DAEIOU - தயவு
பழனி தாலுகா கீரனூர் சன்மார்க்க குருகுலம் 59-ம் ஆண்டு பெருவிழா நிகழ்ச்சி.

பழனி தாலுகா கீரனூர் சன்மார்க்க குருகுலம்
59-வது ஆண்டுப் பெருவிழா.
பழனி தாலுகாவில் பழனியிலிருந்து சுமார் 20 கி.மீ.தூரத்தில் கீரனூர் என்ற ஒரு கிராமம் உள்ளது. இது டவுன் பஞ்சாயத்து ஆகும். இங்கு பொதுவாக அனைத்து மக்களும் வசித்தாலும், முஸ்லீம்களும், தாழ்த்தப்பட்ட இனத்தவரும், அதிக அளவில் வசிக்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல் இந்த ஊரின் மேற்குப் பகுதியில் உள்ளது. மிகவும் கலை நுட்பத்துடன் கருங்கற்களைக் கொண்டும் சில இடங்களில் கிரனைட் கற்களைக் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. இரண்டு மினராக்கள், மிகச் சிறப்பு வாய்ந்த வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இஸ்லாமியச் சிற்பக் கலைக்குப் பெருமை சேர்ப்பதாக இந்த பள்ளி வாசல் அமைந்துள்ளது. இங்குள்ள இஸ்லாமியர்கள் பெரும்பாலும், கேரளாவில் தொழில் செய்து பொருளீட்டுகின்றனர். கடந்த 2000ஆம் ஆண்டு, இந்தப் பள்ளி வாசலுக்கு இவ்வூர் இஸ்லாமியப் பெருமக்கள், விழா எடுத்துக் கொண்டாடியுள்ளனர். ஆதி திராவிட மக்களும் இஸ்லாமியப் பெருமக்களும் இந்த ஊரில் பெருமளவில் வசிக்கின்றனர். ஏனைய சமூகத்தவர்களும் வசிக்கின்றனர். அனைவரும் நல்ல ஒற்றுமை உணர்வுடனும் சகோதர பாசத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஊரில், கிழக்குப் பகுதியில், கடந்த 59 ஆண்டுகளாக, வள்ளலார் நெறியில் சன்மார்க்க குருகுலம் ஒன்று இயங்கி வருகின்றது. இதனை பல சிரமங்களுக்கு இடையே, திருவருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியைக் கடைப்பிடித்து, தடைகள் பல கடந்து வந்து, 58 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருபவர் திரு குலபதி குப்புசாமி ஐயா அவர்கள்,.
கடந்த 1.6.2009 முதல் 7.6.2009 வரை இந்த குருகுலத்தில் விழா நடைபெற்றது. குறிப்பாக 6.6.2009 (சனி) மற்றும் 7.6.2009 (ஞாயிறு) ஆகிய நாட்களில், இங்கு சன்மார்க்க குருகுலத்தின் 59-ஆம் ஆண்டு பெரு விழா நடத்தப்பட்டது.
இந்த சன்மார்க்க குருகுலத்தால் நடத்தப்படும் நிறுவனங்கள்.

1.
அருள்ஜோதி திக்கற்றோர் சரணாலயம்.
2.
அருள்ஜோதி நடுநிலைக் கல்விச்சாலை
3.
அருள்ஜோதி முதியோர் குடில்
4.
அருள்ஜோதி கண்ணொளியற்றோர் காப்பகம்.
5.
அருள்ஜோதி கிராமிய தருமச்சாலை
7.
அருள்ஜோதி மருத்துவ மனை
8.
சத்திய ஞான சபை.

இங்கு உள்ள கல்விச் சாலையில், கடந்த ஆண்டின் முடிவில் கீழ்க் கண்ட எண்ணிக்கையிலான மாணவ மாணவியர்கள் பயின்றுள்ளனர்.

பயின்ற வகுப்பு
பயின்ற மாணவர்கள் எண்ணிக்கை.
பயின்ற மாணவியர்கள் எண்ணிக்கை.
முதலாம் வகுப்பு
16
15
இரண்டாம் வகுப்பு
6
12
மூன்றாம் வகுப்பு
16
12
நான்காம் வகுப்பு
22
24
ஐந்தாம் வகுப்பு
21
22
ஆறாம் வகுப்பு
29
29
ஏழாம் வகுப்பு
11
18
எட்டாம் வகுப்பு
14
19
ஆக மொத்தம்
135
151.

இந்த தகவலை மேற்படி பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு வி. சந்திரசேகரன் தெரிவித்தார்.
வருடந்தோறும் இந்த குருகுலத்தில் ஆண்டு விழா நடத்தப்பட்டு வருகின்றது அந்த வகையில், இந்த ஆண்டு, ஜூன் முதல் வாரம் முடிய இங்கு முதல் 5 நாட்களில் திரு அருட்பா முற்றோதலும், ஜூன் 6, ஜூன் 7 ஆகிய நாட்களில் பெரு விழாவும் நடைபெற்றது.
கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு கால கட்டமாக, இந்த குருகுலத்தை பல சான்றோர்களும், அறிஞர் பெருமக்களும், உயர் அலுவலர்களும், அமைச்சர் பெருமக்களும் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு.

