DAEIOU - தயவு
11.10.09-கோயம்புத்தூர் ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ்-வள்ளலாரின் 187வது அவதார விழா மற்றும் 18வது ஆண்டு விழா.

கோயம்புத்தூரில் ஸ்ரீராம் கார்த்திக் பாலிமர்ஸ்-வள்ளலார் 187வது வருவிக்கவுற்ற நாள் விழா.

ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனத்தின் 18வது ஆண்டு விழா.

நடைபெற்ற இடம்: கெளமார மடாலயம், சிரவணம்பட்டி, கோயம்புத்தூர்.

நாள் 11.10.2009 ஞாயிற்றுக் கிழமை.
கோயம்புத்தூரில், எல்.ஜி.பி.நகரில் இயங்கி வரும் ஸ்ரீராம் கார்த்திக் பாலிமர்ஸ் உரிமையாளர் திரு ராம்தாஸ் அவர்கள், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளில் தீவிர பற்றுக் கொண்டவர். அதனைக் கடைப்பிடித்து வாழ்ந்து, தமது நிறுவன ஊழியர்களையும் அந்த நெறியிற் செலுத்திக்கொண்டு வருகின்றவர். திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் தயவுக் கொள்கைகளின்பால் மிகு பற்றுக் கொண்டவர்.
வருடந்தோறும், தமது நிறுவனத்தின் ஆண்டு விழாவினை, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்பும் பெரு விழாவாக கொண்டாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அந்த வகையில், இந்த ஆண்டு, அந் நிறுவனத்தின் 18வது ஆண்டு விழாவினையும் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் 187வது வருவிக்கவுற்ற நாள் விழாவினையும் கோயம்புத்தூரில் சிரவணம்பட்டியில் அமைந்துள்ள கெளமார மடாலயத்தில் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
கெளமார மடாலயத்தின் சிறப்பு.
இந்த மடாலயத்தில், 1987ஆம் ஆண்டில் மார்ச் 25, 26, 27 ஆகிய 3 நாட்களில், உலக அமைதிக்காக 108 (யானை) கஜ பூஜைகளைக் கொண்டு வேள்வி விழா நடைபெற்றுள்ளது.
மேலும், இந்த மடாலயத்தில், பள்ளிக் கூடமும், அனைத்து தெய்வங்களும் ஒருசேரப் பெற்ற ஆலயங்களும் அமைந்துள்ளன.
அறுமுக பகவானான முருகனின் அவதாரம் விளக்கும் சரவணப் பொய்கை தோற்றங்கள் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.
தவிரவும், கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பல ஆன்மீக மகான்களின் சமாதியினையும் உள்ளடக்கியதாக இந்த கெளமார மடாலயம்
உள்ளது.
பக்த கோடிகளும், பொது மக்களும், இந்த மடாலயத்தினைத் தரிசித்த வண்ணம் உள்ளனர்.
பெரும் பெரும் யாகங்களும், வேள்விகளும் நடைபெறும் ஒரு சிறந்த இடமாக இந்த கெளமார மடாலயம் விளங்குகின்றது.
இவ்வளவு சிறப்புப் பெற்ற ஒரு இடத்தில், ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனர் திரு ராம்தாஸ் அவர்கள், தமது நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் ஒத்துழைப்புடன் சுத்த சன்மார்க்கப் பெருவிழாவாக இங்கு கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்தார்.
11.10.2009 அன்று காலையில் அகவல் பாராயணம் செய்யப்பட்டது.
மதுரையிலிருந்து சென்றிருந்த மூத்த சன்மார்க்க அன்பர்கள் திரு ஹரி கோவிந்தன், திரு தாயுமானவர், திரு அருட்பா ரெங்கநாதன் போன்றோர் இந்த நிகழ்ச்சியில் முக்கிய பங்காற்றினர்.
சுத்த சன்மார்க்க கொடி ஏற்றி விழா துவங்கப்பட்டது.
அதன் பின் சன்மார்க்க உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
அருட்பா மற்றும் தயவுப் பெரு நெறி குறித்த புத்தகங்கள், ஜோதிக் கூண்டு, திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் விற்பனையினை கீழ்க்காணும் இருவரும் விழா முகப்பு வாயிலில் கவனித்துக் கொண்டனர்.
1. திரு மருதுபாண்டியன், மதுரை
2. திரு சிவக்குமார், திருமதி தமிழரசி தம்பதியர்., சரவணம்பட்டி
திரு அருட்பா தெய்வ இசை அமுதம் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய ஆடியோ சி.டி.கள் இங்கு விற்பனைக்குக் கிடைத்தன. மிகவும் குறைந்த விலையில் ஆடியோ சி.டி கள் இங்கு விற்கப்பட்டதால், அவற்றைப்.பெற்ற அன்பர்கள், மிகவும் மகிழ்ந்தனர்.
