மதுரை அருகே உத்தங்குடியில் அமைந்துள்ள கருணை சபை சாலையில் வள்ளலார்
187வது அவதார நாள் விழா
பெருங்கருணைக் கடவுளை அடைய எளிதான வரைபட விளக்கம்.
இன்று 5.10.2009 காலை, மதுரை மாநகரை அடுத்துள்ள உத்தங்குடியில் அமைந்துள்ள கருணை சபை சாலையில் வள்ளற் பெருமானின் 187வது அவதார நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அப்போது இந்த கருணை சபை சாலையின் நிறுவனர்கள் திருமதி ராமலக்ஷ்மி-ஏ.பி.ஜே.அருள் தம்பதியர் ஆகியோரால் வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் இத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில்,. வள்ளலார் வகுத்த சுத்த சன்மார்க்க நெறியினைக் கடைப்பிடித்து, எவ்வாறு முத்தேக சித்திப் பெருவாழ்வு அடைவது என்பது குறித்த ஒரு வரைபடத்தினை நிறுவனர்கள் வழங்கினர். அந்த வரைபடம் (diagram) அன்பர்களின் கவனத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில்,. காலை 8.00 மணி அளவில் ஊமச்சிகுளம் திரு சந்திரமோஹன் மற்றும் திருப்பாலை திரு ஹரி கோவிந்தன் அவர்களால் அருட்பெருஞ் ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவரும் அகவல் ஓதினர்.
மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் திரு T.R. ஜவஹர்லால் தலைமை தாங்கி நடத்தினார்.
காலை சிற்றுண்டிக்குப்பின் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி திரு ஏ.ராமானுஜம் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
வள்ளற் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்ப வேண்டும் என்ற ஒரு உயரிய நோக்கில் பெரும் பொருட் செலவில், இதன் நிறுவனர்கள் மிகுந்த சிரமத்துடன், இந்த கருணை சபை சாலையினை இங்கே நிறுவியுள்ளனர்.
எனவே, மதுரை மாநகரத்தினை அடுத்துள்ள உத்தங்குடியில் அமைந்துள்ள இந்த கருணை சபை சாலையின் மூலம் இங்கு வசிக்கும் அன்பர்களும் பொதுமக்களும், வள்ளற் பெருமான் சொல்லிச் சென்ற சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை நன்கு தெரிந்து கொண்டு, தமது வாழ்வில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலம் மரணமிலாப் பெருவாழ்வினை அடைய அனைவரும் முயற்சிக்க வேண்டும் எனச் சொன்னார். பெருமான் வகுத்துத் தந்த வழிமுறைகள், இந்த கருணை சபை சாலையில், சித்திர வடிவில், எல்லோரும் மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் வரைந்து வைக்கப்பட்டுள்ளது. அது மிகச் சிறப்பு.
இன்று (5.10.2009) வடலூரிலே வள்ளற் பெருமானின் அவதார தின விழா நடைபெறுகின்றது. அதே நாளில், இங்கே இந் நிறுவனத்தின் ஸ்தாபகர்கள், இந்த விழா எடுத்துள்ளனர். எனவே இவ்விழாவில் கலந்து கொண்டுள்ள அன்பர்கள், மற்றும் இந்தப் பகுதியில் வசிக்கும் அன்பர்கள் அனைவரும் இந்த கருணை சபை சாலைக்கு வந்து சன்மார்க்கக் கல்வி பயின்று, தமது வாழ்வில் வள்ளல் பெருமான் சொல்லிச் சென்ற மரணமிலாப் பெருவாழ்வினை அடைவதற்கு முயல வேண்டும்.
அதற்கு முதற்படியாக, கொலை புலை தவிர்க்க வேண்டும். இதுவரை எப்படி வாழ்ந்திருந்தாலும், இன்று முதல், இந்த நந்நாள் முதல், சைவ ஆகாரம் உண்ணும் பழக்கத்தைக் கைக் கொள்ள வேண்டும். அதுவே சுத்த சன்மார்க்கத்தின் முதற்படி. சிரநடுச் சிற்றம்பலத்திலே விளங்கும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை எந்நேரமும் நினைத்துக் கொண்டே தமது உலகியற் காரியப் பாடுகளை ஆற்ற வேண்டும். ஜீவகாருண்யம் மூலமே மோட்ச வீட்டினை அடைய முடியும் என வள்ளற் பெருமான் சொல்லிச் சென்றுள்ளார்.
அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு, ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு எனச் சொல்லிச் சென்றதற்கொப்ப, அனைவரும் இந் நெறியில் அதி தீவிர முயற்சி மேற்கொண்டு, நல்ல நிலைகளை விரைவில் அடைய முயற்சிக்க வேண்டும்.
கடந்த 17.12.2009, 18.12.2009 ஆகிய நாட்களில் மதுரை நகரில், மாவட்ட சன்மார்க்க சங்கங்களின் ஒருங்கிணைப்பு சுத்த சன்மார்க்க கூட்டம் நடத்தியது. இம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அன்பர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
31.12.2009 அன்று மதுரை நாராயணபுரத்தில் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் துவக்கப்பட்டு, வாராந்திர கூட்டங்கள், பிரதி ஞாயிறு தோறும் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இணைய தளத்தின் மூலம், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க கருத்துக்கள், மதுரையிலிருந்து பரப்பப் பட்டு வருகின்றன. (www.vallalarspace.com, www.vallalar.org)
அடுத்து, கடந்த 1.2.2009 அன்று,. இந்த கருணை சபை சாலை இங்கே துவக்கப்பட்டது. அன்று விழா எடுக்கப்பட்டது.
