DAEIOU - தயவு
21.3.2010-மதுரை சிந்தாமணியில் ஒரு லலிதாமணி-சுத்த சன்மார்க்கத்தில் ஒரு மைல்கல்.

21.3.2010-மதுரை சிந்தாமணியில் ஒரு லலிதாமணி-சுத்த சன்மார்க்கத்தில் ஒரு மைல்கல்.

மதுரையில் ரயில்வே துறையில் ;பணிபுரிந்து, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, சுத்த சன்மார்க்க நெறியினைத் தீவிரமாகக் கடைப்பிடித்து ஜீவகாருண்யப் பணியினை தமது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்ட செல்வி லலிதாமணி கடந்த பிப்ரவரி மாதம் உயிர் அடக்கம் ஆனார். 38 வயதே ஆன அவர், தாம் வாழ்ந்த காலத்தில், ரயில்வே துறையில் அலுவல் சார்ந்த நேரம் போக எஞ்சிய நேரங்களில் எல்லாம் சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்புவதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.



அவர் அடக்கம் செய்யப்பட்ட மதுரையை அடுத்த சிந்தாமணியில் 21.3.2010 ஞாயிறு அன்று அவர்கள் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் காலை 10.30 மணி அளவில் துவங்கியது. ஊமச்சிகுளம் சன்மார்க்க அன்பர் திரு சந்திர மோஹன் அவர்கள் தலைமையில், அருட்பெருஞ் ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல சன்மார்க்க மூத்த அன்பர்கள், திரு அருட்பாவிலிருந்து பல பாக்களைப் பாடினர்.

அதன் பின்னர், நீத்தார் பெருமை என்ற தலைப்பில், அருள் ட்ரஸ்ட் நிறுவனர் திரு முரளீதரன் அவர்கள் பேசினார். ஜீவகாருண்யத் தொண்டினை, மிகச் சிறந்த முறையில் செல்வி லலிதா மணி அவர்கள் மேற்கொண்டு ஒழுகினார். எனவே, தாம் அவருடன் இணைந்து பணிபுரிந்ததாகத் தெரிவித்தார். அவரது உயிர் அடக்கம் சன்மார்க்க உலகத்துக்கு இழப்பு என்று தெரிவித்தார்.

அடுத்து திருநெல்வேலியில் சன்மார்க்க சங்க ட்ரஸ்ட் வைத்து நடத்தும் அன்பர் திரு அருணாசலம் அவர்கள் பேசினார். செல்வி லலிதாமணி அவர்களை 2 முறை மட்டுமே சந்த்தித்துள்ளேன். சலனமில்லாமல் ஜீவகாருண்யத் தொண்டினை மேற்கொண்டு ஒழுகியவர். அவரை சன்மார்க்க உலகுக்கு ஈந்த அவரது பெற்றோர் மிகவும் பாராட்டுதலுக்கு உரியவர்கள் என்றார்.

ஐயர் பங்களாவிலிருந்து வருகை புரிந்த சன்மார்க்கி திருமதி சிவகாமி அம்மா அவர்கள், இவ்வளவு சிறுவயதில், சன்மார்க்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு தன் வாழ்வினை அர்ப்பணம் செய்த செல்வி லலிதாமணி மிகவும் பாராட்டுக் குரியவர். என்றார்.



திரு அருட்பா ரெங்கநாதன், மதுரை. செல்வி லலிதா மணி அவர்களின் குடும்பத்தாருடன் தாம் நெருங்கிய தொடர்பு உள்ளவர் என்றார். தம்மிடம் வரும்போதெல்லாம், தாம் சொல்வதை மட்டுமே ஊன்றிக் கேட்கும் குணம் உள்ளவர், சன்மார்க்கம் தழைக்க மிகவும் பாடுபட்டவர் என்றார்.

செட்டியபட்டி திருமதி அம்மாக்கண்ணு. பல பொழுதுகளில் செல்வி லலிதா மணி அவர்கள், தம்மைச் சந்தித்து, சன்மார்க்கம் பற்றி உரையாடுவதுண்டு என்றும், செட்டியபட்டிக்கே சன்மார்க்க அன்பர்களுடன், அவர்கள் வருகை புரிந்து சன்மார்க்கம் தழைக்க, பிரச்சாரம் செய்ததை மறக்கவே முடியவில்லை என்றார்.

மேனேஜிங் ட்ரஸ்டி, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், மதுரை.