அன்பர் திரு பி.ராமச்சந்திரன் இவ் விழா நிகழ்ச்சிகளைக் காண வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
அன்பர் திரு பி. ஜோசப் ஸ்டாலின் அவர்களால், ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.
.ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் உரிமையாளர், திரு V.S. ராம்தாஸ் அவர்கள் தமது துவக்க உரையில், வள்ளற் பெருமான் சொல்லிச் சென்ற சுத்த சன்மார்க்க நெறியினை அனைவரும் தவறாது வாழ்வில் பின்பற்றி நடந்தால், அவர் அடைந்த நிலையான மரணமிலாப் பெருவாழ்வு சித்திப்பது நிச்சயம். என்றார். அதற்கு, பெருமான் கற்பித்துத் தந்த ஒழுக்க நெறிகளை மிகத் தீவிரமாக அனைவரும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கும் மேலாக, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வகுத்த தயவுக் கொள்கைகளின் பால் அனைவரும் பற்றுக் கொண்டு, வாழ்வியலை தயா வாழ்வியலாக நடத்த வேண்டும் என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார். மேலும், ஒவ்வொருவரும் அனக நெறியை தாமும் பின்பற்றி தமது குடும்பத்தாரும் பின்பற்றத் தக்க நடவடிக்கையினை மேற்கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல். இதனை ஒவ்வொரு அன்பரும் தவறாமல் தமது வாழ்வில் கடைப்பிடித்து சுத்த சன்மார்க்க நெறியில் தம்மை இணைத்து, மேலேற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அவரை அடுத்து அந் நிறுவனத்தில் பணியாற்றும் திரு எஸ். ராமச்சந்திரன் அவர்கள், அறிவியல் அருள் அறிவியல் என்ற தலைப்பில், கணிணிப் பொறியின் மூலம் பவர் பாய்ண்ட் (Power point presentation) மூலம் விளக்கம் கொடுத்தார். விஞ்ஞானத்திற்கும், மெய்ஞ்ஞானத்திற்கும் உள்ள நிலைகளை அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
அடுத்ததாக குழந்தைகள் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் கொள்கைகளை தமது பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு குழந்தையும், தனது மனத்தில் திரு அருட்பாவையும், வள்ளற் பெருமானின் கொள்கைகளையு,ம் தாமும் உள்வாங்கி, அதனை சபையோரும் உணர்ந்து கொள்ளும் விதத்தில் தமது உரை விளக்கத்தினை வியத்தகு வகையில் மேடையில் முழங்கினர்.
அந் நிறுவனத்தில் பணிபுரியும் திரு எல். ராஜாராம் என்பவர், ஒரு பறவையின் சோகம் என்பதையும்,மனிதனும் தெய்வமாகலாம் என்பதை;போட்டோக்களின் மூலம் விவரித்தார்
அடுத்து சுத்த சன்மார்க்கப் பயிற்சி பெற்ற, குழந்தைகளிடம் கேள்வி பதில் முறையில் (Quiz-Juniors batch) அவர்களிடமிருந்து எளிதாக பதில்களை திரு திருமுருகன் வெளிக் கொணர்ந்தார்.
ஒவ்வொரு குழந்தையும் பயிற்சியில் ஒருவரை ஒருவர் விஞ்சி நின்றனர்.
சரவணம்பட்டியில் தயா ஒளி இயக்கம் நடத்தும் மேற்காணும் நிறுவனத்தில் பணியாற்றும் திரு சிவக்குமார், நடைமுறை வாழ்வில் சுத்த சன்மார்க்கத்தைக் கடைப்பிடிப்பது எவ்வாறு என்பதை மிகவும் எளிய முறையில் அனைவருக்கும் விளக்கிக் கூறினார்.
சின்னவேடம்பட்டி என்பது, விழா நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறு குடியிருப்பு. இங்கு, சொற்ப ஊதியம் பெறும் மக்கள் வசிக்கின்றனர். இந்தக் குடியிருப்பில், தினந்தோறும் காலை உணவளிக்கும் பணியினை ஸ்ரீ ராம் கார்த்திக் உரிமையாளர் திரு ராம்தாஸ் அவர்கள், அன்பர் திரு சிவகுமாரின் மூலம் நிறைவேற்றி வருகின்றார். இப் பணியில் திரு சிவகுமார் மற்றும் அவரது துணைவியார் திருமதி தமிழரசி ஆகியோரும் இணைந்து அக் குடியிருப்பு மக்களைக் கவனித்துக் கொள்கின்றனர்.