9.5.2009 அன்று, திரு அருட்பா இசை விழா, தெப்பக்குளம் ஸ்ரீமந் நடன கோபால நாயகி மந்திரில் நடத்தப்பட்டது. மாவட்ட சங்கமும், வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனும், இதற்கான முயற்சி மேற்கொண்டனர். திருபுவனம் திரு ஆத்மநாதன், தம்முடன் 13 பாடகர்களை அழைத்து வந்து திரு அருட்பா பாடல்களை மதுரை மாநகரிலே பாடி சுத்த சன்மார்க்க நெறியினை அனைவரும் புரிந்து கொள்வதற்கு, இந் நிகழ்ச்சி வாய்ப்பினை ஏற்படுத்தியது.
சம்மாட்டிபுரத்தைச் சேர்ந்த திரு கண்ணப்பன் அவர்களது துணைவியார் ஆகியோர், திருநகர் அருகே உள்ள தணக்கன் குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சரஸ்வதி பள்ளியில் ஆதரவற்ற 250 மாணவியருக்கு, திரு அருட்பா போதனை செய்து சன்மார்க்கம் சிறக்கச் செய்து வருகின்றார். அவரே திருமங்கலம் வட்டத்தில் உள்ள கரடிக்கல் என்ற ஊரில் அமைந்துள்ள பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கும் சுத்த சன்மார்க்க போதனனகளை செய்து சன்மார்க்க நெறியில் அவர்களை வழிப்படுத்தி வருகின்றார்.
அருள் ட்ரஸ்ட் நிறுவனர் திரு கே.முரளித்ரன், மாதாந்திர சன்மார்க்க இதழ் நடத்துகின்றார். 4 மாணவர்களை, குட்லாடம்பட்டியில் தங்க வைத்து, அருகில் உள்ள பள்ளியில் பயில வைத்து, அவர்களுக்கு, சன்மார்க்க போதனையினைச் செய்து வருகின்றார்.
20.9.2009 அன்று, வள்ளற் பெருமானார் பிறந்த நட்சத்திர நாளன்று, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், நாராயணபுரத்தில், 187வது பிறந்த நாள் விழா எடுத்தது. திண்டுக்கல்லிலிருந்து சன்மார்க்க அன்பர்,. திரு விஸ்வநாதன் சிறப்புப் பேச்சாளராக அதில் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார்.
3.10.2009 பெளர்ணமி நாளன்று, மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு T.R. ஜவஹர்லால் அவர்களின் தலைமையில், செயலாளர் திரு சுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சன்மார்க்க சங்கங்களும், மதுரை நகரில், வள்ளற் பெருமானின் பிறந்த நாள் சிறப்புப் பேரணியினை மதுரை நகரின் முக்கிய வீதிகளில் நடத்தி, துண்டுப் பிரசுரங்களின் மூலமும், சிறு புத்தகங்களை பொதுமக்களுக்கு வழங்கியதன் மூலமும், சுத்த சன்மார்க்கத்தைப் பரப்பி வருகின்றது.
4.10.2009 அன்று, சோளவந்தானில் சன்மார்க்க அன்பர் திரு மாணிக்கம் அவர்களின் சொற்பொழிவினை ஏற்பாடு செய்து, சுத்த சன்மார்க்க விளக்கமும், வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நோக்கமும் அவ்விழாவில் கலந்து கொண்ட அன்பர்களுக்கு எடுத்து இயம்பப் பட்டது. இவ்விழாவினை, தலைவர் திரு கே.மாரியப்பன் (ஓய்வுபெற்ற) தலைமை ஆசிரியர் அவர்கள் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்புற ஏற்பாடு செய்தார்.
எனவே, மதுரை மாவட்டத்தில், இவ்விதமாக, எல்லா சன்மார்க்கச் சங்கங்களும், சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என்றார்.
அதன் பின்னர், ஐயர் பங்களாவைச் சேர்ந்த திருமதி சிவகாமி அம்மையார், திரு அருட்பாவினை. கேட்கும் அனைவரும் மனம் குழைவுறும் வண்ணம் பாடினார்.
திருப்பாலை திரு ஹரி கோவிந்தன் அவர்கள், வள்ளற் பெருமானின் வாழ்க்கையினை அனனவருக்கும் தெரிவித்து, அனைவரும் அவர் சொல்லிச் சென்ற சுத்த சன்மார்க்க நெறியினைக் கடைப்பிடிக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.
அனைவருக்கும் உணவளித்து, அருகில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கும் அன்னம் பாலிப்பு செய்து, இவ் விழா மாலையில் நிறைவுற்றது.
5.10.2009-கருணை சபை சாலை-மதுரை உத்தங்குடியில் வள்ளலார் 187வது அவதார விழா.