<<
Upcoming Events
Space Directory
Web Albums
eBook Download
Audio
Romanize Tamil
Search in ThiruArutpa
Print
Post your comment

3.1.2010-திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் பூச நாள் விழா.

Ramanujam
posted 8 months ago
05 Jan 2010 22:02:32 GMT 10:02:32 PM

127 views


3.1.2010 ஞாயிறு-திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ் ஜோதி தயவு ஆலயம், பொன்னகரம்.

 

மாத பூச விழா நிகழ்ச்சி.

 

-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-

 

திண்டுக்கல் நகரை அடுத்த பொன்னகரத்தில் அமைந்துள்ள அருட்பெருஞ் ஜோதி தயவு ஆலயத்தில், 3.1.2010 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 10.00 மணி அளவில், மாதாந்திர பூச விழா நிகழ்ச்சிகள் துவங்கின.

 

       

 

இந் நிகழ்ச்சிகளை, மாதந்தோறும், திண்டுக்கல் திரு ராமலிங்கம் மற்றும் அவர் குடும்பத்தினர் சன்மார்க்க அன்பர்களின் துணையுடன் நடத்தி வருகின்றனர்.

 

     

 

சுத்த சன்மார்க்கக் கொடியேற்றத்திற்குப் பின், அகவல் பாராயணம் நடைபெற்றது. மூத்த சன்மார்க்க அன்பர்களான திரு     அருணகிரி, திரு விசுவநாதன், கோயம்புத்தூர் கிணத்துக் கடவு அன்பர் திரு வீர குருசாமி மற்றும் அனைத்து சன்மார்க்கிகளும் இந்த

நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

.       

 

அதன்பின், திண்டுக்கல் தயவு விசுவநாதன், அனைவரையும் வரவேற்றார். மார்கழி மாதத்தில் நடைபெறும் இந்த பூச விழாவின் சிறப்பினையும், சுவாமிகளின் தயவுக் கொள்கைகளையும் பின்பற்றி வாழ வேண்டியதன் அவசியத்தினை அவர் தமது உரையினில் குறிப்பிட்டார்.

 

வள்ளற் பெருமான் அருளிய பேருபதேசம் திண்டுக்கல் அன்பர் திரு சோமசுந்தரம் அவர்களால் வாசிக்கப்பட்டது. இந்த அன்பர் சுவாமிகளின் தயவுப் பெரு நெறி  குறித்து, P.hd. ஆய்வு செய்து வருகின்றார்.

 

                    

 

திண்டுக்கல் அன்பர் திரு பொன் சங்கரலிங்கம், அருட்பெருஞ் ஜோதி அகவலில் இரண்டு வரிகளுக்கு, சுவாமி சரவணானந்தா அவர்களின் உரையினைப் படித்தார். கடந்த மாதத்தில் நடைபெற்ற சொற்பொழிவில், அகவல் 2 வரிகளுக்கு அவர் சொன்னதை மீண்டும் நினைவுபடுத்தினார். வள்ளற் பெருமான் அடைந்த நிலையினை அடைவதற்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் முயல வேண்டும். பழக்க வசத்தால், நாம், கூட்டம் முடிவடைந்ததும், உலகியல் வாழ்வில் போக்கி விடுகின்றோம். சுவாமிகள் அருளியது போல், அருட்பெருஞ் ஜோதியை அகம் கொண்டு, வாழ்வு நடத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

 

கோயம்புத்தூர் கிணத்துக் கடவு அன்பர் திரு வீர. குருசாமி, தமது வாழ்வில், வள்ளற் பெருமான் காட்சி கிடைத்ததைப் பற்றியும், நாமெல்லாம் சுத்த சன்மார்க்கம் ஏன் கடைப்பிடித்து ஒழுக வேண்டும்…அதற்கு சுவாமி சரவணானந்தா அவர்கள் கூறிய தயவு நெறிமுறை எவ்வாறு உதவிகரமாக உள்ளது என்பது குறித்து மிக விளக்கமாக உரைத்தார்.

 

சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய திரு அருட்பா பாடல்களுக்கான விளக்கவுரை நூல்கள் மற்றும் தயவு நூல் அறக்கட்டளையின் மூலம் வெளியாக்கப்பெற்ற பல நூல்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

 

மதுரை வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி பேசும்போது, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி இன்று பல இடங்களிலும், அனைவரையும் ஈர்த்து வருகின்றது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை இந் நெறி பெற்று, தற்போதெல்லாம் எழுச்சி மாநாடுகளாக நடத்தப்பட்டு வருவதை அவர் தெரிவித்தார். உளுந்தூர்ப் பேட்டையில், இதே நாளில், 3.1.2010 இளைஞர்களின் எழுச்சி மாநாட்டினை அந்த மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருப்பதைப் பற்றி அவர் தெரிவித்தார்.

 

வள்ளற்பெருமான் சொன்னபடி பழம்பெரும் ஞானிகள் பூட்டிய பூட்டினை அவர் திறந்து வைத்தார். தயவுதான் தம்மை மேலேற்றி வைத்தது. தயவுக்கு ஒருமை வேண்டும். ஒருமை வந்தால்தான் தயவு வரும். என்றதற்கேற்ப, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள், தயவினையே ஏற்று, தமது வாழ்நாளில் அனைவருக்கும் ஒரு முன் மாதிரியாக வாழ்ந்து காட்டினார் என்றார்.