தொடர்ந்து அங்கு வசிக்கும் குழந்தைகள் தயாவொளி இயக்கம் மூலம் நடைபெறும் பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு, சுத்த சன்மார்க்க கல்வியில் நன்கு முன்னேறி வருகின்றனர். புலால் உண்ணும் வழக்கத்தில் இருந்த அக்குடியிருப்பின் குழந்தைகள், அடியோடு மாறி, புலால் தவிர்த்து விட்டனர்.
இந்தக் குடியிருப்பில் உள்ள குழந்தைகள் ஆர்வத்துடன் திரு அருட்பா பாடல்களுக்கு, நாட்டியம் ஆடினர்,
12.00 மணி அளவில், அக்குழந்தைகள் நாட்டியம் ஆடி, அனைவரையும் கவர்ந்தனர்.
குறிப்பாக திரு அருட்பாவில் “ஆடிய பாதம்” என்ற பாடலுக்கு அவர்கள் அபிநயம் பிடித்து அந்த அரங்க மேடையில் பாடி ஆடிய காட்சி, கலந்து கொண்ட அன்பர்களின் கண்களை விட்டகலாது நின்றது.
திரு அருட்பாவிற்கு நடனமாடிய சின்னவேடம்பட்டி குழந்தைகள்
அந்நிறுவனத்தில் பணி புரியும் திரு ஆனந்த் குமார், சுத்த சன்மார்க்கத்தைக் கடைப்பிடித்த பின் தனது வாழ்வில் ஏற்பட்ட சிறப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
12.10 மணி அளவில், உலக அமைதி மற்றும் ஆன்ம நேயம் சுத்த சன்மார்க்கத்தில் சாத்தியமா ? என்ற தலைப்பில், பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இரு அணிகளும் சளைக்காமல், தத்தமது வாதங்களை எடுத்துரைத்தனர். இறுதியில், நடுவர், தனது தீர்ப்பில், இன்றைய நாளில் மெய் இன்பத்தை அடைவதற்கு திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வகுத்துத் தந்த சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றுவதே சிறந்த வழி.. என தீர்ப்பு வழங்கினார். பட்டி மன்ற நிகழ்ச்சிகளும் பங்கேற்ற ஊழியர்கள் எடுத்து வைத்த செய்திகளும், பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது
12,50 மணி அளவில், திரு அருட்பா பாடல்கள் குழந்தைகளால் இசைக்கப் பட்டன.
பகல் நேர உணவு இடைவேளைக்குப் பின் 2.15 மணி அளவில் ஒற்றுமையே வலிமை என்பது பற்றி அந் நிறுவனத்தில் பணி புரியும் மகளிர் அணியினர் ஒரு அருமையான நாடகத்தை நடித்துக் காட்டினர்.
வள்ளலார் கண்ட உண்மைகள் என்ற தலைப்பில், 2.35 மணி அளவில் Senior Quiz programme நடைபெற்றது. திருமுருகன் இந்த நிகழ்ச்சியினை நடத்தினார்.
சுத்த சன்மார்க்க நெறி குறித்த போதனைகள் தவிர,. வள்ளற் பெருமானின் போதித்துச் சென்ற ஜீவ காருண்ய ஒழுக்கத்தின் பிரகாரம் (1) பிராணிகள் வதையினைத் தடை செய்தல் மற்றும் (2) மரம் வளர்க்கும் திட்டம்;செயல்படுத்தும்;ஆர்வலர்களையும் அவர், இவ் விழாவில் பங்கு கொள்ளச் செய்து அதன் சிறப்பினை, பங்கேற்போர் அறியும் வண்ணம் செய்து வருகின்றார்.
அந்த வகையில் 3.00 மணி அளவில் P.F.A. அமைப்பின் கோயம்புத்தூர் தலைவர் திருமதி கல்பனா வாசுதேவன் அவர்கள் மிருக வதை தடுத்தல் என்ற தலைப்பில் அருமையானதொரு சொற்பொழிவு நிகழ்த்தி, அனைவரும், வள்ளல் பெருமான் வகுத்த ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும்படி, புலால் உண்பதை தவிர்த்து, கொல்லா நோன்பினை வாழ்வில் தவறாமல் கடைப்பிடிக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.
அதனை அடுத்து, மேற்படி நிறுவனத்தின் ஊழியர்கள் கலந்து கொண்ட “பூமியைக் காப்பாற்றுவோம்” என்ற நாடகம் நடித்துக் காட்டப்பட்டது. மிகச் சிறப்பாக அந் நிறுவன ஊழியர் ஒவ்வொருவரும் இந் நாடகத்தில் நடித்து, பார்வையாளர்களை அசத்தினர்.