1953
திருமுருக கிருபானந்த வாரியார்
1955
1954
1955
மேதகு B.N. தத்தார், துணை உள்துறை அமைச்சர், இந்திய அரசு, புது டில்லி.
அருள்மிகு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் மேதகு P. கக்கன்.
1958
கனம் எம். பக்தவத்சலம், வேளாண்மைத்துறை அமைச்சர், சென்னை.
1966
திரு S.V. சிட்டிபாபு, கல்வித்துறை இணை இயக்குநர், சென்னை
1976
Shri சாந்தா ஷீலா நாயர், இ.ஆ.ப, துணை ஆட்சியர், திண்டுக்கல்
1979
திரு P.C. சிரியாக், மாவட்ட ஆட்சியர், மதுரை
1981
மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம்.
1992
தயாநிதி சரவணானந்தா அவர்கள், திண்டுக்கல்
1992
திரு சைலேந்திரபாபு, Supdt.of Police, திண்டுக்கல்
1982
தவத்திரு ஊரன் அடிகள், வடலூர்
2009
திரு பாரி, I.P.S., மாவட்டக் கண்காணிப்பாளர், திண்டுக்கல்.

திரு அருட்பா திருமுறைகளின் ஆய்வரங்கங்கள் 6.6.2009 அன்று நடத்தப் பெற்றன.
இந் நிறுவனத்திற்கு பல இடங்களிலும் இருந்து உதவிகள் வந்தாலும், திண்டுக்கல்லைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர்கள், அருட்பெருஞ்ஜோதி S.S. கிருஷ்ண மூர்த்தி, தயவுத்திரு S.S. சிவராம், சுபம் பேப்ரிக்ஸ் தயவுத் திரு S.S. மோகன்ராம் முதலானோர் ஆரம்ப முதலே, இந் நிறுவனத்தின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டு, பொருளுதவி செய்து வருகின்றனர். அவர்கள், திரு குலபதி ஐயாவின் தனித்த அன்பிற்கும் ஆட்பட்டுள்ளனர்.
இந்த ஏரியாவில், கீரனூரில் உள்ள சன்மார்க்க குருகுலத்தை ஒட்டி, பழனியிலும் சன்மார்க்க சங்கம் இயங்குகின்றது. அதேபோன்று, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி அதன்பால் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் முதலானவை, தாராபுரம், கோயம்புத்தூர், சென்னை, மதுரை, பல்லடம், கம்பம், ஈரோடு, போன்ற இடங்களில் பரவுவதற்கு, இந்த சன்மார்க்க குருகுலம் ஒரு காரணமாக அமைந்துள்ளது. கடந்த மே, 2009 மாதமும் இங்கு 2.5.2009 முதல் 4.5.2009 வரை ஜீவகாருண்ய மாநாடு நடத்தி, மாநிலம் முழுவதிலும் இருந்து அன்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அவரவர்கள் அங்கங்கு சன்மார்க்க சங்கங்கள் வைத்து நடத்தினாலும், திரு குலபதி குப்புசாமி ஐயா நடத்தும் சன்மார்க்க குருகுலத்தில் ஒரு நிகழ்ச்சி என்றால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து அன்பர்கள் வந்து, இங்கு பணி புரிகின்றனர். நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர். அனைவரும் தங்குவதற்கு, இங்கு, மேல் மாடியில் பெரிய ஹாலும், மற்ற ரூம்களும் உள்ளன. குடிநீர், குளிக்க வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்த குருகுலத்திற்கு அருகில் கிழக்கே, சண்முக நதி ஓடுகின்றது. நந்நீராட விரும்புவோர், அங்கு சென்றும் நீராடி வருகின்றனர்.
6.6.2009 சனிக்கிழமை.
காலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. அதன் பின்னர் அருட்பெருஞ்ஜோதி அகவல் படிக்கப்பட்டது.
நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக, சின்னாளப்பட்டி திரு ராமசாமி அவர்களும், கம்பம் திரு சுருளி ராஜ் அவர்களும், இடையிடையே செயலாற்றினர்.
கோவை இருசுஜயா அவர்கள், தமது உரையில், ஒரு சிலர், 5 திருமுறைகள் வேண்டாம், ஞான அறிவு புகட்டக்கூடிய ஆறாம் திருமுறை மட்டும் படித்தால் மட்டுமே போதும் என பலரும் கூறுகின்றனர். அது தவறு. வள்ளற் பெருமான் இயற்றிய 6 திருமுறைகளும், ஓதி உணரத்தக்கன. அவற்றில், எதனையும் ஒதுக்க வேண்டியதில்லை என்றார். மேலும், ஊரன் அடிகள் பதிப்பு பாடல், 5,614-ல் ஆறு வேளைகளிலும், வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்க வேண்டும் என வள்ளற் பெருமான் சொல்லி உள்ளதைக் குறிப்பிட்டார்.
12.00 மணி அளவில், “சன்மார்க்க குருகுல வரலாறு” நூல் வெளியிடப்பட்டது. இதில், சன்மார்க்க குருகுலம் தோற்றுவித்த திரு குலபதி குப்புசாமி ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறும், குருகுல வரலாறும் இடம் பெற்றுள்ளன. இந் நூல் வெளியிட பெரும் காரணகர்த்தாவாக இருந்தவர் டாக்டர் திரு அருள் நாகலிங்கம் ஆவார். அவர், கொல்லம் பாளையம், ஈரோட்டில் வசித்து வந்தாலும், இந்த சன்மார்க்க குருகுலத்தின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
திரு தயவு விஜயராமன், மதுரை – 3ஆம் திருமுறையில் உள்ள பாடல்கள் அகப் பொருள் பாடல்கள் ஆகும். சிறப்பாக திரு ஒற்றியூர்ப் பதிகல், ஆன்ம நிலையில் பொருந்தியிருந்து பாடியவை ஆகும். எனவே, மிகச் சிறப்பு வாய்ந்தவை.
மதியம் உணவு இடை வேளையில், பட்டி வீரன்பட்டியைச் சேர்ந்த அன்பர், திரு அருள் அவர்கள், அருட்பாப் பாடல்களை இசையுடன் பாடினார்.
மாலை 4.15 மணி.
சன்மார்க்க குருகுல நிறுவனர், திரு குலபதி குப்புசாமி
இங்கு இந்த 59ஆம் ஆண்டுப் பெருவிழாவிற்கு வருகை தந்துள்ள, அனைவரையும் ஆண்டவரின் வடிவமாகவே உணர்கிறேன். எனக்கு உங்கள் அனைவரின் ஆசீர்வாதம் தேவை. நீங்கள் நடமாடும் ஆலயங்கள். தாய்மார்களின் சிறப்பு மிகவும் போற்றுதற்குரியது. பெற்றோர் செய்த நற்செயல்களால்தான் நான் இவ்வுலகில் பிறந்தேன். வாழ்க்கையில் நாம் (1) மாதா (2) பிதா (3) ஞான குரு (4) அதிதி ஆகியோரை மறக்கக் கூடாது. ஒரு கால கட்டத்தில் நாம் பிறந்த பிறவிக் கடமையைச் செய்தோமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
உயிர் உடம்பு உணர்வு விளங்க இங்கு சன்மார்க்க சங்கம் அமைத்தோம். சத் விசாரம் செய்தோம்,. பல மாவட்டங்களுக்கும் வள்ளலாரின் கொள்கைகளைப் பரப்புவதற்கு நடந்து நடந்து சென்றேன். சென்னைக்கும் சென்றேன். அங்கு திரு பாலசுப்பிரமணியம்-சுலோசனா தம்பதியர் என்னை வந்து அழைத்துச் செல்வர். இங்கு 4 அறச் சாலைகள் உள்ளன. இந்த இடத்தை ஒரு முஸ்லீம் கொடுத்தார். அவர் பெயர் C.A.V. அப்துல் வஹாப் என்பதாகும். அப்படிப்பட்ட இடத்தில் உங்கள் அனைவரின் திருப்பாதமும் பட்டுள்ளது.
ஒரு சின்னம்மை – ராமையா பிள்ளை இல்லையென்றால் வள்ளற் பெருமான் இல்லை. ஒரு வள்ளற் பெருமான் இல்லையென்றால், இந்த மனித குலம் கடைத்தேற, இறவாமை நல்கும் சுத்த சன்மார்க்க நெறி தோன்றியிருக்காது. நீங்கள் எல்லாம் எனக்குத் தெய்வங்கள். எனக்கு ஆசீர்வாதம் வழங்க வேண்டும். இன்னும் இத் தொண்டில் நன்கு நான் பணியாற்ற உங்களது ஆசீர்வாதம் வேண்டும். நீங்கள் கொடுத்த வரத்தால் தான் நான் வாழ்கின்றேன்.
அடுத்து உத்தமபாளையம் தாலுகா ஓடைப்பட்டி ராமுத்தாய் குழுவினர் மேடையில் திரு அருட்பா இசைத்தனர்.
மாலையில், கம்பம் திரு சுருளிராஜன், திரு பொம்மைசாமி, மற்றும் அன்னஞ்சி வக்கீல் திரு ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து திரு அருட்பா பாடல்களைப் பாடினர்.
அடுத்த படியாக, பொங்கலூர் சுப்பிரமணியம் என்பவர் திரு அருட்பா பாடினார். அத்துடன், தமது முயற்சியால், பொங்கலூரில் சத்திய ஞான சபை கட்டி முடிக்கப் பட்டு வருவதாகவும். விரைவில், தருமச் சாலையையும் கட்டி விடுவோம் எனவும் கூறிச் சென்றார்.
திரு ராமானுஜம், மதுரை.
பல்வேறு அன்பர்கள் இந்தக் குருகுலத்திற்கு வந்து சென்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 1998 ஆம் ஆண்டில் பணிபுரியும் போது, ஒருமுறை இந்த வழியாகச் செல்ல நேர்ந்தது. ஆனால், இன்றுதான், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு வந்தது. ஐயா குலபதி குப்புசாமி அவர்கள், மிகச் சிறந்த தொண்டாற்றுகின்றார். இந்த ஏரியாவில் சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்கு அவர் காரண கர்த்தாவாக உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திரு ஜோதிமுருகன் ஐயா அவர்கள், கிட்டத்தட்ட 7 சங்கங்களைத் தோற்றுவித்து சன்மார்க்கம் அங்கு பரவுவதற்கு மிகுந்த தொண்டு புரிந்தார்.
திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்கள், திரு அருட்பாவிற்கு பல உரை நூல்கள் எழுதி, சுத்த சன்மார்க்கம் பரவக் காரணமாக இருந்தார்கள்.

வள்ளற் பெருமானின் நெறி இன்று உலகளாவிய அளவில், பல்வேறு நாடுகளுக்கும் www.vallalar.org மற்றும் www.vallalarspace.com ஆகிய இரு இணைய தளங்கள் மூலம் வெகு வேகமாகப் பரவி வருகின்றது.
திண்டுக்கல் தயாநிதி சுவாமிகள் எழுதிய “இரண்டற்ற இன்ப வாழ்வு” என்ற ஒரு நூலைப் படித்த திரு கேத்தீஸ்வரன், இலங்கையில் சாவகச் சேரியில் ஒரு சத்திய ஞானக் கோட்டம் கட்டியுள்ளார். அங்கு சுமுக நிலை வரப்பெற்றபின். அதனைத் திறப்பு விழா செய்ய உள்ளார்.
மேற்சொன்ன 2 இணைய தளங்களின் மூலம், திரு அருட்பா உலக நாடுகளுக்கெல்லாம் பரவி விட்டது. இது வரை, 2,44,000 முறை வள்ளலார் ஸ்பேஸ் இணைய தளம், அன்பர்களால் பார்க்கப்பட்டுள்ளது. கணினி வசதி உள்ள அன்பர்கள், தவறாமல் இந்த இணைய தளங்களைக் காணும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இரவில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த A.S.P. சாமி அவர்கள், வள்ளலார் குறிப்பிட்ட இயற்கை மூலிகைகளைப் பற்றியும், அது தீர்க்கும் நோய்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். பார்வையாளர்கள் மூலிகை மருத்துவம் குறித்துக் கேட்கும் சந்தேகங்களுக்கும் அவர் தெளிவுரை வழங்கினார்.
7.6.2009 ஞாயிறு.
காலையில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.
பின்னர், கம்பம் திரு சுருளிராஜ் தலைமையில் அன்பர்கள், திரு அருட்பாவிலிருந்து, அருட்பெருஞ்ஜோதி அகவலைப் பாடினர்.
காலை உணவிற்குப்பின்,நிகழ்ச்சிகள் துவங்கின.
தேவாரப்பன்பட்டியைச் சேர்ந்த திருமதி மணிமேகலை என்ற சன்மார்க்க அன்பர், இறை வணக்கம் பாடினார்.
செயலாளர் வரவேற்றார்.
திரு குலபதி குப்புசாமி ஐயா அவர்கள்.

இந்தக் குருகுலத்தில் புழுதி மலர்கள் பூஜை மலர்களாகின்றன. மனித நேயத்தைக் காட்டிலும், ஆன்ம நேயம் மிகச் சிறந்தது. அதனை எனது 25வது வயதில் கடைப் பிடிக்க ஆரம்பித்தேன். வள்ளற்பெருமான், இரக்கத்தின் இமயம். அவர் கருணையினால் தான் நான் வாழ்கின்றேன். இந்த சமுதாயம் என்று மாறப்போகின்றது ? தினசரி, திரு அருட்பா படிப்பேன்.
ஓலைக் குடிசையில் துவங்கிய இந்த குருகுலம் நாள்தோறும் வளர்ந்தது. அதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர்கள், மாதா, பிதா, சுற்றுச் சமூகம் கொடுத்த ஊக்கம், உந்துதல், மற்றும் உங்கள் அனைவரின் ஆசி. எனது இச் செயலைப் பார்த்த, இந்த ஊர் இஸ்லாமிய அன்பர் திரு அப்துல் வஹாப், ஏன் இதனைச் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்றார். சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால், குருகுலம் ஆரம்பித்தேன் என்றேன். அவர், குடிசையிலிருந்து மாற, .. மாற்று இடம் கொடுத்தார். என்னைக் காப்பாற்றியது,.. ஒரு இஸ்லாமியர்.
யாரே என்னினும் இரங்குகின்றார்க்குச் சீரே அளிக்கும் சிதம்பர சிவமே..அகவல் வரிகள்தான் எனக்கு ஞாபகம் வந்தன. வள்ளலார்தான் எனக்கு இந்த வழியினைக் காட்டினார். நீங்கள் எல்லோரும் தான் உதவி கொடுத்து காத்தீர்கள். ஒரு மாதத்திற்கு, சுமார் ரூ.1.50 லட்சம் இந்த நிறுவனத்திற்கு செலவாகின்றது. வள்ளலார் சொன்னார்…ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். அதன்பிரகாரம், என்னால் ஆன செயல்களை, உங்களது உதவியுடன் செய்து வருகின்றேன்.

திரு சென்னி ஷண்முகம், தலைவர், சன்மார்க்க சங்கம், ஒட்டன் சத்திரம்.
தேவையற்ற சண்டை சச்சரவுகள் பல்வேறு இடங்களில் நடைபெறுவதை நாம் கேட்கக் கூடாது என்றவிதத்தில்தான். அதனை மாற்றுவதற்கு, வேதம் ஒலிக்கிறது.வள்ளலார் நமக்கு சொல்லிச் சென்றது அருட்பெருஞ்ஜோதி மஹாமந்திரம் ஆகும்.
கோவில்கள் எல்லாம் துவக்க நிலை நெறியினைக் கற்பிப்பவை. வள்ளலார் ஆண்டவரைக் காட்டியது அருட்பெருஞ்ஜோதியாகவே, இது எதைப்போன்றது என்றால், ஒரு விதையினைத் தோல் உரிப்பது போலத்தான்.
நாம் பார்க்கும் உலகமறிந்த ஜோதி “ஒலிம்பிக் ஜோதி”யாகும். அங்கும் ஜோதி தான் உள்ளது. வள்ளலாரின் நெறியினை பின்பற்றும் ஐயா குலபதி குப்புசாமி அவர்களும், இந்த நிறுவனமும் மென்மேலும் வளர வேண்டும்.
அதனை அடுத்து இலக்கியப் புலவர், திரு முத்து வடிவு என்பவர், திண்டுக்கல் S.P யைப் பாராட்டி ஒரு கவிதை வாசித்தளித்தார். அதன் வடிவம் திரு பாரி, S.P.க்கு அளிக்கப்பட்டது.
திரு A. பாரி, I.P.S. காவல் கண்காணிப்பாளர், திண்டுக்கல் மாவட்டம்.
வள்ளலார் அவர்கள் வாழ்ந்த போது இலக்கணமாக வாழ்ந்தார். வாழ்ந்தபின் ஒரு சரித்திரமானார். அதேபோல் தற்போது, திரு குலபதி குப்புசாமி ஐயா அவர்கள், நாளை ஒரு சரித்திரமாகத் திகழுவார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற ஒரு வரியினை மட்டும் அழைப்பிதழில் போடப்பட்டுள்ளது. அந்த திரு அருட்பா பாடலில் உள்ள ஏனைய 4 வரிகளும் கண்டிப்பாக இனிமேல் இடம் பெறச் செய்யவேண்டும். அனைத்து சமயங்களும் பரமாத்மாவை அடைய வேண்டும் என போதித்தன. அடுத்த உயிரை மதிக்க வேண்டும். அடுத்தோர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். இந்தக் கருத்தைச் சொன்ன முதல் மாமனிதர், வள்ளற் பெருமான் ஆவார்.
தேட்டிலே மிகுந்த சென்னை…என்ற திரு அருட்பா வரிகளில், வள்ளற் பெருமான் சென்னை வாழ்க்கையினை விட்டு விட்டு, நாட்டிலே, சிறிய ஊர்ப்புறங்களிலே வந்தது குறித்துப் பாடியுள்ளார். அது போல், ஆரவாரமற்ற ஒரு அமைதி தவழும் இந்த சிறிய கிராமத்தில் திரு குலபதி குப்புசாமி ஐயா அவர்கள், இந்த சன்மார்க்க குருகுலத்தை மிகச் சீரும் சிறப்புமாக நடத்தி வருகின்றார். அருணகிரி நாதருக்கு, அவர், திருவண்ணாமலை கோவிலில் இருந்து குதித்த போது, முருகன் காட்சி தந்து, அவரை ரட்சித்தருளினார்.
அருணகிரியாருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூராருக்கும் நடந்த போட்டியில் முருகனை நேரில் வரவழைக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரார் பாடியதும், அம்பாள் நேரில் வந்தார். அவர், அருணகிரியாருக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், மனதில் அம்பாளிடம் ஒரு கோரிக்கை வைத்தார். முருகனை குழந்தையாக, அம்பாளே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் அது. அப்படியே அவர் விருப்பத்தின் படி, அம்பாள், முருகனைக் குழந்தையாக, கையில் ஏந்தியபடி, பிரசன்னமானார்.
அருணகிரியார் பாடினார். முருகனை மனமுருக வேண்டினார். அவர் பக்திக்கு இரங்கி, முருகன் இறங்கி வந்து, திருவண்ணாமலையில், 2ம் முறையாக காட்சி தந்தார். அருணகிரி நாதர் பாடியது போல், தமிழில் சந்தக் கவிதைகள் யாரும் இயற்றவில்லை.
திருப்புகழில், முத்தைத் தரு….என்ற திருப்புகழ் பாடலை முழுவதும் திரு பாரி அவர்கள் பாடினார். அதேபோல் திரு அருட்பாவிலிருந்து, துண்ணென…என்ற அருட்பாவினையும் பாடினார். வள்ளலார் இலகுவாக திருஅருட்பாவினைப் பாடி, கொலை தவிர்த்தலைப் பற்றிச் சொன்னார். அவர் பாடிய கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை…பாடலைப் பாடினார். வள்ளலார் இலக்கியத்திற்குப் பெருந் தொண்டு செய்துள்ளார். ஈரோடு பெரியவர் பெரியார் அவர்கள் பெரிதும் மதித்ததும், தூற்றாத ஒரே ஆன்மீக வாதி வள்ளற்பெருமான் ஆவார்.
படமான கோவில் என்ற பாடலில் திருமூலர் விளக்கியுள்ளார். அது போல் ஒன்றே குலம் ஒருவனே தேவனும் என்றும் அவர் திருமந்திரத்தில் பாடிவைத்துள்ளார். கோவில்களில் இறைவனுக்கு சார்த்தப்படும் ஆடை அலங்காரங்கள் அவர் ஏற்றுக் கொள்வதில்லை. மக்கள் தமது மனதிருப்திக்காக, உண்மை நிலையை உணராமல், இவ்விதமான பழக்கத்துக்கு ஆட்பட்டு விட்டனர். அதற்கு பதிலாக, ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கல், மற்றும் ஆடை வழங்கினால் மிகுந்த புண்ணியம் உண்டு. இதனை ஆரம்பத்திலேயே உணர்த்தியவர், திருமூலர்.
நான் போட்டிருக்கும் ஆடை காக்கி யுனிபார்ம் என்றாலும், நாளை, திங்கள் கிழமை மனுக்கொடுக்க எனது அலுவலகத்துக்கு வரும் மனுதாரர்களின் கோரிக்கையினை மிகவும் பரிவுடன் கேட்பேன். சம்பந்தா சம்பந்தமில்லாத கோரிக்கையுடன் கூட சிலர் வந்து நெடு நேரம் நேரத்தை வீணடிப்பார்கள். ஒரு புறம் கோபம் வந்தாலும், வள்ளற் பெருமானின் கொள்கையினை மனத்தில் வைத்து, அதனை மிகவும் பொறுமையாகக் கேட்பேன். மனுதார் சொல்லி முடிந்த பின், இந்த கோரிக்கை சிவில் நேச்சர், காவல் துறையால் தீர்க்க முடியாது என்றவுடன் மனுதார், ஐயா அது,.,எனக்கும் தெரியும். ஐயாகிட்ட சொல்லீட்டா அது எப்படீன்னாலும் சரியாப் போகும் என்றதால்தான் இங்கே வந்து மனுக் கொடுக்கின்றேன் என்பார்கள். நாங்கள் பொய்த்தவ வேடம் போட்டுள்ளோம். உள்ளத்தில் வள்ளற் பெருமானை இருத்தி, வருவோருக்கு எங்களால் ஆன நல்லது செய்ய வேண்டும் என்பதில் உறுதியுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.
பெரிய புராணத்தில், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் .. பாடலைப் பாடினார். கர்நாடக மன்னன் முத்த நாதனுக்கும், திருக்கோவிலூர் ராஜா மெய்த்தவ நாயனாருக்கும் நடந்த மெய்த்தவ/பொய்த்தவ வேடம் குறித்துச் சொன்னார்.
எங்களுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்துவார். அரசாங்கம் என்பது ஒரு விளக்கு.. தனக்குள் ஒரு இருட்டை வைத்துக் கொண்டிருந்தாலும். தன்னைச் சுற்றிலும் பிரகாசத்தை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார் அவர். அதே போன்றதுதான் எங்களது நிலை.
திப்பு சுல்தான் இறுதிக் கட்டத்தில், தான் போரில் இறந்து போவேன் என்ற நிலைப்பாடு தெரிந்த போதும், போரை தைரியமாகச் சந்தித்தார். நாங்கள், பொய்த் தவ வேடம் பூண்டுள்ளோம். ஆனால் எந்த உடை நாங்கள் அணிந்திருந்தாலும், மெய்த்தவ வேடமாக, சமூகத்துக்குச் செய்யும் தொண்டுதான் எங்களது பணியாக உள்ளது.
தற்போதைய உலகத்தில் யார் பெரியவர்..என்ற (ego) உளப்பாங்கு நிலவுகின்றது. இது நீங்க வேண்டும். அப்போதுதான் நல்லமுறையில் அனைவருமே வாழலாம். இந்தியாவுக்குப் பெருமை, இது ஒரு புண்ணிய பூமி, பல புண்யாத்மாக்கள் பிறந்த இடம்.
நான் திண்டுக்கல்லில், கடந்த 3 ஆண்டுகளாக, மக்களோடு மக்களாகப் பணி புரிந்து வருகின்றேன்.
திருவண்ணாமலை S.P.யாக 5 ஆண்டுகளுக்கு முன்னர் பணி புரிந்தேன். ஒரு நாள் இரவு நேர ரவுண்ட்ஸ் சென்ற போது 25 வயது வாலிபன் ஒருவன் சுற்றிக் கொண்டிருந்தான். கையில் ஒரு குச்சி. அவனோடு ஒரு நாயும் சென்று கொண்டிருந்தது. இந் நேரத்தில் எங்கு சென்று கொண்டிருக்கிறாய் என விசாரித்தேன்.
