபவம் தடைபட்டுப் போனான் மனிதன். இப்போது அறிவு நிலைக்கு மேல், மெய்யன்பு அல்லது தயவு நல் விளைவு கொண்டுவிட்டிருத்தலின், நம் பதி,. தன்னையே முழுமையாக அருளி நம்மையும் தன்னையும் ஓர் ஒருவாய், அருட்பிரகாசமாய் தயாஒளியாய், அதுவும் “தயா” “ஒளி” என இரு பகுதியாய் இல்லாத “தயவு” என்ற இரண்டற்ற அத்துவிதமான ஒரு சொல்லாய் வழங்குவித்துள்ளார்.
இதற்குத்தான், கடவுளே தன்னைத் தமிழ் வண்ணமாய் ஆதி முதலே ஆக்கித் தந்துள்ளார் என இன்று அறிகின்றோம். இவ்வளவு இரகசியமும் இத் தருணம் வெளிப்படக் காரணம், அனக சுத்த தயவுக் கடவுள் மனிதனின் அக வானில் உதயமாகி உய்வளிக்க வந்துள்ளதே உண்மைக் காரணம்.
ஆறாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலே, தமிழின் மூலம் உலகவர் எல்லாம் தயவுப் பெரு நெறியின் மாண்பை அறிந்து கொள்ளவும்,. அதனை நித்திய வாழ்வில் ஏற்று நித்திய இன்பில் தழைத்து ஓங்கவும் வழங்கப் பெறுகின்றது. சோதனையும் வேதனையும் நீங்கிட, பழமையான சமய மத போதனைகளின் போதை எல்லாம் ஒழிந்து போகவே, ஒரு நற்பாதையாம் இத் தயவுப் பெருநெறியால், தயவுச் சாதனை முற்றிச் சாத்தியானுபவம் கைகூட அத் தயாநிதியையே சதா அகமிருந்து அனகமாக வேண்டுகின்றேன்.
இந்த உலகுக்கொரு நெறியாம் தயவுப் பெருநெறியை. உலக மக்கள் எல்லாம் ஏற்று வாழ்ந்து தழைத்து ஓங்குவார்களாக.
தயவு.
தயவுப் பாக்கள்.
1) தயாவொளி விளக்கே தயாபரஞ் சுடரே
தயாபெருஞ் ஜோதிஎன் அரசே
தயாவெளித் தலத்தே தயாமணி மன்றில்
தயாஅரி ஆதனத் தமர்ந்து
தயாமுறை விளங்கத் தயாநெறி யோங்கத்
தயா அரசியற் பெருஞ் செங்கோல்
தயாஇயல் உண்மை தயாவின்பம்
தயாவுல கெலாஞ்செலுத் துகவே.
2) தயவே இறைவன் தனியுரு காண்மின்
தயவக நின்றே வுகர(அ)னந்தங்கதிர்
தயவாய் அனகம் தழைத்திடு கின்றதை
தயவால் உணர்ந்து தயாசெயல் புரிமின்.
3) தயாபெருஞ் ஜோதித் தலைவாநீ எங்கும்
வியாபக மாயுள்ள மெய்மை – தியானமதிற்
கண்டேன் மனவாக்குக் காயத்தே நீங்காது
தண்ணென் றிருத்துன் தயவு.
4) தயாநிதி நம்பதி சகலமுமாகி
சார்கின்றார் அவர்தமை நாம்பெறல் வேண்டும்
வியாகுல மேவாது எனைமேவு மனமே
வினைமேவாத் தயவோடு தொண்டுசெய் மனமே.
தயவுக் குறள்.
1. தயவுடையார் பூமேல் தவமுயன்று சூழ்நர்
துயர்துடைத் தீவார் சுகம்.
2. காண்பரிய மெய்ப்பொருளைக் காணத்தமிழ் மொழியே
மாண்புடையார் வாய்மலர்ந்த வாக்கு.
3. பாழடிக்கும் விஞ்ஞானப் பாடெல்லாம் பாழாக
ஊழடிக்கும் மெய்ஞ்ஞானத் தொன்று.
4. இறப்பென்னும் பேதமை இன்றே அழிக்குஞ்
சிறப்பாம் அறிவைநீ சேர்.
5. சமய மதாதீத சத்திய ஞான
அமல தயவே அறிவு.