 

சென்னையில் 23.12.2009 முதல் 25.12.2009 வரையில் மாலையில் 4.00 மணி முதல் 7.30 வரை திரு அருட்பா பாடல்களும், பின்னர், 7.30 மணி முதல் இரவு 8.30 வரை திரு அருட்பா நடன நாட்டிய நிகழ்வுகளும் நடைபெற்றதை அவர் சொன்னார். இதற்குக் காரணமாக இருந்து செயல்பட்டு வரும் திருபுவனம் ஆத்மநாதனின் செயல்களை அவர் எடுத்துரைத்தார்.

 

அதற்கு அடுத்தாற்போல், திருச்சி மாநகரில், கடந்த 26.12.2009 மற்றும் 27.12.2009 ஆகிய இரு நாட்களில், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், மற்றும் புதுக்கோட்டை சன்மார்க்க சங்கங்கள் ஒருங்கிணைந்து நடத்திய வள்ளற் பெருமானின் 187வது வருவிக்கவுற்ற நாளின் சிறப்பினை எடுத்துச் சொன்னார்.

 

31.12.2009 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திரு உத்திரகோச மங்கையில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன முதல் நாள் விழாவில், இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் ட்ரஸ்டின் அன்னதானப் பணிகள் குறித்து அவர் தெரிவித்து, திரு ஜோதிமுருகன் அவர்கள் துவங்கிய இப்பணி, அவரது மைந்தன் திரு ராஜவீர் மற்றும் ஹரிலக்ஷ்மி ஆகியோரால் மிகச் சிறப்புறச் செயல்படுத்தப் பட்டு வருவதை அன்பர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். வரும் பக்தர்களுக்கெல்லாம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் ட்ரஸ்ட், ஒரு அன்னதானச் சத்திரமாகச் செயல்பட்டதை அவர் சொன்னார்.

 

சென்னையில் 30.12.2009 முதல் 8.1.2010 வரையிலும், புத்தகக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதையும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் (பச்சையப்பா கல்லூரியின் எதிர்புறம் அமைந்துள்ள) ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த புத்தக விழாவில், தூத்துக்குடி சன்மார்க்க சங்கத் தலைவர் திரு கலியுக வரதனின் சீரிய முயற்சியில், திருவருட்பிரகாச வள்ளற் பெருமானின் அருட்பாக்கள், மற்றும் ஆடியோ சி.டி.கள் மற்றும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் புத்தகங்கள் விற்பனைக்கென ஸ்டால் எண்.10 செயல்பட்டு வருவதையும், புத்தக விற்பனையில் பங்கேற்க விரும்புவோர், அங்கு சென்று, அன்பர்களுக்கு உதவி செய்யலாம் என்பதையும் அவர் தெரிவித்தார்.

 

30.1.2010 அன்று வடலூரில் நடைபெறும் தைப்புச விழாவில், அனைவரும் பங்கேற்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

 

மேலும், ஸ்ரீ லங்காவில், சாவகச்சேரி என்ற இடத்தில், அளவெட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்பர் திரு கேத்தீஸ்வரன் மற்றும் அவரது மனைவியார் திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோரின் சீரிய முயற்சியால், சத்திய ஞான கோட்டம் ஏற்கனவே எழுப்பப் பட்டுள்ளதையும், எஞ்சியுள்ள வேலைகளை முடித்து, வரும் 6.9,.2010 நாளன்று, அங்கு, தர்மச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் துவங்கப்பட வுள்ளது பற்றியும் தெரிவித்து, அதற்கென, இந்தியாவிலிருந்து சன்மார்க்க அன்பர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு சிறப்புச் செய்யும்படி திரு கேத்தீஸ்வரன் அவர்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார். அவர், சுவிட்சர்லாந்திலிருந்து, வரும் தைப்பூச விழாவின்போது, வடலூர் வருகை தர உள்ளதையும் அவர் அன்பர்களுக்குத் தெரிவித்தார். எனவே இந்த மாதப் பூச விழாவில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவரும், ஸ்ரீலங்கா சாவகச்சேரியில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்ள ஏதுவாக, பாஸ்போர்ட் முதலானவற்றை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

இந்தக் கூட்டத்திற்கு பெருவாரியாக பல் வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்து கலந்து கொண்ட அன்பர்களையும், விழாவில் பேசிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

 

சுவாமிகளின் தயா தியானத்தை தேனி மாவட்டம் அன்பர் பழனிச் செட்டிய பட்டி திரு .ராம்குமார் அவர்கள் வாசித்தார்.

 

சுவாமிகளின் சந்நிதியில் சிறப்புரை ஆற்றிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

 

ஜோதி வழிபாட்டினை திரு ராமலிங்கம் செய்தார்.

 

வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கிய பின், 3.15 மணிக்கு

 

இந்தப் பூச விழாவில் சுமார் 200 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
A. RAMANUJAM
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Events & Meetings

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace