DAEIOU - தயவு
திரு அருட்பா ஆடியோ சி.டி.யா…நான் விற்கிறேன்..திரு கண்ணப்பன், சென்னை.

திரு அருட்பா ஆடியோ சி.டி.யா…நான் விற்கிறேன்..
திரு கண்ணப்பன்..
திரு கண்ணப்பன் என்ற அன்பர் கண் பார்வை இல்லாதவர். அவருக்குத் தற்போது வயது 42 ஆகும்.
அவரது மனைவியார் பெயர் உமா (வயது 33).அவருக்கு ஒரே மகன் பெயர் விக்னேஷ்வரன் (வயது இரண்டரை). திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் வெளியிடப்படும் போதெல்லாம் முதலில் தான் வாங்கி, அதனைப் போட்டுப் பார்த்து, மற்ற அன்பர்களுக்கும் வழங்கும் பழக்கத்தை இவர் நெடு நாட்களாகக் கடைப்பிடித்து வருகின்றார்.
வடலூருக்கு கடந்த தைப்பூச நாளன்று இவர் ராமநாதபுரம் மாவட்டத் தங்கல் மனையில் இருந்த போது இவர் குறித்து விசாரித்து, அவரைப் பற்றிய செய்தியும் இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
அதன் பின்னர், அவரது விருப்பத்தின் பேரில், அவர் வசம் திரு அருட்பா ஆடியோ சி.டி.110 கொடுத்து விற்பனை செய்யும் பணி கொடுக்கப்பட்டது. உடனே அதனை ஏற்று, தன்னைப்போல் பார்வை குறைவுடைய அன்பர்கள் மற்றும் சென்னையில் உள்ள சன்மார்க்க சங்கங்களுக்குச் சென்று ஆடியோ சி.டி.களை விற்று, 10 தினங்களுக்குள் அதற்கான விற்பனைத் தொகையினைக் கட்டி இவர் சாதனை புரிந்தார்.
தற்போது அவை தீர்ந்து விட்டதால், அன்பர்கள் கேட்பதற்குக் கொடுக்க வேண்டுமே என தொலை பேசியில் தொடர்பு கொண்டார். சென்னையில் வேறு எங்கும் கிடைக்குமா…? என்றார்.
பரங்கி மலை ஏரியாவில் (Saint Thomas Mount) திரு அருட்பா ஆடியோ சி.டி. விற்பனைக்கென்றே ஒரு மையம் ஏற்படுத்தி இருக்கின்றோம் என்று சொன்னவுடன், தான் பணி புரியும் அலுவலகத்தில், அனுமதி கிடைக்கும் நாளில், அலுவலகம் முடிவதற்கு சற்று முன்னர் கிளம்பி, அவ் விற்பனை மையத்திற்கே சென்று தாம் வாங்கிக் கொள்வதாக இரு தினங்களுக்கு முன் தெரிவித்தார்.
இது குறித்து, திரு அருட்பா ஆடியோ சி.டி.விற்பனை மையப் பொறுப்பாளர் திரு அருண் தியாகராஜனிடம் சொன்ன போது, திரு கண்ணப்பன், விற்பனை மையத்திற்கு, சிரமப்பட்டு வரவேண்டாம். தாமே சென்று, ரயில்வே நிலையத்தில் கொடுத்து விடுவதாகத் தெரிவித்தார்.
அதன் பிரகாரம், திரு கண்ணப்பன், 20.5.2009 (புதன்கிழமை) அன்று மாலை சுமார் 5.00 மணி அளவில் சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் (Electric Train) ஸ்டேஷனில் வந்து காத்திருந்தார். 15 நிமிட இடைவெளியில் விற்பனை மையப் பொறுப்பாளர் திரு அருண் தியாகராஜனே, செயிண்ட் தாமஸ் மவுண்ட் (Electric Train) ஸ்டேஷனுக்கு நேரில் சென்று, அவர் வசம் இரண்டாம் கட்டமாக திரு அருட்பா ஆடியோ சி.டி.களை விற்பனைக்காகக் கொடுத்து வந்தார்.
பல சங்கங்களும், சன்மார்க்க அன்பர்களில் பலரும், திரு அருட்பா ஆடியோ சி.டி.களை விற்பனைக்குப் பெற்று, உடனே விற்பனை செய்யும் தீவிர எண்ணமில்லாமல் இருக்கின்றனர்.
ஆனால், தனக்கு உடலில் குறை இருந்தும் (கண் பார்வை அற்ற நிலையிலும்) அன்பர் திரு கண்ணப்பன், விற்பனை மையத்திற்கே சென்று வாங்கி அதனை விற்பனை செய்து கொடுப்பேன் என்று, தம்மை வள்ளற் பெருமானின் அருட் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளும் இந்த தயவு மனப்பான்மையை என்னென்பது.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், இந்த அன்பருக்கு, எல்லாவித நன்மைகளையும் வழங்க வேண்டும் என வேண்டிக் கொள்வோம்.
ஒருவகையில் இவரது செயல்பாடுகள் இவ்வாறிருக்கின்றனவே. இவரது மனனவியார் எவ்வாறு இவருக்கு துணை புரிகின்றார் என விசாரித்தறிந்த போது, (அவரும் கண் பார்வை அற்றவர் என்பதால்) வீட்டில் வேலை ஒழிந்த நேரங்களில், பிறரது துணையுடன், திரு வாசகம், திரு அருட்பா முதலான நூல்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டு, அதனைப் பிற அன்பர்களுக்கு சொல்லும் மிக நல்ல பழக்கம் அவரிடம் உள்ளதாக, அன்பர் திரு கண்ணப்பன் தெரிவித்தார்.
இதுவல்லவோ உண்மையான இல்லறம் !
அன்பர் திரு கண்ணப்பன் செல் எண் (91- 98401 02544)
அன்பர் திரு அருண் தியாகராஜன் செல் எண் (91 94440 79924)


P Sujatha
கருணைமிகு ராமனுஜம் அவர்களுக்கு,
வணக்கம்.இரண்டாவது முறையாக சகோதரர் கண்ணப்பன் அவர்களின் செய்தியை வெளியிட்டதற்கு நன்றி.அன்பு,தயவு,கருணை உடையவர்களே கண் உடையவர்கள்.அந்த வகையில் பார்த்தால் கண்ணப்பன் அவர்களும்,அவர் மனைவியும் கண் உடைவர்களே.அவர்களும்,அவர்கள் குழந்தைகளும் வள்ளலார் அருளால் எல்லா நலன்களையும் பெற்று வாழ்வார்கள்.புறத்தில் கண்களை பெற்ற பலரும் கருணை இல்லாமல் இருக்கிறார்கள்.ஆனால் புற கண்கள் இல்லாமல் என் சகோதரரும்,அவர் மனைவியும் கருணையோடு சன்மார்க்க இல்லற வாழ்க்கையை நடத்துகிறார்கள்.அவர்களுக்கு அக கண்கள் பிரகாசமாக ஒளிருகிறது.கருணையாக வாழ புற கண்கள் வேண்டியது இல்லை.அக கண்கள் போதும்.அக கண்கள் ஒளிர ஒளிர கடவுள் அருள் கிடைக்கும்.கண்ணப்பன் அவர்களுக்கும்,அவர் குடும்பத்தாருக்கும் கடவுள் அருள் இருக்கிறது.இருக்கும்.வள்ளலார் அன்புடன்,சகோதரி அருள்ஜோதிசுஜாதா.
Thursday, May 21, 2009 at 22:07 pm by P Sujatha