DAEIOU - தயவு
28.5.2009 திண்டுக்கல் பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லப் பூச விழா.

28.5.2009 திண்டுக்கல் பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லப் பூச விழா
விரோதி ஆண்டு ஆனித் திங்கள் 14ம் நாள் 28.5.2009 ஞாயிற்றுக் கிழமை பூச விழா.
திண்டுக்கல் நகரிலே அவதரித்த மகான் தயாநிதி சரவணானந்த சுவாமிகள் ஆவார். வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை அடியொற்றி, சுவாமி சரவணானந்தா அவர்கள் 60க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். உபதேசப் பகுதியில் வள்ளல் பெருமான் தம்மை ஏறாத நிலை மேலேற்றி விட்டதுதயவுஎனக் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தயவுப் பாக்கள், தயா விளக்க மாலை, தயவுப் பெரு நெறி, தயவுக் குறள் என்ற பல உரைநடை நூல்களும் பல பாக்களும் யாத்துள்ளார்கள். சுவாமி அவர்களுக்கு, மேட்டுக்குப்பத்திலே, வள்ளற் பெருமானின் காட்சி, அவர்களது இளம் வயதிலேயே கிடைத்துள்ளது.
அவர்கள்தமது 96 வயதில் சித்தி பெற்றார்கள். திண்டுக்கல் நகரில் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம் என்ற இடத்தில், “சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
மாதந்தோறும் பூச நாளை ஒட்டிய ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் சன்மார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த தயவு இல்லத்தை திண்டுக்கல் தயவுநூல் அறக்கட்டளையினை நடத்தி வரும் அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், அன்பர்களின் உதவியோடு பராமரித்தும், ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மாதப்பூச நாளினை ஒட்டி, கடந்த 28.5.2009 ந்தேதி ஞாயிற்றுக் கிழமை இந்த தயவு ஆலயத்தில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
காலை 10.00 மணி – கொடி வணக்கம்
காலை 10.20 மணி
திருவடிப் புகழ்ச்சி, அருட் பெருஞ்ஜோதி அகவல், அட்டகம் மற்றும் சுவாமி சரவணானந்தரின் சற்குரு வணக்கப் பாடல்கள் பாடப்பட்டன.
பகல் 12.15 மணி
உலகில் உள்ள அனைத்து ஆன்மாக்களின் நலனுக்காகவும் தயா தியானம் நடைபெற்றது.
இதனை அடுத்து திண்டுக்கல் குருமகானின் அணுக்கத் தொண்டர் தயவு வே.விசுவநாதன் அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். சிறப்புச் சொற்பொழிவும் ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது.
இந்த ஆனிமாதப் பூச விழாவானது எல்லாமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினாலும், நம் அருட்பெருஞ்ஜோதி அம்பலத் தயவு சத்திய ஞான ராஜ மகா குரு தயாப் பிரகாசர் சுவாமி சரவணானந்தா பரமான்மபதி தயாநிதி தயவுத் தந்தை தனிப்பெருந்தயவு வடிவான சமரச சுத்த சன்மார்க்க சத்திய மெய்ஞ்ஞான சித்தர் திண்டுக்கல் பொன்னகர அனக குரு மகானின் திருவருள் தயவு வல்லபத்தாலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த ஆனி மாதத்தில், சிதம்பரத்தில் ஆனந்த நடராஜப் பெருமான் உத்திரத் திருமஞ்சனம் கொண்டு ஒன்றான மூலவரே, உற்சவராகவும், எழுந்தருளி வீதி உலா வந்து அனைத்து ஆன்மாக்களுக்கும் அருள் பாலிக்கின்றார். அதே நேரத்தில் ஆவுடையார்கோயில் என்னும் திருப்பெருந்துறையில் இந்த நடராஜப் பெருமானின் அத்தனை அம்சங்களையும் மாணிக்க வாசகருக்கு வழங்கப்பட்டு உற்சவராக, உத்திரத் திருமஞ்சனம் கொண்டு, வீதி உலா வந்து அருள் பாலிக்கின்றார். இவைகளை எல்லாம் நாம் இப்போது சுத்த வேதாந்த வெளி நிலை நின்று சுத்த சித்தாந்த வெளி நிலை நின்று உணரும்போது எவ்வளவோ அரிய பெரிய ஆனந்த அனுபவங்கள் கிடைத்து விடுகின்றன ஒவ்வொருவரின் அக ஆன்ம வெளியில் என்றால் அது மிகையாகாது.