திருவண்ணாமலை மலையைப் பற்றி ஆய்வு (Study) செய்ய வந்துள்ளேன். என்னைப் போல ஆயிரக்கணக்கான வெளி நாட்டினர் இந்த திருவண்ணாமலைக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இந்த மலையின் வயது, 50 மில்லியன் ஆண்டுகள் எனக் கருதுகின்றேன். 5 கோடி ஆண்டுகளாக இருக்கலாம் என்றான். Paul Frenchen என்ற ஆசிரியர் 1930ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்திருந்தார். அவர் Himalayas சென்றார். காசி, கைலாய மலைக்கும் சென்றுள்ளார். சென்னை அடையாருக்கு வந்து பின்னர், திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். அவர் அப்போதைய காலத்தில் ஒரு மாட்டு வண்டியில் திருவண்ணாமலையைச் சுற்றி வந்துள்ளார். திருவண்ணாமலை - மலையைப் பார்த்தாலேயே ஒரு வடிவம் தென்படும். ஒரு பரவசம் தென்பட்டது. இங்கு பேரானந்தம் உள்ளது. இங்கு காலையில் 7 மணி வாக்கில் நடந்து வந்தால், இந்த மேகங்களின் ஊடே, சிறு சிறு பாறைகள் சிதறுண்டு கிடக்கின்றன. அவை ஒரு அரக்கனைப் போல் காட்சியளிக்கின்றன.
திரு Paul Frenchen எழுதிய The search in Secret India.. என்ற புத்தகம்தான் என்னை இங்கே வரவழைத்தது என்றான். இந்த நாடு ஒரு புண்ணிய நாடு என்றான்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி .. என்ற பாரதியார் பாடலைப் பாடினார். நமது முன்னோர்கள் தமக்காக ஏதும் செய்யவில்லை, பின்னோர்களாகிய நமக்கும் தான் செய்து வைத்துச் சென்றுள்ளார்கள். நமது மூதாதையர்கள் வழி நடத்தல், எப்போதும் நமக்கு நன்மை பயக்கும். அதேபோன்று, வள்ளற் பெருமானின் வழியில் இந்த கீரனூர் சன்மார்க்க குருகுலம் ஐயா திரு குலபதி குப்புசாமி அவர்களால் நடத்தப்பட்டு வருகின்றது.
புற நானூற்றுப் பாடலிலே பாண்டியன் நெடுஞ்செழியன்..கல்வியின் சிறப்பினைக் கூறியுள்ளான். அந்த வழியில், இங்கே, ஆதரவற்றோருக்கு, உணவு வழங்குகிறது. மாணவர், மாணவியருக்கு கல்விக் கூடம் கட்டி அறப்பணி செய்து வருகின்றது. இது மென் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
திரு உ. சிதம்பர பாண்டியன், மாவட்டப் பதிவாளர் (ஓய்வு), நெல்லை.
ஐயா குலபதி குப்புசாமி அவர்கள் நடத்தும் குரு குலத்துக்கு, வள்ளலாரின் கருணைதான் நமது திண்டுக்கல் காவல்துறைக் கண்காணிப்பாளரை வரவழைத்துள்ளது.
பாட்டுவித்தால் பாடுகின்றேன்
நினைந்து நினைந்து..திரு அருட்பா பாடல்களைப் பாடினார்.
திருமந்திரம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது. செய்யா மொழி என்பார்கள். 19ஆம் ஆண்டில் வள்ளற் பெருமான் தோன்றினார். அவர்,. பள்ளிப் படிப்பு படிக்க வில்லை. ஆனால் சுத்த சன்மார்க்க நெறியினைப் போதித்து, மனித குலம் மேம்படச் செய்தவர்.
அதே போல், ஐயா திரு குலபதி குப்புசாமி அவர்கள், இரவு பகல் அழுது அழுது, குருகுலத்தை வளர்த்துக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகின்றார்.
வள்ளலாருக்கு இரங்கி, இறைவன் நேரில் காட்சி தருகின்றார்.
பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி….பாடல்.
இறைவனது சதானந்தப் பரிசம், வள்ளலாருக்கும் ஏற்பட்டது. இருந்தும் வள்ளற் பெருமான், அப்போதும் அழுதார். இறைவனிடம், நான் பெற்ற இன்பம் உலகில் உள்ள அனைவரும் பெற வேண்டும் என வேண்டினார்.
வள்ளற் பெருமானைத் தவிர, ஒரு ஞானியரும், இறைவனிடம், இது போன்ற கோரிக்கை வைக்கவே இல்லை.
இந்த குருகுலத்தில் ஒரு குறைபாடு நடந்து விட்டால், ஐயா திரு குலபதி குப்புசாமி அவர்கள் உணவுண்பதில்லை. அழுது கொண்டேயிருப்பார்.
பசியினால் ஏற்படும் துன்பத்தை வள்ளலார் சொல்லியுள்ளார். நான் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன். வடலூருக்கு இணையான ஒரு ஊர் உண்டென்றால், அது, இந்தக் கீரனூர்தான். சைவ மத சமய நெறிகள் என்று ஏதும் இந்த குருகுலத்தில் இல்லை. அனைத்துமே ஒன்றுதான்.
தனி மனித இலக்கணத்தைச் சொல்ல வேண்டுமானால், வள்ளற் பெருமானின் ஒருமையுடன் நினது திருமலரடி….என்ற திரு அருட்பா பாடல் போதும். அவர், சாத்திரம், கோத்திரம், மதம், இனம், மொழி ஆகியவற்றில் உள்ள மாறுபாடுகள் அனைத்தையும் களைய வந்தவர்.