செல்வி லலிதாமணியை ஐயர் பங்களாவில் ஏற்கனவே திருமதி சுந்தராம்பாள் அவர்கள் நடத்திய சன்மார்க்க சங்கத்தில் செல்வி லலிதாமணியை ஒரு வாராந்திரக் கூட்டத்தில் சந்தித்ததாகவும், அவர்களது பேச்சு, மிகவும் தேர்ந்த சன்மார்க்க அன்பரின் பேச்சினை ஒத்திருந்ததாக தெரிவித்தார். பின்னர் விசாரித்த வகையில், அவரது தந்தையார், வீதிகள் தோறும் ஆர்மோனியப் பெட்டியுடன் சென்று, வள்ளற் பெருமானின் சன்மார்க்க போதனைகளையும், திரு அருட்பாவினையும் பரப்பியவர் என்ற விபரமும், அவரது மறைவுக்குப் பின், செல்வி லலிதா மணி, சென்னையில் ரயில்வேயில் பணிபுரிந்த போது, மணிமங்கலம் சாது சுப்ரமண்யம் அவர்களிடம், முறையான, சன்மார்க்கப் பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் தமக்குத் தெரிய வந்ததாக தெரிவித்தார்.



பெண்களுக்கான சன்மார்க்க பயிற்சி முகாமை தாமே முன்னின்று அவர் நடத்தினார்.



2006 ஆம் ஆண்டில், அவர், மதுரையிலிருந்து, சன்மார்க்கப் பெண்கள் குழுவினருடன், தைப்பூச விழாவில், வடலூருக்கு வந்து, சன்மார்க்க இளைஞர் சங்கம் துவங்குவதற்கு, உறுதுணையாக இருந்தார். அது குறித்த நோட்டீஸுகளை, வடலூர் மற்றும் மேட்டுக் குப்பம் ஆகிய இடங்களில், சன்மார்க்க அன்பர் திரு முரளீதரனுடன் இணைந்து, வினியோகம் செய்தார்.

தன் வீட்டிலேயே, பெண்களுக்கான சுத்த சன்மார்க்க விழிப்புணர்வு கூட்டங்களை அவர் நடத்தினார்.

மதுரை ஏர்போர்ட் அருகில், கடந்த ஆண்டு, கோடை விடுமுறையின்போது,பரம்புப்பட்டியில் மூத்த சன்மார்க்க அன்பர் திரு பாலகிருஷ்ணன் அய்யா அவர்களின் சன்மார்க்க சங்கத்தில், சுமார் 15 சிறுவர்களுக்கான பயிற்சி முகாமினை நடத்திக் காட்டினார். திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் போதித்த வள்ளற் பெருமானின் தயவுப் நெறி குறித்து, பேசுவதற்கு ஒரு நாள் தம்மையும் அவர் அங்கு வரவழைத்தார் எனத் தெரிவித்தார்.

மேலும், மதுரை மாவட்டத்திலே, கிராமங்கள் தோறும் சன்மார்க்கப் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து அவருடன் ஆலோசித்தபோது, தாம் முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாகத் தெரிவித்ததுடன். கீழ்க்காணும் கிராமங்களில் வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்கு தாமும், பள்ளிச் சிறார்களுடன் வந்து ஒத்துழைத்தார் என்பதை தெரிவித்தார். தீவிரமாக சுத்த சன்மார்க்க நெறி குறித்து, சொற்பொழிவாற்றி, அங்கெல்லாம், சன்மார்க்கம் பரவுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

  1. குட்லாடம்பட்டி வாடிப்பட்டி தாலுகா
  2. தென்கரை
  3. விக்கிரமங்கலம் உசிலம்பட்டி தாலுகா
  4. சிந்தாமணி, மதுரை தாலுகா.
  5. செட்டியபட்டி, உசிலம்பட்டி தாலுகா.

மதுரையினைப் பொறுத்த மட்டில், சன்மார்க்க ஒழுக்கம், ஜீவ காருண்யம் பரவுவதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். அவரது பணி, பாராட்டுதற்கு உரியது எனத் தெரிவித்தார். சன்மார்க்க உலகம், அவரது பணியினை என்றென்றும் பாராட்டிக் கொண்டிருக்கும் எனவும், அவரை ஈன்றெடுத்த அவரது பெற்றோரையும் பாராட்டினார்.



பின்னர் ஜோதி பாடல் மற்றும் விண்ணப்பம் ஆகியவை பாடப்பட்டு, நிகழ்ச்சி 1.45 மணி அளவில் நிறைவு செய்யப்பட்டது. வந்திருந்த சன்மார்க்க அன்பர்களுக்கும், ஏழை எளியோருக்கும் அன்னதானம் செய்து விழா நிறைவு பெற்றது.