இப்படிப்பட்ட சுத்த சன்மார்க்க அடிப்படை உண்மைகளை எல்லாம் கருத்தில் கொண்டு இன்றைய தினத்தில் இங்கே மேல்புறத்தில் ஒரு அற்புதக் காட்சி அம்பலமாகி இருக்கின்றது. வெளிப்பட்டு விளங்குகின்றது. அரங்கேற்றமாகி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. புத்தம் பொதிய பொலிவுடன் “பரமான்மபதி” கற்பூர மலராக மலர்ந்து தயவு மணத்தை எங்கும் பரப்ப ஆரம்பத்து விட்டது. ஆம். தயா பெருஞ் ஜோதிபதியின் தீப ஒளி அருகில் தன் பெருந்தயவு வடிவாக “தயவுப் பாக்கள்” எனும் நூலினைத் தாங்கி தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்கள் தனிப்பெருங் குருவுருக் கொண்டு தயவு பாலிக்கும் அற்புதக் காட்சி 7’ X 5’ ப்ளெக்ஸ் பேனர் காட்சி இப்பொழுது இங்கும் எல்லாமாகச் சேர்த்துப் பார்க்கும்போது அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தின் நடுவே பல்நிலையில் அருட்பெருஞ்ஜோதித் தயவுக் கடவுளின் சத்திய ஞான தீபம் (அருவுரு) முன் அம் நிலையில் கீழ் புறத்தில் சுவாமிகளின் அருள் ஞான பீடம் (அரு) பின் அம் நிலையில் மேல் புறத்தில் சுவாமிகளின் தனிப்பெரும் (Life size) திரு உருவப்படம் (உரு) மொத்தத்தில் இந்தப் பொன்னகரத் தயவு இல்லம் பொன்னம்பலமாக விளங்கவல்லதாகி விட்டுள்ளது.
இது முதல் எவ்வளவோ அற்புதங்கள், அதிசயங்கள் இங்கே, அகமிருந்து அனகமாக அனக குரு மகானின் திரு அருள் தயவு வல்லபத்தால் உலகம் முழுதும் வெளிப்படப் போகிறது என்றார்.
இதன் பின்னர் வடலூர் அருட்பெருஞ்ஜோதி அய்யா அவர்களால் சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளிய பேருபதேசப் பிழிவு வாசிக்கப் பட்டது.
இதனைத் தொடர்ந்து தயவுத்திரு பொன் சங்கரலிங்கம் அவர்கள் சுவாமிகள் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கத்திலிருந்து 11-12ம் வரிகளுக்கான உரை விளக்கத்தினை வாசித்து அனைவருக்கும் விளக்கிக் கூறினார்.
மதியம் 1.45 மணி
சென்னை தயவுத்திரு டாக்டர் சுரேஷ் பாபு அவர்கள் தனது தந்தை தயவுத்திரு டாக்டர் கே.வி. ராதாகிருஷ்ணன் அவர்கள்,மற்றும் தமது தாயார் சுலோசனா அவர்கள் சுவாமிகளுடன் சார்ந்து ஆற்றிய தயவுத் தொண்டினைப் பற்றியும் நாகல் நகர் தயவுத்திரு எஸ்.எல்.வி.சீதாமணி என்ற மணி அண்ணன் அவர்களின் தயவுத் தொண்டினைப் பற்றியும் விரிவாகவும் அழகாகவும் உரையாற்றி வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
அடுத்த மாதப் பூச விழா இந்த அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் 26.7.2009 ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருப்பதாகவும், மற்றும் சன்மார்க்க நிகழ்வுகளைப்பற்றியும் தயவுத்திரு வே. அருணகிரி அவர்கள் அறிவித்தார்.
இதன் பின் அருட்பெருஞ்ஜோதி தயவுப் பிரார்த்தனை தயவுத்திரு எம். ராமலிங்கம் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அடுத்து ஜோதி வழிபாடு மற்றும் விண்ணப்பம் சொல்லப்பட்டது.
இக் கூட்டத்தில் சுமார் 150 சன்மார்க்க அன்பர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மதுரை தயவுத்திரு கே.வி. ராதாகிருஷ்ணந்சுலோசனா குடும்பத்தினர் மற்றும் நாகல் நகர் எஸ்.எல்.வி. சீதாமணி-வசந்தா குடும்பத்தினர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோருக்கு அன்னமளிப்பு உபயம் செய்து அன்பர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் பசியாற்றுவித்தல் பணியினை நிறைவேற்றினர். விழா அதன் பின் இனிது முடிவடைந்தது.