குருகுல நிறுவனர் திரு குலபதி குப்புசாமி அவர்களைப் பற்றிய புத்தகம் வெளியிட வேண்டும் எனச் சொல்லிய போது, அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. மிகவும் வலியுறுத்தியதன் பேரிலும், ஈரோடு டாக்டர் திரு அருள் நாகலிங்கம் அவர்களது சீரிய முயற்சியால் இது கை கூடிற்று. இன்று அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. ஐயா அவர்கள், மனித நேயம் மிக்கவர். ஜீவ காருண்ய ஒழுக்கத்தைத் தம் வாழ்நாள் முழுதும் கடைப்பிடிப்பவர். அவர் இறவா நிலையினை அடைய வேண்டும் என இறைவனை வேண்டுகின்றேன்.
திரு இராம. விளாஞ்சோலை, திண்டுக்கல்.
வைணவ நெறியில் பசித்தவனுக்குப் புசித்தல் என்பதை 1,000 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியவர் ராமானுஜர். ஜாதி, இன வேறுபாடுகளைப் பார்க்காது ராமானுஜ கூடம் வைத்து இதனை செய்து காட்டினார். ஸ்ரீரங்கத்தில் 64 இடங்களில் ராமானுஜ கூடம் உள்ளது. வைணவத்தில்,. புலால் மறுத்தல் முதல் கொள்கை. ராமானுஜர் அவர்கள், திருக் குலத்தடியார்களுக் கெல்லாம் ஆலய தரிசனம் காண்பித்தவர். அகங்காரத்தை ஒழித்தால் இறைவனைக் காண முடியும் என்றார்
திருமங்கை ஆழ்வார், இறைவனை அடைவதற்கு, கருவியாக இந்த உடம்பைக் கொடுத்ததே பெரும் பேறு என போற்றினார். ராமானுஜர், சன்மார்க்க வழிகாட்டி ஆவார். வைணவம் என்றாலே பிறர்க்கு இன்னா செய்யாமை, பிறர் துன்பம் சகியாமை எனப் பொருள் படும்.
ஸ்ரீ ரங்கத்தில் துலுக்க நாச்சியாருக்கு ஒரு சன்னதி உண்டு. திண்டுக்கல்லில் கூட புதிதாக ராமானுஜ கூடம் அமைத்து வருகின்றோம். சன்மார்க்க நெறியினை குருகுலத்தில் போதித்து வரும் ஐயா குலபதி குப்புசாமி அவர்களின் தொண்டு தொடர வேண்டும்.
உணவு இடை வேளிக்குப்பின் திரு சுருளி ராஜ் மற்றும் பொம்மைய ராஜ் ஆகியோர் திரு அருட்பா பாடல்களை இன்னிசையுடன் படித்தனர்.

அங்கு பயிலும் குழந்தைகளுக்கு, திருப்பூரிலிருந்து வந்திருந்த சாமிநாதன், ஸ்ரீ அபிராமி எக்ஸ்போர்ட் தொழிலதிபர், ரூ.10,000/- மதிப்புள்ள உடை மற்றும் நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.
மாலையில் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
கலந்து கொண்ட சன்மார்க்க சங்கங்கள்
பழனி, ஒட்டன் சத்திரம், திண்டுக்கல், தேவாரப்பன் பட்டி, பட்டிவீரன் பட்டி, பல்லடம், திருப்பூர், மதுரை, கணியூர், ஓடைப்பட்டி, கம்பம், ஈரோடு, சுக்கம் பாளையம், லட்சுமி நாயக்கன் பாளையம், கல்லாம் பாளையம், ரெட்டிபாளையம், ஐவர் மலை, புதுக்கோட்டை, லக்காபுரம், சின்னாளபட்டி, சேலம், கோயம்புத்தூர், தாராபுரம், கள்ளிக்குடி, கொக்கரக்கல் வலசு, குப்பம்பாளையம், லட்சுமிபுரம், வீரபாண்டி, உடுமலை, பூதிப்புரம், பொள்ளாச்சி, சோமனூர், திருச்சி மாவட்டம், திருப்பரங்குன்றம்.
சுத்த சன்மார்க்க விரிவுரை புத்தகங்கள், திரு அருட்பாக்கள், ஆடியோ சி.டி.கள் முதலானவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சிகளின் போது சுமார் 2,000 ஏழை எளியவர்களுக்கும் சிறப்புக் கூட்டத்தில் 2 நாட்களிலும், மாநிலத்தின் பல்வேறு இடங்களிலுமிருந்து வந்திருந்தவர்களுக்கும் 3 வேளைகளிலும் உணவு அளிக்கப்பட்டது.
வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கை ஒன்றையே விடாப்பிடியாக கடைப்பிடித்து, தம் வாழ்நாளில், தமது குடும்பத்தைக் காட்டிலும், ஆதரவற்றோர் நலம் காண்பதில் இறைவனைக் கண்டு தொடர்ந்து பல நிறுவனங்களை வரும் ஐயா குலபதி குப்புசாமி அவர்களின் பணி மிகவும் போற்றுதற்குரியது. அவரது பணி தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும், திரு அருட்பிரகாச வள்ளலாரும் அருள் புரிய வேண்டுவோம்.
தொடர்பு எண் : 04545 – 235263, 329169.
கீரனூர் சன்மார்க்க குருகுலம்.
கீரனூர் Pin Code : 624 617.
பழனி தாலுகா.
தமிழ்நாடு மாநிலம்.