கிரீன் இந்தியா என்ற அமைப்பினை நடத்திவரும் அன்பர் திரு E. நாகராஜன் பேசினார். அவர், மரங்களை வெட்டுவது, இயற்கைக்கு எதிரானது. வீட்டிற்கு ஒரு மரம் தவறாமல் அனைவரும் வளர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இவர், தனது 20 வது வயதில், இக் கொள்கையினை வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டவர். (E.Nagarajan,All India Cyclist) தனது பயணத்தின் போது. பல மூத்த அரசியல் தலைவர்களையும் நேரில் சந்தித்து தனது அமைப்பு குறித்து விவரித்துள்ளார். பலரது பாராட்டுக்களையும் இவர் பெற்றுள்ளார்.
பின்னர், பொது வாழ்வில் சன்மார்க்கத் தொண்டாற்றுபவர்களை, ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் உரிமையாளர் திரு ராம்தாஸ் அவர்கள் கெளரவித்தார்.
மசக்காளி பாளையத்தினைச் சேர்ந்த அன்பர் திரு பிரபாகரன் சன்மார்க்கத் தொண்டு மற்றும் பிராணிகள் வதைத் தடுப்பு முனைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால், கெளரவிக்கப்பட்டார்.
சிறப்பான செயல்கள் செய்தவர்கள், இந் நிகழ்ச்சியின் இறுதியில் கெளரவிக்கப்பட்டனர். கடந்த 4 நாட்களாக அயராது அரும் பணி ஆற்றிய ஊர்தி ஓட்டுநர்கள் கெளரவிக்கப்பட்டனர். இரவு பகல் கண் துஞ்சாது அவர்கள் ஆற்றிய பணி பாராட்டப்பட்டது.


மதுரையிலிருந்து இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி, திரு ஏ.ராமானுஜம், நோக்கர்களின் பார்வையில் நிகழ்ச்சிகள் என்ற தலைப்பில் பேசினார்.
வள்ளல் பெருமான், அவர்கள் காண்பித்த சுத்த சன்மார்க்க நெறியினை உண்மையில் புரிந்து வாழ்வில் கடைப்பிடிப்பவர் ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் உரிமையாளர் திரு ராம்தாஸ் என்றார். அவரது பெரு முயற்சியினால், அவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரும், தயவின் அடிப்படையில் தமது இல்லங்களையே தயவு இல்லங்களாக மாற்றி அமைத்து வருகின்றார். குறிப்பாக, சின்ன வேடம்பட்டி இதற்கு ஒரு சான்று. அடுத்ததாக, அவருடன் பழகிவரும் தயவு அன்பர் மசக்காளி பாளையத்தைச் சேர்ந்த திரு பிரபாகரன், தனது வீட்டின் அருகாமையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் மக்களை, சுத்த சன்மார்க்க நெறிக்குக் கொண்டு வந்துள்ளார். இங்கே பங்கேற்ற இந் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒவ்வொருவருமே, தமது இல்லங்களை, தயவு இல்லங்களாக மாற்றி வருவது மிகவும் பெருமைக்குரிய விஷயம்.
சன்மார்க்க சங்கங்களிலே பலரும் கூடி ஆரவாரித்து செய்வதல்ல சுத்த சன்மார்க்கத் தொண்டு. ஒவ்வொருவரும் சிரநடுவில் எழுந்தருளியிருக்கும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவருடன் கூடாமல் கூடி, அவருடன் சங்கமித்திருப்பதுவே உண்மைச் சங்கம் ஆகும். சுத்த சன்மார்க்கத்தைப் பயின்று கொண்ட ஒவ்வொரு அன்பரும், தத்தமது இல்லத்தை தயவு விளங்கும் இல்லமாக மற்றுவதே உண்மை தயவு. அதன் மூலம் தொண்டு புரிவதே, தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்கள் சொல்லிச் சென்ற அருள் வாக்கு. அகமிருந்து அனகமாக விரிவதே சுத்த சன்மார்க்க உண்மை விளக்கமாகும். இங்கு எடுக்கப்பட்டுள்ள இந்தப் பெரு விழாவில் கலந்து கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் பேருக்குச் சமம். இப்பணி தொடர்ந்து செய்யப் பட வேண்டும். உண்மையான சன்மார்க்க அன்பர்கள், உண்மையான சன்மார்க்கக் கருத்துக்களுடன் சங்கமித்த இவ் விழாவில் கலந்து கொண்டது மிகப் பெருமைப்பட வைக்கின்றது என்றார்.
நிகழ்ச்சியினை திரு கண்ணன் அவர்கள் தொகுத்தளித்து அனைவரையும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நல்ல எதிர்பார்ப்புடன் கவனிக்கும்படி செய்வித்தார். இறுதியில் நன்றியுரைக்குப் பின் தேசிய கீதம் பாடி நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது,
கலந்து கொண்ட அனைவரும் மற்றும் அருகிலிருந்து கலந்து கொண்ட ஏழை எளியோருக்கும் அன்னம் பாலிக்கும் பணி நிறைவேறியது.